ரசிக்க முடியாத நிலையில் இருந்தால்?

 ரசிக்க முடியாத நிலையில் இருந்தால்? 

செய்யும் வேலை என்பது நமக்குப் பிடித்தமான துறையாக இருக்க வேண்டும்.  அல்லது நுழைந்த துறை நமக்குப் பிடித்தமான துறையாகி விட வேண்டும்.  ஆனால் இரண்டுங்கெட்டான் ஆகி விட்டால்? 

திருப்பூர் ஏற்றுமதி துறை என்பது ஒரு மாய வலை போல்.  முதலீடு செய்பவர்கள் கிட்டத்தட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் போலத்தான்.  அங்கு கற்பனைக்கு உயிர் ஊட்டி போட்ட காசு வருமா? இல்லை முக்காடு போட்டு ஓடி ஒளிய வேண்டுமா என்ற சிந்தனையிலேயே ஊரில் உள்ள அத்தனை கெட்ட பழக்கங்களுக்கும் மனம் அடிமையாகி கையில் உள்ள காசு போவதுடன் உடல் ஆரோக்கியத்திறகும் விலை கொடுக்க வேண்டியாகிவிடுகின்றது. 

ஆனால் இங்கு எல்லாமே கண்முன் நடக்கும், தெரியும்.  ஆனால் வங்கிக்கணக்கில் வரவில் ஏறும் வரையில் எதுவுமே நிச்சயமற்ற தன்மை.  அசாத்தியமான உழைப்பு, ஆயிரம் பேர் கூடி தேர் இழுக்கும் நிலை, எங்கு எதனால் பிரச்சனை உருவாகும் என்று அனுமானிக்க முடியாத வித்யாசமான தொழில்.  ஆனாலும் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் அனைத்து உயர்ரக வாகனங்களும் சுமாரான சாலையில் நட்ட நடு இரவிலும் அலுக்காத உழைப்பு. 

நடு மையப்பகுதியில் என்ன பரபரப்போ அதே அளவிற்கு குறையாத பரபரப்பு ஊரின் எல்லையிலும். எல்லோரிடத்திலும் அவசரம், எதற்காகவோ வேகம்? எந்த கீழ்படிதலும் தேவையில்லை. மனிதாபிமானம் என்பது மண்ணாங்கட்டி.  பள்ளிக்கூட பகுதி என்றாலும், பல்போன கிழவன் நடந்து சென்றாலும் விபத்தில் இருந்து தப்பித்துக்கொள்வது அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியம்.

எது குறித்தும் அக்கறையில்லை.  வேகம் மட்டும் தான் முக்கியம்.

எல்லா பணிக்கான தகுதியிலும் அவர்களுடைய வேகம் தான் முதன்மை தகுதியாய் இருக்கிறது. 

ஆனால் எந்த வேகமும் எத்தனையோ மைல்களுக்கு அப்பால் குளிர்சாதன வசதியில் கணிணியில் அமர்ந்து கொண்டு கட்டளை இட்டுக்கொண்டுருக்கும் அந்த பையர் பரமாத்மாவுக்கு புரிவதே இல்லை.  அவர்களுடைய மொத்த அகராதியும்  இரண்டே வார்த்தையில் முடிந்து விடும்,  கேன்சல் மற்றொன்று டெபிட்.  ஏன்? எதற்காக? என்று கேட்கவே முடியாது.  கேட்டாலும் பிரச்சனை?  அடுத்து போட்டுருக்கும் முதலீடுக்கும் ஆப்பு ஆகி விடும்.  

பரிகாரம் செய்தும் பலன் அளிக்காத கிரகத்தின் மேலோ அல்லது சொன்ன ஜோசியர் மேல் யாராவது கோவித்து கொள்வதுண்டா?  வேண்டுமானால் வேரொரு ஆள் கிடைக்கும் வரையில் வாயைப்பொத்திக்கொண்டுருப்பது நல்லது, 

கட்டியிருக்கும் கோவணத்தில் தான் கவனம் அதிகம் வைத்துருக்க வேண்டும். அதற்கு மேல் கிடைத்தால் பரம சந்தோஷம்.  புலம்ப முடியாது, பகிர்ந்து கொள்ளக் கூட நேரம் கிடைக்காது.  இழப்புகளை பார்த்துக்கொண்டே ஏணிப்படியில் கவனமாய் கால்வைத்து ஏற வேண்டும்.  இல்லை என்றால் வங்கி அதிகாரியின் வருகை எப்போது வேண்டுமானாலும். 

எத்தனை ஒழுங்குகளை உள்ளே புகுத்தினாலும் அத்தனைக்கும் அல்வா கொடுத்துக்கொண்டே காலை விடிந்தால் அடுத்த பிரச்சனை வாங்க பிரதர்? என்று உரிமையாய் தோளில் கைபோட காத்துருக்கும்.  முதல் போட்டவர்கள் தூங்குவதற்கு எத்தனை பிரயாசை படுகிறார்களோ அத்தனைக்கத்தனை  மறுநாள் வேலை நிச்சயமற்ற தன்மை பணிபுரிபவர்க்கும். 

