Daily Archives: ஜூலை9, 2009

ஆங்கில பள்ளிக்கூடமும் அரை லூசு பெற்றோர்களும்….

நானும் சூழ்நிலைக் கைதி தான். வேறு வழியே இல்லை? மனைவியின் நிர்ப்பந்தம், மாமனாரின் அறிவுரை, சகோதரிகளின் எச்சரிக்கை இவை எல்லாம் போக அருகில் இருந்த அரசாங்க பள்ளியின் அலங்கோலம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு தான் ஆங்கில வழிக் கல்விக்கான தீர்மானத்தில் கையெழுத்து போட்டேன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள்?

மனைவிக்கு சமூக அந்தஸ்த்து அதற்கு மேலான அருகில் உள்ளவர்களின் குழந்தைகள் செல்லும் பள்ளியும், அதன் சார்ந்த அவர் வௌிக்காட்டும் பிரஸ்தாபங்களும் உண்டாக்கிய பாதிப்புக்கள். மாமனாரின் அக்கறை வேறு விதமானது. தொடக்கத்தில் ஆங்கில அறிவு குறையினால் நான் நிர்வாகத்தில் போராடிக்கொண்டுருந்ததும், பெற்றவர்கள் வேகமாக என்னை முந்திக்கொண்டுச் சென்று கொண்டுருப்பதை நேரிடையாக பார்த்த அனுபவம்.

சகோதரிகள் வார்த்தை ” உன்னோட திமிரெல்லாம் நீயே பத்திரமா வச்சுக்கடா? புள்ளைகளாவது உருப்படற மாதிரி வளர்த்து விட்டுடா?”

வேறு என்ன செய்ய முடியும்? ஒரே ஒரு ஓட்டு மட்டும் வைத்துக்கொண்டு எந்த தீர்மானத்தை ஜெயிக்க வைக்கமுடியும்? ஆனால் என் கருத்து மட்டும் மாறவில்லை? அடிப்படையான தாய் மொழியில் புலமை இல்லாமல் எப்படி ஆங்கிலத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்? எப்படி பார்த்தாலும் எந்த மொழியானாலும் அடிப்படைச்சிந்தனை அவர்களின் சொந்த தாய்மொழியிலே தான் உருவாக்கி உள்வாங்கும்? என்னுடைய கேள்வி கேலிக்குறியதாய் இருந்தாலும் சுட்டிக்காட்டிய விரல்கள் அதிகமாகத்தான் இருந்தது.

நிர்வாகத்தில் உள்ள பங்குதாரரிடம் கேட்ட போது ” நீங்கள் எதிர்பார்க்கும் தரம் என்றால் உங்கள் வீட்டுக்கு மிக அருகில் உள்ள “குட்டி சாம்ராஜ்யம் ” பெயர் உள்ள பள்ளி தான் சரியாக இருக்கும் ” என்றார். தமிழும் உண்டு என்ற காரணமும் வீட்டுக்கு மிக அருகில் உள்ள இரண்டு காரணமும் எனக்கு போதுமானதாக இருந்தது.

நாள் பார்த்து மனைவியுடன் இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு சென்றோம். வரிசையான கூட்டம். பிரமிப்பாய் இருந்தது. இருநூறு வருடங்கள் ஆண்டு சென்று பல ஆண்டுகள் போயும் விட்டுச்சென்றுவிட்ட மிச்சங்கள் இன்று தனி நபர்களின் பணம் கொழிக்கும் வியாபாரம். ஓரு ஏற்றுமதி நிறுவனம் சம்பாரிக்கும் ஒரு வருட மொத்த நிகர லாபமும் ஒரு மாத அட்மிஷனில் பார்த்துவிடும் இந்த பவாத்மாக்களுக்கு கருட புராணம் என்ன தண்டனை எழுதி வைத்துருக்கும்?

என்னுடைய முறை வந்ததும் மிக பவ்யமாக அவர் முன்னால் அமர்ந்து இருந்தேன். காரணம் இரண்டாவது பங்குதாரர் நான் கிளம்பும்போதே எச்சரித்து அனுப்பியிருந்தார். “உங்கள் சமூக அக்கறையை உள்ளே வைத்துக்கொண்டு இருங்கள். அந்த பொம்பள ஆம்பள மாதிரி தான் பேசுவார். பேசாமல் முன்னால் அமைதியாய் இருங்கள். அவர் என்னுடைய பள்ளித்தோழி. என் பெயர் சொன்னாலே சீட் கொடுத்துவிடுவார்”.

ஆனால் எல்லாம் தலைகீழாக நடந்தது.

நுழைந்த எங்களிடம் தொடக்கத்தில் எதுவும் எங்களைப்பற்றி கேட்காமல் மடிக்கணிணி மூலம் சில அனிமேஷன் வகையான குழந்தைகளுக்கான பாடம் தொடர்பான பாடல் காட்சிகளை காட்டிவிட்டு அவர் நிறுவனத்தின் பிரஸ்தாபங்களை விவரிக்கத் தொடங்கினார். அமைதியாய் இருந்தேன். இரண்டு குழந்தைகளும் மலங்க மலங்க முழித்துக்கொண்டுருந்தனர்.

