Daily Archives: ஜூலை15, 2009

அசுத்தம் என்பதும் சுத்தமாகிவிடும்…..?

காந்தி நகர் கடந்து சென்று கொண்டுருந்த போது அந்த இளைஞன் முன்னேறி போய்க்கொண்டுருந்தான். எந்த போக்குவரத்து விதிகளும் கண்டு கொண்டதாகவோ, மதிப்பதாகவோ தெரியவில்லை. விளம்பரங்களில் முன் சக்கரம் தூக்கிக்காட்டி ” சாகஸம் ” வேண்டுவோர் தவறாமல் வந்து தேர்ந்தெடுக்கும் வாகனம் என்று கட்டியம் கூறும் இரண்டு சக்கர வாகனம். உச்ச எந்திர வேகத்தில் அந்த பதின்ம வயது தந்த மகிழ்ச்சி. சப்தமும் புகையும் அதிகம் வௌியிடாத வாகனம் என்றாலும் கைகள் திருகிய வேகத்தில் கதறியது. வளைந்து வளைந்து முன்னேறி சென்று கொண்டுருந்தான். வேறு வழியே இல்லாமல் பயத்தில் பாதி பேரும், என்னைப்போல் வேண்டாம் இந்த வம்பு? என்று ஒதுங்கிக்கொள்ள இன்னமும் அவன் வேகத்தை அதிகமாக்கி கடந்து சென்றான்.

இது அன்றாட வாழ்வில் திருப்பூர் போக்குவரத்தில் பார்ப்பது தான். எந்த வித கோபமும் எனக்கு வரவில்லை. வாழ்க்கை கற்று தந்த பாடங்கள். நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வைத்துருந்தது. வீட்டைவிட்டு வௌியேறி வந்தவுடன் என்னுடைய மூளைக்கு புதிய கட்டளையை மனம் கடத்தி விடும். ” மகனே பத்திரமாய் வந்து சேர வேண்டும். நம்பியிருப்பது மூன்று பேர்கள் மட்டுமல்ல, சமூக வாழ்க்கையில் அதிகம் மதிப்புள்ள தாலியை பெற்றுக்கொண்டவளும் “.

முன்னே பின்னே என்று அணிவகுத்து வந்து கொண்டுருந்த எல்லா வாகனங்களும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அவரவர்க்கு உண்டான அவசர அவஸ்யங்களைப் பொறுத்து கடந்து கொண்டு இருந்தது. என்னுடைய நேரிடை இறக்குமதி தந்த வேகம் எப்போதும் தேவை இல்லாமல் தான் இருந்தது. அதன் உயர்ரக அழுத்தம் என்னுடைய முதுகு தண்டுவட பிரச்சனையை காப்பாற்றியிருந்ததே போதுமானதாக இருந்தது. முப்பது நாற்பதுக்குள் பயணிப்பதே சர்க்கஸ் அனுபவம் போல் இருக்கும் போது பாடங்கள் சுமந்த மனம் எப்படி வேக முள் அறுபதை தொட அனுமதிக்கும்?

கடந்து சென்றவனைப்பற்றி மறந்து விட்டேன். சராசரி வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளே அளவுக்கு அதிகமாக இருக்கும். இது போன்ற தேவையில்லா விஷயங்கள் உள்ளே போக அனுமதித்தால் என்ன ஆகும்? குப்பைகள் சேர்ந்த மனம் எப்படி இரவில் நல்ல உறக்கத்தை தர முடியும்?

மேம்பாலம் கடந்து சென்ற போது இரண்டு பக்கமும் அளவு கடந்த கூட்டம். மொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்து நின்று இருந்தது. காரணம் புரியவில்லை. ஆனால் பாலம் இல்லாமல் நான் செல்ல வேண்டிய இடத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டுமென்றால் இன்னும் பத்து நிமிடம் அதிகமாகும். கச்சடா கழிவின் மேல் நாற்றம் பொறுத்து பயணிக்க வேண்டும்.

