Category Archives: பகுக்கப்படாதது

நடிகர் சிவகுமார் “இது ராஜபாட்டை அல்ல” விமர்சனம் (பாட்டை இரண்டு)

இழப்புக்களை அதிகம் பெற்ற பெண்களால் தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல விஷயங்களை தர முடிகின்றது

இழப்புக்களை அதிகம் பெற்ற பெண்களால் தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல விஷயங்களை தர முடிகின்றது

வாழ்க்கையில் குட்டுப்படாமலே குதுகலமாய் கழித்துவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத்தான் அதிக குட்டுகள் விழுகின்றது.

ஆனால் வலிகளை செதுக்கும் உளியாக கருதிக்கொள்பவர்களால் தான் உத்தமமான விஷயங்களை இந்த உலகத்திற்கு தர முடிகின்றது.

அவருடைய வார்த்தைகளில் ” திரைப்பட புகழ் என்பது கொடைக்கானல் மேகம் போன்றது? எப்போது வரும்? ஏன் மறைந்தது என்று உணர்ந்து பார்ப்பதற்குள் நம்மை பரிதவிக்க விட்டு விடும்”.

” ஒரே நாளில் மொத்த புகழையும் அடைந்து விட வேண்டும் என்ற ஆவல் இல்லை. கொடிநாட்ட வேண்டும் என்று நினைக்கும் இமயமலை உச்சி கூர்மையானது கொடுமையானது. வாழ்நாள் முடிவதற்குள் எனக்கு வர வேண்டிய அத்தனையும் என்னை வந்து அடைய முயற்சிக்கும் முயற்சியில் தான் என்னுடைய இந்த சுய ஓழுக்க வாழ்க்கை”

ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்து விட்டு நமக்கு தனியாக இயக்ககூடிய அனைத்து தகுதிகளும் வந்து விட்டது என்று சொல்லிக்கொள்ளும் இந்த உலகில்

“கற்றது கையளவு. கல்லாதது உலகளவு. நான் பெற்ற 40 வருட திரைப்பட அனுபவங்களை என்னிடம் உள்ள சொற்ப வார்த்தைகள் மூலம் வௌிக்கொண்டு வரும் முயற்சி தான் இது ” என்று தொடங்குவதே வியப்பு தான்.

ஏதேனும் ஒரு துறையிலேயே சாதனை படைப்பதே அரிதாக இருக்கும் தற்காலத்தில், ஓவியத்திறமை, கலைத்திறமையுடன் எழுத்து திறமையும் உள்ள தாங்கள் உங்களுடைய பல பரிணாமங்களை இந்த நூலில் அமைதியாக அழகாக வௌிப்படுத்தியுள்ளீர்கள் ”

குழந்தைகளின் மாமா என்று பட்டம் பெற்ற தெய்வத்திரு. நேரு அவர்களின் பட்டத்தை இப்போது இவர் தான் வைத்துள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியராக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, இந்திய விஞ்ஞானத்திற்கு விடிவௌ்ளியாக அடைந்த உச்ச புகழ் மறந்து இன்று வரையிலும் இளைஞராக வாழ்க்கையை நடத்திக்கொண்டு வழி நடத்திக்கொண்டுருக்கும் இந்தியர்களின் மனசாட்சி முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்.

“நேர்மையை தனது சுவாகக் காற்றாகவும், சற்றும் பிசிறில்லாத ஒழுக்கத்தை தனது இலக்காகவும், தன் உழைப்பை மட்டுமே மூலதனமாகவும், மனித நேயத்தை மட்டுமே தன் வாழ்க்கை முறையாகவும் வாழ்ந்து காட்டிய சிவகுமார் என்ற மகா நடிகரின் வாழ்க்கையை விவரிப்பதன் மூலம், தற்கால இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இந்நூல் நம் தமிழ் சமுதாயத்திற்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது ”

மோதிரக்கை கே. பாலசந்தர் குட்டிய பிறகு வேறு என்ன சொல்ல முடியும்?

” Perfectionist ” என்பதன் உண்மையான அர்த்தத்தை தன்னுடைய நாடக திரைப்பட உலகில் தன்னுடைய பணிகளால் செய்து காட்டி போற்றப்படுகின்ற திரு. கே. பாலச்சந்தர், அவர் வாயாலே திரு. சிவகுமாரை “Perfectionist ” என்று சொல்கிறார் என்றால் வேறு சான்றிதழ் தேவையில்லை ”

தன்னுடைய துக்ளக் பத்ரிக்கையில் குண்டக்க மண்டக்க என்று வந்தவர் போனவர் என்று அனைவரையுமே போட்டுத்தாக்கும் வார்த்தைகளையே படித்த என்னால் நம்ப முடியவில்லை. அப்பட்டமாக நினைத்ததை அப்பழுக்கு இல்லாமல் இந்த முறைதான் அப்படியே திரு. சோ அவர்கள் பட்டவர்த்தனமாக பேசியுள்ளார்.

” சிவகுமாரை எல்லோரும் நடிகருக்கான இலக்கணம்,ஓவியருக்கான இலக்கணம், ஞாபக சக்திக்கான இலக்கணம் என்று சொல்றாங்க. ஆனால் இதற்கு மேலாக அவர் ஒரு சிறந்த மனிதருக்கான இலக்கணம் “.

வேறு யாராக இருக்கமுடியும்? சேதுவுக்கும் நந்தாவுக்கும் பிதாமகனாக இருந்து இன்று நான் கடவுள் என்று காட்சியை தந்த திரு. பாலா.

” இது ராஜபாட்டை அல்ல” என்ற தலைப்பே ஓர் அற்புதமான தகவலைத் தாங்கி வருகிறது. ரொம்பப் பேர், ஊரை விட்டு நிறைய சினிமா கனவுகளை கண்களில் நெஞ்சில் அப்பிக்கொண்டு சென்னைக்கு வந்து அலைஞ்சு, எப்படியும் சினிமாவுல எளிதில் வந்திடலாம்ன்னு நெனைக்கிறாங்களோ அவர்களுக்கெல்லாம் இந்த நூல்தான் பைபிள். அவர் பெற்ற புகழுக்கு ஒரு விலை கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது இதை படிக்கும் போது புரியும் “.

வயதில் மட்டும் தான் வயயோதிகம். வார்த்தைகளில் இல்லாத திரு.வாலி.

” அம்மா எலும்பும் தோலூமாக இருக்கலாம். கை கால்களில் சுருக்கம் இருக்கலாம். குளிக்காமல் வேர்வை நாற்றம் வீசலாம். எவ்வளவு இருந்தாலும் தாயின் மடியில் படுக்கிற சுகம், கருப்பைக்குள் படுக்கிற சுகம் மாதிரி தான் என்று சிவகுமார் அவர்கள் எழுதியிருக்கிறார். தாயைப் பற்றிய அந்தக்கட்டுரையைப் படித்தால் கூட இந்த நூல் எந்த அளவுக்கு நமக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் அருகாமையில் இருக்கக் கூடிய நூல் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.”

வாழ்க்கையை தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாய் வாழ்ந்து கொண்டுருக்கும் வழக்கறிஞர் சுமதி.

“கலையுலகில் கறை படியாமல் ஒரு மனிதன் 40 ஆண்டுகளாக அதற்கு மேலாகவும் வாழ முடியும் என்றால் இந்த நாட்டில் தாஜ்மகாலைவிட பெரிய அதிசயம் ”

“வாழ்க்கையை ஒரு தவமாக நடத்துவதென்பது எல்லோருக்கும் எளிதல்ல. அப்படி தவமாக நடத்தக்கூடியவன் எவனாவது இருந்தால் அவனை மகாத்மா என்று அடைமொழி கொடுத்து படமாக மாட்டி விட்டு இவன் போல் நம்மால் நடக்க இயலாது என்று சொல்லிவிட்டு நாம் நம்முடைய பாதையில் நடந்து பழகிப்போன தேசமிது. சிவகுமார் வாழ்க்கை என்பது ஒரு தவம். அதுதான் சிவகுமாரிடம் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு ”

எந்த புத்தகத்தையும் மேலோட்டமாக விரைவாக படித்து பழக்கமுள்ள எனக்கு, முந்தைய பதிவு எழுதுவற்கு முன்பு தலைப்பை தேர்ந்தெடுத்துவிட்டு சரியா? தவறா? என்று தவிப்பாய் தவித்த எனக்கு இன்று ஒவ்வொன்றாக உள்வாங்கி கொண்டுவரும் எனக்கு திரு. தமிழருவி மணியன் வார்த்தைகள் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.

“குறைந்த செல்வமுடையவனை குறைந்த செல்வம் ஆளுமை செய்யும். நிறைந்த செல்வமுடையவனை அந்த செல்வம் தான் ஆளுமை செய்யும். நிறைந்த வளம் குறைந்த மதிப்பு. குறைந்த வளம் நிறைந்த மதிப்பு. இது தான் இவர் வாழ்க்கை.”

இந்த புத்தகமே இவரால் தான் உருவாக்கமடைந்தது. எழுதக்கூடிய வாய்ப்பு திரு. சிவகுமாருக்கு அமைத்துக்கொடுத்த பத்ரிக்கையாளர், கட்டுரையாளர் திரு. சுதாங்கன்.

” நடிப்புக்கு இலக்கணமும் அகராதியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் நடிகனுக்கு இலக்கணம் திரு. சிவகுமார் என்று சொல்வதில் இரு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது ” என்று சொல்லி இருக்கும் இயக்குநர் இமயம் திரு. கே. பாலசந்தர் வார்த்தைகளை விட வேறு வார்த்தைகள் எங்கு தேட முடியும்?

கட்டுக்குள் அடங்காமல் திமிறிக்கொண்டுருக்கும் என்னுடைய மொத்த விமர்சனம் அடுத்த பதிவில்?

நடிகர் சிவகுமாரின் “இது ராஜபாட்டை அல்ல” விமர்சனம் (பாட்டை ஒன்று)

பெயர் ஒன்றே போதும். தரம் எளிதில் விளங்கும்

பெயர் ஒன்றே போதும். தரம் எளிதில் விளங்கும்

நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு பிரபல்ய முகம் நமக்கு பரிச்சயமாகிக்கொண்டே இருக்கிறது.

சமீப கட் அவுட் கலாச்சாரத்தில் அபிஷேகம் ஆராதனை வரைக்கும் நம்மை ஆட்சி செய்கின்றது.

இயல், இசை, நாடகம், ஆட்சி, அதிகாரம், ஆன்மீகம் என்று எல்லா துறைகளிலும் மின்மினி பூச்சிகள் போல் அல்லது நிதர்சனமாய் நம்மை தொடர வைத்துக்கொண்டுருக்கிறார்கள்.

படுக்கையறை வரை ஊடுருவி உள்ள இன்றைய ஊடக வௌிச்சக் கதிர்கள், இவரை ஒழித்து விட வேண்டும் என்று எவரை பூமிக்குள் உள் தள்ளி அமுக்கி விட நினைத்தாலும் வேறொரு வழியில் அவரைப்பற்றி அத்தனை உண்மைகளும் நம்மிடம் எளிதில் வந்து விடுகின்றது.

நிரந்தரமாய் உறங்காது உண்மைகள்.

