Daily Archives: ஜூலை8, 2009

மாறிய ஊரில் அதே பழைய பள்ளிக்கூடம்…

நீண்ட வருடங்களுக்குப்பிறகு சித்தப்பாவிடம் இருந்து அழைப்பு. கைபேசியில் சொந்த ஊரின் வித்யாசமான எண்களை பார்க்கும் போதே பலவித யோசனைகள் உள்ளே ஓடியது. ஊரில் இருந்து அழைப்பு வருகின்றது என்றால் திருப்பூர் டென்ஷனை விட மிக அதிகமாக இருக்கும். தூக்கு என்றால் சில நிமிட வேதனை. ஆனால் கல்லால் அடித்து கொல்வதென்றால்?

இரண்டு தலைமுறையும் இதே ஊர் ஓரே தொழில். நான் மட்டுமே முதன் முதலில் ஊரை விட்டு பயணித்தாலும் ஒன்பது மணி நேரம் கடந்து வரக்கூடிய இங்கு இருக்கக்கூடிய சாதக பாதக அம்சங்களை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஐம்பது ரூபாயை உடைத்தால் செலவழிந்து விடும் என்று அதையே யோசனையுடன் பார்க்கும் குடும்பத்தினர்க்கு என்னுடைய தொழில் உள்ள டாலர், யூரோ,பவுண்டு எல்லாம் வெறும் கேலிப்பொருள்.

நம்பித்தான் ஆகவேண்டும். கூட்டை உடைத்துக்கொள்ளாத போது குஞ்சு எப்படி வௌி உலகைப்பார்க்க முடியும்? முயன்று முயன்று பார்த்துவிட்டு அவர்களை விட்டு ஒதுங்கி நின்று “நீங்கள் என்னை தொந்தரவு செய்யாதீர்கள், எதிர்பார்க்காதீர்கள். நானும் அப்படியே ” என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வாழ்ந்த போது சிதைந்து போன கூட்டுக் குடும்பத்தில், கசந்த நினைவுகளும் பிரித்த சொத்துக்களுமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் சித்தப்பாவுக்கும் எனக்கும் உண்டான “நம்பிக்கைகள்” இன்று வரையிலும் ஒரே நேர்கோடு தான். துளியும் மாறவில்லை.

குடும்பத்தினர் எச்சரிக்கையும், கேலியையும் தாண்டி பரஸ்பரம் வைத்திருந்த மரியாதை என்பது வெறும் நினைவில் இருப்பதாக மட்டுமே இருந்தது. தொடக்கம் முதலே என்னை புரிந்தவர். என்னை வளர்த்து விட வேண்டும் பல தடைகளைத்தாண்டி கல்லூரி வாசல் வரை கொண்டு வந்து விட்டவர். ” நிதானமாக செயல்பட்டால் இவன் நிச்சயம் ஜெயிப்பான் ” என்று ஊரெல்லாம் பறைசாற்றியவர்.

அப்பாவுடைய பிடிவாதம் அவர் மறைவிற்குப் பிறகும் மற்ற வழிதோன்றலால் முன்னிறுத்தி சென்று கொண்டுருந்தது. தலைமை வகித்த அம்மாவை அந்த விஷயத்தில் மட்டும் என்னால் ஆதரிக்க முடியவில்லை. ” எல்லோரும் ஒரு நாள் இறந்து போய்விடுவோம் என்பதான இந்த வாழ்க்கையின் ஏன் இத்தனை துவேஷம்”.

புரிந்து கொள்ளாமல் புழுதி வாரி தூற்றினார்கள். அவர்களின் அனைத்து நியாயங்களும் எனக்கு அநியாயமாகத்தான் தெரிந்தது.

சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை அடை காத்தவர்கள் அதற்குண்டான பத்திரங்களை பாதுகாக்கவே இல்லை. குடும்பமே தேடிய போது குதிருக்கு பின்னால் செல்லரித்து செல்லாகாசாய் “நீங்களும் ஒரு நாள் இப்படித்தான் ” என்று சொல்லாமல் சொல்லியது.

தொலைபேசியாய் கைபேசியாய் அவ்வப்போது சகோதரிகள் தரும் தகவலை கேட்டுக்கொள்வதோடு சரி. தலையிட்டால் தலை தப்பாது.

உண்மையான அக்கறையும் அன்பும் என்பது எந்த நிலையிலாவது ஒருவரை மற்றொருவருடன் இணைத்துக்கொண்டே தான் இருக்கிறது. அதற்கு உறவு, உறவற்றது என்ற பாகுபாடு இருப்பது இல்லை.

சித்தப்பாவின் மேல் எனக்குண்டான மரியாதையை மெருகூட்ட இறைவன் மேலும் ஒரு சோதனை வைத்துருப்பான் போலும்.

பிரித்த சொத்துக்கள் மாற்றி எழுதும் போது என்னைத் தவிர அனைத்து சகோதரர்களும் கையொழுத்து போட்டு புதிதாக மாற்றிக் கொடுத்து விட, எழுதிய பத்திர எழுத்தர் கையெழுத்து போடாத என்னை பவர் ஏஜெண்ட் என்பதாக அர்த்தம் எடுத்துக்கொண்டு மொத்த சொத்துக்கும் அதிபதி என்பதாக வார்த்தை கோளாறில் என்னை எழுபது லட்சத்திற்கு அதிபதியாக்கி விட்டார்.

அதிக புத்திசாலிகளாக கருதிக்கொண்டு சித்தப்பாவின் வழிதோன்றல்கள் போட்ட ஆட்டமெல்லாம் கேட்ட வங்கிக்கடன் வராத போதும், அதற்கான காரணங்கள் புரிந்தபோதும் பந்து என் கோட்டுக்குள் வந்து விழுந்தது.

புரிந்து விட்டது. ஆனால் ஊருக்குப்போனால் ஒரு மணி நேரத்தில் முடிகின்ற வேலை இல்லை. காரணம் சித்தப்பாவின் வழித்தோன்றல்கள். கற்ற கல்விக்கும் எதிரே நடக்கும் சமூக வாழ்க்கைக்கும் சம்மந்தமில்லாமல் படங்களில் அலறிக்கொண்டு பில்டப் கொடுக்கும் வில்லன்கள் போல் ஒரு தனியான வாழ்க்கை. எந்த உபதேசமும் எடுபடாது. மொத்தத்தில் அங்கு சித்தப்பா ஒரு செத்தப்பா.