திருப்பூரில் எந்த பகுதிக்கும் குறுக்கு வழியில் செல்ல முயற்சிப்பதே இல்லை. தோண்டிய பள்ளம் மூடாமல் வைத்துருப்பார்கள் அல்லது ஏதோ ஒரு துறையின் பணிக்காக அருகே தோண்டிக்கொண்டுருப்பார்கள். பள்ளம் இருக்கிறதே என்று கூட கவனிக்க நேரமில்லாத அவசர வேலைகள் அந்த பள்ளத்திற்குள் அவரை தலை குப்புற கவிழ்த்து இருக்கும். வேலை முடியாமல் தோண்டிய பள்ளத்தின் ஓரத்தில் சற்று மேடாக மண் போட்டு மூடி வைத்திருப்பதில் பலர் சாகஸ பயணம் தொடர்ந்து கொண்டுருப்பார்கள்.

விழுந்தால் எலும்பு மிஞ்சாது. அதனால் என்ன? அதோ ஒருவர் முன்னால் சென்றுவிட்டார். நம்மாலும் போய் விட முடியும் என்ற எண்ணமே பின்னால் நின்று கொண்டுருப்பவர்களை பயணிக்கத் தூண்டும். அங்கே பணி புரிந்து கொண்டுருப்பவர்கள் பதறி கதறி போட்ட மேட்டை மறுபடியும் தன்னைக் காத்துக்கொள்ள பள்ளமாக்கி வைத்துவிடுவார்.

எல்லா அவசரமும் ஏதோ ஒரு தருணத்தில் இங்கு ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு திறமையை மறைமுகமாக வளர்த்து விட்டபடியேதான் இருக்கிறது.

இப்போது என்ன செய்வது? எப்படி பாலத்தை கடந்து செல்வது? என்ன தான் அங்கு நடக்கின்றது. மெதுவாக முன்னேறி கூட்டத்திற்குள் புகுந்து வண்டியை ஓரம் நிறுத்தி எட்டிப்பார்த்தேன். கண்களுக்கு முதலில் தெரிந்தது மனித மூளை. தனியாக சிதறி வெட்டி எடுத்த துண்டாக கிடந்தது. அதைத்தொடர்ந்து சதை சிதறல்கள். எங்கு பார்த்தாலும் ரத்தச்சகதி போட்டுருந்த அவசர கோலம்.

யார் அது? ஒரு நிமிடம் துடித்த இதயம் நின்று துடித்தது. சற்று நேரத்திற்கு முன் போக்குவரத்தில் கோலம் போட்டுக்கொண்டு வந்தவன் இங்கு வாழ்க்கை போட்ட கோலத்தில் புள்ளி மாறிய கோலமாய் அலங்கோலமாய். பிழையாய் கிடந்தவன் பிழைத்துருப்பான் என்றா கருதுகிறிர்கள்?

சிரித்துக்கொண்டேன். மனம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஏன் ஒரு உயிர் போன சோகம் கூட மனதில் உறைக்கவில்லை. உண்மை. துளிகூட வெட்கப்படவில்லை.

” துன்பம் கொடுத்தவனுக்கே அதை திருப்பிக்கொடு ” என்று கூறிய அந்த ” மாவீரன்” போல் சொல்பவன் அல்ல நான். அவர் அந்த அளவிற்குச் சென்று சொல்லக் காரணம் நிச்சயம் அவருக்கு, அந்த சமூகத்திற்கு கிடைத்தவைகள். அவர்கள் அளவிற்கு என் வாழ்வில் எந்த விதமான அடக்கு முறையும் வந்தது இல்லை. சந்திக்கும் சந்தர்ப்பமும் அமைத்துக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை முறை செய்துருந்தது.

வாழ்ந்து வந்த குடும்ப வாழ்க்கை கற்றுக்கொடுத்தது பாடங்கள் என்றால் வந்து வாழ்ந்த திருப்பூர் வாழ்க்கையை பயிற்சிக் களமாக மாற்றி இருந்தது. அடிக்க அடிக்க இரும்பே வளையும் போது சாதாரண மனிதன் நான் எம்மாத்திரம்?