வாழும் மனிதர்களில் திரு. தலாய்லாமா அவர்கள், அத்தனை பெரிய சீனக்கரங்களில் இருந்து தப்பி இன்று இவருடைய சின்ன கரங்கள் உலகில் உள்ளவர்களை, சார்ந்தவர்களை இன்று வரையிலும் அரவணைத்துக்கொண்டு தான் இருக்கிறது.

வாழந்த, வாழுகின்ற காலம் பார்த்த வரை, கேட்ட வரை, படித்த வரை, உணர்ந்த வரை தமிழகத்தில் எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள் சமூக வாழ்க்கை மற்றும் அதன் முன்னேற்றத்துக்கான தங்களால் முடிந்த பங்களிப்பை கண்களுக்குத் தெரிந்த பல ஆயிரம் பேர்களாக, கண்களுக்குத் தெரியாத லட்ச கணக்காய் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மானிட வாழ்க்கையை வளம் பெற செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ராமன் இராவணன் காலம் முதல் இலங்கை நார்வே வரையிலும். அழிக்க முயற்சித்துக்கொண்டுருப்பவர்கள் அழிவில் இருந்து காக்க வேண்டும் என்று துடிப்பவர்களுமாய்.

நண்பர் வார்த்தையில் சொல்ல வேண்டுமானல் ஈர்ப்பதென்பதே எதிர் எதிர் விசையாக இருந்தால் மட்டும் தானே?

ஆனால் எத்தனை சிறப்பாய் தங்களால் முடிந்ததை இந்த சமூகத்திற்கு தந்த ஆத்மாக்கள் தங்களுடைய சுய வாழ்க்கை கோட்பாடுகளை, ஒழுக்கத்தை விலை பேசி தான் தங்களை வௌிக்காட்டியிருக்கிறார்கள். காட்டிக்கொண்டுருக்கிறார்கள்?

காரணம் இங்கு வெற்றி மட்டுமே வெற்றி மட்டும் தான் முக்கியம். கொள்கைகள், ஒழுக்கங்கள் என்பதே இரண்டாம் பட்சம் தான்.

வாழும் காலத்தில் அரசியலில் தோழர் திரு. நல்லக்கண்ணு, திரு.வைகோ ஆன்மிகத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இசையில் திரு. இளையராஜா, திரு, ரஹ்மான், கதையில் திரு. சுஜாதா கவிதையில் திரு,வைரமுத்து, திரு.வாலி திரைப்படத்துறையில் திரு. ஏவிஏம். சரவணன், பாட்டில் திரு. பாலசுப்ரமணியம், அறிவியலில் திரு. ஐயா அப்துல்கலாம், திரு, மயில்சாமி அண்ணாத்துரை உலக அளவில் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இவர்களில் பாடகர் மட்டுமே வளர்ப்பால் தமிழன். மற்ற அனைவருமே பிறப்பால் தமிழர்கள்.

வரிசையில் உள்ளவர்களில் சிலர் குறித்து உங்கள் நினைவில் சில பல வீபரீதங்கள் வந்து போகும். உண்மைதான். பகத்சிங் வீரத்தை ஆங்கிலேயர்கள் பார்த்த பார்வைக்கும் நாம் இன்று படிக்கும் வரலாற்று பாடப்புத்தகங்கள் உணர்த்தும் விசயங்களில் என்ன வித்யாசத்தை நீங்கள் உணர்கிறீர்களோ அந்த உணர்வில் தான் இதை பதிய வைக்க முயற்சிக்கின்றேன்.

இவர்கள் அனைவருக்குமே வேறு வேறு பாதைகள். நோக்கங்கள். லட்சியங்கள்.

வாழ்க்கை முறை கூட வேறு வேறு.

அனைவருமே இவர்களுக்கு முந்தைய தலைமுறைகளில் எவருமே உச்ச புகழை அடைந்தவர்கள் அல்ல என்பதும் ஊடக வௌிச்சம் என்பதே என்னவென்று அறியாத குடும்பத்தில் இருந்து இவர்கள் அனைவருமே வாழ்ந்தவர்களின் வழிதோன்றலாக வந்தவர்கள் என்பதுமே ஆச்சரியத்தின் உச்சம்.

திரு. ஏவிஎம். சரவணன் தவிர.

தான் மட்டும், தன்னுடைய உழைப்பை மட்டுமே கொண்டு உச்சத்தை அடைந்தவர்கள்.

இன்னமும் வாழ்க்கையில் எச்சமாய் மாறாமல் உயிர்ப்புடன் சமூக வாழ்க்கையை அவர்களால் முடிந்த வரையில் அவரவரர் துறை வாயிலாக வளம் பெற செய்து கொண்டுருப்பவர்கள்.

மொத்தமாய் வியந்தது, எத்தனை ஊடக வௌிச்சம் என்ற போதிலும் “தன்னை” இழக்காமல் இன்று வரை நிஜமான வாழ்க்கையை இவர்கள் அனைவருமே வாழ்ந்து கொண்டுருப்பது.

கொண்ட கொள்கைகள் பின்னோக்கி தள்ளப்பட்டுருக்கலாம். உத்தமமான இடத்தை பிடிக்க இன்று வரையிலும் போராடிக்கொண்டு கூட இருக்கலாம். ஆனாலும் ஓழுக்கத்தை விலைமகளாக்காமல் சொந்த மகளாகவே பார்த்துக்கொண்டு பயணிக்கும் அவர்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்.

ஒழுக்கத்தை விற்று தான் இன்றைய வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று சொல்லிக்கொண்டுருப்பவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் எச்சரிக்கை?

இறந்தவர்களும், எண்ணிக்கையில் வராதவர்களும் என்னுடைய பார்வை என்பது படாமல் இருக்கலாமே தவிர ஏற்புடையவர்கள் தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்த வரிசையில் சமீபத்தில் வந்து என்னை ஆக்கிரமித்து ஆச்சரியப்படுத்திக்கொண்டுருப்பவர் தான் நடிகர் சிவகுமார்.

அவருடைய சுயசரிதம், திரைப்பட அனுபவம், வாழ்வியல் அனுபவம் என்று பல முகத்தைக் கொண்ட “இது ராஜபாட்டை அல்ல” என்ற புத்தகம் கடந்த வாரம் முழுவதும் என்னை விட்டு பிரிய மனதில்லாமல் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே வாகனத்தில் வந்து என்னை உயிர்ப்பித்துக்கொண்டுருந்தது.

படிக்க படிக்க முடிக்கவே முடியாமல் உள்ளே இழுத்துக்கொண்டே இருக்கிறது. உள்ளே உள்ள முக்கால் வாசி விசயங்கள் சம காலத்தில் நான் படித்ததும் பார்த்ததுமாய் இருப்பதால் அதன் நம்பகத் தன்மை அதிக ஆச்சரியம் அளிக்கின்றது.

பாகம் 1,2 என்று, இரண்டு பாகமும் ஒரே புத்தமாக உத்தமமான வௌ்ளை மற்றும் வண்ண வண்ண ஏராளமான படங்களைக்கொண்டு காலப் பெட்டகமாய் காட்சியளிக்கிறது.

2004ல் தொடங்கிய ராஜபாட்டை இன்று மலிவு விலை பதிப்பில் மாறி 2008 வரையிலும் ஏழு பதிப்புகளை கடந்து வந்துள்ளது.

மொத்த பக்கங்கள் 552. மலிவு விலையாக ரூபாய் 220.00

புண்ணியம் தேடியவர்கள்

அல்லயன்ஸ் கம்பெனி,
ப. எண். 244, ராமகிருஷண மடம் சாலை,
தபால் பெட்டி எண் 617
மயிலாப்பூர், சென்னை 600 004,

தொலைபேசி 044 24641314
இணைய தளம் …. http://www.alliancebook.com
தொலைநகல் …. srinivasan@alliancebook.com

இத்தனை தாமதத்திற்கு பிறகு ஏன் இந்த அவஸ்யம்?

கேட்பது புரிகின்றது. உண்மைதான். நல்ல விசயங்கள் நம்மிடம் சற்று தாமதமாகத்தான் வரும். காரணம் நாம் அதை உள்வாங்கிக்கொள்ள வேண்டிய காலத்தின் பாடங்களை கற்றுணர்ந்து வைத்துருக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால்.

இவை தொடராக வந்த போது உங்களில் பல பேர்கள் படித்துருக்க முடியும். ஆனால் நீங்கள் படித்த விசயங்கள் உடன் திரு. அல்லயன்ஸ் சீனிவாசன் உடைய அன்புக்கட்டளை ஏற்று தன்னைப்பற்றி, வாழ்ந்த நிகழ்வுகளைப்பற்றி திரு. சிவக்குமார் சற்று அதிக அக்கறையுடன் மேலும் பல அத்தியாயங்கள் எழுதியுள்ளது அடுத்த சிறப்பு.

என்னுடைய விமர்சனத்திற்கு முன்பாக இதில் வௌியீட்டு விழாவில், மதிப்புரையில், வாழ்த்துரையில் பங்கெடுத்துக்கொண்ட “ஊடக வௌிச்சம்” அதிகம் பெற்றவர்கள் சொன்ன வார்த்தைகள் அடுத்த பதிவில்.

காரணம் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னாலே குட்டிக்கொண்டு செல்வது தான் முறை. குட்டியவர்கள் சொன்னது?

பொக்கிஷம் (நினைவில் நீக்கமற நிறைந்து இருக்கும் காலப்பெட்டகம்)

தேக்கு மரங்கள் பேசும் கதைகளுடன் கூடி வாழ்ந்த கூட்டத்திற்கு எத்தனை அறைகள்.

தேக்கு மரங்கள் பேசும் கதைகளுடன் கூடி வாழ்ந்த கூட்டத்திற்கு எத்தனை அறைகள்.

நண்பர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். அவருடைய தொலைபேசி உரையாடலே மிக சந்தோஷமாய் இருந்தது.

“இனிமே கவலைப்பட வேண்டியதில்லை. இந்த வீட்டை உடைத்து முடித்தாலே என் கடன் பிரச்சனை முழுவதும் தீர்ந்து விடும்”.

அவருடைய தொழிலே பழைய சாமான்கள் விற்பது. இது போக பழைய வீடுகளை உடைத்து அதில் கிடைக்கும் அத்தனை சமாச்சாரங்களையும் தரம் வாரியாக விற்பது.

ஒவ்வொரு முறை ஊருக்குள் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக தங்க வேண்டிய நேரத்தில் மாலை நேரத்தில் ஒவ்வொரு சந்தாக புகுந்து வௌியே வருவதுண்டு.

அனந்த ராமனுடன் குரங்கு பெடல் சைக்கிள் கற்ற யெ.மு வீதி மறக்க முடியாத நினைவு. அமைதியாய் நடக்கும் போதே அத்தனை நினைவுகளும் உள்ளே வந்து போகும்.

யூனஸ்கோ, படப்பிடிப்பு என்று ஏதோ ஒரு வகையில் புத்தாடையில் புதுப்பொழிவாய்

யூனஸ்கோ, படப்பிடிப்பு என்று ஏதோ ஒரு வகையில் புத்தாடையில் புதுப்பொழிவாய்

தொடக்கத்தில் அவர்கள் குடும்பம் தான் ஊரில் உள்ள அத்தனை நல்ல விஷயங்களுக்கும் பொருளாதார உதவிகளை தராளமாய் தானமாய் வழங்குவர். அவர் கட்டி வைத்திருந்திருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் அடியேனைப்போல அத்தனை பேருக்கும் அவதார இடம். கட்டி வைத்த பள்ளிக்கூடமும் கடைசியாக இறுதி மயானம் வரைக்கும் அவர்களின் பொருளாதார கைகள் வெகுவாக நீண்டுருந்தது.