என்னுடைய மன உளைச்சலை இறக்கி வைத்தாற்போல் ஆயிற்று. பழைய பள்ளிக்கூடத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலையும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று மூன்று நாட்கள் பிடுங்கி எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போதே அம்மாவின் உபசரிப்பு அத்தனை சிலாக்கியமாக இல்லை. காரணம் ஊரில் எந்த விஷயத்திலும் கலந்து கொள்வது இல்லை. தேர்த்திருவிழா, பால்குடம், குடும்பம் நடத்தும் மண்டகப்படி, சந்தனக்காப்பு என்று கலந்துகொள்ளாத நான் சித்தப்பா என்றதும் வந்து நின்றது அம்மாவுக்கு அத்தனை எரிச்சல். எதிர்பார்த்தது தான். அண்ணிகள் மட்டும் சிரித்துக்கொண்டார்கள்.

நாளை போய் எல்லாவற்றையும் முடித்துவிடலாம் என்று சித்தப்பா சொன்னதும் குளித்து முடித்துவிட்டு அசைவ உணவை புறந்தள்ளி விட்டு வௌியே கிளம்பினேன்.

எல்லாமே மாறி இருந்தது. சென்ற பாதையெல்லாம் ஒரு சுவற்றால் தடுக்கப்பட்டுருந்தது. சுற்றிச்சுற்றி வந்தாலும் ஏதோ ஒரு புதிய ஊருக்குள் வந்தவன் போல். தவிர்க்கவே முடியாமல் . திருமண நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் இரவில் நுழைந்து மறுநாள் இரவில் வௌியேறி விடுவதுண்டு. உள்ளே என்ன மாறுதல்கள் இருக்கிறது என்பதே தெரியாது. ஏராளமான மாற்றங்கள். தலை சுற்றியது.

திரும்பவும் வந்து அண்ணன் மகனை கூட்டிக்கொண்டு செல்லும் போது தான் தெரிந்து எனக்குத் சொல்லிக்கொடுத்த தாவரவியல் ஆசிரியர் தவிர அணைவரும் ஓய்வு பெற்று சென்று விட்டது. அப்போது தான் என் வயது குறித்த அச்ச உணர்வு தோன்றியது.

பள்ளிக்கு செல்வதற்குள் பல பள்ளங்களை தாண்டும் சூழ்நிலை. எங்கு திரும்பினாலும் அரிசி ஆலைகளில் இருந்து வௌி வரும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர். குளமாக தேங்கி, சாக்கடையாக உருமாறி, கொசுவும் பன்றியும் மொத்தக்குத்தகைக்கு எடுத்துருந்தது. வியப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. பள்ளிக்கு அருகே சென்றதும் அந்த வியப்பும் இன்னும் சற்று அதிகமானது. பள்ளியில் இருந்து கண்களுக்கு எட்டிய தொலைவு வரையில் தெரிந்த பொட்டல் காடு மறைந்து பள்ளியின் வாசல் வரையிலும் கட்டிங்கள். அருகில் இருந்த புளியந்தோப்பில் வேறொரு அரிசி ஆலை. அதில் இருந்து வந்து கொண்டுருக்கும் சாக்கடை கழிவுகள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை தொட்டு தொடர்ந்துகொண்டுருந்தது.

விளையாட்டு மைதானத்தை தொடர்ந்த பல நூறு ஏக்கர் விரிந்து இருக்கும் முந்திரிக்காடு முடிவெட்டத்தெரியாதவன் கையில் சிக்கிய தலைபோல் அங்கங்கு சுரண்டப்பட்டு இருந்தது.

அழுகை என்பது அவசரத்தில் வருவதல்ல. ஆற்றாமையால் தான் வருகின்றது என்பதை அன்று தான் உணர்ந்தேன். அண்ண்ன் மகன் அவன் பாட்டுக்கு புள்ளி வைக்காமலே அவன் வீர தீரங்களை நான் கேட்கிறேனா இல்லையா என்பதைக் கூட கவனிக்காமல் பேசிக்கொண்டே போனான்.

ஆவல் இன்னமும் அதிகமானது. என்ன தான் மற்ற மாறுதல்கள்? என்று சுற்றிய போது முழுமையாக புரிந்தது.

இன்று திருப்பூர், கரூர், ஈரோடு சாயப்பட்டறை கழிவு நீருக்கு உண்டான விழிப்பு உணர்வும், தீர்வு வராமலே டெல்லி வரையிலும் இழுத்துக்கொண்டுருக்கும் அத்தனை விஷயங்களும் பத்து வருடத்துக்கு முன்னால் தொடங்கி இருந்தால்? எத்தனை மனிதர்களின் ஜுவாதாரங்கள் காக்கப்பட்டுருக்கும். கடல் வரைக்கும் கொண்டு சென்று கலக்கும் திட்டம் பல அமைச்சர்கள் தாண்டி சில நாட்களுக்கு முன்னால் வந்து சென்ற சமீப அமைச்சர் கை வரைக்கும் வந்துள்ளது.

தொழில் செய்வர்களுக்கு லாபம் முக்கியம். அதை கவனிக்க நியமிக்கப்பட்ட அதிகார வர்க்கத்திற்கு அவர்களின் மாத வசூல் அதைவிட முக்கியம். பாதிப்பு என்பது கண்னுக்குத் தெரியாத புழு, பூச்சிகள் முதல் கண்களுக்குத் தெரிந்த வயல் சார்ந்த சமூக வாழ்க்கை வாழும் சராசரி மனிதனுக்குத் தான்.

அதிகார வர்க்கத்தில் அவவ்போது வந்து சென்ற சில நல்ல மனிதர்களின் பிடிவாதத்தால் இன்றாவது இந்த பிரச்சனை தேசிய பிரச்சனை அளவுக்கு வந்துள்ளது.

ஆனால் இங்கு, நூற்றுக்கு மேற்பட்ட அரிசி ஆலைகளும், எந்த முன்னேற்பாடும் இல்லாத கழிவு நீரும், சேர்த்து வைக்க முறைப்படுத்தாத திட்டமும், கண்டும் காணாமல் “ஆதரித்து ” வரும் அதிகார வர்க்கமும் கொடுத்த பரிசு பள்ளியைச்சுற்றி குளம் போல் ஆற்று ஊற்று போல் கழிவு நீர்.

சற்று நேரத்தில் மயக்கத்தையும், தலைவலியையும் கொடுத்த நாற்றத்தை சகித்துகொண்டு படையாய் வந்து கடிக்கும் கொசுக்களைத் தாண்டி பள்ளியின் உள்ளே சென்று அறை அறையாக பார்த்தபோது புரிந்தது உள்ளே எந்த மாற்றமும் இல்லை. எல்லாமே வௌியே. மாற்றப்படாத(ா) அதே மர பெஞ்சு, கழன்று போயிருந்த மின்விசிறி. பரவாயில்லை உள்புறம் சற்று சுகாதாரமாய் இருந்தது. பத்து நிமிடத்தில் படை எடுத்து வரும் கொசுவை தாங்க முடியாத எனக்கு காலை முதல் மாலை வரை ஒரே அறையில் எப்படி இத்தனை மாணவர்கள் தாங்கிக்கொண்டு பாடத்தில் கவனம் செலுத்த முடியும்?

