Daily Archives: ஜூலை25, 2009

” கோடம்பாக்கம் வழி திருப்பூர் ”

” ஐயா, இந்த ஒரு வரியை மட்டும் கேளுங்கள். கடந்த வருடத்தின் அத்தனை சாதனைகளையும் முறியடித்து சூப்பர் டூப்பர் உறிட் ஆகும் ” என்று பெருத்த தொந்தியும் சிவந்த கண்களுமாய் எதிரே உள்ள தயாரிப்பாளர் முன் பவ்யமாய் அமர்ந்து கதை சொல்லத் தயாராய் இருக்கும் அந்த புதுமுக இயக்குநருக்கும், எப்படியாவது ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பித்து விட வேண்டும் என்று முயற்சிக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் அதிக வித்யாசம் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

இரண்டடிலும் விதிமுறைகள் மட்டும் வெவ்வேறு? ஆனால் இறுதி வில்லங்கங்கள் மட்டும் ஒன்றே ஒன்று தான்?

தலைமறைவு வாழ்க்கை?

நேரிடையான ஏற்றுமதியாளர்கள் ஆலமரம் என்றால் அவர்களுக்குப்பின்னால் நிற்கும் மறைமுக கிளைகள், விழுதுகள் என்று ஏராளம். தராளமாய் எல்லாப்பக்கமும் பரவி விரவி நிற்பார்கள். மரத்தின் அளவு பொறுத்து மகிழ்ச்சியாய் அனைவருக்கும் வாழ்க்கை வசதியாய் போகும்.

பெரும் பூகம்பமும் எதிர்பாரத புயலும் மட்டுமே சில சமயம் அந்த ஆலமரத்துக்கும் ஆப்பு வைத்துவிடும். மற்றபடி மரம் மன்னன் தான். கிழக்கிலும் மேற்கிலும் சூரியின் எழுந்து மறைய மறந்தாலும் அவர்களின் தினந்தோறும் வங்கியில் பத்திரப்படுத்தும் பத்திர ஒப்படைப்புக்கு மட்டும் என்றுமே மாற்றம் வராது.

சிலசமயம் அமங்களமாய் கீர்த்தனைகள் முடிந்தாலும் என்றுமே அந்த ஸ்ருதியில் பிரச்சனை இருக்காது, எத்தனை ஸ்ரூதி மாறி பாடினாலும் பாதிப்பு அவர்களைச் சேராது?

இறக்குமதியாளரால் எழுதப்படும் தீர்ப்பு எதுவுமே திருத்தப்படடதாக சரித்திரமே இல்லை. எழுதப்பட்ட நிப்பும் உடைந்ததாகவே இருக்காது, காரணம், அது அடுத்த தண்டனைக்கு தயார் படுத்தப்படும்.

கொடுக்க முடியா தரத்தினால் தண்டனைகள் பெற்றவர்களை விட, தர முடியாத தேதிகளால் தான் இங்கு பல பேருக்கு வாழ்க்கை, தான் அனுபவித்த அத்தனை வசதிகளையும் இழக்க வைத்துருக்கிறது. அவர்கள் அத்தனை பேரும் படிக்கும் போது அண்ணாந்து பார்த்த விமானங்கள் அவர்களின் அத்தனை சொத்துக்களையும் பறக்க வைத்துருக்கும்?

கடலில் பயணிக்க வேண்டிய பெட்டிகள் பறந்து போனால் வேறு என்ன செய்ய முடியும்?

வீட்டுக்குள் இருக்கும் கடைசி சட்டி கூட சந்திக்குத்தான் வரும்?

தண்டனை பெற்றவர்களுக்கும் கொடுத்தவர்களுக்கும் இடைவௌி தூரம் கொஞ்சம் அதிகம் தான். கடல், மலை இடையே உள்ள தூரம் எல்லாம் ஒரு கணக்கே இல்லை.

ஒரு கண நேரம் தான். ஒரே ஒரு மின் அஞ்சல் தான்.

போதும்.

பொத்தி பொத்தி வைத்தவைகள் அனைத்தும் பொத்தாம் பொதுவாய் ஆகிவிடும்.

அதனாலென்ன?