அனந்த ராமன்,, கோபிநாதன் வீட்டுக்கு போகும் போதெல்லாம் மறக்காமல் ஆச்சி உள்ளே அழைப்பார்கள் . மொத்த கூட்டத்திற்கும் டின்னில் அடுக்கி வைத்துள்ள நெய் முருக்கு வினியோகம் நடக்கும். வீட்டுக்கு உள்ளே போக அச்சமாய் இருக்கும்.

சந்தில் ஒரு முனையில் தொடங்கி நான்கு புறமும் மொத்தமாய் வளைத்து எழுப்பியிருக்கும் பிரம்மாண்டமான அந்த அரண்மனையை எத்தனை வருடங்களில் கட்டியிருப்பார்கள்? எத்தனை பேர்களின் கூட்டு முயற்சி? பர்மா, மலேசியா, சிங்கப்பூர் மொத்த உழைப்பும் அங்கு கதவாய், நிலைப்படியாய், மாடமாய் மாறியிருக்கும்.

ஒரு முனையில் இருந்து பார்த்தால் அடுத்த முனையில் இருந்து பேசும் வேலைக்காரர்களின் கூச்சல் கூட கேட்காது. அத்தனை வாஸ்தும் அடக்கமாய் இருக்கும். அத்தனை வாழ்க்கை கலை நுனுக்கமும் அம்சமாய் இருக்கும்.

உள்ளே நுழையும் போதே உங்கள் உள்ளமும் மாறிவிடும்?

உள்ளே நுழையும் போதே உங்கள் உள்ளமும் மாறிவிடும்?

இறைபக்தியும், கலை பக்தியயும் மொத்தமாய் சேர்ந்த கூட்டுக்கலவை.

திரைகடலோடியும் தேடி திரவியமெல்லாம் திகட்டாத தேன் அமுதம் போல் இன்று வரையிலும் பெரும்பாலான இடங்களில் காலத்தின் சாட்சியாய் இருந்து கொண்டுருக்கிறது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பண்பாடு. ஒரு கூட்டம். ஒரு பிரிவு. மொத்தமாய் ஒரே கூரையில் வந்தாலும் கலாச்சாரம் ஒரே மாதிரி என்றாலும் எல்லைக்கோடு போல் அங்கங்கே ஏதேதோ உணர்த்துவதாய் . சாமி கும்பிடுவதை வைத்து பிரித்து இருப்பர்.

இன்று வரையில் எந்த ஆர்ப்பாட்டமும் நான் பார்த்தது இல்லை. எந்த இடத்திலும் முன்னிறுத்தல் இருக்காது. ஆனால் எல்லா இடத்திலும் தான தர்மத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்கள். மூன்று தலைமுறைகள் தாண்டியும் ஒரு விரிசல் இல்லாத கட்டிடங்கள் ஒரு வியப்பு என்றால் வாழ்க்கையின் முதன்மை பண்பே சேமிப்பு என்பதை உணர்த்தும் வாழ்க்கை இன்னோரு வியப்பு.

விளையாட்டுத்தனத்தை விட்டு உற்றுப்பாருங்கள் ஏதாவது விரிசல் தெரிகின்றதா? வயது 150.

விளையாட்டுத்தனத்தை விட்டு உற்றுப்பாருங்கள் ஏதாவது விரிசல் தெரிகின்றதா? வயது 150.

சந்தில் இளமையில் பார்த்த ஆச்சியும், அப்புத்தாவும் தெரு வாயிலில் வேடிக்கை பார்த்துக்கொண்டுருப்பார்கள். அத்தனை பெரிய வீட்டுக்குள் அவரைத் தவிர அவ்வப்போது வந்து போய்க்கொண்டுருக்கும் வேலைக்காரர்கள் மட்டும்.

என்றைக்கோ ஒரு நாள் அத்தி பூத்தாற்போல் திருடன் என்ற பெயரில் யாரோ ஒரு நுழைந்து விடுவார்கள். பெரிய அளவிற்கு எந்த அசம்பாவிதங்களையும் நான் பார்த்தது கேட்டது இல்லை. பொறுமை, சகிப்புத்தன்மை, சமாதானம், வரவுக்கு ஏற்ற செலவு, நிச்சயமான சேமிப்பு, மொத்தத்தில் வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருக்கும் நிதானம்.

வாழையடி வாழையாக அத்தனை பேர்களும் அப்படித்தான் வாழ்ந்தார்கள். இருக்கிறார்கள். இளமைப்பருவத்தில் காவல் நிலைய அதிகாரிகள் அத்தனை பேரும் ஐந்து வருடங்கள் நிச்சயமாய் ஓய்வு எடுத்துக்கொண்டு தான் மாற்றலாகி போனார்கள்.

நடந்து வரும் போது பல முகங்கள்.

மாங்காயும், நெல்லிகாயும் திருடி உள்ளே நுழைந்தவர்ககளை கம்பால் விரட்டிக்கொண்டு வரும் அத்தனை பேரும் பல் இழந்து பார்வை குறைந்து அருகில் போய் சொன்ன போதிலும் பொக்கை வாய் சிரிப்பாய் செல்ல குட்டு வைத்து சிரித்தார்கள்.

எத்தனை அறைகள், எத்தனை மாடங்கள், எத்தனை முற்றங்கள் எண்ணிக்கையில் அடங்காமல் உள்ளே நுழைந்து வௌியே வர திணறிய காலமுண்டு. திருப்பூரில் மூன்றரை சென்டில் வீட்டுடன் கட்டித்தருகிறோம் என்று வீட்டுக்கு வருவபவர்களை பார்க்கும் போது காலம் ஏதோ எனக்கு மறைமுகமாக கூறுவது போல் தெரிகின்றது.

மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், மாப்பிள்ளைகள் அத்தனை உறவுகளும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈரேழு உலகமாய் பிரிந்து வாழ இங்கு வசதி குறைந்தவர்களின் வீடுகள், பராமரிக்க முடியாத வீடுகள் என்று எத்தனையோ காரணங்களால் ஏற்றம் குறைந்து மாறிக்கொண்டுருக்கிறது.

கிளம்பி வரும் போது எப்போது போல அக்கா வீட்டுக்குச் சென்றேன். எப்போது போனாலும் பொட்டலம் மடித்துக்கொண்டுருக்கும் கூட்டத்துக்குள் தலைகாட்டி பேசும் அக்காவைச்சுற்றி இன்று சற்று கூட்டம் அதிகமாக இருக்கிறது.

திரைப்பட வௌிப்புற படப்பிடிப்பு சமையல் மளிகை சீட்டை சரிபார்த்துக்கொண்டுருந்தார்.

பத்து பெண் குழந்தைகள் இருந்தாலும் பழையை சாமானை வைத்து கரை சேர்த்து விடலாம்.

பத்து பெண் குழந்தைகள் இருந்தாலும் பழையை சாமானை வைத்து கரை சேர்த்து விடலாம்.

http://tirupurjothigee.blog.co.in/about/contact/

வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில் 100 நாள்?

பார்க்கும் பரவசத்தை விட அளவு பொருத்தமாக வேண்டும் என்ற அச்சம் தான் அதிகம்?

பார்க்கும் பரவசத்தை விட அளவு பொருத்தமாக வேண்டும் என்ற அச்சம் தான் அதிகம்?

பத்து நாளைக்கு முன்பே மாமனார் வீட்டுகே வந்து தனிப்பட்ட முறையில் சொல்லி விட்டு போய்விட்டார். அவரைப் பொறுத்தவரையில் நடக்கப்போகும் விஷேசம் முக்கியமானது.

என்னுடைய குடும்பம் மட்டும் கலந்து கொள்ளாமல் இருந்தால் மொத்த பிரச்சனையும் அவருக்கு வந்து சேர்ந்ததாக இருந்து விடும். காரணம் அவருடைய அனைத்து ஒத்துழைப்பும் எனக்கு மட்டுமே என்று அவரை குற்றம் சாட்டுபவர்களுக்கு இன்னமும் வலுவாக ஆகிவிடும்.

போனால் எதாவது பிரச்சனை வந்துவிடப்போகின்றதோ பயம் என் மனைவிக்கு?

மாமனார் மேல் மரியாதையின் காரணமாக அந்த கிராம நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.

வண்டியை விட்டு இறங்கும் போதே அட்டகாசமாக வந்து வரவேற்றவர் எனக்குப் பிடிக்காத வெறியை உருவாக்கியிருந்த அதே மன்மத கடவுள்?

திருப்பூர் கவுண்டர் போல் வேஷடி சட்டையில் நெற்றி நிறைய பட்டையும் குங்குமமும் மந்தாகச புன்கையுடன் வரவேற்றார்.

வெட்கம் இருந்தால் தானே படுவதற்கு? மனதிற்குள் முனங்கிக்கொண்டே மையமாக புன்னகைத்தேன்.

எதிரே நிற்கும் எந்த வயது பெண்களையும் கண்களால் மட்டும் அளந்து கொண்டு கனகச்சிதமாய் உடைகளை மிக மிக விரைவாக தைத்துகொடுப்பவர்களை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்?

கேட்ட போது வாய்ப்பே இல்லை? என்றேன்.

ஆயிரக்கணக்கான வடிவமைப்பை உருவாக்கும் போது அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில்.

வௌிநாடுகளில் கூட பெண்களுக்கு பெரிதான மாறுதல்கள் இருக்காது. ஆனால் நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரிசியிலும் மதிய நேர “தொடர்”களிலும் உயிர் வாழ்ந்து கொண்டுருக்கும் பெண்களுக்கு மாதம் ஒரு முறை “மாறுதல்கள்” இருந்து கொண்டே தான் இருக்கும்.

மனைவி சொன்ன போது நம்பாதவன் ஊரில் நடந்த நிகழ்ச்சிக்காக அந்த வறபட்டிக்காட்டி கிராமத்தில் நுழைந்த போது நம்பித்தான் ஆகவேண்டியதாய் மாற்றி விட்டது.

திருப்பூரில் ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்குள் ஒரு குட்டி ராஜாங்கம் இருக்கும். அவர்களின் மொத்த வேலையே நிர்வாகம் எதிர்பார்க்கும், உயிர் ஊட்டப்போகும் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் ஆடை அணிவகுப்பை உருவாக்குவது. உருவாக்கிய அந்த ஆடை இறக்குமதியாளரின் தேர்வு விருப்ப அனுமதி கிடைத்தபிறகு உற்பத்தி துறை சார்ந்த விசயங்களுக்கு உள்ளே வரும். சில சமயம் கஜினி படையெடுப்பு மாதிரி வடிவமைப்பு அனுமதி கிடைக்காத ஆடைகளின் தொடர் பயணம், நிறுவன நிர்வாகியின் சொத்தை துரித அஞ்சல் சேவைகாரர்கள் அனுபவித்துக்கொண்டுருப்பார்கள்.

