Daily Archives: ஜூலை4, 2009

போர்ச்சுகலில் இருந்து திருப்பூர்க்கு………………………….

ஆய்த்த ஆடை ஏற்றுமதி என்பது அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழில். எதனால் இது நடந்தது என்று ஆராய்வதற்குள் அடுத்த பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்து வேறொரு பிரச்சனை. நாள்தோறும் உருவாகும் சுழலை கடந்து தான் இத்தனை கோடிகளை, அந்நியச்செலவாணியை ஈட்டி பெருமையை பறைசாற்றிக் கொள்ள முடிகின்றது.

லாப நட்டங்களால் பாதிப்பு இல்லாமல் தொழிலை நடத்திக்கொண்டுருக்கும் நிறுவனங்களுக்கு எந்த சூழ்நிலையும் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை தான். அடாத மழை பெய்து கொண்டுருந்தாலும் அதற்குண்டான நவீன உபகரணங்கள் அவர்களின் துணியை காப்பாற்றி விடும்.

நடுத்தர வர்க்கம் என்றொரு ஜாதி உண்டு. கால பருவ மாற்றங்கள் அவர்கள் லாபத் தொகையில் கைவைத்து கலங்கடித்து சென்றுவிடும். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று கோஷம் போட்டுக்கொண்டு முன்னேற வேண்டியது தான். வேறு வழியே இருக்காது.

ஆனால் பாவமான பரிதாபமான மேலும் இல்லாமல் அதிக கீழேயும் இல்லாமல் நாங்களும் ஏற்றுமதியாளர்கள் என்று ஊருக்கு பறைசாற்றிக்கொண்டு வங்கி தயவில் வாழ்க்கை நடத்திக்கொண்டுருக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த போது போர்ச்சுகல்லில் இருந்து வந்த பெண்மணியுடன் புரிந்துணர்வு ஓப்பந்தம் போட ஆய்த்த ஏற்பாடுகள் தொடங்க வேண்டிய சூழ்நிலையில் நான்,

குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று அனுப்பி விட்டு அலுவலகம் செல்லும் போதே சில உணர்வுகள் உள்ளே தோன்றும். நல்லவை கெட்டவை என்று இனம் கண்டு கொள்ள முடியாத வகையில். ஆனால் வித்யாசமாய் தோன்றும் சகுனங்கள் அல்லது உணர்வுகள் ஏதோ ஒன்றை அன்றைய பொழுதில் கொண்டு சேர்த்து விடும் நகரும். இது நம்ப முடியாதாக இருந்தாலும் நாள் தோறும் எல்லோர் வாழ்விலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. உணர்ந்து கொண்டவர்கள் உண்மையாளர்கள். உணராதவர்கள் பாக்யசாலிகள். வீணான டென்ஷன் இல்லை பாருங்கள்.

நிறுவனத்தில் உள்ளே நுழைந்ததும் வாய் கொள்ளா சிரிப்புடன் என்றுமில்லா வரவேற்பு கிடைத்த போதே அடி வயிறு கலங்கியது. சிறிய அறையில் எதிர் எதிர் மூலையில் அவரும் நானும். மின்விசிறி ஒன்று தான் அந்த அறைக்குள் இருந்த கடவுள். அவர் இருக்கைக்கு மேலே இருக்கும் வரிசையான கடவுள்கள் படமும் அதற்கு அவர் கைத்தடிகள் செய்யும் பூஜை புணஸ்காரங்களினால் உண்டான புகையில் இருந்து மொத்தமும் விடுதலையாக குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகி விடும். கணிணி திரை தரும் சூடும், கவனமாய் கவனிக்க வேண்டிய செய்திகளும், கனவுக்காட்சி போல் புகை மண்டலத்தில் இருந்து கவனிக்க வேண்டும்.

அவரைப் பொறுத்தவரையில் அந்த புகை மண்டலம் அந்த அறையில் மொத்தமாக நிற்கும் போது தான் பரிபூரண திருப்தி. ஏற்றி வைத்த விளக்கு அணையாமல் இருக்க மின்விசிறி போட அனுமதி இல்லை. கண்ணாடி கதவும் சார்த்தப்பட்டு இருக்க கற்பனையில் கொண்டு வாருங்கள். ஆக வாழ்க்கை என்பது தினந்தோறும் புகைமுட்டி வாழைப்பழம் தான். ஏற்றுமதி நிறுவனத்தில் வௌிநாட்டு தொடர்பாளர் பணிபுரியும் குளிர் ஊட்டபட்ட அறை அதிர்ஷடம் என்பது எல்லோருக்கும் அத்தனை எளிதாக அமைவது இல்லை. அவரவர் ஜாதக கட்டத்தில் ஐந்தாம் ஒன்பதாம் இடம் பொறுத்து தான்.

