Daily Archives: ஜூலை12, 2009

தரகர்கள் என்றொரு பன்றிக்கூட்டம்….

விரித்து வைக்கப்பட்டுருந்த அந்த ஆடையில் என்னால் அதற்கு மேல் எந்த குறையும். தவறும் என்னால் கண்டு பிடிக்கமுடியவில்லை. இருந்தாலும் முன்னால் அமர்ந்து இருந்தவர் திரும்பத் திரும்ப அதே வார்த்தையையே கேட்டுக்கொண்டுருந்தார். ” இல்லை, இன்னும் ஏதாவது இரண்டு குறைகள் கண்டு பிடிக்க வேண்டும் “. இதற்கு மேல் என்ன சொல்வது? வேண்டுமானால் நாமே உருவாக்கி கண்டு பிடிக்க வேண்டியது தான்.

படபடப்பில் வேர்த்து இருந்த கைகளில் அதன் விரலில் இருந்த வியர்வையை அவர் கவனிக்காத போது அந்த ஆடையின் பின்புறத்தில் தேய்த்து எடுத்துவிட்டு அவரிடம் சொன்னேன் ” இதோ இந்த அழுக்கு ஒன்று இங்கு இருக்கிறது “. திகைத்து விட்டார். ” சுக்ரியா ” என்று சொல்லி பணிக்கான ஒப்பந்தத்தை உள்ளே வரவழைத்த பெண்ணிடம் தயார் செய்யச் சொன்னார்.

வட நாட்டில் இருந்து வந்து வாழ்க்கையை வசதிகளை பல பேரின் சாபங்களைப் பொருட்படுத்தாமல் தன்னை வளர்த்துக்கொண்டு வளப்படுத்தி தனக்குண்டான இருப்பை உறுதியாக்கிக்கொண்டவர். அலுவலகத்தில் உள்ளே வரவேற்பு அறை முதல் சிறுநீர் கழிக்கும் இடம் வரையிலும் குளிர்ந்தது. தாய் பாஷையை விடாமல் ஆங்கிலம் என்றொரு பெயரில் அவஸ்த்தை பாஷையை, அலங்கோலம் என்று தெரியாமலே அதிக அலட்டலாகவே அணைவரையும் விரட்டிக்கொண்டுருந்தார்.

சமய சந்தர்ப்பங்கள் உள்ளே நுழைத்து விட்டது. இது ஒரு புதிய பாதை. எத்தனையோ நேரிடையான உற்பத்தி நிறுவனங்கள் மாற்றி மாற்றி அலைக்கழித்த போதும் உள்ளே நுழைந்து சில மாதங்களில் எனக்கான இருப்பை உறுதிபடுத்திக்கொண்டவனால் அந்த ஆறு மாதங்களும் அலங்கோலமான விபத்தை மிக அருகில் இருந்து பார்த்து விட்டு மறக்க முடியாமல் தூங்காத இரவைப்போலத்தான் நடு இரவில் திடுமென திடுக்கிட வைத்து அலற வைத்த என்னை எழ வைத்ததுக்கொண்டுருந்தது.

தலைமையானவரின் கருத்து ” தவறுகளை மட்டுமே கண்டு பிடிக்க வேண்டும். இல்லாவிட்டாலும் நாமே உருவாக்க வேண்டும். அவர்களின் பயம் என்பது நமக்கு வருமானம் மட்டுமல்ல நம்மை அவர்கள் தொடர்ந்து வரவேண்டியதன் அவஸ்யத்தை மறைமுகமாகவும் உணர்த்தி விடமுடியும். நம்மைத் தவிர வேறு எந்த வகையிலும் வௌியேறி எந்த வட்டத்திலும் அவர்கள் நுழைந்து விடக்கூடாது “.

அந்த கீத உபதேசத்தை ஏற்க முடியாதவனாய் தோற்றுக்கொண்டே இருந்தேன்.

எப்படியோ ஏதோ ஒரு வழியில் ஒரு இறக்குமதியாளர் கையில் கிடைத்து இருப்பார். ஒரு முறை அவருக்குண்டான ஒப்பந்தம் சிறப்பாக முடித்து நேரிடையாகவும் அவருடைய இடத்தில் சந்தித்ததும் மேற்கொள்ளும் பாதைக்கு அதிக வலு சேர்த்து இருக்கும். அன்று முதல் அந்த இறக்குமதியாளரின் அனைத்து திருப்பூர், இந்தியத் தேவைகள் இவர் மூலமே நடத்தப்பட்டு விடும்.

