Daily Archives: ஜூலை7, 2009

மகிழ்ச்சியை தொலைத்த மகிழ்வுந்து….

கார் வாங்க வேண்டும்? அது தான் அப்போது மண்டையை குடைந்து கொண்டுருந்த விஷயம். நிறுவனத்தில் பொது மேலாளர் பதவி. நிறுவனத்திற்கு அருகிலேயே எதிர்பார்த்த அனைத்து வசதிகளுடன் கூடிய வீடும் அமைந்து விட்ட அதிர்ஷடம். வீட்டு ஓனர் கவுன்சிலரும் கூட. சமூகப்பாதுப்புக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. வேறு என்ன வேண்டும்?

மனைவிக்கு கார் தான் வேண்டும்?

மாமனார் கொடுத்துருந்த இரண்டு சக்கர வாகனம், திருப்பூர் சாலைகள் தந்த அதிர்வு நிரந்தரமாக முதுகுவலியை உருவாக்கி விட மருத்துவர் எச்சரிக்கையின் பொருட்டு அப்போது தான் வைத்திருந்த வண்டியை மாற்றி சைன் வாங்கியிருந்தேன். அதிர்வுகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு அது தந்த சுகமான அனுபவம். அப்போது சிலரிடம் தான் அந்த வண்டியே இருந்தது. அண்டை வீட்டுக்காரின் பொறாமை போல் பார்வை அனைத்தும் என் மேல் இருந்தது..

யோசித்து பார்க்கும் போது கார் என்பது ஆடம்பரம் தாண்டி அத்யாவஸ்மாகவும் இருக்கத் தான் செய்தது. வேண்டி விரும்பியது போல் கிடைத்த இரட்டை பெண் குழந்தைகளும் எங்கள் அஜாக்கிரதையினால் மூன்றாவதும் பெண்னுமாய் வாழ்க்கை சுகமாகத் தான் போய்க்கொண்டுருந்தது. பணத்துக்கு பிரச்சனை இல்லை. வேலையில் டார்ச்சர் இல்லை. வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் மனிதர்கள் பயமுறுத்தும் நிலைக்கு அப்பால் சென்று என்னைக் கண்டாலே பயப்படும் அளவிற்கு மாற்றி இருந்தது.

பள்ளியும் அருகில் அமைந்து விட அவர்களின் பயணம் என் இரண்டு சக்கர வாகனத்தில் முன்னும் பின்னுமாய். தின்பதற்கு, துடைப்பதற்கு, படிப்பதற்கு என்று எல்லா பக்கத்திலும் தொங்கிக்கொண்டுருக்கும். விளையாடி விட்டு வருவதற்கு அந்த வருடங்கள் முழுமைக்கும் செலுத்திய தொகை என் தகப்பனார் என் கல்லூரி வரைக்கும் செலவழித்த தொகை. வேறு வழியே இல்லை அருகில் இருந்த அரசாங்கப் பள்ளியின் அலங்கோல நிலைப்பார்த்து.

இரட்டையரில் இரண்டவதாய் வந்தவளுக்குண்டான உடல் உபாதைகள் அவளை சராசரிக் குழந்தைகளிடமிருந்து சற்று பின்தங்கியே வைத்துருந்தது. பிறந்த போது உண்டான எடை குறைவு, தொடர்ச்சியான வலிப்புமாய் அவளின் வாழ்க்கை எங்கள் இருவருக்கும் சவாலாய் இருந்தது. ஆசிரியைக்கோ சொல்ல தர்ம சங்கடம். மறு ஆண்டும் இதே வகுப்பில் தொடரச்சொல்ல. நான் உறுதியாய் இருந்தேன்.

மூத்தவள் அடுத்த வகுப்பு செல்ல இவளுக்குத் துணை வேண்டும். அவசரத்தில் இணைப்பு இதழாய் மூன்றாவதாய் வீட்டுக்குள் வந்தவள் முத்தாய் இருந்தாள். இரண்டறை வயதில் அவர்களின் மொத்த புத்தகங்களையும் கரைத்துக் குடித்துருந்தாள் பள்ளிக்குச் செல்லாமலே. ஆசிரியை அனுமதியுடன் துணையானாள்.