பிரிக்கப்படாமல் ஒரே இராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோதே அதன் அத்தனை அபத்தங்களும் வளர்ந்து இங்கு வந்து வாழ்ந்த போது தான் புரிந்தது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு கடைக்கோடி பகுதிக்கு செல்ல வேண்டுமானால் தனியாக ஒரு நாள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகார வர்க்கத்தால் என்ன சாதித்து இருக்க முடியும்? ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகரும் கோப்புக்கே பல நாட்கள் வேண்டும். நேரிடையாக இடத்தை பார்க்க வேண்டுமென்றால் எத்தனை நாட்கள் வேண்டும்? புண்ணியவான் தயவில் மூன்று மாவட்டமாக பிரித்து சிவகங்கையாக பிரித்த போதும் இன்று வரையிலும் சொல்லகூடிய வரையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

எனக்கு நினைவில் இருந்த வரையில் ஆறு சட்ட மன்ற தொகுதிக்கு என்று அமர்ந்தவர்கள் அவர்கள் வளர்ச்சியில் கவனமாகத்தான் இருந்தார்களே தவிர மற்றபடி தொகுதி வளர்ச்சிக்கு செய்வதாக சொல்லுவது அவர்கள் அளிக்கும் புள்ளிவிபர பட்டியலில் மட்டும் தான் தெரியும். இதில் மெத்த படித்த பெண்மணி முதல் படிப்பறிவே இல்லாத மற்ற அனைவரும் அடக்கம். அவரவர்க்கு அவர்களின் கட்சி தான் ஆட்சி, வளர்ச்சி, ஆதாரம்.

ஆனால் இதைவிடக்கொடுமை நாடாளுமன்ற உறுப்பினர்?

மிக்க படித்தவர், பண்பாளர், நல்ல புத்திசாலி, நாகரிகமான கனவாண், தனிமனித ஓழுக்கத்தை (சர்ச்சைகள் வந்துபோயிருந்தாலும்) மிக அற்புதமாக பேணுபவர், ஆங்கிலம் என்றால் ஆங்கிலமாக, தமிழ் என்றால் அனைவரும் வியந்து போற்றும் தமிழாக பேசக்கூடியவர், முறையற்ற வரையில் சொத்து சேர்க்காதவர், வந்து போகும் போதும் கூட (மொத்த இந்தியாவே கையில் இருந்தபோதிலும்) அண்ணே வர்றார் அண்ணே வர்றார் என்று துதிபாடிகள் இல்லாமல் ஒரே ஒரு வண்டி பின்தொடர வீணாண ஆர்ப்பாட்டங்கள் வெறுத்து அமைதியை விரும்பும் அறிவாளி? இத்தனைக்கும் மேலாக இலக்கிய ஆர்வம் மிகுந்தவர்.

எல்லாம் சரி? என்ன செய்தார்? என்ன சாதித்தார்?

தொடங்கியது எல்லாமல் தொடர்ந்ததா? உதாரண புருஷனாக தன் வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டவரால், உள்ளுர் மக்களின் ஏக்கம் ஏன் புரியவில்லை? இந்தியாவின் திட்டங்களை கரைத்துக்குடித்து உலக அரங்கில் பல பாராட்டுக்களை பெற்றவரால் ஏன் தொகுதியின் திட்ட வரைவோலையை தயாரித்து முன்னிறுத்த முடியவில்லை. காரணம் ஆயிரம் இருக்கலாம். இது மாநில அரசாங்கம் சார்ந்தது. இது மத்திய அரசின் கொள்கைக்கு முரண்பட்டது.

என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். விடை தான் என்ன?

என்று தான் இந்தியா டூடே வின் கருத்துக்கணிப்பில் தன்னிரைறவு மாவட்டமாக வரும்?

இங்கு தொடக்கத்தில் நிர்வாகத்தில் உள்ளே நுழையும் போது எல்லாவற்றையும் பேசிமுடித்து சொந்த வாழ்க்கை குறித்து சொந்த ஊர் குறித்து கேட்பார்கள். ஊரைச்சொன்னால் ” ஓ…. பாண்டிச்சேரி பக்கம் இருக்குதே அந்த காரைக்கால் தான் தானே?” . சிரித்துக்கொண்டே இல்லை இல்லை பிள்ளையார்பட்டி பக்கத்தில் இருக்கிறதே? என்று புரிய வைப்பதுண்டு. திருப்பூர் தொழில் அதிபர்களுக்கு, மக்களுக்கு பிள்ளையார்பட்டி கோவில் என்பது தனது பிள்ளை போல் பாசம் கொண்ட கடவுள். கடைசியாக முடிப்பாாகள் ” உங்க ஊர் அசைவ உணவென்றால் சப்பிக்கொண்டு சாப்பிடலாம் “.

அடக்கொடுமையே? மறைமுகமாக திண்ணி பண்டாரமாகத்தான் என் ஊரின் பெருமையை பறை சாற்ற வேண்டுமா? வள்ளல் அழகப்பர் மட்டும் இல்லையென்றால் என்னைப்போன்ற லட்சக்கணக்கான பேர்கள் ஏதோ ஒரு வயலில் அல்லது மளிகைக்கடையில் பொட்டலம் கட்டிக்கொண்டு இருந்து இருப்போம்? வீடு கட்டியதும் முகப்பில் மாட்ட வேண்டிய படங்களில் இவரும் ஒன்று.

கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது. தனிப்பட்ட செல்வாக்கையும் வளர்த்துக்கொள்ள வில்லை. கடைசியாக சமீபத்தில் கிடைத்த “அவமானங்கள்” எந்த மாறுதலையும் ஏற்படுத்த வில்லை. ஜனாதிபதி பதவி வரைக்கும் செல்லக்கூடிய அனைத்து தகுதியும், திறமையும், வாய்ப்பும் உள்ள நல்ல மனிதன் அவர் காலத்திற்குள்ளாவது பிரயாச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும்.