சில புத்திசாலிகள் உற்பத்தியாளரிடமிருந்து பெறப்படும் குறிப்பிட்ட சதவிகிதம் போல், அந்த இறக்குமதியாளரிடமும் குறிப்பிட்ட சதவிகிதம் பெற்றுக்கொள்வதும், முழித்துக்கொண்ட இறக்குமதியாளரிடம் பெறப்படாத தொகையை உற்பத்திளாளரிடமே பெற்றுக்கொள்வது அன்றாட வாடிக்கை,

தரகருக்கு பணம் தேவை. உற்பத்தியாளருக்கு ஒப்பந்தம் தேவை. எல்லாம் சரி தான். இந்தப் பணத்தின் ஆசை அதிகமாக அதிகமாக இடையில் நடக்கும் ” சாக்கடை” தான் என்னை அதிகமாக யோசிக்க வைத்தது.

தொடக்கத்தில் எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டுந்தது. உள்ளுர் சந்தைக்கான பனியன்கள் ஜட்டிகள் தாண்டி ஏற்றுமதிக்கான ஆடைகள் ஒவ்வொன்றாக உள்ளே வந்து கொண்டுருக்க, உழைப்புக்கு பெயர் போனவர்களும் வந்து சேரச்சேர உள்ளுர் வாசிகள் அவர்களுக்குண்டான இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டுருந்தது. நேரிடையாக வருவார்கள். குறை நிறைகள் அலசப்படும். அடுத்த முறை திருத்தப்படும். மாற்றி எழுதப்படாத தீர்ப்புகள் சிலரின் வாழ்க்கையின் பாதையை மாற்றி விடும்.

வரிசையின் அடுத்தவர் காத்துருப்பார். விலை மேலே கீழே இறங்கும். சமார்த்தியசாலி தைரியம் துணை கொண்டு சாதித்து அதையே தொடர்ந்து அவரை தக்க வைத்துருப்பார். இருவரும் அவரவருக்குண்டான தகுதிகளினால் வாழ்க்கையை வசதியை வளர்த்து இருப்பார்கள். இடையே எவரும் இல்லாமல். எல்லாமே கேட்ட விதத்தில் கேட்கும். அவசரத்தில் எதுவுமே உடனடி சாத்யமாகவே இருந்து இருக்கும். இடையில் எந்தப் பன்றிக்கூட்டமும் நுழைய பட்சத்தில்.

படிப்பறிவு அதிகம் இல்லாத முதல் தலைமுறை ஆட்சிபுரிந்த காலத்தில் எல்லாமே மனக்கணக்காய் புள்ளி விபர புலிகளாய் இருப்பர். தொடர்புக்கென்று ஒரு தொத்தல் அங்கு தொங்கிக்கொண்டுருப்பார். தொழிலுக்கும் அவருக்கும் எந்த வித சம்மந்தமும் இருக்காது. கணக்கு ” வழக்கு ” களை கவனித்துக்கொள்ள நிர்வாகத்தை பொறுத்தவரையில் ஒரு ” கணக்குபிள்ளை “. அறைகுறை ஆங்கில அறிவும் போதுமானதாக இருக்கும்.

நுழைந்த புதிதில் அனைவரும் நம்மை கணக்குபிள்ள கணக்குபிள்ள என்றழைக்க கோபம் கண் மண் தெரியாமல் உச்சிக்கு ஏறும். ஊரில் செட்டியார் வீடுகளில் முப்பது நாற்பது வருடங்கள் வாழ்ந்து அனைத்து விஷயங்களை கவனித்துகொண்டுருக்கும் பெரியவர்களை பார்த்து அழைக்கும் வார்த்தையைப் போய் நம்மை அழைக்கின்றார்களே? என்று.

வேறு வழியே இல்லை. பழக்கப்படுத்திக்கொண்டால் எல்லாமே நம்மை பக்குவப்படுத்தி விடும்.

நுழைந்த மறுநாள் உடன் புரிந்தவர் வழிகாட்டலின் பேரில் அவருடன் உள்ளாடைக்கு பெயர் பழைய நிறுவனத்தின் உள்ளே நுழைந்தோம். வந்தவரோ கல்லில் இருந்து நார் எடுக்க கற்று இருந்தவர். அதனால் தான் என்னவோ அந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளாக “சகல” வசதிகளுடனும் வாழ்ந்து கொண்டுருந்தார். தனியான ராஜ்யம் வௌியே. ஆனால் அலுவலகத்திற்குள்ளே மிக அடக்கமான பிள்ளை.