ஓயரை இழுக்கவும், மேஜை மீது இருந்த சமாச்சாரங்களை கையகப்படுத்தவும் அவர்கள் இருவருக்கும் போட்டியே நடந்தது. மனைவியால் அடக்க முடியவில்லை. அவர் எல்லாவற்றையும் பேசி முடிந்ததும் அந்தப்பள்ளியின் நிர்வாகியான தலைமை பெண்மணியுடன் இயல்பான ஆங்கிலத்தில் என்னுடைய பணிபுரியும் நிறுவனமும் அதன் இரண்டாவது பங்குதாரர் குறித்த விபரமும் தெரியப்படுத்தினேன். வேறு ஒன்றுமே சொல்லவில்லை.

வானத்துக்கும் பூமியுமாக குதிக்கத் தொடங்கி விட்டார். எனக்குப்புரியவில்லை. ” சிபாரிசுடன் வந்து விட்டால் நீங்கள் என்ன பெரிய கொம்பா? நான் இங்கு எந்த சிபாரிசையும் அனுமதிப்பும் இல்லை. திறமை. திறமை மட்டும் தான் முக்கியம் ” என்று பேசியவர் என்னைப்பற்றி என் கல்வித்தகுதி, சம்பளம், பின்புலம் என சகலத்தையும் கேட்டு விட்டு மணைவி பக்கம் திரும்பினார்.

போச்சுடா விணை. மின்சாரம் உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டுருக்கும் ஊரில் அந்த நிர்வாகம் அப்பாவின் பதவிக்கு கொடுத்த குவார்ட்டஸ் வாழ்க்கையை இன்குபேட்டர் கோழிக்குஞ்சாக அனுபவித்து எதற்குமே வௌியே வந்து வௌியுலக வாழ்க்கையை காணாமல், கல்லூரியை தபால் வழியே தரிசித்து என்னை கஷடப்பட்டு சகித்துக்கொண்டுருப்பவளால் என்ன பதில் சொல்ல முடியும்?

அவரின் தொடர்ச்சியான டாம்பீகமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் அழுகையை மட்டும் பரிசாகக் கொடுத்தாள். இறுதியாக ” இருவரில் ஒருவரை மட்டும் சேர்த்துக்கொள்கிறேன். இரண்டாவது குழந்தை இன்னும் ஆக்டிவாக வந்த பிறகு கூட்டி வாருங்கள்”. என்று அவர் சொன்ன ஒரு குழந்தைக்கான கட்டணம் கண்ணைக் கட்டியது. நிச்சயமாக தலை சுற்றியது. விளையாடி விட்டு வருவதற்கு மற்ற கட்டணங்கள் தவிர்த்து சிறப்பு அன்பளிப்பு இருபதாயிரம்.

எனக்கு தொடக்கம் முதல் எழுந்த கேள்விகளும், கோபமும் மொத்தமாக விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் என்னுடைய வேகம் ஏதாவது வழியில் இரண்டாவது பங்குதாரர்க்குத் தெரிந்தால் மிகச் சிக்கலாகி விடும். அரண்மணை தோட்டம் மாதிரி அவரின் வீட்டுக்கு அனுமதிக்கப்படும் உள்வட்ட மிகச் சிலரில் நானும் ஒருவர். அவர் அம்மாவும் அப்பாவும் என்னுடைய சொந்த ஊர் குறித்து அதன் கலாச்சாரம் குறித்து அவவ்போது மல்லிகைப்பூ இட்லி பறிமாறிக்கொண்டே சிலாகித்து பேசுவார்கள்.

எல்லாமே கெட்டு விடும். மனைவியை ஆறுதல் படுத்தி விட்டு வௌியே அனைவரும் வந்தோம். நிர்வாகத்தில் எதையும் சொல்லவில்லை. பாவம் அவர்கள் மனதை ஏன் புண்படுத்த வேண்டும்? வேலை செய்து கொண்டுருந்த நண்பர் கொடுத்த அறிவுரையின் பேரில் சற்று அருகில் உள்ள மற்றொரு அறக்கட்டளை சார்ந்த பள்ளிக்கு அவருடன் சென்ற போது சேர்க்கை முடிந்து இருந்தது.

என்னுடன் நண்பர் வந்துருந்தால் அவர் கட்டாயத்தின் பேரில் உள்ளே பள்ளி அறையை பார்க்கலாம் என்று அழைத்துச் சென்றார். மிக மிக அற்புதமாக இருந்தது. அந்த வகுப்புக்கு என நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆசிரியை மற்றும் இருபது வயதுக்கு உட்பட்ட ஒரு ஆசிரியை. மேலும் அறை முழுக்க விளையாட்டு சாமான்கள், அனைத்து எழுத்துக்களும் வண்ண வண்ண விளையாட்டு வகைகளில் மிகச் சிறப்பாக இருந்தது.

வௌியே வந்த போது அலுவலக நிர்வாகி எதிரே வர, என்னுடன் வந்த நண்பர் பேச்சுத் திறமையால் விண்ணப்படிவம் பெற்று அன்றே பூர்த்தி செய்து பணம் மாலை வந்து தருகிறோம் என்றதும் எனக்கு எல்லாம் மலைப்பாக இருந்தது. குழந்தைகளின் ராசி அப்படிப்பட்டது. எது சரியானதாக இருக்குமோ அது தான் அது மட்டும் தான் அவர்களுக்கு கிடைக்கும். ஆனால் அது வரையில் அதற்குண்டான அனைத்து மரண அவஸ்த்தைகளையும் நான் அனுபவிக்க வேண்டும்.