நீலகிரி தொகுதிக்கு தேர்ந்தெடுத்த தற்போதைய அமைச்சர் போட்டியிட்ட போது எனக்குள் ஆயிரம் ஆச்சரியம்? என்ன தைரியத்தில் இந்த தொகுதிக்குள் வந்து நிற்கிறார். இத்தனைக்கும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் அதிகமாக வாழும் பகுதி. பல வித சிந்தனைகள். நல்ல முறையில் ஜெயித்தவர் இன்று ஒவ்வொரு முறையும் தொகுதிக்கு வந்து செல்லும் போது அளிக்கும் இன்ப அதிர்ச்சிகள் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஆயிரம் குற்றச்சாட்டுகள் அணி வகுத்து தொடர்ந்த போதும் சராசரி சமான்யனுக்கு அது குறித்து என்ன அக்கறை வந்து விடப்போகின்றது? அவர்களுக்கு போட்டோ தொழிற்சாலை தொடங்குமா? வீதிக்கு வீதி குடை அமைத்து கூவிக்கூவி் அழைக்கும் தொலை பேசி அகன்ற சேவைகளை, நேரிடையாக அலுவலகத்திற்குச்சென்று கேட்கும் போது புறக்கணிக்கும் அதிகார வர்க்கம் ஒரு தொலைபேசி உரையாடல் மூலம் அவரவர் வீடு தேடி செல்ல வைக்கின்றதே? சமீப சாத்யம் இல்லாத புகை வண்டி பயணத்திட்டத்திற்கான திட்ட வரைவோலையை சமர்பித்து அதிகார வர்க்கத்தின் பார்வையை திசை திருப்ப வைக்க முடிகின்றதே?

ஆனால், அவர் வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரின் அரிசி ஆலை கழிவு நீர் பிரச்சனை தெரியாமலா இருக்கும்? சாராசரிக்கும் கீழே சமூக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு மற்ற மாவட்டங்களை விட எல்லா நிலையிலும் தொழிற்சாலைகள் அதன் அளிக்கும் வாய்ப்புகள் இல்லாமலே அத்தனை இளைஞர்களும் படிப்பை மட்டும் ஆயுதமாக சுமந்து கொண்டு அங்கு வாழ்ந்த வாழ்க்கை முறை சொல்லித்தந்த “வெகுளித்தனத்தை” வைத்துக்கொண்டு எத்தனை இடங்களில் எத்தனை அவமானங்களை சகித்துக்கொண்டு?

தனிப்பட்ட மனிதர்களின் வளர்ச்சி அபாரமாய் இருக்கும் தொகுதியில் தனி மனித அவலங்கள் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், சாத்வீகம், சகிப்புத்தன்மை, பிரச்சனையில்லா வாழ்க்கை.

குறைந்த பட்சம் கற்ற கல்வியுடன் சுகாதாரத்தையும் அவர்கள் உடம்பு எடுத்துக்கொண்டு வௌியே வர அதிகார வார்க்கம் உதவ நீங்கள் அழுத்தம் கொடுக்கலாமே?

புண்ணியம் என்பது கோவில் இருந்து எடுத்துக்கொண்டு வருவதல்ல? வாழ்க்கையை, சமூகத்தை வளப்படுத்த முடியும் என்ற தகுதியில் இருப்பவர்கள், வாழ்ந்து கொண்டுருப்பவர்கள், எதையும் அனுபவிக்க முடியாமல், கேட்க பயந்து கொண்டு வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் குறைந்த பட்சம் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை தீர்ககவாவது முயற்சித்தால் அல்லது நினைத்தால் உங்களை பல தலைமுறை கடந்து தஞ்சை இராஜராஜன் கோவில் போல் நினைவில் நிறுத்தும்.

வேலையை மட்டும் விட்டுடாதேடா?

அம்மா ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும்போது சொல்லும் வார்த்தை. என்னைக்குறித்த அச்சங்கள் இன்று வரையிலும் மாற வில்லை. மிரட்டிப்பணிய வைக்காத போது இறைஞ்சல்கள் கெஞ்சலாய்த் தான் வௌிப்படும். ” மூனுமே பொட்டப்புள்ளயாய் பெத்துருக்க. கொஞ்சம் வேகத்தை கொறச்சுக்கடா?”

சிரித்துக்கொண்டே அலுவலகத்துக்கு கிளம்பி விடுவேன். மனைவி முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். பிறகு அறிவுரை சொல்ல அடுத்த கூட்டணி அமைத்த திருப்தி.

ஆனால் அம்மாவுக்கு திருப்பூர் சூழ்நிலையை எளிதில் புரிய வைக்க முடியாது. மற்றவர்களுக்காக மட்டும் உழைக்க வேண்டும். உழைப்புக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. கிடைக்கும் போது நமக்கு மேலே உள்ளவர்கள் மிகத் தௌிவாக அவர்கள் பக்கம் திருப்பி விடுவார்கள். திறமை குறித்த அக்கறை கொண்ட நிர்வாகம் மிகக்குறைவு. இவன் போனால் அடுத்தவன். எல்லாமே பிரச்சனையாகி உயிர் போய் உயிர் வரும் ஒவ்வொரு நிமிஷமும் வேலைக்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. சிங்கம், புலிகளுடன் வாழும் மற்ற மிருங்களின் வாழ்க்கை போலத் தான். சந்தேகமே இல்லை. மற்ற துறையை விட இங்கு சற்று அதிகம் தான்.

தொழில் தெரிந்தவர்களிடம் கருணை இருக்காது. கருணை இருப்பவர்களிடம் நல்ல இறக்குமதியாளர்கள் இருக்க மாட்டார்கள்.

பணிபுரிந்து கொண்டுருந்த நிறுவனத்தில் என்னுடைய வேர்கள் நன்றாக ஊன்றிக்கொள்ள முடிந்தது என்னுடைய அந்த வருடத்தின் அதிர்ஷடத்தின் தொடக்கம் தான்.

நான்கு பங்குதாரர்களுக்குண்டான தனித்தனி நிறுவனங்கள். அவரவருக்குண்டான பணிகள். மொத்த லாப நட்டங்கள் அவரவர் சதவிகிதம் பொறுத்து வருட முடிவில். தொடக்கத்தில் பேசியபடி ஒரு பங்குதாரர் நிறுவனத்தை மட்டும் நேரிடையான ஏற்றுமதிக்கு மாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு. மற்ற நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனத்திற்கு ஏற்கனவே செய்து கொண்டுருக்கும் ஒப்பந்தப்படி.

மாதத்தில் ஒரு நாள் அனைவரும் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். நுழைந்த முதல் மாதத்தில் அவர்கள் எதிர்பார்த்தபடியே பெரிய ஒப்பந்தம் கைகூடியது. பதினான்கு லட்ச ரூபாய் மதிப்பு.

ஆய்த்த ஆடை தொழில் நிர்வாகத்தில் இரண்டு கடல்கள் உண்டு.