பிரச்சனைகள் என்னை நோக்கி வருவதற்கு முன்னே சுதாரித்துக் கொண்டேன். காருக்கு உண்டான் அவஸ்யம் தௌிவாக புரிந்து விட்டது. மூன்று பேருக்கும் தொங்க விடுவதற்கான சமாச்சாரங்கள் மீறி அவர்களை பைக்கில் கொண்டு போய் சேர்ப்பதென்பது திருப்பூர் சாலையில் சர்க்கஸ் கம்பி போன்ற சமாச்சாரம். வேறு வழியே இல்லை. தைரியமாய் ஆற்றில் குதித்திது விட வேண்டியது தான்.

கார் ஓட்டியே பழக்கமில்லையே? அதனால் என்ன விழுந்து பிறகு தப்பிப்பிழைக்க நீச்சல் அடித்தது தானே ஆகவேண்டும். கிடைக்க வேண்டும் என்றால் அது வந்தே ஆகி விடும், விரும்பாவிட்டாலும். இது வாழ்க்கை முழுவதிலும் எனக்கு உணர்த்தியதில் கிடைத்த பாடம். பள்ளி திறப்பதற்கு இன்னும் முழுமையாக இரண்டு மாதங்கள் இருக்கிறது. யோசனை மட்டும் உள்ளே ஓடிக்கொண்டுருந்தது.

ஆயுள் காப்பீட்டு முகவராய் இருக்கும் நண்பர் எதிர்பாரதவிதமாய் அழைத்தார். பழைய மாருதி கார் இருக்கிறது? உங்களுக்குத் தேவைப்படுமா? சொன்னேன் அல்லவா, இது தான் சந்தர்ப்பங்கள்?

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் கையில் கொடுத்தாகிவிட்டது இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய்.

மீதி பணத்துக்கு தனியார் பைனான்ஸ்ல் இரண்டு வருட தவணை. மனைவியின் முகத்தில் பூரிப்பு இல்லை. பழைய வண்டியா? ஆனால் எனக்குத் தெரியும். ஏற்கனவே காலை அகலமாக வைத்து கிழிந்து போன கதைகள். முதலில் வரட்டும், அப்புறம் திருப்தி படுத்தி விடலாம்?

முப்பது நாட்கள் கழிந்தது. வண்டி வந்தபாடில்லை. காரணங்கள் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக. ஏற்கனவே கற்ற பாடங்கள் பலப்பல. ஆனால் மூன்று வருடங்களாக குடும்பத்தில் ஒருவராக பழகிக்கொண்டுருக்கும் இவரும் இப்படியா? என்று நொந்து கொண்டு நச்சரித்த நச்சரிப்பில் வெற்றி கரமாக ஒரு முறை காசோலையை திருப்பி விட்டு அந்தப்பணத்தை கைப்பற்றி அன்று அலுவலகத்தில் நுழைந்த போது திருப்பூரில் உள்ள மாருதி ஷோரூம் விற்பனை பிரதிநிதி அவர் தொடர்பு கொள்ள வேண்டிய அட்டையை கொடுத்து விட்டு சென்று இருந்தார். வரவேற்பு பெண்மணி எப்போதும் போல் என் மேஜையில் வைத்துருக்க வியப்பாய் இருந்தது.

விடாது துரத்தும் கருப்பு போல், அழைத்த போது அடுத்த ஆச்சரியம் காத்துருந்தது. புது வண்டியே இரண்டு லட்ச ரூபாய். அதில் சிறப்புத்தள்ளுபடி முப்பதாயிரம். வெறும் நாற்பது ஆயிரம் கட்டினால் மீதி வங்கிக்கடன். நண்பரை அழைத்துக்கொண்டு அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் கேட்ட அனைத்து பத்திரங்களுடன் ஆஜர்.