பள்ளி என்றால் அது பள்ளி. தாளாளர் உருவத்தைப் போலவே இளமையாய் கவர்ச்சியாய் சுகாதாரமாய் எல்லாவற்றிலும் குழந்தைகள் விளையாட நல்ல மைதானம், சுற்றி வர கிளிகளுக்கு என்று ஒரு கூண்டு. உள்ளே பலவிதமான பல வண்ணங்களில் உயர்தர கிளிக்கூட்டம். தொடர்ந்து முயல், மைனாக்கூட்டம் என்று ஒரு கிராமத்துக்குள் நுழைந்தது போல் முதல் முன்று நிலைகளுக்கு பிரித்து இருந்தார்கள்.

ஒன்றாம் வகுப்பு தொடங்கி தொடரும் மற்ற வகுப்புகளுக்குத் தனியான பகுதியில் என்று எல்லாவிதத்திலும் மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது. கட்டணம் கட்டிய போது மலைப்பாகத் தெரியவில்லை. காரணம் சேர்ந்தால் போதும், சேர்த்தால் போதும் என்ற மனோநிலை காரணமாக இருந்துருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் விபரம் தெரிந்து மற்ற பள்ளிகளின் கட்டணங்கள் ஒப்பிடும் போது நியாயமானதாகவே இருந்தது. என்னை விட நிறுவனத்தில் இருந்த அனைவரும் மிகுந்த சந்தோஷம். நல்ல வேளை அடுத்த வம்புச்சண்டை உள்ளே வராததால்.

நிறுவனத்தில் மற்றவர்களுடன் தொழில் சார்ந்த விஷயங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் என்னுடைய ஆதங்கத்தை பகிர்ந்து கொண்ட போதெல்லாம் கேட்டுக்கொள்வார்கள். ஆதரவு தர மாட்டார்கள். அவரவர் சமூக பாதுகாப்பு அவஸ்யம் குறித்து கவனமாய் இருப்பார்கள்.

சொன்னால் நம்ப முடியாது. திருமணம் முடிந்து சொந்த ஊரில் இருந்து மணைவியை திருப்பூர் அழைத்துக்கொண்டு கிளம்பியபோது அம்மா புதுமனைவியிடம் சொன்ன உபதேசம் ” அவன் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணினால் உடனே இங்கு போன் பண்ணிடும்மா?” அன்று குழம்பிய மணைவி இன்று தௌிந்து விட்டாள். சகித்துத்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற போது வேறு என்ன வழி இருக்க முடியும்?

பள்ளிக்கு கொண்டு சென்றுவிடுவதும், கூட்டிக்கொண்டு வருவதுடன் என்னுடைய வேலை முடிந்து விடும். என்னுடைய பதவி போக்குவரத்து மற்றும் நிதித்துறை. அவர் தான் பாதுகாப்பு, உள்துறை, கல்வித்துறை. குழப்பங்களை குழந்தைகள் வளர்ப்பதில் கொண்டு வரக்கூடாது இட்டுக்கொண்ட ஒப்பந்தக்கோடு.

நானும் தாண்ட மாட்டேன். நீயும் தாண்டக்கூடாது. பேச்சு பேச்சாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் பெற்றோர் கூட்டம் என்று ஒரு வருடத்திற்கு ஒரு முறை கூட்டுவார்கள். என் மனைவியின் பயம் அங்கு தான் தொடங்கும். ஆனால் தௌிவாக இருப்பேன். கிளம்பும் போதே ” என்னை எந்த விஷயத்திலும் எதிர்பார்க்காதே? நான் எதுவும் பேசமாட்டேன், தலையை காட்டிவிட்டு வௌியே வந்து கொண்டு போயிருக்கும் படிக்க வேண்டிய புத்தகங்களுடன் அங்குள்ள பூங்காவில் உட்கார்ந்து விடுவேன்.

வௌியே குழந்தைகளுடன் செல்லும் போது தான் என்னுடைய நடைமுறை வாழ்க்கை கல்வி தொடங்கும். காரில் முன் பகுதியில் ஒரு தேவியும் பின் பகுதியில் இரண்டு தேவியும் நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் வாய் இருந்தால் இருக்கை அழுது விடும் அளவிற்கு அவர்களின் ஆர்பாட்டங்கள் முடிந்த பிறகு தொடங்குவேன்.

படித்த ஆங்கில எண்களை தமிழில் கேட்பேன். படித்த வார்த்தைகளின் தமிழ் அர்த்தம், உறவுகளின் பெயர்கள், அவர்களை அழைக்க வேண்டிய முறைகள், அதற்குண்டான தமிழ் ஆங்கில வார்த்தைகள், சொல்லக்கூடிய பாடும் பாடலின் தௌிவான ஆங்கில உச்சரிப்பு என தொடர்ந்து கொண்டுருப்பதை நிறுத்த ஒருவர் திடீர் என்று திண்பதற்குண்டான திண்பண்டத்தில் கவனத்தை மாற்ற அடுத்தவர் குடிக்கும் தண்ணீரை நினைவு படுத்த இடையில் தடைபட்டுவிடும்.

விட மாட்டேன். இலக்கு சென்று அடைவதற்குள் முடிந்த வரை அவர்களின் தற்போதைய நிலை குறித்து கணக்கு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததும் மனைவியுடன் உரையாடும் உரையாடல் என்றுமே அழுகையில் தான் முடியும். எனக்கு என்னுடைய கவலை. அவருக்கு ஒப்பிட்டுக்காட்டக்கூடிய உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் இது போல் தௌிவான தமிழ் அர்த்தம் தெரிந்து தான் உயர முடிந்ததா? என்று வாதத்தை அழுத்தமாக பதிக்க என்ன பதில் சொல்லி திருத்த முடியும்?