வரக்கூடியதையெல்லாம் வாங்கிக்கொள்வதற்கென்றே வகை தொகையில்லா சார்ப்புக் கூட்டம் உறவாய் உடன் தொடர்ந்து வந்து கொண்டு இருக்க எந்த ஆலமரத்திலும் அத்தனை சீக்கிரம் சலனம் வந்து விடாது. வரக்கூடியது எல்லாம் தொடர்ந்து வந்து கொண்டுருப்பவர்கள் கணக்கில் ஆண்டுக்கு ஒரு முறை வரவாய் சேர்க்கும் போது பெற்றுக்கொண்டவனின் வாழ்க்கை எப்படி ஏற்றம் காணக்கூடியதாக இருக்கும்?

எல்லா நிறுவனத்தில் பணிபுரியும் கூட்டம் அனைத்தும் ஒரு வகையில் குறுநில மன்னர்கள் தான்.

சிலருக்கு வரும் கப்பத்தை பெற்றுக்கொண்டு கச்சிதமாய் வாழ்க்கை போகும்?

வாங்கிய கடனே பிரதானம் என்று தன்னையே தானம் கொடுத்து நிறுவனமே சிலருக்கு வாழ்க்கையாகி விடும்,

கப்பமும் பெற்று சந்தர்ப்பமும் அமையப்பெற்று எட்டிப்பார்த்த அதிர்ஷடம் அவசரமாய் சிலரை நிறுவன அதிபராக்கிவிடும்.

சொறி பிடித்த கையும், வெறி பிடித்த மனதும் என்ன செய்யும்?

யாரையும் நம்மாத மனம் நன்றாகவே உழைக்க வைக்கும்? நாட்காட்டி நாற்பது நாளாகும். முழுமையாக முட்கள் சுற்றி முடிக்கும் போது முப்பத்தாறு மணிநேரமாகிவிடும்.

உழைப்பு. யாரை ஏமாற்றி இருக்கிறது?

உருவாக்கிய சிறிய அறை உள் மன ஆசை அலங்காரத்துடன் உன்னதமாய் அலுவலக அறையாக மாற்றம் அடையும். அருகே அணிவகுக்கும் ஆடை கூட்டத்திற்கென்று தனியாக குளிர் ஊட்டப்படும். உட்கார ஒரு நாற்காலி. ஓய்வெடுக்க ஒரு நாற்காலி. நிறுத்தி வைத்தால் இன்னும் விலை போகும் என்று வாங்கிப் போட்ருக்கும் அத்தனை நிலமும் காலியாய் போய் விடும். உழைத்து உழைத்து ஓடாகிப்போயிருந்த உடம்பு பார்க்கும் பார்வை வெறித்த பார்வையாய் மாறும்?

நிறுவனம் வளரத் தொடங்கும் போதே அங்கே கைத்தடி பதவிக்கு அடிதடி நடக்கும். பெற்றுக் கொண்டவர்கள் கனவுகள் மெய்ப்படும். சில சமயம் கல்யாணம் கூட கச்சிதமாய் அவர்கள் வரவில் வந்து சேர்த்து விடும்.

தூரம் தாண்டி இருப்பவர்களுக்கு என்ன?

மாப்பிள்ளை என்ன சாதரண ஆளா? எக்ஸ்போர்ட் கம்பெனி.

நிறுவனம் அவருக்குச் சொந்தமா? இல்லை வாங்கியுள்ள கடனுக்கு வங்கிக்கா?

அது வரைக்கும் மறைமுகமாய் ஏற்றுமதிக்கு உறுதுணையாய் இருந்தவர்களுக்கும், உள்ளே வௌியே என போய் வந்து கொண்டுருப்பவர்களுக்கும் ஆசை வரும்.

ஆசைக்குப் பின்னால் அடகு கடைக்கு வந்த நகையும் ஏலத்தில் வந்து நிற்கும்?

எத்தனை நாளைக்கு மரத்தின் கிளையாய் இருப்பது?

விழுதுகள் மரமாவது தானே மரபு?

மாற்றங்கள் மடமடவென்று காட்சியாய் மாறும்?

அலசி ஆராய்ந்து கடைசியில் கண்டு கொள்வர்.

முதலில் ஒரு தரகர் தயவை நாடுவோம். இறுதியில் பெட்டி தூக்கி பயணம் செய்து பெரும் புகழ் அடைவோம்.

