Daily Archives: ஜூலை30, 2009

கொக்குப் பூ மரம்

வீழ்ந்த மரமும் விறகான கவிதையும்

வீழ்ந்த மரமும் விறகான கவிதையும்

தூறலாய் பெய்யும் போது
மழைச்சாரலை
பன்னீராய் வீட்டுக்குள்
தௌிக்கும் கிளைகள்.

சுவற்று உணவை
உண்ண
பித்ருவாய் வரும் காகம்.

தேவியருக்கு
உறவாய் வரும் மைனா.
எப்போதாவது அணில்
ஏறி விளையாடும் பூங்கா.

மனைவிக்கு மாளாத
வேலையை
அளித்த மரம்
எனக்கு போதி மரம்.

வீட்டுச் சந்துக்குள்
நுழையும் போது
கொத்து மலர்கள் தீயாய்
தெறிக்கும்.

உதிர்ந்த மலர்கள்
தெருவை
மாற்றியிருக்கும்.

ஆர்ப்பாட்ட வரவேற்பில்
அத்தனையும் மறந்து விடும்.

நுழைவாயில் மறைத்து
பொதுவான மரம்.

பதுமையாய்
பல காலம் வளர்ந்த மரம்.
பக்கத்து வீட்டுக்கு
பிடிக்காத மரம்.

வீட்டு
முகப்பில் அமர்ந்தாலே
என் முகமெல்லாம்
சந்தோஷம்.

பல கதைகள் பேசும்?
காற்று மொழியில்
சில சமயம்
கவிதை கூட சொல்லும்.

வீறாப்பாய் சில சமயம்
விபரமாய் பல சமயம்.

பழுப்பேறிய இலைகள்
பதவி இழந்த மந்திரியாய்.

பூச்சி கடித்த இலைகள்
புதுப்புது நிறமாய்
அறிக்கை விடும் அரசியல்வாதியாய்.

காலையில்
காசு கொடுக்காமல்
கச்சேரி கேட்கலாம்.

வெயிலில்
ஆர்க்காட்டர் திட்டாமல்
அசர வைக்கும் காற்று.

மனதுக்கு
மருத்துவராய் இருந்த மரம்.

மகிழ்ச்சிக்கு
உறவாய் இருந்த மரம்.

காற்றில் அசைந்த இலைகள்
சுத்தப்படுத்தியது.

அத்தனை சுதந்திரமும்
ஆச்சரியமாயிருக்கும்.

உள் வாங்கிய சிந்தனைகள்
சிறகானது.
சிறகான மனமோ
சிலிர்ப்பை தந்து
சிக்கல்களை மறக்க வைத்தது.

ஆசாபாசம்
தெரியாத அந்தக் கிளைகள்
அடுத்த வீட்டு எல்லைக்கும்
அவசரமாய் சென்றது.

பல ஆண்டுகள்
வாழ்ந்த மரம்
வீறாப்பை மாற்ற வில்லை.

விடாது அலைபாய்ந்து
விட்டேத்தி பார்வையாய்
விழுகின்ற செத்தைகள்
குப்பையாய் மாற
சரசரத்து குதுகலமாய்
தேவியர்கள்.

தீர்ப்பெழுத கூடினர்.
தீர்ப்பெழுதியவர்கள் கூடினர்.

வாகனம் திருப்ப முடியவில்லை.
சுவருக்கு ஆயுள் இல்லை.
சாக்கடை கொசுக்களுக்கும்
சேர்ந்த சகதிக்கும்
காரணம் என்றார் அருகில் நின்றவர்.

குப்பை மனதுடன்
வந்தவர்கள்
பார்த்தவர்கள்
குறுக்காய் வெட்ட
வெட்டுக்கத்தி பார்த்து
வெறுத்து உள் புகுந்தேன்.

மனப்புழுக்கமும்
அறை புழுக்கமும்
அவஸ்த்தைப்படுத்தியது.

காப்பாற்ற முடியாது?
கலங்கி கேட்டால்
பைத்தியமாக்கப்படலாம்.?

முடிவெடித்த பாட்டியம்மா
பரவசமாய் அளந்து பார்த்தார்.
வெட்டிய கிளைகள் விறகாகும் முன்னே
துரத்தில் தெரிந்தது
வரவழைக்கப்பட்ட வாகனம்.

வெட்ட வந்தவர்கள்
அனைவருக்கும்
வீரனாய் தெரிந்தார்கள்.

வைத்திருந்த ஆயுதங்கள்
அவர்கள்
வசதியை பறைசாற்றியது.

மனைவிக்கும் மகிழ்ச்சி
கூட்டல் பெருக்கல் மிச்சம்.

பக்கத்து வீட்டு வாகனம்
இனி
வாகாய் திரும்பும்.

பித்ருக்கு
இவர்கள் அனைவரும்
சத்ரு.

அணிலும் மைனாவும்
அடுத்த சந்துக்கு
அவசரமாய் பறந்தது.

எனக்கு
வினா எழுப்ப ஆள் இருக்காது.

தேவியர்களுக்கு
வௌியில்
விளையாட விருப்பம் இருக்காது.

எதுவும் தெரியாத
சிவப்பு மலர்கள்
வருகின்றவர்களை
வரவேற்றுக்கொண்டு

தலையில் விழும் பூக்கள்.
தரையில் விழும் பூக்கள்.

http://tirupurjothigee.blog.co.in/about/contact/