இந்த தொழில் வாழ்க்கையில் அமெரிக்கரை தவிர அனைத்து நாட்டு இறக்குமதியாளருடனும் பழகியாகிவிட்டது. சிலரின் எரிச்சல் மட்டும் பரிசாகக் கிடைக்கும். சிலர் எதிர்பார்க்கும் ஒப்பந்த வடிவம் பணம் தொடர்பான நம்பிக்கைகள் நம்மை அச்சமூட்டும். வந்த சில பெண்மணியும் சில கண்ணால் பார்த்தே இருக்காத நல்லவர்களும் தொழிலைத் தாண்டி நட்பு வட்டத்தில் புகுந்து குழந்தைகளின் அன்றாட குறும்புகளை ஆன் லைனில் அரட்டை அடிப்பதுண்டு. வீடு வரை வந்து காரத்தை சுவைத்து கதறிப்போய் செல்லமாய் குட்டிச்சென்றவர்களும் உண்டு. ஆனால் அன்று இஸ்ரேலில் இருந்து வந்த இறக்குமதியாளர் கொடுத்துச் சென்ற பாதிப்பு என் வாழ்க்கைச் சிந்தனை சரிதான் என்று நம்பிக்கை அளித்தது.

ஆறுமாதமாக துரத்திக்கொண்டுருந்தேன். செல்லும் மின் அஞ்சல் வெறும் எழுத்தாகத்தான் இருக்கும். பைக்கில் சென்றாலும் ஒன்று காதில் போன் வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது எளிதில் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பில் உள்ள இடத்தில் கைபேசி இருக்க வேண்டும். உலக உருண்டையின் இரவும் பகலும் சராசரி மனிதனுக்குத்தான். நிச்சயமாக ஏற்றுமதியில் இருக்கும் எந்த பாவாத்மாவுக்கும் இல்லை. எந்த நாடு, எந்த நேரம், எவர் அழைப்பார்? என்று தெரியாமல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் வலைதளத்தில் நுழைந்து இருப்பார். அவர்களைப்பொறுத்தவரையில் ம் என்றால் உடனடி பேச்சு தான். க்கும் என்றால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் அழைப்பும் எடுக்கப்பட மாட்டது. பதிலும் வராது. நாம் தான் தயாராய் இருக்க வேண்டும்.

உங்களைப்போன்ற ஆட்களுக்கு காதுக்கு அருகே பை போன்று தொங்கும் சதை ஏதாவது ஆண்டவன் படைத்துருந்தால் அதில் எளிதாக நீங்கள் தொங்க விட்டுக்கொள்ளலாம் என்று மாமனார் சொன்னதில் எரிச்சல் இருந்தாலும் உண்மையை மறுக்க முடியவில்லை. உள்ளுர் அனாவசிய தொடர்புகள், நட்பு வட்டார அழைப்புகள், உறவுக்குண்டான பாச பறிமாற்றங்கள் எதையும் அனுமதிப்பது இல்லை. மணைவி வழியே தகவல் வந்து பதில் அளிக்கப்படும். பேசிக்கொண்டுருக்கும் போது உள்ளே டொங் டொங் என்று ஒரு சர்வதேச அழைப்பு காத்துருக்கும். திரும்ப அழைக்க முடியாது. யார் என்று தெரியாது. சாப்ட்வேர் துணை கொண்டு அழைக்கும் அழைப்பில் முழு எண்கள் வராது.

வேறு வழியே இல்லை. பல பாவங்களையும் ஏகப்பட்ட சாபங்களையும் வாங்கியவன் தான் ஏற்றுமதியாளர் என்பவன். அதிலும் தொடக்கத்தில் இருக்கும் என்னைப்போன்றவனின் நிலை இன்னும் பரிதாபம். நாளின் இருபத்தி நாலு மணி நேரத்தில் நான்கு மணி நேரத்தில் கோழித்தூக்கம் எடுத்துக்கொள்ளலாம் கைபேசியை அருகில் வைத்துக்கொண்டு.

” திருப்பூர்க்கு இந்த நாள் வருகிறேன். என்னை வந்து சந்தியுங்கள் என்றதும் தலை கால் புரியவில்லை. நிர்வாகத்தில் சொன்னதும் சில மாதங்களுக்கு முன் கேட்டுருந்த அட்வாண்ஸ் தொகையை அப்போதே சட்டைப்பையில் இருந்து எடுத்துக்கொடுத்தார். இந்த மாதிரி நடந்தால் தான் எனக்குப் பயம் அதிகமாகும். புழுவை மாட்டிய கைக்கு ஒன்று பெரிய மீன் கிடைத்தால் அவர்களின் உழைப்பு என்று பேசப்படும். புழுவும் கழன்று விழுந்து மீன் ஏதும் சிக்காதுருந்தால் கண்களுக்குத் தெரிந்த தெரியாத எதிரிக்கூட்டத்தின் பள்ளம் தோண்டல் இன்னும் சற்று அதிகமாகும்.

உஷார் ஐயா உஷாரு. ஓரஞ்சாரம் உஷாரு. இதுதான் தினந்தோறும் உச்சரிக்கும் கந்த சஷடி கவசம்.

