Daily Archives: ஜூலை5, 2009

ஓன்றிலிருந்து மற்றொன்றுக்கு

ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் அதன் போக்கிலேயே என்னை இழுத்துக் கொண்டு சென்றபடியே தான் இருந்தது. எந்த திட்டமிடுதலும், விருப்பங்களையும் நிறைவேறாத ஆசையாகவும், கனவாகவும் தான் இறுதியில் முடிந்தது வேடிக்கை மட்டும் காட்டிக் கொண்டுருந்தது, ஆனால் விடாத முயற்சிகளை மட்டும் பத்திரப்படுத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் பயணித்துள்ளேன்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்ற போதிலும், ஒவ்வொரு நிலையிலும் சொந்தமாய் ஒரு தொழில் என்பது மனதில் தீயாய் கனன்று கொண்டே இருந்தது. சொந்த தொழிலுக்கான எண்ணங்களை வளர்த்துக் கொண்டே அதற்கான காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு நோக்கத்தையும், ஆசையையும் மட்டும் கக்கத்தில் வைத்துக் கொண்டே ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொன்று நிறுவனத்திற்கான மாறுதல் நடந்து கொண்டே இருந்தது.

சுற்றியுள்ள எவரிடமும் இங்கு தான் பணிபுரிகிறேன், இது தான் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண்கள் என்று எவரிடமும் கொடுத்து விட முடியாது, அவர்கள் அழைக்கும் போது வேறொரு நிறுவனத்தில் இருப்பேன்.

முதலில் நுழைந்த நிறுவனத்தில் இது தான் வேலை என்று எதையும் ஒதுக்கவில்லை. எதுவுமே தெரியாத போது கொடுத்த வேலையை முடித்துக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம். முதல் நாள் பணியே குழப்பத்தை கையில் கொடுத்து தீர்வு காணச் சொன்னார்கள். தைத்து முடித்து விட்ட நைட்டி வகையான ஆடைகள் கலர் கலராக மேஜையில் அடுக்கப்பட்டு இருந்தது. மந்தையில் நுழைந்த வேறொரு இனம் போல் எல்லோரும் என்னை பார்த்துக்கொண்டுருந்தார்கள். யாரும் பேசக்கூட தயாரில்லை.

நிறுவன நிர்வாகி யார் என்றே எனக்குத் தெரியாது. எவரைப் பார்த்தாலும் முன்மை நிர்வாகி போலத் தான் தெரிந்தார்கள். உரத்த குரலில் வேகமான செயல்பாடுகள். காலையில் ஊர் பழக்கம் போல் அதிகாலையில் குளித்து முடித்து விட்டு சாப்பிட எங்கு போவது என்று தெரியாமல் சாப்பிடாமலேயே உள்ளே நுழைந்து விட்டேன். ஒரே ஒருத்தர் மட்டும் “நீங்கள் புதுசா?” என்றார். வேறு யாரும் அருகில் வரத் தயாராரில்லை. அங்கும் இங்கும் மிக வேகமாக போய்க் கொண்டு இருந்தார்கள். எந்திர ஓசையும் தைத்து முடித்து வௌியே வந்து விழுந்த ஆடைகளும் எனக்கு வினோதமாய் தெரிந்தது. கண்ணெதிரே ஒரு ஆடை முழு வடிவம் பெறுவதை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன்.

வேறு வழியே தெரியாமல் பெண்கள் வரிசையாக நின்று கொண்டு தரம் பிரித்துக் கொண்டுருந்த மேஜை அருகே கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டுருக்க, உள்ளே உள்ள கண்ணாடி அறையில் இருந்து வௌியே வந்தவர் என் அருகில் வந்து நட்பாக தோளில் கை போட்டுக்கொண்டு, “நண்பர் உங்களை பற்றிச் சொன்னார்” என்று கேட்டு விட்டு ஊர் விபரங்களை மேலோட்டமாக விசாரித்தார், கடைசியாக ” அந்த டேபிளில் உள்ள பீஸ்களை டேப் வாங்கிக் கொண்டு அளந்து பார்த்து தனித் தனியாக பிரித்து அடுக்குங்கள்” என்று சொல்லி விட்டு வௌியே சென்று விட்டார்.