சகிப்புத்தன்மையும், நம்பிக்கையுடன் கூடிய தளராத மனமுமே கொண்டு வாழ வேண்டிய சராசரி இந்தியனின் வாழ்க்கையாகத்தான் என்னுடைய வாழ்நிலை வழி நடத்திக்கொண்டுருக்கிறது.

வண்டியை எடுத்து வழி மாறி தொடர்ந்தேன்.

சற்று முன் இளமைத்துடிப்புடன் கூடிய அனுபவிக்கவே இந்த வாழ்க்கை என்று வாழ்ந்தவன் ஐந்து நிமிட இடைவௌியில் சித்ரகுப்தனிடம் நிறை குறைகளை வாதாடிக்கொண்டுருந்தான்.

சென்றவன் பல அதிகாரவர்க்கத்திற்கு வேலையையும் பல நூறு மக்களுக்கு பல மணி நேரம் தாமதத்தையும் பரிசாக தந்துவிட்டுருந்தான். தான் வாழ்ந்து சமூகத்தை வாழ வைப்பனுக்கு எதிர்மறை தான் தானும் வாழாமல் மற்றவர்களையும் வாழ வைக்காமல் போகக்கூடியவன்?

உள்ளே உள்ள சுற்றுவட்டாரத்திற்குள் மிகுந்த நிர்ப்பந்தம் இல்லாதவரையில் மகிழ்வுந்து என்ற பேச்சே இல்லை. ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் காலை ஆறு மணிக்குள் என் வாகனம் திருப்பூர் எல்லையை கடந்து இருக்கும். மழை இல்லாத சமயத்தில் தேவியர்கள் விரும்பி பயணம் செய்வது இரண்டு சக்கரத்தில் தான். எல்லாவற்றையும் சுமந்து சர்க்கஸ் போரட்டத்தில் பள்ளிக்குச் சென்று விடும் சிரமம் எனக்கு மட்டும் தான்.

காரணம் ஏதும் புரியாது? பள்ளியில் இறங்கியவுடன் ” வரும் போது வண்டியை மாற்றி எடுத்து வாருங்கள்?” கட்டளையை மட்டுமே கேட்கக்கூடியவன் எவ்வாறு மறுதலிக்கமுடியும்? என்ன காரணம் என்று ஆராய்ச்சிக்குள் இறங்குவதும் இல்லை. அவர்களின் நியாயமான சந்தோஷங்கள் அனைத்தும் ஒரு மனதாக சபைக்குறிப்பில் ஏற்றப்பட்டுவிடும்.

எல்லாமே இருந்தும், கட்டுப்பாடு என்பதாக கிடைக்க வேண்டிய சமயத்தில், அனுபவிக்க வேண்டிய வயதில் ஏதும் இல்லாமல் வளர்ந்து வளர்ந்தவனுக்கு எல்லாம் கிடைத்த பிறகு உண்டான மன முதிர்ச்சி என்னத்தை அனுபவிக்க விட்டுடும்? என்ன ஒன்று, அவர்கள் சந்தோஷத்தை பார்த்து பரவசப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்?

உள்ளே நுழைந்த போது இருந்த திருப்பூர் சாலைகளுக்கும் இன்றைய சாலைகளுக்கும் தலைகீழ் மாற்றங்கள்.

பள்ளங்களில் மட்டுமே பயணித்து வந்தவர்களுக்கு பரிசாகத் தந்த அதிகார வர்க்கம் மாநகராட்சி, மாவட்டம் என்று மகுடம் சூட்டிய வணக்கத்துக்குரிய மாநகர தந்தை என்ற அளவிற்கு வளர்ந்துள்ளது.

பள்ளங்கள் பாலமாகியுள்ளது. முட்டுச் சந்தில் முட்டிக்கொண்டு முடியும் பாதைகள் எல்லாம் முடிவுக்கு வந்து முழுமைப்பயணத்தில் முக்கியக் காட்சியாய். குடங்கள் அணிவகுத்த காலங்கள் போய் இன்று இடங்கள் அனைத்தும் கட்டிடமாய் பல நாடுகளுக்கு கலங்கரை விளக்காய்..

