Daily Archives: ஜூலை27, 2009

” மக்கள் தொலைக்காட்சி ” என்ன ஒரு பெயர் தேர்வு?

அந்த அதிகாலையில் வீட்டுக்கு வந்த தொலைபேசி அழைப்பை காது கேட்டுக்கொண்டுருந்தாலும் கைகள் எடுத்து பேசும் நிலையில் இல்லை. இந்திய நேரத்தையும் அமெரிக்க நேரத்தையும் சேர்த்து வாழ்ந்து கொண்டுருப்பவன் தூங்கப் போவதே அதிகாலை வேலையில் தான்.

மனைவி பேசும் போதே புரிந்து விட்டது,

அம்மா தான். கனவில் கேட்பது போல் தான் இருந்தது. தேவியர்கள் தயாரனதும் பள்ளிக்குச் செல்லும் போது மனைவி சொன்னது, ” அத்தை இன்றைக்கே ஊருக்கு வரச்சொன்னார்கள்”.

புரிந்து விட்டது. அம்மாவுக்கு எல்லாமே அக்கறைக்கு இக்கறை பச்சை. எந்த இடத்திலும் நிலையாக இருக்க மனம் விடுவதில்லை. எல்லோருமே தாங்கு தாங்கு என்று தாங்கினாலும் இல்லாத குறையை இருப்பதாக நினைத்துக்கொண்டு தனது அடுத்த பயணத்தை தொடங்கி விடுவார்.

ஊரை விட்டால் திருச்சி. திருச்சியை விட்டால் திருப்பூர். மறுபடியும் ஊருக்கே.

கடிகார முட்கள் போல் இந்த வட்டத்திற்குள் சுழன்று கொண்டே இருப்பார்கள்.

பை நிறைய செலவழிக்க முடியாமல் பணம் வைத்துக்கொண்டே அடுத்தவனிடம் கையேந்துவார். தெரிந்தே கொடுத்து வந்தாலும் செலவழிக்காத பணம் அவரின் அஜாக்கிரதையினால் காணாமல் போயிருக்கும்.

வயது கூடக்கூட மனம் மட்டும் குழந்தையாக பின்னோக்கி வந்து விடுவது நம் மனிதர்களிடம் மட்டும் தானோ?

பேரூந்து பயணத்தை விட மகிழ்வுந்து அவர்களின் மகிழ்ச்சியை அதிகமாக்கும் என்றால் அதைவிட அதிக மகிழ்ச்சி, திருப்பூரில் இருக்கும் வரையில் அவர்கள் விரும்பும் அனைத்து நொறுக்கு தீனிகளும். அவரும் ஒரு தேவியராகவே மாறி விடுவார்?

ஊரில் உள்ள அனைவரின் கட்டுப்பாடுகளையும் உடைக்க முடியாமல் பலமுறை உடைந்து அழுது விடுவார். உடல் பருமன் மூட்டு வலியை அதிகப்படுத்த கடைசியில் என்ன பண்ண முடியும்? நாக்கைத் தான் கட்ட வேண்டும்? அது தான் அங்கே பிரச்சனை.

அங்கு உள்ள எந்த கட்டுபாடும் என் இடத்தில் நான் காட்டுவதில்லை. இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்பதாக அனைத்தும் இழந்து தன்னையே உருக்கி ஓடாய் உழைத்தவள் தின்று திங்கும் தீனியால் தான் மரணம் சீக்கிரம் என்றால் அது கூட பரம சந்தோஷம் தான். குறைந்த பட்சம் அந்த ஆத்மா சந்தோஷமாகத்தான் நினைத்தவற்றை எல்லாம் பெற்று சென்று அடையட்டுமே.

தரமானதை தரம் வாரியாக கைக்கு எட்டும் தூரத்தில் வைத்து விட்டாலே அவர்களின் பாதி மூட்டு வலி பறந்து விடும். வெத்திலை போட்டு கறை பட்ட பற்கள் களங்கமில்லா தேவியர்கள் போல் சிரித்து விடுவார்.