வேலை தொடங்கியது. முழுமையாக முடித்த போது நடு இரவு இரண்டு மணி. இடையில் கிடைத்த காபி மட்டும் தான் உணவு. யாரும் கேட்க வில்லை. போக வேண்டும் என்று தோன்றவும் இல்லை. வெறி வந்தவன் போல் யாருடனும் பேசாமல் கடமையே கண்ணாய் இருக்க, நடு இரவில் வேலை முடியும் தருவாயில் இருந்த என் தோள்பட்டை அருகே யாரோ கவனிப்பது போன்று தோன்றியதால் திரும்பி பார்த்த போது, கண்கள் சிவந்து, வாய் முழுக்க பாக்குடன், மது வாடையுடன் நிறுவன நிர்வாகி, வெகு நேரமாய் நின்று பார்த்துருப்பார் போல். நான் தான் கவனிக்க வில்லை. எடுத்து வைத்து விட்டு அறைக்குச் செல்லச் சொல்ல மீதி இருந்தவைகளையும் முடித்து விட்டு செல்லும் போது அவர் சொன்ன வார்த்தை “காலை வந்ததும் என்னை பார்த்து விட்டு பிறகு உள்ளே செல்லுங்கள்”. பாதி அளவிற்கு காதில் வாங்கிக் கொண்டு அந்த நேரத்தில் எங்கும் எதுவும் கிடைக்காது. பசி மயக்கத்தில் படுத்தவனுக்கு கொசு மூட்டைப்பூச்சு அவஸ்த்தைகள் பெரிதாக தெரியவில்லை.

உழைப்பு. அது மட்டும் தான் தெரியும். வேறு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத என்னை மற்றவர்கள் அவர்கள் மந்தையில் கடைசி வரையில் சேர்க்கவே இல்லை. எல்லா கண்களும் என்னை கவனித்துக் கொண்டே இருந்தது. அன்றாட நடக்கும் நிகழ்வுகளில் எதையும் உள் வாங்கியதாக நினைவில் இல்லை. வந்தது வேலை செய்ய. உழைப்பினால் நிச்சயம் முன்னேற முடியும். இதை மட்டுமே முழுமையாக நம்பிய நாட்கள் அது.

நாட்கள் செல்லச்செல்ல நிர்வாகியின் உள் வட்டத்தில் என்னை அறியாமலே நுழைந்த போது முழுமையாக மூன்று மாதங்கள் கடந்து விட்டுருந்தது. உள்வட்டம் வௌிவட்டம் என்பதெல்லாம் சுற்றியுள்ளவர்கள் கொடுத்த மரியாதையை வைத்து தான் கண்டு கொண்டேன். கூடவே ஒவ்வொரு பொறுப்பும் சேர்ந்ந்து வங்கியின் வரவு செலவு மற்றும் சனிக்கிழமை தொழிலாளர்களின் வாரச் சம்பளம் வரை. உயர்ந்த போது கூடவே கொண்டு வர வேண்டிய “கவன” விஷயங்களில் கருத்தாய் இல்லாததால் கவனித்துக் கொண்டே வந்த “எதிரிகள்” விரித்த வலையில் நானாகவே சிக்கிக்கொண்ட சூழ்நிலை.

இந்தத் தொழிலில் எல்லா இடத்திலும் பெண்கள் நீக்கமற நிறைந்து இருப்பார்கள். குழந்தை உருவம் போல் உள்ள வயதிலிருந்து கிழட்டுப் பருவம் வரையில். அந்தந்த வயதுக்கு தகுந்தாற் போல் வேலை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். சில நிறுவனங்கள் வயதானவர்களை சேர்க்கவே மாட்டார்கள். குறிப்பாக டைலராக வருபவர்கள் மிகுந்த கௌரவமானவர்கள். ஆடைகள் ஒவ்வொரு எந்திரத்தின் வழியே வரும் போது குறிப்பிட்ட எந்திரத்தில் ஆள் இல்லாவிட்டால் அதோகதி தான். ஓர் அளவிற்கு மேல் அவர்களை மிரட்டி விட முடியாது. கண்டிப்பு அத்துடன் கனிவும் கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும்.

இதற்கு மேல் தெரிந்தும் தெரியாலும் பாலியல் சமாச்சாரங்கள். சில சமயம் இரவு வேலை தரம் பிரிப்பர்களுக்கு மட்டும் இருக்கும். டைலர்களுக்கு இருக்காது. அந்தப்பகுதி முழுக்க இருக்கும் ஆடைகளை துணிகளை வைத்து மூடவைத்து விளக்கு அனைக்கப்பட்டு இருக்கும். இருட்டான பகுதிகள் ஆள் நடமாட்டம் இருக்காது.