மதியம் வரையில் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு அடிப்படை கடமைகள் முடித்து நான்கு மணிக்கு அடுத்த வேட்டையாடுதல் தொடங்கும். அந்த நேரத்தில் யூரோப்பில் உள்ள அத்தனை நாட்டு இறக்குமதியாளர்களும் தொடர்புக்கு தயாராய் இருக்கும் நேரம். ஏற்கனவே தொழிலில் தொடர்பு இருப்பவர்கள் பாக்யவான்கள். பிரச்சனைகளும் முன்னேறுதலும் அவர்களுக்கு இயல்பானதாய் இருக்கும். புதிதாய் தொடர்பை உருவாக்குபவர்களுக்குத் தான் பிரசவ வேதனையும் அவஸ்த்தையும்,

எப்போது போல் உன்னிப்பாக மற்ற முடிக்க வேண்டிய பதில்களை தயார் செய்து கொண்டுருந்த போது கணிணி வழியாக தொலைபேசி இல்லாமல் நேரிடையாக பேசக்கூடிய ஸ்கைபே ல் இருந்து பீப் ஒலி தொடர்ந்து கொண்டுருக்க கவனித்த போது போர்ச்சுக்கல்லிருந்து ஒரு அழைப்பு. உரையாட விருப்பமா? என்று. கசக்குமா என்ன?

மூன்று மணி நேரம் தொடர்ந்த உரையாடல் முடிவுக்கு வந்த போது முழுமையாக புரிந்தது, கமிஷன் ஒப்பந்தத்தில் இறக்குமதியாளர்களிடம் தொடர்பில் இருக்கும் பெண்மணி. கிடைக்கும் முழு லாபத்தில் கொஞ்சம் இழக்க வேண்டும். இறக்குமதியாளர் நேரிடையாக தொடர்பில் இருக்க மாட்டார். சண்டிக்குதிரையா? இல்லை வண்டிக்குதிரையா என்பது பயணிக்கும் போது தான் தெரியும். நேரிடையானயான தொடர்பு என்பது கண்களை திறந்து கொண்டு பயணிப்பது. இடையில் ஒருவர் இருப்பது கண்ணை கட்டி பயணம் செய்வது போல். இது போன்ற இடைப்பட்டவர்களால் தெருவுக்கு வந்தவர்கள் அநேகம்.

ஆனால் என்னுடைய சூழ்நிலை என்னை நிரூபித்து கொள்ள வேண்டிய கட்டாய நிலை.

நிறுவனத்தில் நுழைந்த நாள் முதல் தொடர்புகளை உருவாக்குதலும், எதிர்பார்புகளை நேராக்கி நகர்த்துதல், அதற்குண்டான முதலீடுகள் என நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்ததே எந்த பதிலும் நல்ல விதமாய் நிறுவனத்திற்கு சாதகமாய் முடிந்ததே இல்லை. நிறுவனத்திற்கு முடிவு தான் முக்கியமே தவிர எத்தனை புயல்களை சந்தித்தாய்? என்பது குறித்து அக்கறையில்லை. கப்பல் கரை சேர்ந்ததா?

இருவருக்கும் இரு வேறு விதமான நிர்ப்பந்தம், அவருக்கு செய்து கொண்டுருக்கும் இடைத்தரகர் இல்லாத ஏற்றுமதி முக்கியம். எனக்கு என்னை நிலை நிறுத்திக் கொள்ள. கப்பலை கரை சேர்க்க வேண்டிய முக்கியவத்தில், சாதக பாதக அம்சங்களை அலசினோம்.

முடிவு செய்தபடி போர்ச்சுகலில் இருந்து பெண்மணியின் வருகையை எதிர்பார்த்து காத்து இருந்தோம். ஆனால் அவர் வருகையின் பொருட்டு செய்து முடிக்க வேண்டிய வேலை ஏராளமாய் இருந்தது. முக்கியமாக உட்கார்ந்து உரையாடக் கூடிய மற்றும் தரமான தயார் செய்த தகுதியான தரம் வாரியாக காட்ட வேண்டிய சாம்பிள் பீஸ்களை தேர்வு செய்து தொங்க விடவேண்டும். இதற்கு முன்னால் இது போன்ற அவஸ்யம் இல்லாத காரணத்தால் நிறுவனம் அது போன்ற வசதியை உருவாக்கி வைத்துருக்க வில்லை,

உருவாக்கும் அளவிற்கு நிறுவனத்தில் இடமும் இல்லை, பலவிதமான யோசனைகளுக்குப் பிறகு உறவு மற்றும் நண்பர்கள் வரிசையில் அனைத்து தகுதிகளுமாய் இருந்த அருகில் இருந்த மற்றொரு நிறுவனத்தில் எல்லாவிதமான ஏற்பாடும் முடித்த போது முழுதாய் லட்சங்களை விழுங்கியிருந்தது.