உற்பத்தி தொடர்பான அல்ல சல்ல வேலை முதல், முதன்மை பொறுப்பான மேலாளர் வரையிலும் தொடரும். நூல் உள்ளே வந்து இறக்குமதியாளர் விரும்பிய தரமும் வடிவமைப்பும் பெட்டியில் போட்டு வாகனத்தில் ஏற்றும் வரையில் பல படிகள் பல இடங்கள். இதே போல் வாகனத்தில் ஏற்றிய பெட்டிகளை இறக்குமதியாளரின் சொல்லப்பட்ட இடத்துக்கு செல்லும் வரையிலும், அடுத்த ஒப்பந்தத்திற்கு உண்டான தொடர் வேலைகள், மின் அஞ்சல்கள், வரும் தொலைபேசி அழைப்புக்குண்டான கடமைகள் எந்த ராத்திரியும் முழுமையான தூக்கத்தில் கழிக்க விடாது.

ஒரு துறையில் இருப்பவர்கள் அலுவலக துறை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் வளர்ந்து வந்து இருப்பார்கள். அவர்கள் கடைசிவரையிலும் அதே துறையில் தான் குப்பை கொட்ட முடியும். ஆனால் வாழ்க்கை போட்ட கோலத்தில் வந்த பாதைகள் இரண்டு துறையையுமே அறிமுகப்படுத்தி மாற்றி மாற்றி என்னை அல்லாட வைத்து இங்கு என்னை கொண்டுவந்து சேர்த்துருந்தது.

இரட்டை போனஸ் கிடைத்தது போல் நிர்வாகத்திற்கு.

பிறகென்ன அதற்கென்று தனியாக ஆள் போட்டு சம்பளம் கொடுக்க அவஸ்யம் இல்லை பாருங்கள்? அதனால் தான் ஆணி வேர் மிக ஆழமாக ஊடுருவிச்செல்ல காரணமாயிருந்தது. எடுத்த முதல் ஓப்பந்தத்தின் முடிவில் லாப நட்ட கணக்கு நான்கு பங்குதாரரின் பாாவைக்கு வைத்த போது அதிர்ந்தே விட்டார்கள். அரசாங்க ஊக்கத்தொகை இல்லாமலே ஏழு லட்ச ரூபாய் நிகர லாபம். அதுவும் அறுபது நாளில்.

ஆறுமாதங்களில் அவர்கள் பார்க்கும் தொகையை இரண்டு மாதங்களில் காட்டிய போது அவர்களின் பார்வை விசாலமானது. இத்தனை நாளும் மற்றவர்களின் லாபத்துக்கு நாம் உழைத்துக்கொண்டுருக்கிறோம். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒன்று லாபத்திற்கான முக்கிய காரணம் எந்த இடத்திலும் தவறே இல்லாமல் துரத்திக்கொண்டே சென்று முடியும் வரையிலும் இன்குபேட்டர் குழந்தை போல் மிகக் கவனமாக குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்தது. மிச்சமானது எதுவும் இல்லை. அது தான் அவர்களை மிகக் கவர்ந்தது.

திட்டத்தில் என்ன வடிவமைத்து கொடுத்து இருந்தேனோ இம்மி அளவும் மாறவில்லை. சந்தர்ப்பங்கள் அனைத்துமே சாதகமாக தான் இருந்தது. தொடங்கும் போதே ” எந்த விஷயத்திலும் தலையிட வேண்டாம். என் போக்கிலேயே விட்டு விடுங்கள். முடிவைப் பார்த்ததும் உங்கள் ஆலோசனையைச் சொல்லுங்கள் “. என்னுடைய அதிர்ஷடம் அவர் பொறுமையாய் இருந்தது.

என்னுடைய வேகம் பிடித்த அளவிற்கு என்னுடைய குணாதியசங்கள் அச்சமூட்டியது. மற்றவர்களிடையே நான் அனுகும் முறை அவருக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கி விட்டுருந்தது. தொழிலாளர்களுடன் அருகே அமர்ந்து உரையாடியதும், இருக்கையில் இல்லாமல் நேரிடையாகவே எல்லா இடத்திலும் நுழைந்து வந்து கொண்டுருந்ததும். அவருடைய அறிவுரை ஒவ்வொரு பதவிக்கும் ஒரு ஸ்டேடட்ஸ் நடைமுறைபடுத்தவேண்டும்.

ஆனால் முடிவு கூட்டத்தின் வாயிலாக என்னுடைய பொறுப்பும், அளிக்கப்பட்ட சலுகையும், கொண்ட நம்பிக்கையின் வாயிலாக அனைத்து விலங்குகளும் உடைக்கப்பட்டு அலுவலகம் நேரம் வருவதும் வௌியே செல்வதும் பங்குதாரர்களுக்குச் சமமாக பாவிக்கப்பட்டது. ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கணிணியில் அதிக நேரம் செலவழிக்க நிர்வாகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க்கொண்டுந்தது. வாழ்க்கை அது எப்போதும் அப்படித்தான். உருளும் வரையில் தான் பிரச்சனை. தொடங்கி விட்டால் உருண்டு கொண்டே இருக்கும்.

மனதில் உள்ளே புகைந்து கொண்டே இருந்த சொந்த நிறுவனம் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து ஒரு தகுதிக்கு வந்தது போலிருந்தது.

அன்று மற்றொரு பங்குதாரரிடமிருந்து அழைப்பு. இருவரும் அலறிக்கொண்டு ஓடினோம். அவர் தான் தலை. கறாரான பேர்வழி. காரணம் இல்லாமல் அழைக்கமாட்டார். என்னை விட என்னுடன் வந்த மற்றொரு பங்குதாரருக்குத்தான் நடுக்கம். உள்ளே நுழைந்தது அவர் அறையில் மேலும் இருவர்.

நடுத்தர வயது பெண்னுடன் ஒரு இளைஞன். அறிமுகபடுத்தி விட்டு “இவர்கள் கோயமுத்தூரில் தனியாக அலுவலகம் வைத்துள்ளார்கள். இவர்கள் வைத்துள்ள ஒப்பந்தப்படி மிகக்குறுகிய காலத்திற்குள் நம்மால் முடிக்கமுடியுமா?” என்று . அனைத்து பேப்பர்களும் என் கைக்கு வர, சில நிமிடங்களிலே புரிந்தது வந்தவருக்கு இந்த தொழிலில் எந்த அனுபவமும் இல்லை என்பது. ஆங்கில அறிவு மூலம் கிடைத்த இறக்குமதியாளர்களை சரியான நிறுவனம் கிடைக்காமல் கோட்டை விட்டு கோட்டை விட்டு கடைசியாக அலைந்து திரிந்து இங்கு வந்து சேர்ந்துருப்பது. தனியாக பேசிய போது சொந்த ஊரும் என்னுடைய ஊருக்கு மிக அருகில். பாசம் பொத்துக்கொண்டு தானே வரும்?