அந்தப்பகுதியில் உள்ள டேபிள் மட்டும் திடீர் என்று முன்னும் பின்னும் ஆடிக்கொண்டுருக்கும். மற்ற பணியாளர்களை விட இரவு வேலைக்கு நானாகவே விருப்பப்பட்டு போய்விடுவதுண்டு. காரணம் இரவு வேலைக்கு என்று தனியாக கிடைக்கும் சாப்பாடு காசு முப்பது ரூபாய். மொத்த ரூபாய்க்கும் தின்று தீர்த்துவிடுவதுண்டு.

எல்லா பெண்களுடன் பழகினாலும் எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் பார்த்ததே இல்லை. காரணம் கூட்டுக்குடும்பம். ஊரில் தேர்ந்தெடுத்தவர்களுடன் மட்டும் பழக அனுமதித்த விதம் என்று எல்லா இருட்டு பகுதிகளையும் பார்க்க விடாமல் இருந்ததால் என்னவோ?

தொடக்கத்தில் நம்ப மறுத்தவர்கள் ஓர் அளவுக்கு மேல் நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. நிறுவன நிர்வாகிக்கு இந்த ஒழுக்கம் மேலும் கவர்ந்து விட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் எல்லா நிர்வாகிக்குமே உள்ளே ஒரு தொடுப்பு உண்டு என்பதை என்னைச் சுற்றி மொத்தமாக பிரச்சனைகள் அணிவகுத்த போது தான் இனம் கண்டு கொண்டேன். அந்தக் கூட்டத்தில் எது அந்த தொடுப்பு என்பதை அறிமாலேயே என்னுடைய கண்டிப்பு இருந்தது எனக்கு வினையாக வந்தது மொத்தமாக ஒரு நாள்.

உடன் புரிபவர்கள் அனைவருமே நண்பர்கள். உலகம் முழுமையும் அன்பாலே நெய்த வலையில் யாருக்கு பொறாமை இருக்க போகின்றது. உழைப்பவர்கள் முன்னேறுவதை எவர் தடுப்பர்? கஷ்டப்படுவர்களுக்கு பணம் கொடுத்தால் என்ன தவறு? உயிரைக் கூட கொடுப்பதாகச் சொல்லும் நண்பர்கள் அழைக்கும் போது பார்க்குச் சென்றால் என்ன தவறு? தனியாக அளிக்கப்பட்ட இரண்டு சக்கர வாகனத்தில் கணக்கில்லாமல் இருக்கும் பெட்ரோல் தீரும் வரையில் வௌியில் சுற்றினால் என்ன? தொழிலாளர்களிடம் கண்டிப்பும் கறாரும் மட்டும் நடத்தினால் நிறுவனத்தில் தப்பே இல்லாமல் போய்விடும்? இன்னும் இது போன்ற பல கேள்விகளை எனக்கு நானே உருவாக்கிக்கொண்டு விசுவாசத்தின் மொத்த உருவமாய் நாளொன்றுக்கு சர்வசாதாரணமாக இருபது மணி நேரம் உழைத்து பெற்ற டைபாய்டு காய்ச்சல் வந்தும், நிர்வாகி நிர்ப்பந்தத்தால் அண்ணன் வீட்டில் இருந்து பாதியிலேயே திரும்பி வந்து நிறுவனத்திற்கான என் உழைப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

எல்லா உழைப்புக்கும் என்னுள் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் ஒரு நாள் விடை தெரிந்தது.

நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வேறு பெயரை பயன்படுத்தி வௌியே எடுத்தது தெரிய வந்த போது. நிர்வாகி காசோலையில் கையெழுத்து போடுவதுடன் சரி, உடன் பங்குதாரர்கள் யாரும் அந்தப் பக்கமே தலை வைத்து படுப்பது இல்லை. காசோலை வரவு செலவு என்னைத் தவிர இரண்டு மாதங்களுக்கு முன்னால் சேர்ந்த புதிய காசாளர் அவவ்ப்போது எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று வருவதுண்டு.