உயர்ந்த மனிதர்களை விட ஒழிந்து போனவர்கள் இங்கு அதிகம்,  இங்கு யாரும் அவர்களை கணக்கில் கொள்வதே இல்லை.  காலச்சுழற்சியில் ஐந்து வருடம் பத்து வருடத்தில் கண்ணுக்குத் தெரிந்த தெரியாத மாறுதல்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. பழகியவர்கள் பரிதாபம் கொள்ளலாமே தவிர பங்கு எடுத்துக்கொள்ள முடியாது.  வேண்டுமானால் நிகழ்வுகளைப் பார்த்து வராத கடன்களை விரட்டி வசூலிக்க அரைமணிநேரம் கை தொலைபேசியில் பேசி அவஸ்த்தைபடலாம். 

ரசிப்பதற்கென்று இங்கு ஒரு இடமும் இல்லை.  காரணம் ரசித்து வாழ ஆட்களும் இல்லை நேரமும் இல்லை.  உயர்ரக உணவகங்கள் கூட  வரும் வௌிநாட்டு பரமாத்மாவுக்கு (பிடிக்கிறதோ இல்லையோ) பணிவிடை செய்யத்தான்.  கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனதில் ஒரு கழிவிரக்கம் தான் மிஞ்சம்.  அதனால் தான் என்னவோ பிழைக்க வந்தவர்களும் சரி, பிழைப்பைக் கொடுப்பவர்களும் சரி தனது ஆத்மாவை, வீட்டை விட்டு கிளம்பும் போதே வீட்டில் பத்திரப்படுத்திவிட்டு தான் தன் பயணத்தை தொடங்கிறாாகள். 

ஊரில் ஆசிரியர் சொன்ன, நல்லவனாய் வாழ வேண்டும், நாலு பேருக்கு பிரயோஜனமாய் உனது வாழ்க்கை அமைய வேண்டும் போன்ற  பல அறிவுரைகள் எனது ஆசிரியர்கள் போலவே ரிடையர் ஆகிவிட்டது.  அதே பள்ளியில் வேறு ஆசிரியர்கள்.  என் அண்ணன் மகன் படிக்கின்றான்.  திருப்பூருக்கு வந்தவன் கேட்ட சில கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை அல்லது தெரியவில்லை? 

பணம் வைத்து மட்டுமே தீர்மானிக்கும் மனிதர்கள் மத்தியில் வாழும் என்னை,  அவன் கேள்விகளில் இருந்து தப்பிக்க நான் எடுத்த முடிவு மறு ஆண்டு அவன் திருப்பூர் வரட்டுமா என்ற கேட்ட போது அடுத்த வருடம் பார்க்கலாம்?  என்பது தான் என் இயலாமையின் எதார்த்தம்.

5 responses to “ரசிக்க முடியாத நிலையில் இருந்தால்?

  1. தொடர் வாசிப்பில் இந்த எழுத்துக்கள் இத்தனை நாட்கள் எங்கே கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டிருந்தன?

    (சில எழுத்துக்களை வாசித்து விட்டு திடீரென காணாமல் போவதன் காரணங்களை கூகிள் தேடலில் தேடி வந்த பின்னூட்டமிது )

  2. பல சமயங்களிலும், இடங்களிலும் மனிதத்தவறுகளும், அலட்சியமுமே, செய்தி தொடர்பின்மையுமே காரணமாக அமைகின்றன.

    அற்புதமான பார்வை. நூறு சதவிகித உண்மையும் கூட

  3. நன்றி சிவா

    எழுதத் தொடங்கிய முதல் வாரத்தில் எழுதியது. ஒன்பது மாதங்களுக்கு முன்னால். ஆனால் இதற்காக 15 வருடங்களாக உள்ள நிகழ்வை எழுதியது இப்போது கூட பொருத்தமாக இருக்கிறதே என்பது ஆச்சரியம்,

  4. தொழில் என்பது போய் சூதாட்டம் என்பது போல் ஆகிவிட்டது பனியன் தொழில்:)

    இப்போதைக்கு சற்று சிரமமான சூழ்நிலைதான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே

    நிச்சயமற்ற சூழ்நிலையும், உற்பத்தியில் பல கட்டங்களைத்தாண்டி வருகையில் எங்கு வேண்டுமானலும் நிகழக்கூடிய சிறு தவறு உற்பத்தியாளாரை மட்டுமே சாரும் என்பது வருந்தவேண்டியது நிலை

    பல சமயங்களிலும், இடங்களிலும் மனிதத்தவறுகளும், அலட்சியமுமே, செய்தி தொடர்பின்மையுமே காரணமாக அமைகின்றன.

பின்னூட்டமொன்றை இடுக