தௌிவாக நடிப்பவர்களால் தானே நாளும் பொழுதும் வளர முடியும். ஒரே இடத்தில் தனது இருப்பை உறுதிபடுத்திக்கொள்ள முடியும்.

மற்றவர்களுக்கு அடிமையாக வாழ்ந்து பணிபுரிய வேண்டிய கட்டாய சூழ்நிலைக் கட்டங்கள் அமைந்தவர்கள் செய்ய வேண்டிய முதல் பால பாடம். ஊரில் இருந்து கிளம்பும் போதே வெட்கம் மானம் சூடு சொரணையை இன்னும் பல சமாச்சாரத்தை ஒரு மூட்டை கட்டி பரணில் ஏற்றி விட்டு தான் பேருந்தில் பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னாளில் அவர்களும் ஏதாவது ஒரு பதிவு தொடங்கி மற்றவர்களை படுத்தி எடுக்கும் சூழ்நிலை அமைந்து விடும்.

நுழைந்த நிறுவனம் உள்ளாடைக்கு என்று பெயர் பெற்ற பெரிய நிறுவனம். முதல் போட்டுருப்பவரைப்பற்றி ஏற்கனவே தெரியும். அவரின் அணைத்து ” வேகமும் ” நான் செவி வழி கேட்ட செய்திகள். ஓவ்வொரு நிறுவன உள் அந்தரங்கமும் ஏதாவது ஒரு வழியில் காற்று வழியே ஒவ்வொருவரிடம் வந்து அடைந்து இருக்கும். காரணம் அடுத்த பேரூந்து பயணம் அந்த நிறுவனமாக இருந்து தொலைத்துவிட்டால்?

நான் வம்புகள் செய்யும் ஆளும் இல்லை. அதற்குண்டான தகுதிகளும் இல்லை.

ஆ பாவி என்று தெரிந்தவர்கள் கொடுத்த பாடமெல்லாம் மேலும் மேலும் அப்பாவியாக்கி வைத்துருந்தது. வேறு வழியும் இல்லை. சூத்திரம் புரிபடுவதே இல்லை. புரிந்த போது மனம் ஏற்றுக்கொண்டதும் இல்லை.

இருபது வருடத்தில் ஊன்றி வளர்த்துருந்த விஷயங்கள், அத்தனை எளிதாக என்னை விட்டு அகலாமல் அனுதினமும் கொன்று கொண்டுருந்தது. பாஷையை மாற்றிக்கொள்ளவேண்டும். போடும் உடைகளை கவர்வதாக உடுத்த தெரியவேண்டும். பேசும் வார்த்தைகளில் உண்மையைத்தவிர அணைத்தையும் பேச வேண்டும். இதற்கு மேலாக இரவு வந்ததும் அணைத்து ஆர்ப்பாட்டங்களிலும் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பல சமயம் அதற்காக பையை நிரப்பி வைத்துருக்க வேண்டும்.

வாழ்ந்தாக வேண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும், என்று கட்டாயத்தில் இருக்கும் அறிமுக இயக்குநர் எப்படி வணிக சமாச்சாரங்களை தனது முதல் படத்தில் திணிப்பாரோ? அதே போலத்தான் என்னுடைய அணைத்து ஆசாபாசங்களும், புறக்கணிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளையும் தங்கியிருந்த குடியிருப்பு வளாக நண்பர்களுடன் அரட்டை குறும்பு சேட்டைகளில் அன்றாடம் கழித்து புத்துணர்ச்சி பெற்று விடுவதுண்டு.

அடுத்த மாநிலமும் அருகே உள்ள ஊரில் இருந்து வந்தவருமாய் ஒரே அறையில் அமைந்து விட இதற்கு மேல் அணைவருக்கும் வாசிப்பு என்றதொரு பழக்கம் அதிர்ஷடமாய் அமைந்து விட வேறு என்ன வேண்டும்? ஒரே அறை. ஓரே சிந்தனை. ஆனால் உருவமாய் மூன்று மனிதர்கள்.

நிறுவனத்தில் உள்ளே சென்ற போது என் உடன் வந்தவர் அலட்டலாய்த் தான் சென்றார். எனக்கும் அறிவுரை சொல்லியிருந்தார்.