திருப்பூருக்குள் மகிழ்வுந்து நுழையும் போதே கேட்ட முதல் கேள்வி ” ஏண்டா அந்த மலையாளத்தான் கடையிலே அந்த சிப்ஸ் வகைகளை வாங்கிட்டு போயிடலாமா? ”

சிரித்துக்கொண்டேன்.

அம்மா என்னைத் தேடி இங்கு வருவதற்கு இன்னோரு முக்கியக் காரணம் தொலைக்காட்சி. ஊரில் அனைவர் வீட்டிலும் இருந்தாலும் எங்கள் இருவரைப் போல் யாரும் தொலைக்காட்சியை பார்ப்பது இல்லை. அனைவருமே அதிலே படுத்துக்கொண்டு உறங்குவதால் அம்மாவுக்கு ஒதுங்கி நின்று கால் வைக்கக் கூட இடம் கிடைக்காது?

ஊருக்குச் செல்லும் போது அங்கு நடப்பதை பார்ப்பேன் அனைவருமே வஞ்சகம் இல்லாமல் தான் இருந்தனர். காலையில் ஓட ஆரம்பித்தால் எத்தனை மணிக்கு அதற்கு ஓய்வு கிடைக்கும் என்றே தெரியாது?

அண்ணன் முடிந்து அண்ணி, அண்ணி முடிந்தால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் விருப்பம், பள்ளி விட்டு வந்து “பசங்க” ராஜ்யம். உள்ளே விழுந்து புரண்டு கொண்டுருப்பவர்கள் எங்கே அம்மாவை அவர்களின் “தொடர்களின் ” விருப்பத்தை நிறைவேற்ற போகிறார்கள்?

ஓரே அடிதான் தான்.

அம்மா விரும்பும் அசைவ சாமாச்சாரங்கள் மட்டும் திருப்பூரில் கிடைக்காது. பிராமணனாக வாழ்ந்து கொண்டுருப்பவனை அம்மா அந்த விஷயத்தில் மட்டும் கட்டாயப்படுத்துவதில்லை.

குளித்து முடித்து சாப்பாடும் போது அருகில் வந்து அமர்ந்து கொண்டு சாப்பிட்டுக்கொண்டுருந்தார்.

மக்கள் தொலைக்காட்சி ஓடிக்கொண்டுருந்தது.

கணிணியில் வேலை பார்த்துக்கொண்டுருந்தாலும் ஏதோ ஒரு செய்தி சமாச்சாரங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். இரண்டு மூன்று தமிழ் ஆங்கில செய்தி பார்த்தாலே அன்றைய அனைத்து ஓளிக்கப்பட்ட்வைகள் எல்லாம் ஒளி ஓலியாய் தெரிந்துவிடும். மனையாளும் தொலைக்காட்சியில் பெரிதாக ஈடுபாடு காட்டுவதில்லை. தேவியர்களுக்கு டோரா மட்டும் போதுமானது.

தேவியர்கள் பள்ளிக்குச் சென்றுவிட்டால் அம்மாவுக்கு முழுதாக ஆறு மணி நேரம் அம்சமாக அமைந்து விடும்.

சாப்பிட்டு முடியும் வரையில் பொறுமையாக இருந்தவர் ” ஏன்டா ஏதாவது தமிழ் நிகழ்ச்சிய போடுடா?” என்றார்.

குழப்பமாய் இருந்தது, ஒரு வேளை காதும் டாமாரம் ஆகி விட்டதோ?

“என்னம்மா இது தமிழ் தானே”

” அடப்போடா. ஓன்னுமே புரியமாட்டுது”

” இல்லம்மா. இது தான் உண்மையான தமிழ்”

” போடா போக்கத்தவனே, அதென்ன தமிழ்ல உண்மையானது பொய்யானது? ஒரு மண்னும் புரியமாட்டுது “.