தண்ணீர் விற்றே தலை முறை தாண்டியும் சந்தோஷிக்கக் கூடிய சொத்தை சம்பாரித்தவர்கள் இன்று எல்.அன்ட் டி. உபயத்தால் உறக்கம் மறந்து ஓய்வு இல்லாமல் மாற்று ஏற்பாடுகளில் திரட்ட முடியாமல் மறுகிக்கொண்டுருக்கிறார்கள். எல்லாம் மாறி விட்டது. உண்மை தான். அதனால் தான் அற்புத சாலைகளில் அன்றாடமும் ஏதோ ஒரு மூலையில் அவசரச் சாவும்.

முன்னேறிக் கொண்டுருக்கும் போது இரண்டு பக்கமும் கண்ணாடி வழியே பார்த்துக்கொள்ள வேண்டும். போதாது. இந்தப் பக்கமாய் திரும்புகிறேன் என்று விளக்கை போட்டுக்கொண்டு திரும்பினாலும் வந்து முட்டி மோதியவர் முதலில் கேட்பது ” திரும்பும் போது கையை காட்டாமல் திரும்புற”.

வலது பக்கம் இடது பக்கம் கற்றுணர்ந்த சாலை விதிகள் வெறும் காட்சிப்பொருளாய்த்தான் இருக்கும். அவசர பயணத்தில் முந்துவனுக்கே முதல் வழி. பிந்தி வழிவிட்டவன் இடையில் அவசரமாய் குறுக்கே வந்தவன் போடும் கோடு வண்டியில் பரிசாய் கிடைக்கும்.

ஏதோ ஒரு புண்ணிய நிறுவனம் பரிசளித்த மஞ்சள் ஆரஞ்ச், சிகப்பு விளக்கு எரிவதைப் பார்த்து நாம் நிறுத்தும் போது கையை உயரே தூக்கி காட்டி கண்ணாடி வழியே பின்னால் வருவரை கண்டுணர்ந்து ஜாக்கிரதையாக நிறுத்தினாலும் அவசரமாய் திருகி வந்தவர் சில சமயம் அவசரப்பட்டு தரையில் நிறுத்தி வைத்து இருக்கும் காலின் வடிவமைப்பை திருப்பி விட்டுவார்.

நட்ட நடு சாலையில் இரு பக்கமும் பிரிப்பதற்காக நடைமேடையாய் சாலையில் போட்டுருக்கும் பிரிப்பான்கள் எல்லாம் சர்க்கஸில் ரவுண்டு அடிக்கும் சாகசகாரர் கைவண்ணம் போல் கதறி திருப்பப்பட்டுருக்கும். காரணம் ஓட்டுநரின் இரவுப்போதைக்கு எடுப்பார் கைப்பிள்ளையாய் ஆகியிருக்கும்.

பயணிக்கும் போது அக்கம், பக்கம் பார்க்க வேண்டும். ஓட்டிக்கொண்டு இருப்பவர்க்குத் தெரியாது பின்னால் அமர்ந்துருப்பவர் எந்த நோக்கத்தில் கை காட்டிக்கொண்டுருக்கிறார் என்று. பாராமல் வந்து மோதினாலும் பேசாமல் சிரித்துக்கொண்டு சென்றுவிடவேண்டும்.

மோதியவர் வசதியானால் எந்த அதிகாரமும் மண்டியிட்டுவிடும். இல்லை முதுகில் இருந்து உருவியவர்களால் நம் உடம்பு அசதியாகி விடும். என்னத்துக்கு வம்பு.?

பதிமூன்று மாதங்கள் பதவுசாய் பக்குவமாய் பணியாற்றிக்கொண்டுருந்தவனுக்கு சற்று சம்பளம் ஏற்றிக்கொடுக்கலாமே என்று நிர்வாகத்திற்கு அறிவுறுத்திய தினத்தில் வந்து இறங்கிய ரகசிய காவலர் சொன்னது ” இவன் ஊரில் பதிமூன்று பேரை கழுத்து அறுத்து கொன்றவன்” என்று.