அந்த நவீன வரவேற்பரையில் ஆறு பேர்கள் அங்கு காத்துருந்தனர். அதில் இரண்டு பேர்கள் ஏஜென்ட். சற்று குழப்பமாய் இருந்தது. இவர்கள் நுழைந்து விட்டால் நாம் எப்படி? ஆனால் முதல் அழைப்பே எனது பெயராக இருந்ததால் தைரியம் அதிகமானது.

தொலைபேசி அழைப்புக் குரலுக்கும் நேரிடையான உருவத்துக்கும் முற்றிலும் வித்யாசம். ஆஜானுபாவ ஆறரை அடி உயரம். மொத்த மெத்தை வடிவ இருக்கையும் திமிறிக்கொண்டுருந்தது. அருகே செல்வதற்குள் எழுந்து வந்து கை குலுக்கி விட்டு கொடுத்துருந்த அனைத்து மின் அஞ்சலின் நகல்களை பார்த்து முடித்து விட்டு, என் இரண்டு கைகளை கேட்டு வாங்கிக்கொண்டு, உள்ளங்கையில் ஒரு உலோக கை போன்ற வடிவமான ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு கட்டளை வடிவில் இருந்ததை அழுத்தி வைத்துக்கொண்டு சத்திய பிரமாணம் போல் என்னைச் சொல்லச் சொன்னார்.

” இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற மாட்டோம். தரத்தில் உறுதியாய் இருப்போம். இருவருக்கும், நட்பையும், தொழில் உறவையும் வளர்க்க உதவியாய் இருக்கும் இறைவனுக்கு நன்றியாய் இருப்போம்”

மெய் சிலிர்த்தது. இது என்னடா வித்யாசமான தொடக்கம். அதற்குப்பிறகு அவர் தங்கியிருந்த நாட்களில் சந்தித்த போது அவர் உறிப்ரூ மொழியில் வைத்து படித்துக்கொண்டுருந்தது, அவர் கலாச்சாரம், மதம் குறித்த அக்கறை, போன்ற பலவற்றையும் பார்த்து பழக முடிந்தது.

சுருக்கமாகச் சொன்னால் தொழில் முக்கியம். அதிலும் முக்கியம் நம் பராம்பரியம், கலாச்சாரம், தாய்மொழிப்பற்று. மணைவியிடம் ஆர்வமாய் இரவில் வந்து சொன்ன போது, “இருங்கள் பூணை உருட்டும் சத்தம் கேட்கிறது ” என்று உள்ளே போனவள் நான் தூங்கியதும் வந்து படுத்தார்.

பெற்றோர் கூட்டத்தின் தொடக்கத்தின் வருகையின் பொருட்டு இருவரும் கையெழுத்து விட்டு மனைவி உள்ளே நுழைய நான் தப்பித்துவிட எத்தனித்து விடும் போது குழந்தைகளின் வகுப்பு ஆசிரியை கையை பிடித்துக்கொண்டு “நானும் வருட வருடம் பார்க்கின்றேன். ஓடிப்போய் விடுகிறீர்களே? என்னை எத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்? இங்கு உட்கார்ந்து கேட்கலாமே? என்று இழுத்துச் சென்று அமர வைத்து விட்டார். வேறு வழியில்லை?

அவரைச் சொல்லியும் குற்றமில்லை? குழந்தைகளை அழைக்கச்செல்லும் போது அங்கு நடக்கும் அத்தனை சமூக முரண்பாடுகளை கண்டு ரசிக்கும்பொருட்டு சற்று பின்தங்கி நின்றுவிட்டு கூட்டம் குறைந்ததும் போய் அழைப்பேன்.

பள்ளியின் உள்ளே நுழைய எத்தனிக்கும் எந்த வாகனமும் டாப் கியரில் தான் உள்ளே வருவார்கள். அத்தனை அவசரம். நுழைவு வாயிலில் இருக்கும் வயதான நபரால் ஒரு அளவிற்கு மேல் கத்த முடியாது. அவரவர் உயிர் அவரவர் கைகளில் தான். வாகனங்களும் எடுக்க முடியாதபடி அலங்கோலமாய் நிறுத்தப்படும். பள்ளி முடிந்ததற்கான மணிச்சத்தம் கேட்டதும் திறக்கப்படாத உள் நுழைவு வாயில் கதவை முட்டிக்கொண்டு ஒரு கூட்டமே நிற்கும். திறப்பதற்குள் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள் ஏதோ கும்பகோண பள்ளி தீ விபத்து நடப்பது போல்.

எல்லோரும் அழைத்துச்சென்ற பிறகு சற்று ஆசவாசமாய் நிற்கும் வகுப்பு ஆசிரியை என்னைக் கண்டதும் சிரித்து விடுவார். மிக மிக நல்ல ஜீவன். வாங்கிக்கொண்டுருக்கும் நம்ப முடியாத மிகக் குறைந்த சம்பளத்திற்கு அவர்கள் அளிக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அளவிடமுடியாது.

அன்று அப்படித்தான். இரண்டாம் கட்டத் தேர்வு முடிந்து அதன் அட்டையை எனக்கு கொடுப்பதற்கு முன்னால் உங்கள் பெண் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்துள்ளார் என்றார். நான் உடனே யோசிக்காமல் கேட்ட கேள்வி ” ஏற்கனவே எடுத்த முதல் ரேங்க் குழந்தை இப்போ என்ன ரேங்க் எடுத்துள்ளார்?” நொந்து விட்டார்.

எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளின் ரேங்க் குறித்து அக்கறைபட்டுக்கொள்வதே இல்லை. சற்று மிரட்டல் கலந்த அன்பான அறிவுரை மட்டும். என்னைப் பொறுத்தவரையில் ஐந்தாவது படிக்கும் வரையில் அவர்கள் குழந்தைகள். ஆறாவது முதல் தான் அவர்களின் அத்தனை சமூகப்பொறுப்பும் தொடர்ந்து பத்தாவது படிக்கும் போது ஒரு அளவில் வந்து முடிகின்றது. மேற்கொண்டு இரண்டு வருடங்கள் தான் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் அவஸ்யம்.

ஐந்தாவது படிக்கும் வரையில் அவர்களின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள், படிக்க வேண்டியதன் அவஸ்யம், அதிலும் புரிந்து படிக்க வேண்டியதன் முக்கியத்துவம், உடை குறித்து, குடும்ப சூழ்நிலை குறித்து, சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து உணர்த்தி விட்டாலே அவர்களின் சுய சார்பு சிந்தனை கூர்படுத்தப்பட்டு விடும். அஸ்திவாரம் போட்டது ஒரு தளத்திற்கு. எழுப்பும் கட்டிடம் பத்து மாடிக்கு என்றால் புயல் அடித்தால் மழை வந்தால் ஜாதக கட்டங்களைத்தான் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

மறுநாள் மனைவியும் என்னுடன் வந்த போது முதல் நாள் நடந்ததைச் சொல்லி புலம்பித்தள்ளி விட்டார். சிரித்துக்கொண்டே கிளிகளை ரசித்துக்கொண்டுருந்தேன்.

சரியான சந்தர்ப்பத்தில் இப்போது பழிவாங்கி விட்டார். பெற்றோர் கூட்டம் கூடிய அறையின் உள்ளே முன்னூறு பேர்களாவது இருப்பார்கள். சந்தைக்டையை விட சத்தம் அதிகமாக இருந்தது. ஆனால் எல்லோரும் கணவான்களாக அவர்கள் உடை உணர்த்தியது?

தாளாளர் வந்தார். அருகே நிர்வாகித்து வரும் அவர் மனைவி. இரு பக்கமும் அந்தந்த வகுப்பு ஆசிரியைகள். குறிப்பெடுக்க தனியாக இருவர். தொடங்கியது விவாதம். பேசிய தாளாளர் சென்ற வருடம் செய்த சாதனைகள் குறித்து விளக்கி விட்டு, நடைமுறையில் கொண்டு வந்துள்ள மாற்றங்களை சொல்லி விட்டு மேற்கொண்டு உங்கள் ஆலோசனைகளைச் சொன்னால் சிறப்பானதை நடைமுறைபடுத்த வசதியாக இருக்கும் என்று முடித்தார்.

முதல் நபர் எழுந்தவர் ” வீட்டில் எப்போது பார்த்தாலும் ஜெட்எக்ஸ் பார்த்துக்கொண்டே இருக்கிறான். நீங்கள் தான் சொல்லி கண்டிக்க வேண்டும் என்றார். வேறு சிலரும் அதையே ஆமோதித்தார்கள்.

விரிவாக அது குறித்து ஐந்து நிமிடங்கள் பேசிய பிறகு புரிந்தது பையன் உள்ளே நுழையும் போது அவரின் மாமியார் சீரியல் பார்த்துக்கொண்டுருப்பாராம். இவன் பையை வைக்காமலே ரிமோட்டில் கை வைத்து விட ஏக களேபரங்கள். மாமியார் புலம்பல் ஒரு பக்கம். பையன் அட்டகாசம் ஒரு பக்கம். இவர் அலுவலக டென்ஷனை எல்லாம் மேலேயும் காட்டி விட்டு மதியம் சாப்பிடாமலே வௌியே சென்று விடுவார்?

என்ன ஒரு சமூகப்பிரச்சனை? தியாக மனப்பான்மை இல்லாமல் நம் சுகத்தை மட்டும் கருத்தில் கொண்டு அனைத்து சுகத்தையும் அனுபவிக்க வேண்டும். அவர்கள் உள்ளே வந்ததும் எந்திரமாய் மாறி படிக்க உட்கார்ந்து விட வேண்டும். பொதிமூட்டையாய் சுமந்து வந்த புத்தகசுமை அது தந்த உடல்வலி ஒரு பக்கம். வயதுக்கு மீறிய பாடம் என்ற பெயரில் உள்ளே வேறு ஒரு மொழியில் உள்ளே திணிக்கப்படும் புரிந்த புரியாத வார்த்தைகள் அது தந்த ஆயாசம். வேறு என்ன செய்ய முடியும்? பார்க்கும் டோராவும் பூனை எலிக்கூத்தும் தானே அவர்களை உற்சாகப்படுத்தப்படும். அதற்கே இத்தனை கூத்துக்கள்.

அடுத்தவர் எழுந்தார்.

மற்ற எல்லா பள்ளியிலும் ஆங்கிலத்திலேயே சகஜமாக பேச உரையாட வைக்கின்றார்கள். ஆனால் ஆங்கிலவழிக்கல்வி தான் பேரே ஒழிய எங்களால் பெருமைபட்டுக்கொள்ள முடியவில்லை?