ஒவ்வொரு ஆய்த்த ஆடை நிறுவன ராஜாங்கத்தில் குறுநில மன்னனாக ஒரு அட்டை கத்திகாரர் மகா வீரனாக காட்சியளித்துக்கொண்டுருப்பார். தொடக்க காலத்தில் அவர் மட்டுமே மொத்த நிர்வாகத்திற்கும் ஆதர்சன கடவுள். அவர் உருவாக்கும் வடிவமைப்பு அட்டைகள் தான் நிர்வாகியின் சொத்தை வளர்ப்பதும் வீழ்த்துவதும். அவருடைய அத்தனை தேவைகளுக்கும் அங்கு அத்தனை முக்கியத்துவமாய் செய்து கொடுப்பார்கள்.

இவையெல்லாம் புரியாமலே பல முறை பல நிறுவனங்களில் அந்த அறைக்குள் நுழைந்து விடுவேன். வௌியே போ? என்று சொல்லாமலே வௌியே அனுப்பி விடுவார்கள். தவிக்காத தண்ணீருக்கும், தேவையிருக்காத அட்டைக்கும் அத்தனை முறை அலைய விட்ட போது கடைசியில் தான் புரிந்தது நாம் பார்த்தால் கற்றுக்கொண்டு விடுவோம் என்ற பயத்தில் விரட்டி துரத்தும் யுக்தியை.

ஆனால் மனைவியின் உறவினர் திறமையை அந்த அரைமணி நேரத்தில் அதுவும் அந்த கிராமத்திற்குள் கண்ட போது கண் இமைக்க மறந்து கட்டி பிடித்து பாராட்டினேன். முப்பது நிமிடங்களில் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட பெண்களின் கச்சிதமான ஆடையை முடித்து தூக்கியடித்த போது.

உழைக்க வரும் இளைஞர்களை முகஞ்சுழிக்காமல் தினந்தோறும் வரவேற்கும் திருப்பூர்.

உழைக்க வரும் இளைஞர்களை முகஞ்சுழிக்காமல் தினந்தோறும் வரவேற்கும் திருப்பூர்.

நீங்கள் அவஸ்யம் திருப்பூருக்கு வரவேண்டும்?

அழைத்து திரும்பினால் மாமனார் மெதுவாக என்னை அழைத்து பின்னால் உள்ள தோப்புக்கு அழைத்துச் சென்றார்.

“அவர் இங்கேயே இருக்கட்டும். பாவம் விட்டு விடுங்கள் ” என்றார்.

மறுத்து உரத்து பேசிய என்னை ஒரே வார்த்தையில் வாயை அடைத்து விட்டார்.

“அவர் இங்கே இருந்தாலாவது கை கால்கள் நன்றாக இருந்து தைத்துக்கொண்டுருப்பார். அங்கே வந்தால் உங்களிடம் வாங்கிக்கொள்ளும் அடியில் எதையாவது இழந்து விட்டால் எனக்குத் தான் பிரச்சனை. வேண்டாம் விட்டு விடுங்கள் “.

எனக்குப் புரியவில்லை. மாமனார்க்கு என் வேகம் தெரியும். ஆனால் முழுவதையும் சொல்ல விரும்பாமல் மேலோட்டமாக தெரிவிப்பது எதை என்று தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

விடாது துரத்தும் கருப்பு போல் கிளம்பும் போது “நீங்கள் திருப்பூர் வந்தால் உங்களை வாரி அனைத்துக்கொள்ளும்?” என்று சொல்லி விட்ட வந்த பத்து நாளில் அவர் ஊரில் யாரிடமும் சொல்லாமல் வேலை செய்த நிறுவனத்திற்கே வந்த நின்ற போது திகைத்து விட்டேன்.

சந்தோஷமாகவும் இருந்தது. இத்தனை திறமைசாலி ஏன் சினன கூட்டுக்குள். நாம் கைதூக்கி விடலாம்.

ஆனால்?

நிறுவனத்தில் உரிய பகுதியில் உள்ளே நுழைத்த போதே சம்மந்தப்பட்டவரிடம் சொல்லிவிட்டேன். உறவு என்பதை வைத்தோ என்னிடம் எந்த வித சிறப்பு சலுகையை கொண்டு வரக்கூடாது. நல்லதோ கெட்டதோ நீங்கள் தான் பொறுப்பு. பிடிக்க வில்லை என்றால் என்னை எதிர்பார்க்கவே வேண்டாம். நீங்களே அனுப்பி விடலாம்?

காலை நிகழ்ச்சியை மறந்து விட்டேன்.

சாப்பாடு முடிந்ததும் கண்ணாடி அறை வழியே பார்த்த போது வித்யாசமாய் இருந்தது. காலையில் அமர்ந்திருந்த இடத்தை விட்டு தூரமாய் நாலைந்து பெண்களுக்கு நடுவில்.

அவரது தையல் எந்திரம் மட்டும் ஓடாமல் காற்று வாங்கிக்கொண்டுருந்தது. முன்னாலும் பின்னாலும் உள்ள பெண்கள் இவரை வேலை வாங்கிக்கொண்டுருந்தனர்.

விளங்கிக்கொள்ள முடியாமல் மூன்று நாட்கள் முடிந்த போது அதற்குள் இரண்டு பெண்களாய் இருந்தவர்களின் கூட்டம் ஏழெட்டு ஆகி கோபியர்களுக்கு நடுவே புல்லாங்குழல் ஊதாத பரமாத்மாவாக ஜன்னல் வழியே காற்று வாங்கிக்கொண்டுருந்தார்.

திருப்பூரில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு இலக்கணம். இவரை நுழைத்த தைக்கும் பிரிவோ தைக்கும் அளவுக்கு கையில் காசு. 12 மணிநேரத்தில் நானூறு வாங்குபவர்களும் உண்டு. எட்டு மணி நேரத்தில் கூட்டணி அமைத்து ஆயிரம் ரூபாய் வாங்குபவர்களும் உண்டு.

மனைவியிடம் கேட்டேன். அவளோ சிரித்தாள்.

“அப்பா உங்களிடம் சொல்லாதது என்ன என்று இப்போது புரிகின்றதா? “.

புடவை சிக்கி விட்டது. வேகமாக இழுத்தால் நமக்குத்தான் பிரச்சனை.

ஞாயிற்குக்கிழமை வீட்டுக்கு வரவழைத்தால் மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்க ஆரம்பித்தால் திங்கள் மதியம் வரை தூங்குபவரை என்ன சொல்ல முடியும்? சைவத்தை மட்டுமே கொண்டு வாழ்பவனுக்கு அசைவம் இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன் என்று குழந்தை போல் அழுபவரை என்ன செய்து விட முடியும்.

மாமனார் வந்த அழைத்து போகும் வரைக்கும் அசையாமல் தொலைக்காட்சியில் முழ்கியிருந்தார்.

இப்போது அவரோ வெட்கம் மறந்து உள்ளே அழைத்து கொண்டு உள்ளே சென்றார். திருமண பேச்சு தொடங்கும் போது உள்ளே வந்த ஊர். மொத்தமாய் மாறியிருந்தது. குடிசை வீடு முழு கட்டிடமாய் ஆயிருந்தது. அங்கண்வாடி பணியாளராக உள்ள மனைவியோ மிக தராளமாய் முட்டை பருப்பு வகைகளை வீட்டிலே வைத்து வியாபாரம் பண்ணிக்கொண்டுருந்தார்.

மன்மதன் பணி குறித்து விசாரித்தேன்.

மத்திய அரசின் தேசிய ஊரக நூறு நாள் வேலைத்திட்டத்தில் திட்ட மேற்பார்வை பணியாளராக புதிய அவதாரம்.

விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் அனைத்து இடங்களும் இடங்கள் விற்பனைக்கு என்று மாறிக்கொண்டுருந்தது.

மக்கள் தௌிவாக இருந்தார்கள்.

நாற்று நடப்போனால் கிடைக்கும் ரூபாய்க்கு பத்து சட்டி மண் சுமந்து நடந்து சென்றாலே தினந்தோறும் என்பது ரூபாய் கிடைத்து விடுவதால் மன்மதனுக்கு பெண்கள் பஞ்சமே இல்லாமல் “பணி” நடந்துகொண்டுருந்தது. காலையில் சின்ன கவுண்டர் போல் வேஷமிட்டு பத்து மணிக்கு கண்மாய் மேல் நின்று கொண்டு வந்துருக்கும் மொத்த பெண்கள் கூட்டத்தையும் கண்களால் ஒரு அளவு எடுத்துக்கொண்டு அன்று மாலையே கலை அம்சத்துடன் திட்டத்தை நிறைவேற்றி நாட்டுக்கு பங்காற்றிக்கொண்டுருக்கிறார்.

http://tirupurjothigee.blog.co.in/about/contact/

” கோணாங்கி குறி சொல்லியா பொழுது புலர்ந்து விடும்? “

புத்தன் முதல் நேற்று வரை எத்தனையோ பேர்கள் சொல்லியும் பேராசை?

புத்தன் முதல் நேற்று வரை எத்தனையோ பேர்கள் சொல்லியும் பேராசை?

வங்கி பத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு பத்தாவது முறையாக கேட்டேன்.

“உறுதியா இறங்கிடலாம்மா?”

” உறுதியா உங்களுக்கு இந்த பணம் வந்தே ஆகனும்? கட்டங்கள் அத்தனை சிறப்பாக இருக்கிறது?”

பதட்டமே இல்லாமல் சொன்ன அவரின் அந்த வார்த்தைகள் மொத்தமாக என் வாழ்க்கையையே பதட்டமாக்கி விடப் போகின்றது என்பது அப்போது தெரியவில்லை?

ஆசைப்பட்டபடி தனியான தொழில் பாதை. இறுதியான தேர்வில் தனித்தனி இறக்குமதியாளர்கள் அமைந்து விட்ட போதிலும் ஒரு வட்டத்தை விட்டு வௌியே வந்து விட முடியவில்லை. ஒப்பந்தம் என்பது ஒன்றன் பின் ஒன்றாக வரும் போது வங்கி தயவில் வசதிகள் வந்தது. ஒரே சமயத்தில் அனைத்து ஒப்பந்தங்களும் உள்ளே வந்த போது உழைக்க மனமும் உடலும் மட்டுமே உதவியாய் இருந்தது.

உறவுகளின் எல்லை ஒரு கோட்டுக்குள் இருந்ததால் எல்லைக்கோட்டை தாண்டியே ஆக வேண்டிய வாழ்க்கை நிர்ப்பந்தத்தில் வாழ்ந்த காலம்.

எனது வாழ்க்கை முழுமையுமே திடீர் என்று வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆராதனை வாழ்க்கை அல்ல. அல்லல்பட்டு, அவதிப்பட்டு பட்டு பட்டு தான் பட்டாடையாக பரிணமித்தது.

ஏறும் படிகள் ஒவ்வொன்றும் ஒன்றன் பின் ஒன்றாக என்பதாகத் தான் எனக்கான விதி என்னிடம் உணர்த்தியது.

ஆனால் எத்தனை நாளுக்குத் தான் வாயுக்கும் வயிற்றுக்கமாய் வாழ்ந்து கொண்டுருப்பது? முந்தி போய்க்கொண்டுருந்தவர்கள், முந்த முயற்சிப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒரு உணர்ச்சியை தூண்டி விட்டுக்கொண்டே தான் இருந்தார்கள்.