இந்தத் துறையில் இத்தனை ஒழுக்கமா? என்று ஆச்சரியப்படுத்தியவனின் சுயரூபம் தெரிந்தது? ஏற்கனவே வேலை பார்த்த மூன்று நிறுவனங்களில் மூன்று பேருக்கு வயிற்றில் கொடுத்து வந்த கதை அம்பலத்திற்கு வந்த போது.

இங்கு யாரும் ஊரில் உள்ள தாசில்தார் கொடுக்கும் நன்னடத்தை சான்றிதழ்கள் கேட்பது இல்லை. வேலை தெரியுமா? தெரியும் என்றால் விரைந்து தரமாய் முடிக்கத் தெரியுமா? அது போதும். அதனால் தான் ஊரில் கிளியாய் வண்டியில் ஒடிக்கொண்டுருந்தவர்கள் இங்கு ஓட்டுநராக உருமாறி பலருக்கு கிலியை வரவழைத்துக்கொண்டுருக்கிறார்கள்.

போக்குவரத்து காவலரால் உருவாகும் பெரிய பிரச்சனை பொறுத்து அவரின் உரிமம் சரிபார்க்கப்படும். அது வரையிலும் கலைஞர்க்கு ஓட்டும் வாகன ஓட்டி போல் சகல மரியாதைதான்.

பற்றாக்குறை. நிறுவனம் வளர வளர ஆட்களின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பொட்டல்காடு முதல் சுடுகாடு வரை வளர்ந்து கொண்டுருக்கும் வசதியில்லா வீடுகளின் வாடகை அருகில் இருக்கும் நிறுவனம் பொறுத்து அன்றாடம் ஆட்டம் காட்டிக்கொண்டுருக்கும். அகப்பட்டுக்கொண்டவர்கள் மீள முடியாமல் முன் தொகையை மறந்து ஓடி வந்து விட வேண்டியது தான்.

சென்னை வரைக்கும் தனியே, குடும்பத்துடன், இறக்குமதியாளருடன் பயணித்தாகி விட்டது. நான்கு வாகனங்கள் இரண்டு புறமும் நன்றாக பயணிக்க வேண்டிய சாலையில் நடு சாலையில் மோதிக்கிடக்கும் அவலங்களை பார்க்கும் போதெல்லாம் மானுட சமூகம் தன்னை ” வளர்த்துக்கொண்ட ” தகுதிகள் குறித்து தான் அதிகம் சிந்தித்து களைப்பு அடைவதுண்டு.

திண்டிவனம் செங்கல்பட்டு சாலை போல் இங்கு அதிகம் விபத்து நடக்கும் சாலை பெருமாநல்லூர் தொடங்கி பெருந்துறை சாலை. வடிவேல் சொல்வது போல் ” அங்கேயே தலை சீவி, பவுடர் பூசி, ஒரு பானை சோற்றை அங்கேயே போட்டுச் சாப்பிடும் ” அகன்ற அற்புதமான சாலை. நடந்த, பார்த்த சாலை விபத்துக்கள் எல்லாம் மொத்தமாக இரக்கத்தை எடுத்துக்கொண்டு பச்சாதாபத்தை அளித்து விட்டு சென்ற அனுபவம் பெற்ற மனதில் எங்கிருந்து இரக்கம் சுரக்கும்?

வௌியே பயணிக்கும் தருணத்தில் பையில் வண்டியில் வாகனத்தில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு காகிதம் தயாராய் இருக்கும். ஊர், மாமனார், வீடு, சகோதரி, அம்மா என்று அணைவரின் முகவரியுடன் கூடிய தொலைபேசி எண்களும். இல்லாவிட்டால் அதிகார வர்க்கம் அநாதை பிணமாக்கி விட்டால்?