அவரைப் பொறுத்தவரையில் அவர் உள்ளே நுழைந்து வௌியேறும் வரையில் முதலீடு போட்டவர் அவர் அருகே வந்து நிற்க வேண்டும். அரை மணிக்கு ஒவ்வொரு முறையும் பானங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். புகைக்க விரும்பும் போது அவர் பையில் இருந்து எடுத்து அழைத்துச் செல்ல வேண்டும். இவை நடந்தால் பாஸ் மதிப்பெண்.

உள்ளே வந்து செல்லும் போது குடும்பத்துக்கு மற்றும் சார்ந்தவர்களுக்கு தேவையான இருப்பு வைத்து கொள்ள வேண்டிய உள்ளாடை சமாச்சாரங்கள் பையில் போட்டு கொடுத்து விட்டால் ஐம்பது மதிப்பெண்கள். இதற்கு மேல் முழுமையான நூறு வேண்டுமானால் இரவு நேரத்தில் குடிக்கப்பட்ட பானத்திற்குப்பிறகு கொடுக்கப்படும் அஞ்சல் உறை கணம் பொறுத்து அளிக்கப்படும்.

மற்ற நிறுவனத்தில் இருந்த போது இதற்குண்டான நடை முறைகள், இவர்கள் உள்ளே வரும் போது முதல்போட்டவர் அடையும் படபடப்புச் சமாச்சாரங்கள் அணைத்தும் வேடிக்கையாளனாக பார்த்துள்ளவைகள் இன்று நானே அந்த நாடகத்தில் ஒரு கதாபாத்திரமாய்.

முதலீடு போட்டவர் உள்ளே யாரோ ஒருவரை செந்தமிழில் விளாசிக்கொண்டுருந்தார். கேட்டுக்கொண்டுருந்தவர் மணப்பெண் போல் குனிந்து கொண்டுருந்தார். ஆனால் எனக்கு மட்டும் ஒன்று புரிந்து விட்டது. இன்று கட்ட மாறுதல் உருவாக்கப்போகும் ஏதோ ஒன்று நடக்கப்போகின்றது. காயம் படாமல் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். முடிவெடுத்துக்கொண்டு போடப்பட்டுருந்த ஒரு பெட்டியை ஒதுக்கிக்கொண்டு ஓரமாய் நின்று விட்டேன்.

கை ஏந்திப் பழக்கப்பட்டவனும், கடமை என்பதே பணத்தை அடிப்படையாக வைத்து பார்க்க பழக்கப்பட்டவர்களுக்கும் எல்லா சமய சந்தர்ப்பங்களும் சாதகமாகவா இருந்து விடும்? இரையை மட்டும் குறி வைத்துக்கொண்டுருந்த நண்பருக்கு முதலீடு போட்டவரின் உரை எதையும் உணர்த்த வில்லை. போடப்பட்டு இருந்த பெட்டியில் இல்லாத தவறுகளை பெரிது படுத்தி உரத்துப் பேசி அந்த இடத்தை ரணகளப்படுத்திக்கொண்டுருந்தார்.

நிர்வாக சார்பாளராய் வந்தவர்கள் அணைவருக்கும் பேச முடியா பொம்மைகளாய் மௌனித்து நின்று கொண்டுருந்தார்கள். அவர்களால் பேச முடியாது. பேசினால் சில சமயம் கப்பல் விமானமாக மாற்றப்பட்டு விடும். மேற்கொண்டு வாய்ப்பு இருந்தால் குறிப்பிட்ட சதவிகிதம் குறைந்து பேரத்தில் அக்கிரமத்தில் முடிவு செய்யப்பட்டு முடிக்கப்பட்டு விடும்.

அவர்களின் அனைவரின் அமைதி, நண்பரை மேன்மேலும் அதிர வைக்கும் சமாச்சாரத்திற்கு அழைத்துச்சென்றது. எடுத்த ஆடைகளை பார்க்காமலே தூக்கி எறிய வைக்க, பார்த்துக்கொண்டே இருந்த பகவான் ஆட்டத்தை முடித்து வைக்க உள்ளே இருந்து வந்தார். ஒன்றுமே பேச வில்லை.

விட்டாரே ஒரு அறை?

கேட்ட சத்தத்தில் எனக்கே சிறுநீர் வந்து விடும் போலிருந்தது. ஓதுங்கிக்கொண்டுருந்தவன் ஒளிந்து கொள்ளும் நிலை.

“பத்து லட்சம் முதல் போட்டவன் நான். பத்துக்காசு சம்பளத்தை வாங்கிக்கிட்டு தூக்கியா எறியுற? கட்டுங்கடா இவனை தோட்டத்துக்குள்ள ” .