அருகில் அமர்ந்திருந்த நண்பரோ ஆகாய கோட்டையை அச்சாரம் இல்லாமல் கட்டி கண்களுக்கு முன்னால் காட்டும் போது சற்று பரவசமாய் தான் இருந்தது. இருந்தாலும் சந்தேகம் சற்று வலுவாய்த்தான் இருந்தது.

வட்டி மன்னன் என்று இந்தியா முழுமைக்கும் பறை சாற்றி பெயர் வாங்கிய வங்கி அது. தனி நபர் கடன் எந்த சொத்து பத்திரமும் தேவையில்லை என்ற போது சிரிப்பு தான் வந்தது.

பத்திரம் இல்லாமல் எப்படி?

மாட்டிக்கொள்ள வேண்டும் என்பது விதி என்றால்?

மாட்டிக்கொள்ள வேண்டும் என்பது விதி என்றால்?

ஆனால் மச்சான் சொன்ன போது நம்பித்தான் தொலைக்க வேண்டி இருந்தது. தௌிவான சித்தாத்தங்கள். நம்பும் படி அத்தனை உதாரணங்கள். உள் வட்டம் வௌிவட்டம் என்று அணிவகுத்த அத்தனை பேர்களும் அந்த கடனுக்காக வாங்கிக் கொடுக்கும் அவருக்காக காத்துருந்தனர்.

அவரோ என்னைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார். வீட்டு வாசலில் என்னுடைய விதி கண்களுக்கு தெரியாத உருவமாய் சம்மணம் இட்டு அமர்ந்து இருந்தது.

வந்து இறங்கிய வாகனம், வசதியை பறைசாற்றிய ஆங்கிலம், சாதித்த சாதனைகள் என்று அத்தனையும் நான் கேட்ட விதத்தில் காகிதமாய் என் முன் வந்து விழ கலங்கி விட்டேன். மயங்கி விட்டேன்.

கற்றதும் பெற்றதும் ஏற்கனவே ஏராளமாய் இருக்கும் போது இன்னோன்று என்று இதை வாழ்க்கை வரவு வைத்துக்கொண்டது.

வாங்கி வைத்துக்கொண்டு குழப்பத்துடனும், குறுக்கு சிந்தனைகளுடனுமாய் இரண்டு நாட்கள் வாழ்ந்து முடித்து விட்டு நண்பரை அழைத்தேன்.

தொடக்கத்தில் இரண்டு நிறுவனங்கள் மாறி மூன்றாவது நிறுவனத்தில் உள்ளே நுழையும் போதே புரிந்து விட்டது. இனி வாழ்க்கையில் நிறுவனத்திற்குள் தங்கி பணிபுரிவது எந்த விதத்திலும் நல்லது அல்ல. எப்பாடு பட்டாவது தனியாக அறையில் தங்க வேண்டும்.

வாழ்க்கை கடவுளாக நிறுவன தொடர்பாய் வந்த ஜெரோம் செல்வகுமாரை சாலையில் சந்திக்க வைக்க புண்ணியவான் கொண்டு போய் வாழ காட்டிய அறை தான் இப்போதைய சீனிவாச திரையரங்கம் பின்னாள் உள்ள குடியிருப்பு வளாகம்.

எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சி.

தெருவை பார்க்கும்படி உள்ள அறை. அறைக்கு அருகே கழிப்பிட வசதி. தனித்தனி படுக்கை வசதி. இது போக அன்றைய சூழ்நிலையில் நினைத்துப்பார்க்க முடியாத 24 மணிநேர தண்ணீர் வசதி. வேறு என்ன வேண்டும். வேலை தேட வேண்டும் என்று எண்ணம் இல்லாமலே மூன்று நாட்கள் உள்ளேயே முடங்கிக்கிடந்து சுதந்திர சுவையை அனுபவித்தேன்.

தூக்கத்தை மட்டுமே விரும்பும் செல்வகுமார் தூர நிறுவனத்திற்காக தூக்கி அடிக்கப்பட்டதை விரும்பாமல் துறையூர் சென்று விட விஜயனும், ஐயனாக மாறிய முருகையனும் உள்ளே வந்து ஐக்கியமானார்கள்.

விஜயன் இன்று ஆங்கிலம் போதித்து அனைவரையும் அசர வைத்துக்கொண்டுருப்பவர். மதி மயங்கிக்கிடந்த காலத்தில் என்னை மீட்டெடுத்து ஞான தகப்பனாக தத்தெடுத்தவர். ஆனால் மூன்றாவதாக வந்தவர்க்கும் எனக்கும் ஒட்டு உறவே இல்லாமல் இரு வேறு தண்டவாளமாக ஒரே அறைக்குள் உறவாடிக்கொண்டுருந்தோம்.

எல்லா பாதையும் ஏதோ ஒரு இடத்தில் சேர்வது தானே மரபு.

ஒன்றாய் சேர்ந்தது முதல் கடலை மிட்டாய் வாங்கித் தின்னும் பழக்கத்தில் தொடங்கி கண்களை மயக்கும் பழக்கம் வரை தொற்றி பற்றிக்கொண்டோம்.

என்னுடைய துறைக்கும் அவருக்கும் நேரெதிர். அப்போது வண்ண தொலைக்காட்சி உள்ளே வந்து கொண்டுருந்த நேரம். முதன்மையான தமிழ்நாட்டின் தொடக்க நிறுவனமாய் காட்சியளித்துக்கொண்டுருந்த நிறுவனத்தில் திருப்பூர் கிளை அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளராய். படித்த பொறியிலும் கற்ற ஆங்கில வழிக்கல்வியும் அவருக்கு எல்லாவிதத்திலும் ஏற்றத்திற்கு வழி வகுத்தது. கூடவே பள்ளிப்பாடமான ஹிந்தி பல விதிகளையும் தாண்ட உதவியது.

கல்வியும் மொழியும் வாழ்க்கையை வசதி படுத்த உதவும். ஆனால் வாழ்க்கையை தீர்மானிக்க உதவுவது அடிப்படை பண்புகள். திருடனாய் இருப்பவன் கூட ஒரு காலகட்டத்தில் திருந்தக்கூடிய வாய்ப்புண்டு. ஆனால் திருட்டுத்தனமாகவே வௌிகாட்டிக்கொள்ளாமல் வாழ்பவனின் வாழ்க்கை தானும் கெட்டு சுற்றுப்புறத்தையும் கெடுத்துவிடும்.

அன்றாட பிரச்சனைகளை அந்த பின்னிரவில் அலசும் போது கூட அவர் அசரமாட்டார். அத்தனைக்கும் காரணங்கள் சொல்வார். சொல்லிச்சொல்லியே ஒரு நாள் திருப்பூரை விட்டு காணாமல் போனவர் ஐயனாக மாறி ஊரில் குறி சொல்லிக்கொண்டுருப்பதாக தகவல் வந்த போது வியந்து சந்திக்க அழைத்தேன்.

என் விதியுடன் அவரை விளையாட அழைத்தது அன்று எனக்குத் தெரியவில்லை. வீடுகள் மாறும் போது வாகனங்கள் மாற்றும் போது கேட்டுக்கொள்வதுண்டு. இருந்தாலும் என்னுடைய விருப்பங்களை விட்டுக்கொடுப்பதில்லை. வேண்டியது கிடைத்த காரணத்தால் அவரும் விருப்பமாய் என்னை தொடர்ந்து கொண்டேயிருந்தார்.

ஆனால் இந்த வங்கி விவகாரம் தான் என்னை ஒற்றையா ரெட்டையா என்று சதிராட வைத்துக்கொண்டுருந்தது. மனைவி விரும்பாதது ஒரு பொருட்டாய் தெரியவில்லை.

உத்தரவாய் சொல்கிறேன். உங்களுக்கு கிடைத்தே தீர வேண்டியிருக்கிறது என்ற அவரின் வார்த்தைகள் என் இருப்பு முழுவதையும் கொண்டு போய் முடக்க வைத்தது. வரவு செலவு காட்ட வேண்டும் என்று இல்லாத வங்கிக்கணக்கை உருவாக்குவதாக சொன்னதை நம்பி ஒப்படைத்து விட்டு என் அன்றாட கடமைகள் என்னை இழுத்ததில் மறந்து போய் கேட்ட போது பதில் சாதகமாய் இல்லை.

ஆர்ப்பாட்டமாய் வீட்டுக்குள் வந்து அசர அடித்தவர் பதுங்கிக் கொள்ள உத்தரவு தந்த அனைத்து உறவுகளும் ஓதுங்கிக் கொள்ள குறிகளை வைத்தே குறிக்கோள் மறந்து வாழ வேண்டிய கொடூரம்.

நம்பும்படி அத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தவைகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவைகள் என்ற போது அழக் கூட தெம்பில்லை.

காத்தருள்பவளை வேண்டி ஒரு தேதி குறித்தேன். எல்லாவற்றுக்கும் ஒரு தீர்ப்பு இங்கு உண்டு.

தீதும் நன்றும் பிறர் தர வரா?

காத்துக்கொண்டுருந்தேன்.

அந்த அதிகாலையில் சேதி வந்தது.

கண்களுக்கு காணாமலே காலத்தை கடத்திக்கொண்டுருந்தவன், மேலூர் மதுரை நெடுஞ்சாலையில் குலதெய்வம் அருள் வேண்டி (?) முடித்து திரும்பி வந்த வண்டி அதிகாலையில் அரசு போக்குவரத்தில் நேருக்கு நேர் மோதி அங்கேயே மரணம்.

பின்னால் அமர்ந்திருந்த அவர் மனைவி முகத்தில் உள்ள எலும்பு திரும்பி உருக்குலைந்து பாதி உயிராய். ஒரு வயது குழந்தை மட்டும் தூக்கி எறியப்பட்டு புல்தரையில்.

அவனின் கால்கள் இரண்டும் பிய்த்து எடுக்கப்பட்டு தூக்கி எறியப்பட்ட ஒரு கையை தேடி, மண்டை ஓட்டை ஒட்ட வைத்து மார்ச்சுவரியில் இருந்து பெறப்பட்ட பிணத்தை பார்த்து என்னைப்போல் இழந்த 16 பேர்கள் மட்டும் அழாமல் வேடிக்கை பார்த்தார்கள்.

http://tirupurjothigee.blog.co.in/about/contact/

” இரவில் உதிக்கும் சூரியன் “

உங்களின் ஒரு ஆடைக்கு எத்தனை ஆயிரம் மக்களின் அர்பணிப்பு?

உங்களின் ஒரு ஆடைக்கு எத்தனை ஆயிரம் மக்களின் அர்பணிப்பு?

எனக்கும் அவர்களின் உரையாடலுக்கும் எந்தவித தொடர்பு இல்லை.

என்னுடைய கண்ணாடி அறை வழியே கவனித்துக்கொண்டுருந்த போது, பேசிக்கொண்டுருந்த அந்த பெண்களின் கண்களில் இருந்து வழிந்து கொண்டுருந்த கண்ணீர் தான் என்னை என் அறையை விட்டு வௌியே வரவழைத்தது.