பாருங்கள் பேசும் மொழியில் பெருமை சிறுமை? பிணமே என்று அழைக்கும் குழந்தைகளை உச்சி முகர்ந்து கொண்டு உள்ளே வந்துருந்த அம்மாக்கள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஒரு தடவை என்னைக் கண்டதும் ஆசிரியை உள்ளே இருந்த குழந்தைகளிடம் ” உங்க டாடி வந்துட்டாங்க? என்று தயார் படுத்திய போது குழந்தைகளை தனியாக அமரவைத்து விட்டு அவர்களிடம் ” ஆங்கில வழிக்கல்வி என்பது அவர்களின் பாடத்துக்கு மட்டும் தான். எங்கள் உறவுகளை அழைக்க அல்ல. உங்களின் நோக்கம் அனைவரிடத்திலும் ஜெயிக்கும் பட்சத்தில் கடைசியில் மாடுகள் மட்டும் ம்மமாாா என்றழைக்கும்? தேவையா? என்றதும் பதில் பேசாமல் உள்ளே வேகமாக சென்று விட்டார். மறுநாள் மனைவி துணையுடன் போகவேண்டியதாகி விட்டது.

மற்றொரு அதி புத்திசாலி நீங்கள் ப்ரென்ச்,ஜெர்மன் மற்றும் உறிந்தி சொல்லிக்கொடுக்க மாட்றீங்க? என்றார். எனக்குத்தான் ஆசை. அவர் அருகில் போய் உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்? என்று கேட்பதற்கு. மணைவி பாதி நேரம் என்னை கவனிப்பதில் இருந்ததால் வேடிக்கையாளனாக அவரை வியப்புடன் பார்த்துக்கொண்டுருந்தேன்.

மேலும் மேலும் தொடர்ந்து கொண்டுருந்த விவாதங்கள் என்னை கிட்டத்தட்ட நாம் இங்கிலாந்தில் இருக்கிறோமா? என்று நம்பும் அளவிற்கு இழுத்துக்கொண்டு சென்று கொண்டுருந்தது. ஆண்டவன் அந்த இடத்தில் ஒருவரை என் சார்பாளனாக கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்.

குட்டையாக இருந்தார். ஆனால் குரல் அந்த பகுதி மொத்தத்திற்கும் மைக் இல்லாமல் கம்பீரமாய் ஒலித்தது. அவர் தொடங்கிய போது சலசலத்த மற்ற குரல்களையும் அவர் குரலின் சக்தி தடுத்து நிசப்தம் ஆக்கியிருந்தது.

” இங்குள்ள அனைவரின் பிரச்சனை முதல் வகுப்பு வருவதற்குள் தௌிவான ஆங்கிலத்தில் பேசி விட வேண்டும். மற்ற மொழிகள் பேசினால் இன்னும் அதிக சிறப்பு மற்றும் கௌரவம். வீட்டில் நடக்கும் அனைத்து குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளும் வகுப்பு ஆசிரியர் வீடு வரையில் வந்து கவனித்துக்கொண்டால் சாலச்சிறந்தது என்பதாகத்தான் பேசினார்கள். ஜனநாயகம் என்ற பெயரில் நாம் நம்முடைய அடிப்படை கடமையை மறந்து விட்டு, தொலைத்துகொண்டு நம்முடைய மொத்த பிரச்சனையும் ஆங்கிலம் ஒன்றே தீர்த்து விட முடியும் என்பதில் இத்தனை ஆர்வமாய் இருப்பது புரிகிறது.

இதற்கு மேலும் இங்கு பயிற்றுவிக்கப்படும் கல்வி குறித்து கேள்விப்பொருளாக்கி மேலும் சிறப்படைய ஆலோசனை என்ற பெயரில் உங்களுடைய ஆசாபாசங்களை இறக்கி வைத்துள்ளீர்கள்.

இந்தப்பிரச்சனை நீங்கள் அனைவருமே உங்கள் குடும்பம் சார்ந்ததாகவே அல்லது உங்கள் பையன் பெண் சார்பாக கருதிக்கொண்டுருப்பது தான் ஆச்சரியமாய் இருக்கிறது. எல்லோருமே நாளைக்கே நேரிடையாகப் போய் பில்கேட்ஸ் உடன் வணிக ஓப்பந்தம் போட வேண்டிய அவஸ்யத்தில் இருப்பது போல்.

இந்தப்பள்ளியின் வாரத்தின் தொடக்க நாளில் கடவுள் வணக்கமும் தேசிய கொடிக்கான மரியாதையும் நடத்தும் போது உறுதிமொழி வாசிக்கும் குழந்தைகளை நீங்கள் எத்தனை பேர்கள் கவனித்து பார்த்து இருக்கிறீர்கள்? தமிழில் சொல்லும் போது கம்பீரமான வார்த்தைகளில் வரும் அந்த வார்த்தைகள், ஆங்கிலத்தில் மறுபடியும் அதையே சொல்லும் போது ஏன் இந்த தடுமாற்றம் அந்த குழந்தைகளுக்கு. ஆசிரியை தேர்ந்தெடுத்த முதன்மை மாணவ மாணவியருக்கே இத்தனை பிரச்சனை என்றால் சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் சாமான்யனின் குழந்தைக்கு அவர் எத்தனை தூரம் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.