உண்மை தான் மண் பயனுற வேண்டும் என்று மக்களுக்கான உண்மையான தமிழர் நலம் குறித்த தொலைக்காட்சி பயனை நம்மில் எத்தனை பேர் அடைந்து கொண்டுருக்கிறோம்? இழந்து போன கலாச்சார சுவடுகளை கண்டும் காணாமல் போய் இன்று ஒரு லிட்டர் பால் வாங்கி ஒரு குடும்பத்துக்கே செலவளிக்கும் காசில் ஒரு போத்தல் தண்ணீர் வாங்கி சுமந்துகொண்டு வருகிறோம்?

நண்பனின் அண்ணன் அமெரிக்காவில் பணி. அங்கு அவருடைய குழந்தைகள் கல்லூரிக்கு சென்று கொண்டுருக்கிறார்கள். முழுமையான அமெரிக்கனாக வாழ்ந்தாலும் ஒவ்வொரு சனி ஞாயிறு மட்டும் அம்மா அப்பா பாசம் அவருக்கு வந்து தொலைபேசி வழியாக பகிர்ந்து கொண்டு விடுவார்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அழைத்துக் கொண்டு வந்து கொண்டுருந்தவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஊருக்கு அழைத்து வருவதே இல்லை.

மிக எளிமையான காரணம்.

தாத்தாவும் பாட்டியும் பேரன் பேத்திகளை பார்த்ததும் உச்சி முகர போனாலும் ஊமை பாஷையைத்தான் பறிமாற வேண்டியிருக்கிறது. கணவனுக்கு அலுவலகமே வாழ்க்கை. சென்னையில் இருந்து போன வாழ்க்கைப் பட்ட பெண்மணிக்கோ தமிழை சொல்லிக்குடுக்ககூட நேரமில்லை? (பிரியமில்லை?).

ஒவ்வொரு முறை வரும் போது கதறுவார்கள். கத்துவார்கள். அடுத்த முறையும் அதே போல் திரு திருவென்று முழித்துகொண்டு ஒதுங்கிச் செல்லும் குழந்தைகளை எப்படி கொஞ்ச முடியும்?

” காசை செலவளித்துக்கொண்டு வந்து ஒரு பிரயோஜளமும் இல்லை. பேசாமல் எப்போதும் போது கணிணி வழியாகவே பார்த்துக்கொள்கிறோம் ”

நண்பன் சொன்ன போது கலங்கி விட்டேன்,

ஒரு தலைமுறை சங்கிலியே அறுக்கப்பட்டு விட்டது. அவர்களும் கலங்கியதாகவே தெரியவில்லை.

கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பண்பலை பல கேட்டவன் கேட்டுக்கொண்டுருப்பவன் என்ற முறையில் சொல்கிறேன்.

அவர்கள் மிகத் தௌிவாக இருக்கிறார்கள். பொழுது போக்கு. ஆமாம் அது அவஸ்யம் தான். யாரும் மறுக்க வில்லை.

ஆனாலும் அதிலும் ஒரு செய்தி?

அது தான் முக்கியம்.

இங்கு போல மானையும் மயிலையும் ஆட விட்டுக்கொண்டு,…………………ஏதாவது தெரிகின்றதா என்று பார்த்துக்கொண்டுருக்கும் ஈன சமாச்சாரம் இல்லை.

சிங்கப்பூரில் எத்தனையோ ஆச்சரியங்கள் உண்டு?

ஆனால் ஆச்சரியத்தின் உச்சம் என்ன தெரியுமா? ஆஸ்திரேலியா வானொலி சிங்கப்பூர் வானொலியுடன் ஒன்றினைந்து இரு நாட்டில் உள்ளவர்கள் ஒரே தொடர்பில் உரையாட வைப்பது. விரும்பிய பாடல்கள், விருப்பமான நிகழ்வுகள் பறிமாறிக்கொண்டு தானும் சந்தோஷமாய் மொத்த இனத்தையும் சந்தோஷப்படுத்திக்கொண்டு.

அணைத்திலும் ஒரு கடமை கண்ணியம் கட்டுபாடு.

இங்கு?

நேற்று வந்த நடிகையின் ” பராக்கிரமங்கள்” குறித்த அக்கறையினால் எத்தனை எத்தனை உண்மையான பராக்கிரமங்கள் பார்வைக்கு வராமலே போய்க்கொண்டுருக்கிறது?

நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாய் இருக்கிறது? யாரிந்த சிந்தனைகளுக்குச் சொந்தகாரர்?

சலவைத் தொழிலாளியிடம் போய் அவர்கள் வாழ்க்கை குறித்த “பாடுகள்” பற்றி பேட்டி எடுப்பவர் உண்டா? அடிதட்டு மக்களின் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற அவர்களை அழைத்துச்சென்று அவர்களின் விருப்பங்களை வாங்கி அளித்து காட்சியாய் காட்ட முடியுமா? தாரை, தப்பட்டை, பறை, உடுக்கை, ஓய்ந்து போய்க்கொண்டுருக்கும் நாதஸ்வரத்தை உலகறியச் செய்ய முடியுமா?

திரு. பாமரன் அனுப்பிய மின் அஞ்சல் மூலமாகத்தான் ஒரு இனமே காவு கொடுக்கப்பட்டதற்கு பின்னால் அமைதியாய் இருந்த அனைத்து ஊடகங்களின் காரணம் புரிந்தது? காரணங்களை முழுமையாக புரிந்து கொள்ளாத அல்லது விரும்பாத வட இந்திய ஊடகங்களின் ஆர்ப்பாட்டத்தை உணர முடிந்தது?

சர்வதேச பின்னலுக்கிடையே அவர்களை அவர்களின் மூதலீடுகளை காப்பாற்றிக்கொள்ளவே கண்டு கொள்ளப்படவில்லை.
உண்மைகள் அனைத்தும் இன்று வரை உலகத்துக்கு வரவேயில்லை?

தேர்தலுக்கு முதல் நாள். அனைத்து அதிகார வர்க்கமும் மக்கள் தொலைக்காட்சி அலுவலக வாசலில். அந்தப்பகுதி மட்டும் இருட்டுக்குள். இனம் அழிந்து கொண்டுருப்பதை காட்டக்கூடாது. காட்டினால் கதற அடிக்கப்படுவாய்.

ஜனநாயக நாட்டில் முதல் முதலாய் அதிகார வர்க்கமே கையெழுத்து போட்டுக் கொடுத்து கதறி நிறுத்தச் சொன்ன விண்ணப்பங்கள் தான் மண் பயனுற வேண்டும் என்பதன் உண்மையின் உரைகல்.

அது எப்படி பேட்டி எடுப்பவரைப் போலவே வந்து பேசுவரும் நல்ல தமிழில் உரையாட முடிகின்றது?

சிங்கப்பூர் விமான நிலையத்தில் அடக்கிக்கொண்டு வரும் எச்சிலை தைரியமாக சென்னை விமான நிலையத்தில் துப்பித் தீர்ப்பவன் தான் நினைவுக்கு வருகின்றது?

செய்த எல்லா பாவத்தையும் தீர்க்க நாம் எல்லோரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காசி, ராமேஸ்வரம் சென்று முடித்து கடைசி காலத்திற்கு காத்து இருப்போம்,

ஆனால் மருத்துவர் ஐயா வாழும் காலத்திலே அதை செய்து கொண்டுருக்கிறாரோ?

சாப்பிட்டு முடித்ததும் அம்மா மனைவியை அழைத்தார்.

” இவனை மாதிரி தான் இவங்க அப்பனும். ரெண்டு வாழ்க்கை வாழ்ந்து முடிஞ்ச மாதிரி இருக்கு. இப்ப தான் நிம்மதியா இருக்கேன். கவலைப்படாதேடி. நீயும் பின்னால நல்ல இருப்ப? ”
மனைவி கேட்டு சிரித்துக்கொண்டே உள்ளே போய் விட்டாள்.

ஏனுங்கோ? உங்களுக்காவது புரிந்ததா?

http://tirupurjothigee.blog.co.in

Check out Contact தேவியர் இல்லம், திருப்பூர்

Hi,

I want you to take a look at: Contact தேவியர் இல்லம், திருப்பூர்