பணத்தைக்கட்டி ரசீது வந்ததும் அடுத்த பிரச்சனை தயாராய் இருந்தது. முப்பதாயிரம் தள்ளுபடி நேற்றோடு முடிந்து விட்டது. இன்று வெறும் பத்தாயிரம் மட்டும் தான். நம்ப முடியாமல் அப்படி என்றால் எனக்கு எழுதித்தாருங்கள்? நாசூக்கு வார்த்தைகளால் என்னை நகர்த்த முயற்சிக்க என்னை தொடர்பு கொள்வதற்காக பணித்த பெண்ணிடம் சொல்லி விட்டு வந்தேன். ” இன்னும் ஒரு வாரத்தில் நான் இங்கு வருவேன். உங்கள் தலைமை நிர்வாகி வந்து என்னை வரவேற்பார் பாருங்கள்” என்று . அந்தப் இளமையான பெண் வினோதமாக பார்த்தார்.

சராசரிக்கும் கீழே வாழ்ந்து கொண்டுருந்த என் நண்பர் என்னை எச்சரித்தார். ” இது உங்கள் ஊர் சார்ந்த மத்திய அமைச்சரின் பினாமி நிறுவனம். உங்களால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் வந்து விடுங்கள்” என்று வௌியே தள்ளிக்கொண்டு வந்து விட்டார். உள்ளே ரௌத்திரம் பொங்கிக் கொண்டுருந்தது.

ஒவ்வொரு படியாகத்தான் ஏறுவதற்கு இந்த வாழ்க்கை அனுமதிக்கின்றது. சுற்றி உள்ளவர்களின் வளர்ச்சிக்கும் என்னுடைய இருப்புக்கும் உண்டான இடைவௌி பெரிதான கோபத்தை உருவாக்கி இருந்தாலும் முன்னூறு மைல்கள் தாண்டி இங்கு வந்து வாழ்ந்து கொண்டுருப்பவனுக்கும், சொந்த இடத்தில் சொத்து மதிப்பில் வங்கிக் கொடுக்கும் வசதியில் மிக எளிதாக முன்னேறிக்கொண்டுருக்கும் தகுதியற்றவர்களுடன் தான் வாழ்க்கை முழுக்க குப்பை கொட்டவேண்டியிருக்கிறது. அதிலும் இதே போன்று கண்ணுக்குத் தெரிந்தே கொள்ளை. விடப்போவதில்லை?

உழைக்க மட்டுமே கற்றுத்தந்த குடும்பத்தில் இருந்து வந்தவனுக்கு இந்த திருப்பூர் வாழ்க்கை போராடக்கற்றுத்தர அலுவலகத்திற்குள் வந்ததும் முதலில் செய்த காரியம் மாருதி சம்மந்தப்பட்ட வலைதளத்தில் உள்ள அனைத்து மின் அஞ்சல் முகவரியையும் சேகரித்தது. சென்னை, மும்பாய், டெல்லி என்று வரிசைபடுத்திக்கொண்டு பணம் கட்டிய ரசீதையும் நகல் கோப்பு உருவாக்கி அனைத்து நிகழ்ச்சிகளை தெரியப்படுத்தி, “சாராசரிக்கும் கீழே உள்ளவர்களுக்காக உருவாக்கிய நிறுவனம் தேர்ந்தெடுத்த டீலர் செய்யும் முறைகேடுகளை தெரியப்படுத்தி, தயை கூர்ந்து ஐ.எஸ்.ஓ. நிறுவனத்தின் தகுதி என்னன்ன என்பதை தெரியப்படுத்தினால் நான் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவதற்கு வசதியாய் இருக்கும் என்று முடித்த மின் அஞ்சல்க்கு இரண்டு நாட்கள் எந்த பதிலும் வரவே இல்ல.

விடுவதாய் இல்லை. நம்பிக்கை இருந்தது. வலைதளத்தில் இருந்து தேர்வு செய்த மற்ற முகவரிக்கும் திரும்பத்திரும்ப அனுப்ப கதவு திறந்தே விட்டது.