என்னுடைய அறையின் பார்வையில் மொத்த உற்பத்திக்கான எந்திர அணிவகுப்பு வரிசை அமைந்து இருந்தது. தொடக்கத்தில் போட்டுருந்த இருக்கையில் உற்பத்திக்கான துனை மேலாளர். என்னுடைய பார்வையில் எப்போதும் இருப்பவர். அவருடைய இருக்கைக்கு அருகே இடதும் வலதும் நின்று கொண்டுருந்த இரண்டு பெண்களும் என்னைப் பார்த்ததும் பதட்டமாய் பக்கமாய் விலகிப் போய் நின்றனர்.

நான் அருகில் போய் நின்றதும் கண்களை துடைத்துக்கொண்டு வேறு பக்கமாய் முகத்தை நின்று கொண்டு எங்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டுருந்தார்கள்.

என்னைக் கண்டதும் இருக்கையில் இருந்து படபடப்பாய் எழுந்தவரை அமரச் சொல்லிவிட்டு எதிர்புறம் அமர்ந்தேன்.

தொழிற்சாலையில் உற்பத்தி பிரிவு மொத்தமும் முடிவுக்கு வந்த நேரம். இரவு ஒன்பது மணி, அனைத்து மின் விளக்கும் உயிர் இழந்து இருளுக்குள் மூழ்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் காலையில் உள்ளே நுழையும் போதே துண்டுச் சீட்டு துருப்பாய் உள்ளே வந்து தாக்கும். துறை சார்ந்த கண்கொத்தி பாம்புகள் சீறி படமெடுத்து ஆடும். சலிக்காமல் வந்து கேட்கும் அனைவருக்கும் பதில் சொல்லி மாய்ந்து போகும்.

இல்லாவிட்டால் பல சமயம் அந்தப் பிரச்சனை நிறுவன நிர்வாகி அறைக்கு கொண்டு நிற்க வைத்து விடும்.

இடம் திரும்பினாலும் குற்றம். வலம் திரும்பினாலும் குற்றம்?

இன்று இரவு வேலை முடிந்து இரவு பணிக்கு 15 பெண்கள் மட்டும் என்று சற்று நேரத்திற்கு முன் மேஜைக்கு துண்டுச்சீட்டு வந்ததை கவனித்து காசாளர் அறைக்கு தெரிவிக்க அடிப்படைச் செலவுக்கான பணம் கூட இந்நேரம் கைகளுக்கு போய் சேர்ந்து இருக்கும்.

இரவு உணவை முடித்து விட்டு மறுபடியும் வேலையை துவங்கினால் முடிக்கும் போது நடு இரவு ஒரு மணி ஆகிவிடும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஆட்கள் சுற்று போல் தொடர்ந்து வந்து கொண்டுருப்பார்கள். இரவு எத்தனை மணி நேரம் வேலை செய்தாலும் மறுநாள் எப்போதும் போல் அதே காலை எட்டு மணிக்கு உள்ளே வந்து வேலையை தொடர்ந்து கொண்டுருப்பார்கள். இரவுப் பணி வைத்து எந்த சலுகையோ விடுமுறையோ எடுத்து விட முடியாது.

ஆனால் இந்த இரண்டு பெண்கள் மட்டும் ஏன் இங்கு இவர் முன்னால் நின்று கொண்டுருக்கிறார்கள்?

ஆய்த்த ஆடை உற்பத்தி பிரிவில் பொறுப்பாய் இருப்பவர்கள் அனைவருமே போன ஜென்மத்தில் செய்திருந்த போக்க முடியா பாவத்தினால் தான் இந்த ஜென்மத்தில் அவர்களுக்கு இந்த பதவி அமைந்துருக்கும் போல?

அதுவும் மொத்த நிர்வாகத்தில் மூன்றில் இரண்டு மடங்கு தொழிலாளர்கள் இவர்களின் தொடர்பு எல்லைக்குள் இருப்பார்கள்.

வந்து இறங்கும் வண்ண வண்ண துணி வகைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் நறுக்கி அடுக்கி வைப்பர்கள் தொடங்கி. கடைசியில் பெட்டியில் போட்டு கடைசி பெட்டியை கனகச்சிதமாய் வாகனத்தில் ஏற்றுபவர்கள் வரைக்கும்.

அனைவரையும் கண் கொத்தி பாம்பாய் கண்காணிக்க வேண்டும்.

தவறுகள் மட்டுமே அதிகம் நடக்கும் அவஸ்த்தை தொழிலாக இருப்பதால் கண்காணிப்பில் கோளாறு என்றால் நிச்சயம் பரலோகம் தான்.

மூன்று வருடங்கள் மொத்தமாய் வாழ்க்கையை தொலைத்து பரலோகம் போக விரும்பாமல் சொர்க்கலோகம் தேடி வேறு பாதையை தேர்ந்தெடுத்தவன் பதிவு தான் இது.

வந்த மின் அஞ்சலில் கிடக்கும் ஒப்பந்தம் உயிர் பெறாமலே இருக்கும். மொத்த நிர்வாகமும் உறங்கிக்கொண்டுருக்கும். நிறுவன நிர்வாகியோ வங்கி மேலாளாரின் கருணை பார்வைக்காக தினந்தோறும் வங்கி படியேறிக்கொண்டுருப்பார்.

வேண்டிய நூலை கடனாக தந்து கொண்டுருக்கும் இடைத்தரகர்கள் ஓடி ஓளிந்து கொண்டுருப்பார்கள். பழைய கடன்கள் பல இடங்களில் இடங்களாக மாறியிருப்பதால் புதிதாக சேரும் கடன் தொகை பல லட்சங்களை தாண்டியிருக்கும். எல்லைக் கோட்டை தாண்டும் பட்சத்தில் இடைத்தரகர் போய்ச் சேருமிடம் காசியாகத்தான் இருக்கும்.

நிர்வாகி நிதானமாய் இருப்பார். நிச்சயமாய் சிரித்துக்கொண்டு இருக்கமாட்டார்.

ஜால வித்தைகள் அரங்கேறி இருக்கும். வண்ண வண்ண துண்டுகள் மொத்தமாய் ஒரு நாளில் வந்து இறங்கும். உள்ளே வந்து இறங்கியதுமே மொத்த நிர்வாகத்திற்கும் புதிதாய் உயிர் வந்துருக்கும். கட்டளைகள் மட்டுமே காட்சியாய் மாறும்.

அறுபது நாட்கள் உறங்கிக்கிடந்த ஒப்பந்தத்திற்கு மீதி உள்ள முப்பது நாட்களில் முப்பது ஆயிரம் ஆடைகளுக்கும் உயிர் கொடுக்க வேண்டும்.

எந்தத் தவறும் எவர் மீதும் சொல்லி விடமுடியாது. நிர்வாகியின் நிதானம் பல பேர்களின் வாழ்க்கையின் தூக்கத்தை தொலைத்து “விடிநைட்” என்ற திருப்பூரின் வினோத வார்த்தைக்குள் விடியா இரவாக தூங்கா இரவாக கழித்து விடும்.

சோதிக்கப்படப்போகும் சான்றிதழ் குறித்து அச்சத்துடனே அனைவரின் பயணமும் இருக்கும். அன்றாட வாழ்க்கை முழுவதும் அவஸ்த்தையையே பரிசாகத்தரும்.

இதற்கு முன்னால் நடந்து கொண்டுருக்கும் ஒப்பந்த பிரசவத்தை பார்ப்பதா? இல்லை உள்ளே வந்த கருவை உருவாக்குவதா?

பாகிஸ்தான் இந்தியா எல்லை பிரச்சனை போல எல்லோரிடத்திலும் ஒரு ஏற்ற இறக்கத்தை உருவாக்கியிருக்கும்.

நிறுவன நிர்வாகியின் கடிகார முட்கள் 24 மணி நேரம் என்பதை மாற்றி 12 மணி நேரமாக மாற்றியிருக்கும். அவர் உள்ளே இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அச்சத்துடனே அனைவரும் கழித்து தொலைய வேண்டும்.

வரவேண்டிய தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வராமல் காலை வாரி விடுதல் ஒரு பக்கம் என்றால், ஆடைக்குத் தேவையான அனைத்து சமாச்சாரங்கள் அணிவகுப்பு இல்லாமல் அனைத்து எந்திரங்களும் காற்று வாங்கிக்கொண்டுருக்கும்.

ஆனால் எந்த கணக்கும் அங்கு செல்லுபடியாகது?

கடைசி கழுவேற்றல் பொறுப்பாளர்கள், மேலாளர்கள் மட்டுமே. காரணங்கள் தேவையில்லை. காரியம் முடிந்தால் தொடரும் பணி. இல்லையேல் அடுத்த நிறுவனத்திற்கு தினமலர் விளம்பரமே துணிவே துணை.

மூன்று வருடங்கள் வாழ்ந்து பல தடவை அந்த பரலோகத்தைப் பார்த்து பார்த்து பக்குவமடையமுடியாமல் சொர்க்க லோகம் தேடிய எனக்கு வேறு துறை சுவீகரித்து காட்டிய புதிய பாதை எனக்காக இந்த புதிய வாழ்க்கையை அளித்தது.

ஆய்த்த ஆடைகள் என்பது இரும்பல்ல. இறக்குமதியாளர் விரும்பும் உருவத்தை கேட்ட நேரத்தில் வார்ப்பாய் எடுத்து விட எந்த விஞ்ஞானமும் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை. போராடி போராடித்தான் மொத்தமும் ஒரு உருவமாய் உருமாறும்.

உருவம் உருவாக உருவாக பயணிக்கும் பாதையில் பாதி வழியிலே தொலைந்து போய்விடும் அபாயமும் உண்டு. காரணம் எல்லோருடைய வீட்டிலும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு ஆடை. நிர்வாகியைப் பொறுத்தவரையில் அத்தனையும் பணம். பொறுப்பாளர்களைப் பொறுத்த வரையில் அவர்களின் வேலையை தொடரச் செய்யும் தொடர் ஓட்டத்திற்கான தொடர் கட்டை தான் அந்த சட்டை.

உருவம் உருக்குலைந்து போனாலும் எதையும் ஒதுக்கிவிடமுடியாது. மிச்சமானது கூட பல சமயம் நாம் மானத்தை காப்பாற்றும் ஆடையாய் ஆகி விடும்.

பணம். அத்தனையும் பணம்.

கடைசி பத்து பெட்டிக்கு வராத அந்த பத்து ஆடைகளுக்காக மொத்த நிர்வாகமும் சந்து பொந்தெல்லாம் தேடி அலையும் வினோத தொழில் இது?

பசிக்கும் சிங்கத்திற்கு பரிதாபம் தெரியாது.

செய்ய வேண்டிய கடமைகள் மட்டும் தான் கண்களுக்குத் தெரியுமே தவிர வந்து நின்று கொண்டுருப்பவர்களின் அவசரத் தேவைகள் ஒரு பொருட்டாகவே தெரியாது.

பொருட்டாகத் தெரிந்தால் மறு நாள் காலை அவருடைய பதவி புரட்டி போட்டு விடும் அபாயம் உண்டு?

ஒப்பந்தத்தில் இவர்களின் முறை.

முதல் பெண் வர வேண்டிய குடிநீர் காலம் மாறி வந்து விட்டதால் இன்றைய இரவு தெருவில் குழாய் அருகே காத்துருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த வாரம் முழுக்க உப்புத் தண்ணீரே குடிநீராக மாறிவிடும் அபாயம். அடுத்தப் பெண் அவரின் குழந்தையின் அனத்தலை குறைக்க மருத்துவரிடம் கூட்டிப்போக வேண்டிய கட்டாயம். பகலில் போக நேர்ந்தால் அன்றைய ஒரு நாள் ஊதியம் இழக்க நேரிடும்.