காரணம் மிக எளிது. எதிர்பார்க்கும் நீங்கள் அணைவரும் தமிழில் தான் பேசி பழகி உங்கள் சமூக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறிர்கள். ஒன்றாவது படிப்பவன் ஜெர்மன் படித்து என்ன அவன் சாதிக்க முடியும்? வரும் உறவினர்களிடம் ஆங்கிலத்தில் பேசி தன்னுடைய புலமையை காட்டும் மகனுடன் அந்த உறவினர் அதே போல் ஆங்கிலத்தில் பதில் பேசி விட முடியுமா?

என்னுடைய குழந்தை இந்திரா நூயியாகவோ,நாராயணமூர்த்தியாகவோ, பில்கேட்ஸ் ஆகவோ வர விரும்பவில்லை. என் குழந்தைகள் எங்கள் குழந்தைகளாகவேத்தான் வளர்க்க விரும்புகிறோம். மொழி புலமை என்பது என்ன தான் கற்றுக்கொடுத்தாலும் பேசினாலும் நீங்கள் எதிர்பார்க்கும் சரளம் வந்து விடாது. ஆங்கில வழி மூலம் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும் என்றால் இன்று அமெரிக்காவில் உள்ள அனைத்து தமிழ்நாட்டு மாணவர்களும் சர்ச் பார்க் காண்வெண்டு போன்ற பள்ளியில் இருந்து தான் போயிருக்க வேண்டும். ஆனால் எத்தனையோ அரசாங்கப்பள்ளியில் படித்து இருந்தவர்கள் போய் இருக்க முடியாதே?

அந்தந்த சூழ்நிலை, அவர்களுக்கு அந்தந்த பொறுப்பை கொடுத்து விட்டுக்கொண்டேதான் இருக்கும். என்ன ஒன்று? நீங்கள் அந்த சமயத்தில் அவர்களுக்கு அந்த சூழ்நிலையை இனம் கண்டு கொள்ளக்கூடிய பக்குவத்தையும், உங்கள் ஒத்துழைப்பையும் அளித்தாலே போதும்.

ஓழுக்கம் பற்றி யாருமே பேசவில்லை. தலை இல்லாத முண்டமாய்த்தான் உங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்களா? உங்கள் குடும்ப சூழ்நிலையை அவர்களுக்கு உகந்ததாக மாற்றுங்கள். அவர்களின் விருப்பு வெறுப்பு காது கொடுத்து கேளுங்கள். அவர்களுக்கு உங்கள் பொருளாதார நிர்ப்பந்த சவால் வாழ்க்கையை பங்கு எடுத்துக்கொள்ள வையுங்கள்.

ஒரு குழந்தை உங்கள் வீட்டில் செய்கின்ற பிரச்சனைகளை கண்டு அலறுகின்ற நீங்கள் முப்பது நாற்பது பேர்களை வைத்து ஒரு நாள் முழுக்க பாடத்தையும் பண்பையும் போதிக்க வேண்டிய அவர்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு என்ன? அப்படி வாழ வேண்டும், இவர் போல ஆக வேண்டும் அவர்களுக்கு நீங்கள் புகட்டும் உங்களால் சாதிக்க முடியாத லட்சியங்களை இன்று உங்களுக்குள் உள்ள ஆரோக்கியம் பணம் கட்டி படிக்க வைக்கும் உங்களின் வாழ்க்கை சுழலில் மாறும் போது சராசரி வாழ்க்கைக்கு நீங்கள் எப்படி அவனை பண்படுத்த முடியும் என்று நம்புகிறீர்கள்?

அவனை சார்ந்தே வாழ வேண்டிய கட்டத்தில் இருக்கும் சூழ்நிலை வரும்பட்சத்தில் இத்தனை போட்டி நிறைந்த உலகத்தில் ஒழுக்கமாக வளர்ந்த குழந்தைகளாவது உங்கள் அருகில் இருந்து கவனிக்க முயற்சிப்பார்கள். இல்லை கணிணி மூலம் அவனைக்கண்டு ஏக்கத்தை மட்டுமே சுமந்து வாழ்நாளின் எஞ்சிய நாளை கழிக்க விருப்பமா? பணம் முக்கியம், பணத்தை சம்பாரிக்க படிப்பு அதை விட முக்கியம். போட்டியில் முந்திவர மொழி அறிவு மொத்தத்தில் முக்கியம், இதையெல்லாம் விட சுப்பையா மகனாக முனியாண்டி மகனாக அவர்களின் குடும்ப பரம்பரிய பெருமையை காத்து, நாட்டுக்கு விசுவாசமான ஒரு நல்ல குடிமகனாக குடிமகளாக வளர்க்க ஏன் விருப்பம் இல்லை?

மறுத்து பேசிய நண்பர் சொன்னது போல் மற்ற நாடுகளை ஒப்பிட்டு பேசிய நீங்கள் ஏன் அந்தந்த நாடுகளில் உள்ளது போல் கட்டாய ரானுவ பயிற்சிக்கு ஆதரவு அளிக்கமாட்டுறீங்க. இவர்கள் அனைவரின் விருப்பங்களையும் செயல்படுத்தவேண்டும் என்பதற்காக நிர்வாகம் செயல்படுத்த முடிந்தால் எங்கு போய் முடியும்?

தொடர்ந்து கொண்டுருந்த அவர் பேச்சுக்கு கட்டிப்பிடித்து பாராட்ட வௌி வாயிலில் காத்துக்கொண்டுருந்தேன்.