மிகப் பெரிய வலை என் முன்னால் விரிக்கப்பட்டுருப்பதை உணராமலே நானே போய் மாட்டிக்கொண்டுருக்கின்றேன். இதன் விளைவுகள் என்னை நோக்கி வரவே இல்லை. ஆனால் பங்கு தாரர் ஒருவர் திடீர் என்று ஒரு நாள் நான் தங்கியிருந்த அறையில் எல்லாவற்றையும் பிரித்து பார்த்து சோதித்துக் கொண்டுருந்த போதும், அந்த மாத சம்பளம் கைக்கு வராத போதும், படிப்படியாக ஒவ்வொரு வேலையையும் என்னிடம் இருந்து மாற்றப்பட்ட போதும் மெதுவாக புரியத் தொடங்கியது. ஏதோ ஒன்று என்னைச் சுற்றி நடந்து கொண்டுருக்கிறது. ஆனால் யாரும் எதுவும் சொல்ல வில்லை. மற்றவர்கள் ஓன்று கூடி பேசிக் கொண்டுருப்பார்கள். என்னைக் கண்டதும் வேகமாக கூட்டம் கலைந்து விடும்.

வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் எனக்கு ஒரு மாறுதல் வரப்போகின்றது என்றால் தொட்ட குறை விட்ட குறை எல்லாம் பிரச்சனைகளாக மாறி மொத்தமாக வந்து நின்று அழகு காட்டும். ரோட்டில் சென்றவன் கூட மிரட்டத் தொடங்குவான். என்றைக்கோ எதற்காகவோ பேசிய எதார்த்த வார்த்தைகளும். அதை கேட்டு மனதில் சுமந்து வைத்துருப்பவனுமாய் எல்லோரும் ஒரே அணியில் சேர்வாாகள்.

என்னைச் சேர்த்து விட்டவர் திடீர் என்று வந்து விஷயத்தை முழுமையாகச் சொன்ன போது தலை சுற்றியது. அய்யய்யோ என்று அலறத் தான் முடிந்தது. ஒரு லட்சம் என்பது என் வாழ்வில் எப்படி இருக்கும் என்றே தெரியாது என்று ஏதேதோ புலம்பத் தான் முடிந்தது. எந்த வியாக்யானங்களும் எடுபட வில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. நான் எந்தத் தவறும் செய்ய வில்லை. ஆனால் தவறு நடந்துள்ளது. சந்தர்ப்ப சாட்சியங்கள் அனைத்தும் எனக்கு எதிராக உள்ளது. அவர்களாக வௌியே செல்லச் சொல்லாமல் கருணைக் கொலை போல் மெதுமெதுவாக சாகடித்துக்கொண்டுருந்தார்கள்.

இதற்கிடையில் புதிதாக சேர்ந்த காசாளர், அவருடைய அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்கள் என் கண்களுக்குத் தெரிந்து. அவர் பேச்சில் மிகுந்த உற்சாகம். தன்னம்பிக்கை வழிந்தோடியது. மிகச் சோர்வாய் மாற்றுத்துணி இல்லாமல் கடன் தொல்லை பொறுக்க முடியாமல் ஊரை வீட்டு ஓடி வந்தவர். எனக்கு உதவியாளராக அலுவலக வேலைக்கு மட்டுமாய் என்று அறிமுகப்படுத்தியவரை என்னுடைய வலுக்கட்டாயத்தால் ஒவ்வொன்றாக அவரை கற்றுக் கொள்ள வைத்து சற்று பாரம் இறக்கி வைத்து இளைப்பாறலாம் என்ற எண்ணத்தில்.

உள்ளே நுழைந்த போது இருந்த தொங்கிப்போன முகம் நாளாக நாளாக கம்பீரமும் மெருகும் ஏறிக்கொண்டேயிருந்தது. ஆனால் இது போன்ற நடை முறை விஷயங்களில் நான் ஈடுபடுவதும் இல்லை. மற்றவர்கள் குறித்து ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வதும் இல்லை. காலையில் இருந்து இரவு வரை அடுத்து என்ன வேலை? என்பதில் மட்டும் கவனம் கொண்டு நகரும் என்னை துரத்தி வரும் சூழ்ச்சிகளை இனம் கண்டு களைந்ததே இல்லை,

குறிப்பாக அவர், என்னை அங்கிருந்து வௌியேற்ற மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். எல்லாமே மறை முகமாக. ஒரு நாள் மாலை அவராகவே என்னை அழைத்துக் கொண்டு பார் க்கு அழைத்துச் சென்றார். என்னை புலம்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு ஆறுதல் படுத்தும் விதமாக வேறொரு நிறுவன ஆள் தேவையை எடுத்துச் சொன்னார்.