தவிர்க்கவே முடிவதில்லை?

இந்த இரவு வேலை என்பது பல நமது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை விடியாத இரவாக மாற்றி விடும் வல்லமை படைத்தது. மொத்த வேலைமுடிந்து வீட்டுக்கு செல்ல பொது சேவை கை கொடுக்காது. மொத்த ஊரும் உறங்கிக்கொண்டுருக்கும் பொதுப் பேரூந்து எங்கிருந்து வரும்?

இதற்காக ஏற்பாடு செய்துள்ள தனிப்பட்ட வாகனங்கள் போக சிலர் மீதமாய் இருப்பார்கள். அவர்களை அவசரம் கருதி இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது தனிப்பட்ட வாழ்க்கையும் சில சமயம் தத்தளிப்பில் முடிந்து விடும்.

தொடக்க காலத்தில் என்னையும் ஒருத்தி கேட்டாள்?

” இப்படி மரக்கட்டையா இருப்பேன்னு தெரிஞ்சுருந்தா இந்நேரம் உருண்டு கொண்டேயாவது நான் என் வீட்டுக்குச் சென்று இருப்பேன். ” முதுகில் அடித்த அடியை வாங்கிக்கொண்டவன் தான் அடுத்தமுறை இரவு வேலை என்றாலே என் வாகனம் பஞ்சராகி விடும்?

இரும்பு மனம் கொண்டவரை சற்று பேசி ஆசுவாசபடுத்தினேன். ஒப்பந்தம் உறுதி படுத்தப்படும் போதே ஐந்து தேதிகள் ஓழித்து வைத்து விடப்படும்.

நிர்வாகிக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த ரகஸ்மாய் இருக்கும். கோப்புகள் தயார் செய்து உற்பத்தி பிரிவில் கொடுக்கப்படும் போதே ஐந்து நாட்களுக்கு முந்தைய தினத்தில் முடிக்க வேண்டுமென கணக்கு காட்டப்படும்.

இந்த சமயத்தில் அதை தெரியப்படுத்தி விட முடியாது. அடுத்த முறை தாமதத்திற்கு நாமே வழி எடுத்து கொடுத்ததாகி விடும்?

வேறொரு வினோத என்னை தொற்றி பற்றியது?

அந்த பெண்களின் வயது?

நம்பி விடமுடியாது. தேவையிருக்காது. ஒவ்வொன்றாக ஒன்றன் பின் ஒன்றாக பொருத்தப்பட்டு உருவமாக்கி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னாலே உலா வந்துவிடும்.

இருவரின் சமூக சிக்கலை விட இந்த தொழிலின் சட்ட சிக்கலை பொறுத்து வாழ்ந்தே ஆக வேண்டிய அவர்களின் வாழ்க்கை என்னை பரிதாபம்
கொள்ள வைத்தது.

உறுதியை வரவழைத்துக்கொண்டு என்னுடைய அறைக்கு அவரை   அழைத்துச்சென்றேன்.

:-) http://tirupurjothigee.blog.co.in/about/contact/ 8-)

” இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை?”

இருட்டுக்குள் இருக்கும் பிரம்ம சூத்திரமாய் இருப்பதால் தானே இங்கு பல பேரின் வாழ்க்கை பரிதாபத்தில் முடிகின்றது?

இருட்டுக்குள் இருக்கும் பிரம்ம சூத்திரமாய் இருப்பதால் தானே இங்கு பல பேரின் வாழ்க்கை பரிதாபத்தில் முடிகின்றது?

பார்த்தும் பார்க்காதது போல் ஓடி ஓளிபவரை என்ன செய்வது? கூப்பிட்ட இரண்டு முறையும் கூட்டத்திற்குள் தன்னை மறைத்துக்கொள்ள விரும்புவது தூரத்தில் இருந்து பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகின்றது?

மனம் கேட்கவில்லை. தைரியமாக தன்னை மட்டுமே முன்னிறுத்த விரும்பும் ஆவன்ரூனா என்றழைக்கப்படும் ஆறுமுகத்தை பார்த்தே விட வேண்டும் என்று கூட்டத்திற்குள் மறைவது போல் மறைந்து பின்னால் போய் நின்று முதுகை தொட்டபோது, திடுக்கிட்டு திரும்பிய ஆறுமுகத்தின் முகம் எனக்கு ஏராளமான அதிர்ச்சியையும் தந்தது.

ஓட்டிய கன்னத்தில் ஓடுங்கிய பள்ளத்தில் பல நாட்கள் சவரம் செய்யப்படாத தாடி. கண்களைச் சுற்றி கரு வளையம். சிரிக்க முடிந்த வாயில் தெரிந்த பல்லில் நிக்கோடின் தந்த பரிசு. போட்டுருந்த ஆடைகள் அவரின் வாழ்க்கை அவசரத்தை பறைசாற்றியது.

என்ன நடந்தது?

என்னுடைய நிறுவன தணிக்கையாளர் அறிவுறுத்தலின் பேரில் வணிகவரி அலுவலகத்தில் கையொப்பம் விடுவதற்காக திருப்பூர் டவுன்ஹறால் அருகே மொத்த அரசு அனைத்து அலுவலகமும் ஒருங்கே இருக்கும் அந்த நீண்ட வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புக்காக எப்போதும் நிறுத்தும் காவல் நிலைய வேப்ப மரநிழலுக்கு கீழே வண்டியை நிறுத்த முற்படும் போது தான் ஆறு முகத்தைக் கண்டேன். காவல் நிலையத்தின் முன்னால் கூடியிருந்த கூட்டத்திற்குள்.

திருப்பூருக்குள் உள்ளே நுழைந்த காலம்

அது. அம்மா கடிதம் மூலம் தெரிவித்துருந்தார். ” உன்னுடன் படித்த முருகேசனும் நீ இருக்கும் அதே கொங்கு நகரில் தான் பணிபுரிகின்றான். பழகி வைத்துக்கொள் “. கடிதம் படித்ததும் வியப்பாய் இருந்தது. பள்ளி மேல்நிலை இறுதியில் இரண்டு வருடங்கள் கணக்கு பாட பிரிவில் சேர்ந்து படித்தவன். எங்களுடைய அறிவியல் பிரிவு அவர்களுடன் அவ்வப்போது கைகுலுக்கும். முக்கியமாக தமிழும், ஆங்கிலமும் மொத்த பிரிவுகளும் ஒன்றாய் அமரும் போது பாடத்தை விட எனக்கு படபடப்பு தான் அதிகமாய் இருக்கும். மொத்த முரட்டுக்கூட்டமும் முரண்டு பிடித்துக்கொண்டு பாடம் நடத்துபவரை உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டுருப்பார்கள். கவனிக்க முடியாது. கேட்டால் கேலிப்பொருளாய் ஆக்கி விடுவார்கள்.

இந்த முருகேசனும் அந்தக்கூட்டத்தில் ஒருவன். மொத்த அந்த கூட்டமும் விளையாட்டுப் போட்டிகளில் வீரனாய் இருப்பவர்கள். ஆனால் கூட்டத்தில் முருகேசன் ஒருவனாக இருந்தாலும் பேசும் வார்த்தைகள் கூட மென்மையாகத் தான் வௌியே வரும்.

ஞாயிறுக்கிழமை அன்று தனலெஷமி திரை அரங்கு பின்னால் சென்று உள்ளே அழைந்து திரிந்து அவனுடைய இருப்பிடம் கண்ட போது திகைப்பாய் இருந்தது.

முத்து முத்தாய் கையெழுத்தை பெற்று மொத்த ஆசிரியர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றவன் முக்கி முக்கி துணி மூட்டையை தூக்கிக்கொண்டுருந்தான்?

அன்று தான் முதல் முதலாக அந்த எந்திரத்தை பார்த்தேன்.

சாயமேற்றிய துணியை சுருக்கம் நீக்கி, தேவையான அளவிற்கு சுத்தமும் அளவுமாய் மடிப்பு கலையாமல் பனியன்களை, ஜட்டிகளை எளிதாக வெட்டுவதற்காக முன்னேற்பாடு செய்து தரும் எந்திரம். உள்ளே அருகே விறகால் மொத்த தீயினால் கொதிக்க வைக்கப்பட்ட சுடுநீர் ஆவியால் எந்திரம் சொன்ன சொல் கேட்டுக்கொண்டுருந்தது. ஏற்றுமதிக்கென ஏராளமான எந்திர வரிசைகள் போல் இது உள்நாட்டு வர்த்தகத்திற்கென எளிமையாக வடிவமைக்கப்பட்ட எந்திரம்.

என்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டான். ஊரில் காணாத பாசம். பரவசமாயிருந்தது. மேல்நிலை இறுதி தேர்வில் மிக தைரியமாக ஊருக்குள் இருந்த திரையரங்கத்தில் கமல் படத்தை கலைக்கண்களோடு பார்த்து இழந்த மதிப்பெண்கள் தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள தொழில் நுட்ப பயிற்சி கூடத்தில் ஒரு வருடங்கள் படித்து எங்கங்கோ சுற்றி கடைசியில் இங்கு வந்து சேர்த்த கதை சொன்ன போது எங்கள் இரண்டு பேரின் வாழ்க்கை பாதைகளுக்கும் அதிக வித்யாசம் இருப்பதாக தெரியவில்லை. பயணித்த வகையில் மட்டுமே வெவ்வேறு?

பேசிக்கொண்டுருந்த ஒரு மணி நேரத்தில் முடித்த போது அவனுடைய முதலாளி என்று அறிமுகம் செய்தவரை பார்த்த போது மயங்கி விழாத குறைதான்.

பள்ளியில் மூன்று வருடங்கள் பின்னால் படித்துக்கொண்டுருந்த ஆறுமுகம். ஊர்ப்பழக்கத்தில் முதல் இரண்டு எழுத்துக்களை வைத்து அழைப்பது போல் ஆவன்ரூனா.

குட்டை உருவமும் அதே உருண்டை முகமும் சுருண்ட கேசமும். என்னைப் பார்த்ததும் ஊர் வழக்கப்படி குடும்பப் பெயரைச் சொல்லி மரியாதையாய் அழைத்து சாப்பிட அழைத்துச் சென்றது அடுத்த ஆச்சரியம்.

பள்ளியின் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு அறையில் இருந்து அடுத்த அறைக்கு அவசர காரணங்களால் மாற்றப்படும் போது, சென்ற வரிசையில் வௌியே வெயிலில் முட்டி போட்டுக்கொண்டுருக்கும் மாணவர்கள் கண்களுக்குத் தெரிவார்கள்.

எல்லா நாட்களும் இந்த ஆறுமுகம் மட்டும் ஒருமுகமாக நின்று கொண்டுருப்பார்.

தமிழ் கூட ததிங்கிணித்தோம் போடும் மாணவர்கள் வரிசையில் இருந்த ஆறுமுகம் ஒரு நிறுவனத்தின் முதலாளி என்ற போது வாழ்க்கை என்னைப் பார்த்து சிரித்தது?

படித்த படிப்பு என்பதற்கும், வாழ்க்கை கொடுக்கும் அனுபவ படிப்பிற்கும் உள்ள வித்யாசங்களை அன்று தான் முதல் முதலாக நுழைந்த புது மாணவனாக கற்கத் தொடங்கினேன்.