பெருந்துறை அருகே பிரபல பள்ளி. சராசரிக் குழந்தை ஒரு வருடம் படிக்க செலவழிக்கும் தொகையை மாதம் ஒரு முறை பெற்றுக் கொண்டு கல்விச் சேவையை கலங்கமில்லா மனதுடன் செயல்பட்டு கொண்டுருக்கும் பள்ளியில் விடுமுறை முடிந்தது அழைத்துச் சென்றனர். தாய், தந்தை, பாட்டி, மற்றும் அந்த குட்டி தேவதை. பயணித்த உயர்ரக வாகனம் முன்னால் சென்று கொண்டுருந்த பேரூந்து திடீர் என்று நிறுத்த முயற்சிக்க, இவர்கள் கவனம் திசை மாறி இருந்ததால் பின்னால் போய் அதே பேரூந்தில் மோத போன வேகத்தில் அப்படியே திரும்பி அதே வேகத்தில் திரும்பி பயணிக்க பின்னால் வந்து கொண்டுருந்த வாகனத்தில் மோத, அதே வேகத்தில் மறுபடியும் திருப்பி விட மீண்டும் அதே வேகத்தில் முன்னே செல்ல உறாலிவுட் சண்டை சாகஸ சமாச்சாரம் கண் இமைக்கும் நேரத்தில் நான்கு உயிரையும் காவு கொண்டு விட்டது. நடந்த சில நிமிட துளிகளில் என்னுடைய பயணம் மிக அருகில்.

வண்டி ஓட்டியவர் ஒரே வாரிசு. பெற்றதும் ஓரே வாரிசு. வந்து வாழ்க்கை நடத்த வந்தவரும் ஒரே வாரிசு. எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள். இலங்கை சோகத்தை விட அதிகமாக இருக்கும்.

யார் மேல் தவறு? எதனால் இது? நடந்த நிகழ்ச்சியினால் கடைசியில் ஒரே ஒருவருக்குத்தான் பிரயோஜனம். ஓரு வாரத்திற்கு ஊரில் அனைத்து நிறுவனங்களும் இரங்கல் பா பாடும் விளம்பரம் வரும் தினமலருக்கு.

அதை பார்த்துக்கொண்டே பயணிப்பவர்கள், அவர்களின் கால்கள் வேக விசையில் இருந்து மட்டும் வௌிவர முயற்சிப்பதே இல்லை. பார்த்து பார்த்து பழகிய மருத்துவருக்கு பிணவறை என்பதும் மணவறை என்பதும் ஒன்று தான்.

” தகுதி பெற்றவன் வாழ்நிலையில் சிறந்து விளங்குகின்றான் “,

” முட்டி மோதினால் தான் முட்டையில் இருந்து வௌி வர முடியும் “,

” தகுதிக்கான தேர்வில் தகுதியற்றவர்கள் பின்னால் போவது சகஜம் தான் “.

டார்வின் கொள்கை சரிதான்.

எது சரி? எது தகுதி?

தன்னுடைய விவேகமற்ற சிந்தனையினால், அவசரம் மட்டும் கருத்தில் எடுத்துக்கொண்டு தன்னை மாய்த்து மற்றவர்களை மாய்க்கும் வளர்ந்து வந்துள்ள வளர்ந்து கொண்டுருக்கின்ற மானுட சமூகத்தில் என்னை எப்படி காப்பாற்றிக்கொள்வது?

“நல்லவர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை விஷயங்களும் இங்கு அனைத்து கெட்டவர்களுக்கும் கிடைப்பது ஏன்? ”

நொந்து போய் நேப்பியர் பாலத்தில் நடந்து வந்து கொண்டு சுகன்யாவிடம் கமல் கேட்பது போல் என்னிடம் இருக்கிறது பல கேள்விகள்.

என்ன செய்வது?

சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அருகே கிடைத்த வீட்டில் வாழ்க்கை அமைந்து விட சுத்தம் அசுத்தம் பற்றி பேசினால் சமூகம் என்னை எப்படி பார்க்கும்?

பறந்து வரும் துகள்களை மீண்டும் துடைத்துவிட்டு சுத்தமாக்கி வைத்துக்கொள்ள வேண்டியது தான்.