காரணம் அங்கு அத்தனையும் பெற்றவர்களுக்கு மொழி பிரச்சனையாய் இருக்கும்.

மொழி அறிந்தவர்களுக்கு செல்லும் வழி ஒற்றையடி பாதையாய் இருக்கும்?

வேறு என்ன தான் வழி?

தரணி புகழ் தரகர் தான்.

அவர்களின் அலுவலகங்களே இவர்கள் தேடிப்போகும் தெய்வ சந்நிதி?

பன்றி போட்ட குட்டிகள் போல் பல பக்கத்திலும் அணிவகுத்து நிற்கும் அந்த தரகர்களின் அலுவலகத்துக்கா இங்கு பஞ்சம்?

அவர்களின் அலுவலகமே சொர்க்க வாசலாகத் தெரியும். உள்ளே வெங்காயத்தை மட்டும் உரித்துக்கொண்டுருப்பவர் தரிசனம் மட்டும் அத்தனை சீக்கிரமாய் கிட்டி விடாது.

வௌியே காத்துருக்கும் பெண் கட்டளையாய்ச் சொல்வார்?

அடுத்த பருவம் பார்க்கலாம்? ஏற்கனவே நிறைய பேர்கள் வரிசையில் இருக்கிறார்கள்.

போதாதா நம்மவருக்கு?

அத்தனை வரிசையை தாண்டி முன்னேற முண்டிக்கொண்டு தினந்தோறும் படையெடுப்பு தொடரும்.

அங்கு தேநீர் கொடுத்து உபசரிப்போனும் கடவுளின் அவதாரமாய் தெரியும்? அவன் சிரித்து விட்டாலே கணக்கில்லா ஒப்பந்தம் பெற்று விட்டதாய் மனம் மகிழ்ச்சியடையும்.

ஆனால் ஓரு பருவம் முழுவதும் வரவேற்பு அறை மட்டும் அனுமதி பெற்ற வசந்த வாசலாக இருக்கும்.

உள்ளே அமர்ந்துருக்கும் வெட்டியானின் சொர்க்க வாசல் நினைத்து வெட்டிப் பொழுதை கழித்துக்கொண்டுருப்பார். வந்த பாதை மறந்து வாழும் பாதையும் தெரியாமல் டாஸ்மார்க் போதி மரத்தில் ஞானம் பெற்றுக்கொண்டுருப்பார்கள்.

ஒரு பருவம் காக்க வைத்தால் தான் அந்த வெட்டியானின் கனவில் வானம் வசப்படும். உள்ளே வரத்துடிப்பவன் உள்ளம் மாறி உடம்பு சோர்ந்து கரம் நீட்டி கதறும் போது கச்சிதமான பேப்பர்கள் கை மாறும்.

என்றோ கேட்ட ஒரு இறக்குமதியாளரின் கனவு ஆடை அந்தக் காகிதத்தில் வடிவமைப்பாய் இருக்கும். கேட்ட இறக்குமதியாளரும் மறந்து போன அந்த காகிதம் வாங்கியவனின் தலையெழுத்து எழுதப்பட்ட பிரம்ம சூத்திரமாய் இருக்கும். எழுதப்பட்ட அத்தனை விதிகளும் முன்னே தெரிந்து விட்டால் ஏனிந்த சிக்கல் போராட்ட வாழ்க்கை?

அந்த வடிவம் உருவமாய் உருவாகும் போது காகிதம் பெற்றவர் வாழ்க்கை கபோதியாய் பாதியிலேயே முடிந்து போய் இருக்கும். மொத்த ஆடையும் உருவம் மாறாமல், கேட்ட உணர்வு மாறாமல் ஒப்படைப்பு வைபோகம் நடக்கும் போதே மீதி வாழ்க்கையும் போய் பரதேசிக் கோலத்தில் ஊருக்கு பயணப்பட்டுக்கொண்டுருப்பான்.

ஊரில் உள்ள இடத்தை விற்று வர.

மிச்சமான எச்சம் மறுபடியும் அவனுக்கு ஏற்றம் தரவேண்டும்.

அது வரைக்கும் அடுத்த பன்றி வீட்டுக்குள் வந்து அசிங்கப் படுத்தாமல் இருக்கவேண்டும்.?