இரவு நேரம் தனியாக கைபேசியில் அழைக்க சொல்லி விட்டு, கொண்டு வந்து பார்த்தபோது கவனமாக செயல்பட்டால் வாய்ப்பு உண்டு. எப்போதும் போல் எல்லா பொறுப்புகளை சுமத்திக்கொண்டு தொடரத் தொடங்கிய போது கோவையில் இருந்து அழைப்பு. அவரால் நம்ப முடியவில்லை? அவர் எதிர்பார்த்த கமிஷன் தொகையும் எதிர்பார்த்த நாளுக்குள் முடித்து தரமுடியும் என்று என் உத்தரவாதம் மேலும் உற்சாகமூட்ட, ” சார் எப்படியாவது இதை சிறப்பாக முடித்துக்கொடுங்கள். தனியாக உங்களுக்கு என் பங்கில் ஒரு தொகை தருகிறேன். இதே போல் ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும். எனக்கு எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்”.

அவர் சொன்ன தொகை நம்ப முடியாததாக இருந்தாலும் ஏற்கனவே வாழ்க்கை கொடுத்த அனுபவத்தில் நம்பிக்கை இல்லாமல் ” பரவாயில்லை. அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம் ” என்றபோது அவருடைய கெட்ட நேரமும் என்னுடைய சொந்த தொழிலுக்கான நல்ல நேரமும் தொடங்கியது,

அவர் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் அவரின் விருப்பபடியும், நிர்வாகத்திற்கும் சாதகமாக முடித்து வங்கியில் ஒப்படைக்க வேண்டிய பத்திரங்கள் முடிந்த அன்று அவர் கைக்கு அவருடைய கமிஷன் செல்லவேண்டிய நாள்.

இடைப்பட்ட நாட்களில் திடீர் என்று நடு இரவு கை பேசியில் அழைப்பு அவரிடமிருந்து வரும். கணிணியில் மற்றொரு முணையில் இறக்குமதியாளர் கேட்கும் கேள்விக்கு பதில் அவரிடம் இருக்காது. தௌிவாக புரியவைத்தால் மறுநாள் ஆர்ப்பாட்டமான சந்தோஷத்தை மட்டும் வந்து அளிப்பார். அவர் உயர்ந்து கொண்டுருப்பது எனக்கும் சந்தோஷத்தை அளித்தது. என்னைப்பொறுத்தவரையில் அங்கும் இங்கும் அலைய வேண்டாம். இவரை சார்ந்து இருந்தாலே நிறுவனத்தில் என்னுடைய இருப்புக்கு எந்த பிரச்சனையும் வந்து விடாது.

குழந்தைகளும், படிப்பும், மாதந்திர அடிப்படை சந்தோஷங்களும் பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டுருக்கும் இந்த சூழ்நிலையை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பங்கள் வரும். காத்துருப்பது அதை விட அவஸ்யம்.

அவருடைய கமிஷன் தொகை மொத்தமும் பணமாக வேண்டும் என்ற போது நிர்வாகம் அதிர்ந்தது. ஆயிரம் ரூபாய்க்கு காசோலை போட்டுக் கொடுக்க ஐந்து நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். நான்கு லட்சம் என்பதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

அவரோ பிடிவாதமாய் நின்றார். பாதியில் எழுந்து சென்றவர் மதிய சாப்பாடு இடைவேளையில் என் வீட்டுக்கு வர, அவர் வங்கியில் வாங்கி வைத்துள்ள கடனும், காசோலை உள்ளே நுழைந்தால் கதி அதோகதிதான். அவரின் கைகூப்பிய கரங்களை எப்படி சமாதானப்படுத்துவது?

நான்கு பங்குதாரர்களும் கில்லாடிக்கு கில்லாடி. முதலில் இவ்வளவு பெரிய தொகையை அவருக்கு கொடுப்பதற்கு எவருக்கும் மனமில்லை. என்னை வைத்து நாடகம் நடத்த முற்பட்ட போது தொடக்கத்திலேயே ஒதுங்கிவிட்டேன். இதையும் அவரிடம் சொன்னபோது மேலும் கதற ஆரம்பித்துவிட்டார். ” எப்படியாவது பணமாக வாங்கித்தந்து விடுங்கள். வாங்கிய பத்து நிமிடத்திற்குள் உங்களுக்கு நான் சொல்லி இருந்த பணத்தையும் தந்து விட்டு செல்கிறேன்”.

முதலில் இவரை காப்பாற்ற வேண்டும். காரணம் நான்கு பேரைப்பற்றி நன்றாக அறிந்தவன் என்ற முறையில். இரண்டு நாட்கள் கடந்தாலே “நீ யார்? ” என்று கேட்கக்கூடியவர்கள். அவர்களுடைய ஒவ்வொரு தந்திரமும் என்னிடம் எப்போதும் என்னிடம் வராது. காரணம் அதற்கு முன்னாலே என்னுடைய வெடிகுண்டு தயாராய் இருக்கும். கலங்கிய குட்டையில் முயற்சித்து நல்ல தண்ணீரைப் பார்த்து பார்த்து சேகரித்துக்கொண்டுந்தேன்.

நிர்வாகத்திற்கு எதிரான எந்த துரோகமும் செய்யவில்லை. இவராகவே பிரியத்தின்பேரில் அளிக்க முன்வரும் தொகையை ஏன் வேண்டாம் என்பது? கிடைக்கும் தொகை நாலைந்து மாதங்களுக்கு எந்தவித வங்கி டென்ஷனை உருவாக்காது. கட்டி இழுப்போம்? கிடைத்தால் மலை. இல்லாவிட்டால் ம….

கூர்தீட்டிக்கொண்ட சிந்தனையில் உருவானபடி ” அவரிடம் மேலும் ஒரு லட்சம் பீஸ்க்கான ஒப்பந்தம் தயாராய் உள்ளது. நீங்கள் முரண்டு பிடித்தால் அதன் லாபத்தை வேறு எவனோ தின்று விட்டு போய்விடுவான்” என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு நகர்ந்தது, அங்கிங்கு மோதி கடைசியில் வழிக்கு வந்து மொத்த தொகையும் என் கைக்கு தலை வரவழைத்து கொடுத்தார்.

தொடக்கம் முதல் என் மேல் அவருக்கு அலாதியான மரியாதை. காரணம் “தொழில்” நன்றாக தெரிந்தவன் என்ற முறையிலும், குறிப்பாக நிறுவனத்திற்குள் உள்ளே நுழைந்தால் அனாவசியமாக தொலைபேசி உரையாடல் இல்லாதது, நட்பு வட்டம் என்று உள்ளே யாரையும் வரவழைத்து நேரம் வீணாக்காமல் இருப்பது இதற்கு மேல் நேரிடையாக உள்ளே புகுந்து வருவது.