எல்லாமே அவசரம், ஆனால் மழைக்குத் தெரிவதில்லை. முப்பது நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை மூன்று நாட்களில் முடிக்க வேண்டிய கட்டாயம். அவருக்கு பணப்பிரச்சனை. எனக்கு உடல் அசதிப் பிரச்சனை. பத்து பேர்கள் சேர்ந்து பார்க்க வேண்டிய வேலையை மொத்தமாக என் ஒருவன் தலையில் சுமத்தினால் வேறு என்ன செய்ய முடியும்?

எதிர்பார்த்த அனைத்து வேலையையும் சிறப்பாக முடித்து விட்டு கோவை விமான நிலையத்தில் அவரின் வருகைக்காக காத்துருந்த கணங்கள் எனக்கு மரண அவஸ்த்தை. போட்ட முதலீடுக்கு வரும் பெண்மணியால் பிரயோஜனம் உண்டா? இல்லையா? ஆனால் அவருக்கு அப்போது அது முக்கியமாக தோன்ற வில்லை. விமான நிலையத்தின் மேல் மாடியில் சீட்டு வாங்கிக்கொண்டு சென்று அமர்ந்த போது உணடான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எதையோ சாதித்த நிம்மதி. உடன் வந்துருந்த நண்பருடன் விமான பயணம் குறித்து, வௌிநாட்டுக்குச் செல்ல வேண்டிய போது கடை பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களைப்பற்றி எதுவுமே தெரியாத போதும் மிக சுவராஸ்மாக விவரித்துக் கொண்டுருந்தார்.

அறிவிப்பு வந்தது. என் எண்ணத்தில் உருவாக்கி வைத்துருந்துருந்த இருபது ப்ளஸ் வயதுக்கு இடியாய் வந்து இறங்கியது. கடைசியாய் வந்தவர் போட்டுருந்த கோட்டும் தொப்பியும் குளிர் கண்ணாடியும் வைத்துருந்த புகைப்பட அடையாளத்தில் இருந்து வித்யாசமாய் இருந்ததால் தடுமாறி நின்ற என்னை அவர் கை தொட்டு என்னை சுய நினைவுக்கு வரவழைத்தார். அவரால் என்னை எளிதாக கண்டு பிடிக்க முடிந்தது, அறிமுகப்படலம் முடிந்ததும் வாகனம் கோவை நெடுஞ்சாலையில் பயணித்து வந்து போது எதிரே வந்த முரட்டு ட்ரைவிங் கண்டு முகம் பொத்திக்கொண்டே புலம்பிக்கொண்டே முன்பதிவு செய்து இருந்த தங்குமிடத்திற்கு வந்த போது தான் அவர் உயிர் திரும்பி வந்தது போல் இயல்பான நிலைக்கு வந்தார்.

முதல் இந்தியப் பயணம். செவி வழியே கேட்ட செய்திகள் அவரை எல்லாவற்றிக்கும் பயம் கொள்ள வைத்துருந்தது. காலாரா, மலேரியா, பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறைவான போன்று இன்னும் பலப்பல, புரிய வைக்க முடியவில்லை. புரிந்து கொள்ளும் சூழ்நிலையில் அவரும் இல்லை. ஆனால் தங்கியிருந்த இடம், அவருக்கு அங்கு கிடைத்த அன்பான உபச்சாரம், முக்கியமான அவர் எதிர்பார்த்துருந்த சுத்தம் சுகாதாரம் கிடைத்த மகிழ்ச்சியில் சற்று மாறி இருந்தால் மறுநாள் சகஜநிலையில் உரையாட முடிந்தது,

என் சொந்தக்காரில் பயணித்த அவர், என்னுடைய அனுகுமறையும், நிறுவனத்தில் எதிர்பார்த்துருந்த விஷயங்கள் முழுமையாக திருப்தி படுத்தாவிட்டாலும், அவரின் மற்ற பார்த்து வைத்துருந்த நிறுவனங்களை விட தகுதியில் ஒரு படி மேலே இருந்ததால் அணைவருக்கும் சந்தோஷம்.

வந்தவர் நிறுவனங்களை பார்க்கும் பொருட்டு வந்ததாகவும், அடுத்த சீசன் முதல் தொடங்க உள்ளதாகவும் கூற எதிர்பார்த்துருந்தவர்களின் எண்ணம் தவிடு பொடியாகிவிட என் பாடு திண்டாட்டம் ஆகி விட்டது. சமாதானப்படுத்தி காத்துருந்தேன். பல மாதங்கள் கடந்து அங்கிருந்து வந்தது மின் அஞ்சல் செய்தி.

குளியறையில் வழுக்கி விழுந்து இடும்பு எலும்பு பாதிக்கப்பட்டு மருத்துவமணையில். இயல்பான நிலைக்கு வர குறைந்தது ஆறுமாதங்கள் ஆகும்,