கைபேசியில் கோயமுத்தூர் எண் வர பேசிமுடித்ததும் வெற்றிக்கழிப்பு. முதலீடு செய்துருக்கும் புண்ணியவான்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆப்பு மேல் ஆப்பு. அவர் பேசி முடித்த அடுத்த ஐந்து நிமிடத்தில் ஷோரூம் பெண்மணி. மறுபடியும் நண்பர் துணை கொண்டு ஆஜர். நண்பர் நம்பவே இல்லை. “ஆள் வைத்து சார்த்த போகிறார்கள், நான் வேண்டுமானால் வௌியே நின்று கொள்கிறேன்”. அவரை சமாதானப்படுத்தி உள்ளே செல்லும் போது காவலாளியின் ராஜ மரியாதை நண்பருக்கு வித்யாசமாய் இருந்தது. பயம் என்பதே எனக்கு இல்லை. உண்மை. காரணம் தனிப்பட்ட நபரின் பகை என்பதை விட அவர்களுக்கு “பெயர்” முக்கியம். உறுதியாய் இருந்தேன்.

இளமைப்பெண் மேலும் இளமையாய் வரவேற்றார். பேசி முடித்து விட்டு காதுக்கு அருகில் வந்து ” சார் உண்மையிலேயே சாதித்து விட்டீர்கள் “. புரிந்தது போலிருந்தது. ஆனால் என்ன நடக்கும் என்று அனுமானிக்க முடியவில்லை. நண்பர் முகத்தில் குளிரூட்டப்பட்ட அறையிலும் முத்து முத்தாய் வியர்வை.

மூதலிடு போட்டவரின் கைத்தடி அருகில் வந்தார். நெற்றி முழுக்க சந்தணமும் விபூதியும். கசங்காத கைத்தறி சட்டை வேஷடி. அதிகமாக பேசவில்லை. ஒரு வௌ்ளை பேப்பரை கையில் கொடுத்து ” நீங்கள் கேட்ட க்ரே கலர் அதோ தயாராய் இருக்கிறது. உங்கள் வங்கி தொடர்பான அனைத்து விபரங்களையும் எங்களுடைய சார்பாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். வீட்டுக்கு வந்து கூட கையெழுத்து வாங்கி கொள்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியது, நிறுவனத்தில் எந்த முறைகேடும் இல்லை என்று எங்களை புகழ்ந்து ஒரு கடிதம் எழுதித் தரவேண்டும்”.

வாழ்க்கை. இது தான் வாழ்க்கை.

என்னை விட என்னுடைய நண்பரால் சிரிப்பை அடக்க முடியாமல் வௌியே ஓடிப்போய் வாய்விட்டு சிரிக்கின்றார். ஆனால் என்னிடம் எந்த சலனமும் இல்லை. கற்ற பாடங்கள் அப்படி.. எல்லாம் முடிந்த பிறகு அந்த இளமைப் பெண்மணி அனைத்தையும் கவனித்துக்கொண்டுருக்கும் கேமரா இல்லாத இடத்தில் வைத்து எனக்கு கைகுலுக்கியதும், நண்பரின் இதயத்தில் ஏதோ வித்யாசமான சப்தம்.

இரண்டு நாட்கள் கழித்து அழைப்பு வந்ததும் ஆட்டோ பிடித்து நண்பருக்குச் சொல்லாமல் சென்றேன். எனக்கு கார் ஓட்டத் தெரியுமா? என்பது குறித்து என்னை விட அவருடைய ஐயம் அதிகம். மேலும் என்னை அச்சமூட்டி வைத்துருந்தது. ஏற்கனவே நிறுவனத்தில் உள்ள ஐஷர், அம்பாஸிடர் போன்ற வகையறாக்களை அவவ்போது ஓட்டுனரை சரிசெய்து திருப்பூருக்கு வௌியே ஓட்டிப்பார்த்ததோடு சரி. திருப்பூர் உள்ளே எந்த நான்கு சக்கர வாகனங்களையும் ஓட்டி அனுபவம் இல்லை. ஆனால் நம்பிக்கை மட்டும் அதிகம் இருந்தது. கல்லூரி படிப்பின் போதே உரிமம் வாங்கி வைத்துருந்த தைரியமும்.