மொத்தமாக ஆறு அல்லது ஏழு மாதங்கள் தான் இருந்துருப்பேன். என்ன கற்றுகொண்டேன் என்று புரியவில்லை. எந்தப் பிரச்சனைகளும் இல்லாத போது மொத்த நிர்வாகமும். எல்லாமே தமக்குத் தெரியும் என்ற இறுமாறுப்பும் கலைந்து ஏறிய போதையை இறக்கி விட்டது. வேறு வழியே இல்லை. மாறித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டாலும் இருக்க விடமாட்டார்கள். கடைசி மூன்று மாதங்கள் என்னுடைய பதவியும். நிர்வாகி என் மீது வைத்துருந்த அலாதி நம்பிக்கையும் வைத்து பலவிதமாக காரியம் சாதித்துக் கொண்டவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒதுங்க ஆரம்பித்தனர். பேசினாலே குற்றம் என்பது போல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுகுமுறை. பொறுத்துக் கொண்டேன். ஆனால் விளக்கத் தெரியவில்லை. வலையின் தொடக்கம் எது? முடிவு எது? என்று எதுவுமே தெரியாததால் ஆழ்கடல் அமைதி போல்.

நிதர்சனம் என்பதற்கு உண்டான் வேறொரு முகம் அன்று தெரிந்தது. நிறுவனத்தில் என்ன கற்றுக் கொண்டோம்? என்பதை யோசித்து பார்த்த போது நாள் முழுக்க அலைந்ததும், இரவு முழுக்க கண் விழித்ததும் தான் நினைவுக்கு வந்தது.

நிர்வாகி ஓட்டிக்கொண்டுருந்த யமாகா பைக் என்பது மொத்தத்தில் அங்குள்ள அனைவருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் போல். ஆனால் அவர் திடீர் என்று ஒரு நாள், எனக்கு ஓட்டத் தெரியும் என்று நினைத்துக்கொண்டு சாவியை கையில் கொடுத்து பெட்ரோல் போட்டு வரக் கொடுத்ததும், அவரின் பங்கு தாரர்கள் கூட பல விதமாய் பார்த்தார்கள். ஓட்டத் தெரியும் என்பதாக காட்டிக்கொண்டு பக்கத்து சந்தில் நிப்பாட்டி ஒரு வழியாக முதல் கியரிலேயே போய் மாற்றத் தெரியாமல் வந்து விட்ட போது முழுமையாக எதையோ சாதித்த நிம்மதி. அன்று முதல் நிறுவனத்தில் இருந்த அனைத்து வாகனங்களுக்கும் ஐயா தான் முக்கிய மனிதன்.

ஊரில் சைக்கிள் தவிர எதையும் ஓட்டத் தெரியாத என்னை சந்தர்ப்பங்கள் பல விதமாக சடுகுடு ஆடியதில் ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள வேண்டிய நிலை. ஆனால் பணிபுரிந்த மொத்த மாதங்களும் பிறரின் சூழ்ச்சியையும், முன் ஒன்று பின் ஒன்று என்று வாழ்ந்தவர்களைத்தான் மனதார நம்பி பலவற்றை இழந்துள்ளேன். இருபது வருடங்கள் மொத்தமாக குடும்பத்தில் இருந்து கிடைத்த தாக்கங்கள் எப்படி வௌியே வந்த மூன்று வருடங்களில் மாற்ற முடியும்? ஆனால் சில மாதங்களிலேயே மாறி மாற்றம் பெற்ற பலருடைய வாழ்க்கையை பின்னாளில் பார்த்துள்ளேன்.

வௌியே செல்வதாக மறைமுகமாக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி விட்டேன். பிரச்சனை தொடங்கியது முதல் , நிர்வாகி என் மேல் இருந்த அலாதி பிரியத்தின் காரணமாக பெரிய அளவிற்கு அதை எடுத்துச் செல்லவில்லை. வேலையில் சேர்த்து விட்டவர்க்கும் நம்புவதா? வேண்டாமா என்ற குழப்பம். யாரும் அருகில் இல்லை. அவமானத்துடன், உள்ளே நுழைந்த போது வைத்திருந்த பணம் கூட இல்லாமல், எங்கு யாரை போய் பார்ப்பது என்று தெரியாமல் புதிதாக சேர்ந்த காசாளர் சொன்ன நிறுவனத்தில் ஒரு காலை வேலையில் அந்த நிர்வாகியின் வருகைக்காக வரவேற்பறையில் காத்துருந்தேன். உள்ளே நுழையும் போதே பொய்யையும் துணைக்கு அழைத்துக்கொண்டு. காரணம் அந்த நண்பர் கொடுத்துருந்த வழிகாட்டல்.