எந்தப் பாராட்டும் என்னை சந்தோஷப்படுத்துவதில்லை. காரணம் நாளைய பொழுது எப்படி விடியும்? என்று யாருக்கும் தெரியாது. எந்தப்பிரச்சனையினால் வௌியேறுவோம்? மொத்தத்தில் என் கடன் பணி செய்து கிடப்பதே. செய்கின்ற பணிக்கு உண்டான கூலி கொஞ்சம் மரியாதை போதும்.

நண்பர் வாயெல்லம் பல். கட்டிவைத்துருந்த பணக்கட்டுகளை வேலை மெனக்கிட்டு ஓரமாக உட்கார்ந்து எச்சில் தொட்டு எண்ணிக்கொண்டுருந்தார். எனக்கு வினோதமாய் இருந்தது.

டேப் பிடித்து அளக்கத் தெரியாது. துணிகளின் வித்யாசம் தெரியாது. தொழில் குறித்து எந்த அறிவும் இல்லாமல் படித்த ஆங்கில அறிவின் மூலம் கிடைத்த இறக்குமதியாளர் அளித்த பணம். அறுபது நாளில் நான்கு லட்சம். நான் அதைப்பார்க்க குறைந்தது இரண்டு வருடங்களாவது உழைக்க வேண்டும். சிரிப்பாய் இருந்தது. இது தான் இந்தத் தொழிலின் சாபக்கேடு.

நிறுவனம் நடத்துபவர்களுக்கு முழுமையான தொழில் நுனுக்கம் தெரியாது. அனைத்தும் தெரிந்த வல்லுநர் அவமானப்படுத்தினாலும் அசையாமல் பல வருடங்கள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவார். காரணம் இவர் போனால் அடுத்து ஒருவர் இவரை விட குறைந்த சம்பளத்திற்கு வர காத்துக் கொண்டுருப்பார்.

மூதலீடு செய்தவர் அந்தந்த துறைக்குத் தேவையான ஓப்பந்த முறையில் ஒப்படைத்து விட்டாலே தொழிலாளர் பிரச்சனை அவரை விட்டு போய்விடும். அடித்துக்கொண்டு சாகலாம். இந்தத் தொகையில் இதை முடிக்க வேண்டும். மேலாதிக்கம் செய்வதற்கு என்னைப்போல் வந்தேறிகள்.

நல்ல தொழில் ஆனால் நாசகாரமான நிர்வாகத்தில். மூதலீடு செய்தவரின் கூப்பாடு சில சமயம் நியாயமாகத்தான் தெரியும். டெண்டர் முறைபோல் இறக்குமதியாளர் அனுக வேறு வழியே இல்லை. முடிந்த பிறகு தான் தெரியும்? கிடைத்தது துண்டா இல்லை முழு வேட்டியா?

பணம் வாங்கிக்கொண்டு சென்ற நண்பரிடம் இருந்து எந்த தொலைபேசி அழைப்பும் இல்லை. நானும் அழைக்கவில்லை. வாழ்க்கை உணர்த்திய பாடங்கள் அப்படி?

திடீர் என்று குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டுருந்த போது எதிரே ஒரு கடையில் நின்று கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டு மிகச் சுவராஸ்மாய் ரசித்து புகைபிடித்துக்கொண்டுருந்தார். குழந்தைகளை விட்டு விட்டு வண்டியை அவர் பக்கத்தில் நிறுத்தி தோளில் கை வைக்க அதிர்ந்து விட்டார்.

எதிர்பார்க்கவில்லை. நான் ஒன்றுமே கேட்கவில்லை.

அவரின் உளறல் உச்சமாய் இருந்தது. உற்சாக பானம் உணர்வை கூட்டியிருந்தது. நேரம் சரியில்லை என்று நகர்ந்த போது அவரின் நாகரிக வார்த்தை திரும்ப அழைத்தது ” என்ன உதவி செய்து விட்டாய் என்று என்னிடம் பணம் கேட்க வந்துள்ளாய்? முதலீடு போட்டு செய்து கொடுத்தவர்கள் அவர்கள். ஓப்பந்தம் கொடுத்தது நான்? உணக்கு எதுக்கு கிஸ்தி? என்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் போல் பேசிக்கொண்டே போனார். நான் தொடங்காமலே அவர் தொடர்ந்ததும் இல்லாமல் துவைத்து காய போட்டதை அசை போட்டுக்கொண்டு அலுவலகம் உள்ளே நுழைந்தேன்.

நிர்வாகம் கூட ஒவ்வொரு ஒப்பந்தம் சிறப்பாக முடித்த பிறகு ஒரு ஊக்கத்தொகை என்று பேசியிருந்தார்கள். நான் கேட்டு விடுவேன் என்றே பல பிரச்சனைகள் பெரிதாக ஊதி கூட்டும் கூட்டத்தை முடித்துவிடுவார்கள்.

மௌனத்தை தவிர வேறு என்ன பரிசாகத் தரமுடியும்?

பணம் பெரிதாக தெரியவில்லை. வாழ்க்கைக்குப்போக வாங்கும் சம்பளம் தராளமாய் மிஞ்சித்தான் இருந்தது. ஆனால் வார்த்தைகளும் கூடிய கூட்டங்களும் திரும்பத்திரும்ப வந்து தூக்கத்தை கெடுத்துக்கொண்டுருந்தது. சரி ஒரு ஆட்டம் ஆடி பார்த்து விடலாம்?

அதுவரையில் அவரின் இறக்குமதியாளர் குறித்த அனைத்து விபரங்களும் தெரிந்த போதிலும் அதில் அக்கறை செலுத்தியதே இல்லை. இரண்டு காரணம். ஒன்று கவனிக்க வேண்டிய வேலைகள் அதிகமாய் இருக்கும். மற்றொன்று நம்பிக்கைத்துரோகம் கூடாது என்ற சுயகட்டுபாடு.

ஆனால் இன்று?

கட்டுபாடுகள் தளர்த்தி “உன்னை விட எல்லா விதத்திலும் நான் சிறந்தவன் மற்றும் புத்திசாலி” என்று காட்ட வேண்டிய அவஸ்யத்தில் நாள் பார்த்து நேரம் பார்த்து அந்த இறக்குமதியாளரின் வலைதளத்தில் உள்ள அனைத்து மின் அஞ்சல் வயிலாக “ஏன் நீங்கள் என்னைப்போன்ற நேரிடையான உற்பத்தியாளரை அனுகக்கூடாது? அனுகும்பட்சத்தில் உண்டான இருவருக்கும் உண்டான லாபாங்கள்” என்று பட்டியல் இட்டு அனுப்பி இல்லாத ஒரு சொந்த நிறுவனப்பெயர் உருவாக்கி அனுப்பி அதை மறந்தே விட்டேன். என்னுடைய கோபம் அத்துடன் முடிந்தது.

ஆனால் விதி என்னை விடவில்லை?