உள்ளே நுழைந்த போது நடுநாயமாக உள்ள பிள்ளையாக சிலைக்குப்பக்கத்தில் நிறுத்தி இருந்தாாகள். கேட்ட படியே சோனியின் அப்போது வந்த டிவிடி. விரும்பிய நிறம். வேறு என்ன? எடுத்து ஓட்ட வேண்டும். பூஜை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட உள்ளே உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து நகர்த்தினால் வண்டி முழுமையும் புகை மண்டலமாக. பதறிக்கொண்டு சாவியை எனக்கு கொடுத்தவரும் மற்ற மொத்த கூட்டமும்.

லாக் எடுத்து விடாமல் நகர்த்திய நகர்த்தலில் தொந்தரவு தாங்க முடியாத இன்ஞ்ன்னில் இருந்து புகை புகையாய். வந்தவர் கேட்ட கேள்வி ” என்ன சார் லாக் எடுத்து விடாமல் எடுக்கின்றீர்கள்? உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா? வேண்டுமானால் நாங்கள் கொண்டு வந்து வீட்டில் வந்து ஒப்படைக்கின்றோம்?

தன்மானம் என்ன ஆவது? ஏற்கனவே அங்கு அனைவருக்கும் “முக்கிய நபராக” ஆகியுள்ளோம்? சமாளித்து முதல் கியரில் இரண்டாவது கியரிலேயே ஓட்டி மொத்த பத்து கிலோ மீட்டரையும் நகர்த்தி என்னை முந்திச்செல்பவர்களின் “பார்வையை” புறந்தள்ளி போட்ருந்த குளிர் சாதனத்தையும் மீறி வியர்த்துருந்த வியர்வையை துடைத்துவிட்டு சாவியை மனைவி கையில் கொடுத்தபோது வேகமாக துடித்துக்கொண்டுருந்த இதயத்தின் சப்தத்தை மட்டும் நிறுத்த முடியவில்லை.

நண்பருக்கு வண்டியை எடுக்கச்செல்லும் போது அழைத்துச் செல்லாத வருத்ததை மீறி “இவன் எப்படி ஓட்டி வந்தான்? என்று வினோதமாய் பார்த்தார். அவர் அறிமுகப்படுத்திய கார் பழுது பார்க்கக்கூடிய நபர் அளித்த ஆலோசனை சற்று நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

மொத்த பள்ளிக்குண்டான சமாச்சாரங்கள் பின்னால் வைத்துவிட்டு உள்ளே ஆட்டம் போட்டுக்கொண்டுருக்கும் மூன்று தேவியர்களும் தான் எனக்கு பொறாமையை அளிக்கும் குட்டி சந்தோஷ ரட்சசிகள்.

அம்மாவுக்கு பெருமை. ஊருக்கே போய் அவர்களை தனியாக அழைத்து வந்து ஒரு மாதம் வீட்டில் வைத்துருந்து ஊரிலே போய் விட்டு வர ” அவன் நன்றாகத்தான் ஓட்டுகிறான். யாரும் பயப்படத்தேவையில்லை” என்று இலவசமாய் கிடைத்த சான்றிதழ்.

மனைவியின் உறவினர்களின் திருமண வைபோகமெல்லாம் காரில் போய் இறங்கும் போது இன்னும் கூடுதல் கவனிப்பு. மாமனார் அவர் பாட்டுக்கு காசு வாங்காத “தொடர்பு அதிகாரியாய்” பரப்பிக்கொண்டுருக்கிறார்.

ஆனால் வங்கியில் காசோலை வரும் நேரம் தான் வேலை பார்க்கும் பணியில் கிடைக்கும் அவமானங்களை சகிக்க கற்றுகொடுத்து சகிப்புத்தன்மையை அதிகப்படுத்தி அடுத்த நிறுவன மாறுதலை தள்ளிப்போட்டுக்கொண்டுருக்கிறது.