ஒன்பது பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற கலந்தர், காளீஸ்வர ஜெயக்குமார் இருவரும் இன்று வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கை எனக்கு வேறொரு வித்யாச பாடத்தைக் காட்டியது.

கலந்தர் ரோட்டுக் கடை மூலமாக பிரயாணி விற்றுக்கொண்டுருக்கிறார். ஜெயக்குமார் துரித அஞ்சல் சேவையை தனியாக நடத்த முற்பட்டு வாழ்க்கையை தொலைத்து கடன் தொல்லைக்கு பயந்து டெல்லியில் தலைமறைவாய் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

அவர்கள் கற்ற கல்வி எந்தப் பாதையுமே காண்பிக்க வில்லை. பெற்ற அனுபவக் கல்வி மட்டுமே இங்கு பல பேருக்கு வசந்த வாயிலை அறிமுகப்படுத்தியுள்ளது?

அதுவும் திருப்பூரில் வருட வருடம் எகிறிக்கொண்டுருக்கும் மில்லியன் பில்லியன் அந்நியச்செலவாணி வரைபட குறியீடு அத்தனையுமே அனுபவம் மட்டுமே தந்த வெற்றி.

எந்த நிர்வாக மேலாண்மைக் கல்லூரியும் இவர்களுக்கு தந்த பாடங்கள் அல்ல?

உழைப்பு. திட்டங்கள். உறக்கம் மறந்த செயல்பாடுகள், அத்தனை நாளுமே அர்பணிப்பான வாழ்க்கை தந்த வசதிகள் தான் இன்றைய திருப்பூர்.

வாழ்க்கையில் வெற்றி மட்டுமே முக்கியம். வந்த பாதைகள் எதுவும் இங்கு முக்கியம் அல்ல. வரவாய் இருப்பதும் உறவாய் வருபவர்களுக்கு தேவையானது நீ வெற்றியாளனா? இல்லை வெற்றி பெற்றபவனைப் பார்த்து புழுங்கிக்கொண்டுருப்பவனா?

இரண்டே கேள்விகள் தான்?

பதில்கள் சாதகமாய் இருந்தால் சமூகத்தில் சமரசமாய் உலாவ முடியும்? இல்லாவிட்டால் சங்கடங்களை பதிவாய் உருவாக்க முடியும்?

இடையில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், உள்ளம் பரிதவிக்கும் போதெல்லாம் அந்த முருகேசன் தான் என்னுடைய காத்தருளும் குலதெய்வம்.

கணக்கில்லா காசு தந்தவன். கவலைகளை மறக்க பலவற்றையும் “கற்று” தந்தவன். தௌியாமல் இருந்த நாளில் உணர்வாய் மாற்றியவன்.

கணக்கு வழக்கே இல்லாமல் தந்த பணம் காசெல்லம் இன்று வரை எந்த வம்பு வழக்கையுமே தராமல் எங்களின் நட்பு மட்டும் புதிதாய், புதிராய், புனிதமாய் தொடர்ந்து கொண்டுக்கிறது.

என்னைப்போல் வாழ்க்கையை படபடப்பும், பரபரப்புமாய் அனுகாத குணமே இன்று வரையில் தௌிந்த நீரோடை போல் ஓடிக்கொண்டுருக்கிறது. ஒவ்வொரு முறையும் சந்தித்து விடைபெறும் போது ஆறுமுகத்தின் வளர்ச்சிகள் வியப்புக்கு மேலே கொண்டு போய்க்கொண்டுருக்கும்?

மும்பை நாரிமன் பகுதி போல் இருக்கும் திருப்பூர் லஷமி நகரில் கிடைத்த ஒட்டுச்சந்தில் ஆறுமுகம் தொடங்கிய அலுவலகம் அதிர்ஷடத்தின் தொடக்கமாய் இருந்தது.

வௌிநாட்டு வர்த்தகம் போல் இங்கு ஈரோடு சந்தைக்கென்றே இங்கு ஒரு தனியான உலகம். எளிமையான விலை. தரமோ தராதரமோ தேவையில்லை. ஒரு தடவை துவைத்தாலே உதிர்ந்து விடும் சாயம் பற்றிக் கூட கவலைப்பட தேவையில்லை.

ஏற்றுமதியின் எச்சமும் மிச்சமுமான அனைத்து கச்சடா சமாச்சாரமும் இங்கு பல பேருக்கு ஏற்றமான வாழ்வை தந்துள்ளது என்றால் அதில் எள்ளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை?

மின் அஞ்சல் கேள்வி பதில் தேவையில்லை. நாட்டின் வேறுபாடுகள் உள்ள கால நேரத்தில் கண் முழித்து அவஸ்த்தை வேண்டாம். போட்ட முதல் மோசமாகிவிடுமா? சரக்கு சென்ற கப்பல் கரை சேர்க்குமா? என்று கண்ணீர் விட வேண்டியது இல்லை.

கையில் காசு? வாயில் தோசை?

எளிமையான எதார்த்தமான தொழில் சூத்திரங்கள்.

கையில் பணம் இருந்தால், நிறுவனத்தில் ஏறி இறங்கி வாங்கிக் கொள்ளும் அவமானங்கள் தாங்கிக் கொள்ளும் மனம் இருந்தால் மிக விரைவில் ஏற்றமான வாழ்க்கையை அதிர்ஷடம் முகவரியாக்கிவிடும்?

ஆனால் ஆறுமுகத்தின் பார்வை அதிலும் வித்யாசமாய் இருந்தது.

கச்சடா வகைகளுக்கு ஒரு பங்குதாரர் கூட்ட அலுவலகம். ஈரோடு சந்தைக்கென்று ஒரு தனியான அலுவலகம். இரட்டை மாட்டை வண்டியில் வேகம் சற்று அதிகமாகத்தான் இருந்தது.

வண்டிகள் வந்தது. புதிதாய் வந்து இறங்கிய வௌிநாட்டு வாகனங்கள் வந்தது. அலுவலகம் தொழிற் கூடத்தை அறிமுகப்படுத்தியது. கையால் ஓட்டிக்கொண்டுருந்து சாயமேற்றும் எந்திரம் மாறி கணக்கற்ற கிலோக்களை கண்இமைக்கும் நேரத்தில் உலர் சலவைத்துணியை துப்பும் எந்திரத்தை வாங்கும் துணிவை தந்தது.

எல்லவாற்றிலும் வந்த துணிவு வீட்டுக்கு அருகில் இருந்த அடுத்தவன் மனைவி மேல் ஆசையையும் தந்தது?

15 வருடத்திற்குள் ஒருவனின் சொத்து மதிப்பு 100 கோடி என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

போன மாதம் முருகேசன் சொன்ன போது என்னால் வியக்க முடியவில்லை. அவனுடைய பார்வையில் பரவசமாய் இருந்தது. என்னுடைய பார்வையில் உள்நாட்டு வர்த்தகத்தில் வந்த தொகை என்பதாகத்தான் ஆச்சரியம் அளித்தது.

எத்தனை அதிர்ஷடங்கள் என்றாலும், தொட்ட அனைத்தும் துலங்கிய கால காட்டத்தில் அமைந்தது என்றபோதிலும் அத்தனைக்கும் பின்னாலும் படிப்பு அறிவே இல்லாத கற்றுணர்ந்த பட்டறிவு கொண்டே வளர்ந்த ஆறுமுகம் எனக்கு ஆதர்ஷ கடவுளாக ஆகிப்போனதில் ஆச்சரியம் இல்லை?

தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்யக்கூடிய ஒரு பத்திரிக்கையின் உறவாய் உள்ளவர் நடத்திக்கொண்டுருக்கும் அலுவலகத்திற்கு அன்று அழைத்துருந்தார்.

“சென்னையில் இருபது வருடங்களாக நடத்திக்கொண்டுருக்கிறேன். இதே தொழில் தான் என்றாலும் இரண்டு மணி நேர மேற்பார்வையில் எல்லாவற்றையும் முடித்து விட்டு அடுத்த வேலைக்குச் சென்ற எனக்கு இங்கு வந்தால் 24 மணி நேரமும் அலுவலகத்தில் இருந்தாலும் எதுவுமே புரிபடமாட்டேன் என்கிறது? போன வருடம் பத்து கோடி என்கிறார்கள்? ஆனால் இந்த வருடமோ தெருக்கோடி என்கிறார்கள்? பயமும் பரிதவிப்பாய் இருக்கும் இந்த தொழிலை மூடி விடலாம் என்றால் முடியமாட்டேன் என்று இழுத்துக்கொண்டே செல்கிறது? ”

சிரித்துக்கொண்டேன்.

சகோதரர்கள், மாமாக்கள், உறவினர்கள் அனைவருமே வேண்டாம் என்றபோதிலும் விடாப்பிடியாக உள்ளே வந்தவர்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் உள்ளே நுழைத்தால் முதல் மாத சம்பளம் வாங்காமல் ஊரில் இருந்து தொலைபேசியில் அழைப்பார்கள்.

“போதுமடா சாமி. சாப்பிட்ட சாப்பாடு கூட ஓட்டாது போல”

தென் மாவட்டங்கள் அனைத்துக்குமே திருப்பூர் என்றால் சொர்க்கலோகம்.

ஆனால் உள்ளே வந்தவர்களுக்குத் தான் தெரியும் 24 மணிநேரமும் உழைக்கத் தைரியம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் சொர்க்கலோகமாய் இருக்கும்.

இல்லாவிட்டால் நினைத்து மட்டுமே பார்க்கக்கூடிய சொறி சிந்தனையாய் மனதிற்குள் இருந்து விடும்?

கூடா நட்பும், பிறன்மனை நோக்கலும் அந்த ஆறுமுகத்திற்கு புரியவில்லை. காரணம் அவருக்குப் புரியாத தமிழ் பாடத்தைப் போலவே இருந்ததால்.

கழுதையாய் சுமந்த கல்லீரல் ஒரு நாள் உன் கணக்கு முடிந்து விட்டது என்று சொல்லி துப்பிய எச்சிலில் இரத்தம் வடிந்தது.

பிறன் மனையாள் தந்த சுகம் தொழில் வாழ்க்கையை பிழைக்க வைத்துக்கொண்டுருந்த இடங்கள் அனைத்தும் அவளின் வாழ்க்கைத் தடங்களாக மாற்றி விட்டது.

ஒதுக்காமல் தொடர்ந்து கொண்டுருக்கும் வீட்டு மனைவியும், ஒத்துழைத்துக்கொண்டுருக்கும் குடும்ப மருத்துவரும் சேர்த்துதான் அவரை தைரியமாக காவல் நிலையத்தில் காத்துக்கொண்டுருக்கும் திருப்பி அனுப்பப்பட்ட காசோலை வழக்கில் ஆஜராக வைத்துக்கொண்டுருக்கிறது.

ஓடுங்கிய முகமென்று ஒதுக்கி வைத்த புரட்சித்தலைவர் முகம் உயிர் போயும் இன்று வரை உலகை ஆளவில்லையா?

ஆறுமுகமும் ஒரு நாள் ஆள்வார்? மீள்வார்?

இந்தப் பதிவு திரு சுந்தர் ராமன் பாத கமலங்களின் சமர்ப்பிக்கின்றேன்.