மூன்று நாட்கள் கழித்து நண்பரிடம் இருந்து அழைப்பு. கோபத்தில் எடுக்க வில்லை. ஆனால் விடாது விடாது அழைத்துக்கொண்டுருந்த போதே புரிந்து விட்டது. ஏதோ ஒன்று நடந்ததுள்ளது. பேசிய போது ” யாரைக்கேட்டு என் இறக்குமதியாளருடன் என் அனுமதி இல்லாமல் தொடர்பு கொண்டாய்? போன்ற ஏக வசனமும் மிரட்டலும். காலம் சிரித்தது. முதல் நாள் சந்தித்த போது இருந்த படபடப்பு போய் மிரட்டல் விடும் அளவிற்கு தன்னிறைவு பெற உதவியாய் இருந்த பணம் அது தந்த நம்பிக்கைகள். இவன் தான் உண்மையான மனிதன்.

பதில் ஏதும் பேசாமல் இருந்த என்னை அடுத்த படிக்கு அழைத்துச் சென்று விட்டுருந்தார். பேசிய நாராச வார்த்தைகளை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தவில்லை. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இது ஒரு பரமபதம். வெற்றிக்கோட்டுக்கு அருகில் சென்று பாம்பின் வாயில் நுழைந்து தொடக்கத்திற்கு வந்தவர்கள் என் கண் முன்னால் வந்தவர்கள் வரிசையாக மனதில் வந்து போனார்கள்.

ஆத்திரம் என்பது முதல் சத்ரூ என்பது அவர் வாயாலே அன்று புரிந்தது. காரணம் அவர் இது வரைக்கும் நேரிடையான ஏற்றுமதியாளர் என்பதாகத்தான் இறக்குமதியாளாரிடம் காட்டி வந்துள்ள விஷயமே அன்று தான் தெரிந்தது.

உற்சாகம் மேலும் அதிகமாக மேற்கொண்டு கற்களை சேர்த்துக்கொண்டு அடித்த அடியும் விடாமல் கொடுத்த மின்அஞ்சல் இறக்குமதியாளரை கரைத்து விட சம்மதம் கொடுத்துவிட்டார் அடுத்த ஒப்பந்தத்திற்கு.

ஏற்கனவே பணிபுரியும் நிறுவனம் ஊக்கத்தொகை என்ற பெயரில் உழவு ஓட்டிக்கொண்டுருக்கிறார்கள். இதையும் அவர்கள் கையில் கொடுத்தால் சகதியாக்கி சாணியாக்கி வறட்டியாக சுவற்றில் ஓட்டி விடுவார்கள். ஆடித்தான் பார்த்து விடுவோமோ?

“ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி” வடிவேல் சொன்ன காலத்திற்கு முன்னாலே என் வாழ்வில் நடந்து கொண்டு தான் இருந்தது, காயங்கள் அதிகமானாலும் துடைத்து வந்ததால் அம்மாவுக்கு பயம். இருக்கும் வேலையையும் தொலைத்து விடுவானோ என்று.

இறக்குமதியாளர் கிடைத்து விட்டார். நிறுவனப்பெயரும் காட்டியாகி விட்டது. பணத்துக்கு? முதல் ஒப்பந்தமே பதினான்கு லட்சம். தலை சுற்றியது. இதை நம்பி வேலை செய்யும் நிறுவனத்தை விட்டு வௌியே போய் விட முடியாது. வேறு எந்த நிறுவனத்திற்கும் மாற்ற முடியாது? கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இறக்குமதியாளரின் தொடர்ச்சியான நச்சரிப்பு.

அன்று பழக்கத்தில் இருந்த நண்பர் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்த போது கதை முழுவதையும் சொல்ல நாளை உங்களை அழைக்கின்றேன்? என்று சொல்லி விட்டு சென்று விட்டார். வாழ்வில் அதிக அதிர்ஷடமும் குறைவான உழைப்புமாய் சராசரிக்கும் கீழே வாழ்ந்து கொண்டுருக்கும் அவரை கருத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. மறுநாள் வீட்டுக்கு சாப்பாட்டு நேரத்தில் வந்து சேர்ந்து கொண்டார்.

” பத்து லட்ச ரூபாய் முதலீடு செய்ய ஒரு நபர் இருக்கிறார். மீதி நான்கு லட்சம் நீங்கள் தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். வரும் லாபத்தில் அறுபது சதவிகிதம் அவருக்கு. எனக்கு இருபது. உங்களுக்கு இருபது. முதலீடு செய்பவருக்கு இந்தத் தொழில் குறித்து ஏதும் தெரியாது? நானும் நீங்களும் சொல்வது தான். சம்மதமா? என்றார். திகைத்துப்போய் விட்டேன்.

தேனை முழுமையாக கையில் வாங்கி, மொத்தமாக கொடுத்து விட்டு புறங்கையை மட்டும் நக்கிக்கொள்ளலாம். அதைவிட அதில் பிடித்துருந்த விஷயம் தொழில் ஏதும் அவருக்குத் தெரியாது. ஆக டார்ச்சர் இருக்காது. மொத்த பொறுப்பும் நண்பர் பொறுப்பு. நான் எப்போது போல் நிறுவனத்தில் பணியாற்றிக்கொள்ளலாம். அவருக்கு செய்ய வேண்டியதை காலையில் வந்து சந்திக்கும் போது திட்ட வரவோலை கொடுத்து விட வேண்டும். உண்டான விஷயங்கள் மறுநாள் சந்திக்கும் போது.

பாருங்கள் வாழ்க்கையை?

எங்கு தொடங்கி எங்கு இழுத்து எங்கேயோ போய்க்கொண்டுருக்கிறது? எனக்கென்ன என் பெயரில் ஒரு நிறுவனம். என் கையொழுத்து போட்டு அனுப்பபடும் பத்திரங்கள். உதவி இயக்குநர், இயக்குநராக ஆசைப்படும் வைபோகம். அங்கு ஒரே நாளில் உலகம் முழுக்க தெரியப்படும். இங்கு வங்கியில் நமக்கென்று ஒரு மரியாதை. அதுவும் எந்தக் கடனும் கேட்காமல்.

திட்டத்தின்படி தெரிந்த நிறுவனத்தை அனுகி, உருவாக்கி அனுப்பியாகி விட்டது. பத்திரங்கள் ஒப்படைத்து இறக்குமதியாளரின் பணம் கைக்கு வந்தாகி விட்டது. ஒளிவு மறைவற்ற அறிக்கை தயார் செய்து அறுபதும் இருபதும் பிரித்துக்கொடுத்தது போக என் கைக்கு வந்தது அந்த நண்பர் எனக்கு கொடுப்பதாகச் சொன்ன ஒரு லட்ச ரூபாய்.