Daily Archives: ஜூலை24, 2009

Check out Contact

Hi,

I want you to take a look at: Contact 

” திருப்பூர் புகைவண்டி நிலையம் “

எத்தனை முறை உன்னிடம் வந்துருப்பேன்?

சுட்ட வெயிலில், சுடாத காலையில்,, ஏன் நட்ட நடு இரவிலும் வந்தாலும் கூட நர்த்தனமாய் வரவேற்பாய். அத்தனை முறை வந்த போதிலும் இன்னும் ஆசை அடங்கவில்லை. தூரத்தில் வரும் போதே கண்டு கொள்வதுண்டு. உன்னுடைய “சூழ்நிலை” புரிந்து கொள்வதுண்டு. சமயம் பார்த்து, சந்தர்ப்பம் பார்த்து உள்ளே வரும் என்னை எப்போதுமே மறுதலித்தது இல்லை. அதே புன்னகை. அதே ஆசை.

உன்னை பார்க்க வேண்டும் என்று பயணப்பட்டாலே என்னுள் பரவசம் ஒரு பக்கத்தில் தொற்றிக்கொண்டு விடுகின்றது. கக்கத்தில் தூக்கி வைத்துக்கொண்ட குழந்தை போல் சப்தத்தாலே என்னை கரைத்து விடுகின்றது.

பாலத்தில் ஏறி வரும் போதே உன்னுடைய பாதி உடம்பு தெரிந்து விடும். பக்கம் வர வர உன்னுடைய முழு நிர்வாணம் முகத்தில் அறையும். உனக்கு வெட்கம் என்பதே இல்லையா?

நட்ட நடுவில் ஓடும் அந்த இரண்டு நரம்புகள் மட்டும் என்னைப் பார்த்து மந்தகாசப் புன்னகை புரிந்து விடும் . புரிந்து கொண்டு பாலத்தில் இருந்து மெதுவாய் பக்கம் பார்த்து திரும்புவேன். அவசரமாய் பயணித்துக்கொண்டுருப்பவர்கள் கவனித்து. மெதுவாய் உன் பக்கம் வருவதற்கு முன் தூரத்தில் இருந்து பார்ப்பேன். பார்க்கும் போதே உண்டான பரவசத்தை விட சாலையில் காட்சிப்பொருளாய் கிடந்து விடக்கூடாது என்பதற்காக என்னை சுமந்து வருபவனை தலைமை தபால் நிலையத்திற்கு அருகே ஓய்வெடுக்கச் சொல்வேன். சில்லறை சிதறலைப் போல் சிரிப்பான். அவனுக்குத் தெரியும் உள்ளே வந்தால் சீட்டு கிழித்து அசிங்கப்பட விடக்கூடாது..

எத்தனை எத்தனை சூழ்நிலைகள்?

வெறுமை சூழ்ந்திருந்த போது, வெட்டித்தனமாய் அலைந்த போது, உச்சத்தில் இருந்தவர்கள் என்னை எச்சமாய் ஆக்கிய போது. அத்தனையும் பறிமாறிக்கொள்ள ஆசையுடன் வருவேன். உன் தலைப்பாகை தலையசைத்து வா வா? என்பதாகத் தோன்றும். வளைவுக்குள் நுழையும் போதே என்னுடைய வாலிபம் மீண்டு விடும். மொத்தத்தையும் குத்தகை எடுத்து குதியாட்டம் போடும் மனத்தை ஒரு ஓரமாய் உட்கார வைத்து விட்டு முதலிரவு சந்தோஷமாய் உன் முன்னால் வந்து நிற்பேன்.

எத்தனை எத்தனை மனிதர்கள்?

வாழ்க்கை இழந்தவர்கள், வாழ வந்தவர்களுமாய் எத்தனை எத்தனை பேர்கள்?

எங்கிருந்து தான் வருவார்கள் இத்தனை பேர்கள்?

வட நாட்டு குதப்பலும் உள் நாட்டு எச்சிலும் உன் மேனி எங்கும் பூசியிருந்தாலும் என்னால் அருவருக்க முடியாது. முகத்தில் முத்தம் தந்து தொடங்க வேண்டியவன் முடியாத காரணத்தால் உன் வலப்பக்க இடுப்பைத் தொட்டு உள்ளே நுழைவேன். சீட்டு என்ற போர்வையில் வந்தவர் போனவர் எல்லோரும் உன்னை உரசிக்கொண்டு உல்லாசம் காண்பதை எவ்வாறு என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்?

கையிருப்பை கணக்கில் வைக்காமல் அமைதி காக்கும் உன்னையும் என்னையும் ஓரு துண்டுச் சீட்டால் துண்டித்து விட முடியுமா?

இடுப்பு வழியே உள்ளே நுழைந்தவன் எங்கே போவான்?

உனக்கே தெரியும்?

கடைசியில் அரவமற்ற சூழ்நிலையில் பேசிக்கொள்வோம். வினாக்கள் சுமந்து கொண்டு வந்தவனுக்கு உன்னுடைய விளக்கவுரை ஆறுதலாய் இருக்கும்.

பெரும் புள்ளியாய் உள்ளே வருபவரும் என் கண்களுக்குத் தெரியாத புள்ளியாய் நின்று கொண்டுருப்பார்கள்.

வெறிச்சோடிய உன் பிரதேசங்கள் எனக்கே உண்டான தேகம்.

தேகம் முழுக்க பாகம் வரைந்து நிற்பவர்கள் கண்டு கலங்கி விடுவதுண்டு. வந்தவர் கண்டு விட்டால்? கொண்டவர் கேட்டு விட்டால்?

ஆனால் அவர்களின் அவசரங்கள் என்னை ஒரு ஆளாகக்கூட ஏற்க விடாது. வித விதமாய் வந்து நிற்பவர்கள் வினோதமாய் காணாமல் போய்விடுவர். கலங்காமல் கவனித்துக்கொண்டுருப்பேன்.

இருள் மூடி மறைக்கும் போது விளக்கெற்றி உன்னை என்னிடமிருந்து பிரித்தாலும், விளக்கில்லா பகுதியில் விடிய விடிய பேசியிருக்கோம். விளங்க முடியா உறவாய் பிரிந்துருக்கிறோம்.

எத்தனை மாறுதல்கள்?

தொடக்கத்தில் நான் உன்னை பார்த்ததும் இன்று உன்னை பார்ப்பதற்கும். உன்னை நிர்ப்பந்தமாய் போல் என்னையும் வாழ்க்கை மாற்றி விட்டது.

மாலை போட்டவளும் மகிழ்ச்சியாய் தேவியர்களும்.

மனைவிக்கு புரிய வைக்க முடியா நம்முடைய உறவை தேவியர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். அருகில் உள்ள புழுத்துப்போன பூங்கா தராத சந்தோஷம் உன்னிடம் வருவதற்குள்ளே குதுகலமாகி விடுகிறார்கள். வந்ததும் குதியாட்டம் போட்டு விடுகிறார்கள்.

கவனிக்க, பார்க்க, ஓடிப்பிடித்து விளையாட, அத்தனையும் வைத்து என்னைக் கவர்ந்தவள் என் தேவியரை விட்டுவிடவா போகின்றாய்?

அதோ பார்? உள்ளே வந்ததும் எத்தனை ஆர்ப்பாட்டம்.

சிரிக்காதே கள்ளி? இது தான் மாற்ற முடியாத மரபென்பதோ?