என்னை ஒரே ஒரு முறை பார்த்துள்ளளார். பரவசமான சந்திப்பு ஏதும் நிகழ்ந்தது இல்லை. ஏற்கனவே தெரிந்து வைத்துருந்த காரணங்களினால் என்னால் அவருடன் அளாவமுடியாமல் வைத்துருநதது. எவருக்கும் உண்டான எல்லைகளை நான் கவனிப்பதும் இல்லை, அதை கடக்க முயற்சிப்பதும் இல்லை.

ஆட்டத்தின் சட்ட திட்டங்கள் தெரியாதவனால், புரிந்து கொள்ள முடியாதவனால் எவ்வாறு அந்த விளையாட்டில் ஜெயிக்கமுடியும்?

எல்லையைத் தாண்டி இருந்த இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த போது பத்து சதவிகிதம் தள்ளுபடியில் அந்தப்பெட்டிகள் பயணப்பட்டுருந்தது.

தரத்தை கவனிக்க வந்தவன் தன் வாழ்வாரத்தை கவனித்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் வழிமுறைகள் போல் தலைமை வேறு வழியில் தனது பாதையை வகுத்துருக்கும். ஓப்பந்தம் கொடுத்த இறக்குமதியாளர் கேட்பது ஒன்று மட்டும் தான். எதிர்பார்க்கும் விலையில் எதிர்பார்த்த நல்ல தரம். வேறு ஒன்றும் அவருக்குத் தேவையில்லை.

ஆனால் தலைமையானவர்கள் அனைவருக்கும் ஒரு கொள்ளை கும்பலுடன் கூட்டு இருக்கும். அந்தக் கும்பல்கள் அணைவரும் ஆடைக்கு தேவையான நூல் முதல் கடைசி பயணத்திற்கு உதவும் பெட்டியில் தொடர்ந்து கப்பல் விமான நிறுவனங்கள் வரையில் கரங்கள் நீண்டு இருக்கும். இவர்களிடம் தான் இதை வாங்க வேண்டும். இவர்கள் மூலமாகத்தான், இப்படித்தான் என்று எழுதப்படாத சட்டங்கள் ஏராளமாய் இருக்கும்.

எதையும் கேட்க முடியாது. திட்டம் தௌிவாக இருக்கும். ஒப்பந்தம் கைக்கு கொடுத்து கையெழுத்து வாங்கும் வரையில் எந்த நிர்ப்பந்தமும் இருக்காது. உலக வங்கியின் நிர்ப்பந்தம் போல் ஒவ்வொன்றாக உள்ள வர கடைசியில் உற்பத்தியாளர் கோவணத்தை மட்டும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில்.

இவர் போனால் அடுத்தவர். அதற்குப் பிறகு மற்றொருவர். ஆட்களுக்காக பஞ்சம்?

பத்துக்கு பத்து அறையாக இருக்கும். தவனையில் வாங்கியிருக்கும் ஒரு கணிணி. சுமாரான ஆங்கில அறிவு. சற்று அதிகமான அதிர்ஷடம். ஐம்பது கோடி போட்டு ஒரு சாம்ராஜயத்தை உருவாக்கி வைத்துள்ள அந்த சக்ரவர்த்தியை சமான்யமானவனாக்கி அவருடைய சரித்திர வாழ்க்கையை தரித்திர வாழ்க்கையாய் மாற்றி விடும் வல்லமை அந்த பத்துக்குபத்து ரூமில் இருக்கும்.

நேர்மை என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பவர்கள் நல்ல இறக்குமதியாளரின் நல்ல எண்ணங்களை நாசகார எண்ணத்துக்கு மாற்றி அவரை அழித்து உற்பத்தியாளரையும் முடித்து சொந்த ஊரில் சுகமான வசதிகளுடன் கட்டிய வீட்டுக்கு உண்டான பத்ரிக்கையை அணைவருக்கும் விநியோகித்துக்கொண்டுருப்பார். பிறகென்ன அடுத்த வருமானத்திற்கு அச்சாரம் போட வேண்டுமே?

நரகலை உணவாக கொண்ட விலங்குக்குக்கூட ஒரு கட்டுபாடு உண்டு. உண்டு முடித்ததும் உறங்கச் சென்றுவிடும். உறங்காமல் அடுத்த வேட்டைக்கு பயணிக்கும் இவர்களின் மூளையை எந்த பன்றிக்காய்ச்சல் தாக்கும்?