Daily Archives: ஜூலை14, 2009

இன்னும் எத்தனை பேருடா இருக்கிங்க?

நான்கு வகுப்புகளும் தரையிலேயே அமர வைத்துவிட்டு ஐந்தாம் வகுப்பு நுழைந்தவர்களை திடீர் என்று பெஞ்சில் அமர வைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் புத்தகச் சுமையை வைத்துக்கொள்ள உள்ளே பெட்டகம் போன்ற ஒரு அறை அமைப்பு. ஓடி வந்து முதல் ஆளாக முதல் வரிசை முதல் பெஞ்ச் இடம் பிடித்ததோடு மற்ற இருவரான கோவிந்த ராஜனுக்கும், அனந்த ராமனுக்கும் இடம் பிடித்த சந்தோஷம். பிறகென்ன ஒன்று இரண்டு மூன்று ரேங்க் எடுத்துக்கொண்டுருக்கும் கூட்டணியை எந்த சக்தியால் பிரித்து விட முடியும்?

சரஸ்வதி வித்யா சாலை. வீட்டில் இருந்து அடுத்த சந்தில். அடிக்கும் மணியை வைத்து தான் வீட்டில் இருந்து வௌியே கிளம்ப அனுமதி கிடைக்கும். மற்றவர்கள் அணைவரும் பள்ளியின் முன்னால் உள்ள மகிழம்பூ மரத்தடித்தடியில் புளியங்கொட்டை வைத்து ஆட்டம் ஆடிக்கொண்டுருப்பார்கள். என்றைக்கோ ஒரு நாள் டாபாய்த்து விட்டு முன்னால் சென்று பை நிறைய “சம்பாரித்து ” வந்து விடுவதுண்டு. கிளிந்த டவுசர் பை பிரசவ வயிறாய் ஓரத்தில் முட்டி தவிக்கும் போது சகோதரி உதவிக்கு வருவார். காட்டிக்கொடுக்காமல் இருக்க ” லஞ்சம்” கைமாறி பெருத்த டவுசர் சிறுத்த டவுசராகி விடும்.

சுற்றி உள்ள கிராமத்தில் இருந்து வரும் அணைத்து பேர்களும் ஏதோ ஒரு வகையில் கதாநாயகனாகத்தான் தெரிவார்கள். எல்லாம் தெரிந்தது போல் பேசும் பேச்சுக்களும், நேற்று பார்த்த படத்தின் சாகஸமும் கேட்பதில் தான் திருப்திபட்டுக்கொள்ள முடியும். நிணைத்துக் கூட பார்க்க முடியாது.

பக்கத்தில் உள்ள ஜெய செல்வாம்பிகை டூரிங் டாக்கீஸ் ல் இருந்து கேட்கும் சீர்காழி கோவிந்த ராஜன், டிஎம்ஸ் ன் பக்தி பாட்டும் மட்டும் தான் காதுக்கு தெரியும்

மொத்த கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு சென்று மொத்தமாய் டர் டர் என்று கிழித்து எடுக்கப்படும் கனமான பள்ளி சீருடை கலரில் உள்ள சாக்குத் துணி. வீட்டில் இருந்து செல்லும் போதே முன்னால் போய் ஒருவர் அந்த துணிக்கடையில் தகவல் சொல்லி விடுவார். பிறகென்ன அந்த சின்ன பிரேமா ஸ்டோர் எங்கள் மொத்த கொள்ளவும் தாங்க வேண்டுமே? செல்வது துணியை பார்ப்பதற்க்கோ பிடிக்க வில்லை என்றால் வேறு மாற்றிக்கொள்ளவதற்கோ அல்ல. கடையில் முன்னால் அமர்ந்துருக்கும் “செல்வி” தையல்காரரிடம் அளவு காட்ட அட்டென்ஷன் பொஸிஷனில் ஒவ்வொருத்தராக வந்து நிற்க வேண்டும். அப்பா அழைக்க அடுத்தவர் வருவார். பாவாடை என்றாலும் அதே தான். டவுசர் என்றாலும் அதே தான்.

துவைக்கும் போது தான் அம்மா கதறுவார் ” ஏண்டா தூங்கும் போது மூத்திரம் வந்தால் எந்திரிச்சு தொலைக்க வேண்டியது தானே? பொணம் மாதிரி கணக்குது”.

என்ன செய்வது பயத்திற்குத் தெரியுமா? மூத்திரம் என்பதும் மலம் என்பதும். எதைக் கேட்டாலும் குற்றம். எங்கு நின்றாலும் குற்றம் என்ற போது தூக்கத்தில் வந்து அடக்க முடியாததை விடிவிளக்கு இல்லாத மொத்த இருட்டுக்குள் படுத்துருக்கும் இல்லை இல்லை அங்கங்ககே உருண்டு கிடக்கும் ஜிவன்களை தாண்டி போய் விடுவதற்குள் பல சமயம் வடிவேல் சொன்ன ” குத்தச்சொன்னா டேங்கை பஞ்சர் ஆக்கிவிட்டியே ” கதை தான். என்ன சற்று நேரம் குளிரும். விட்ட தூக்கம் தொடரும் போது நாற்றத்துடன் அதுவும் காணாமல் போய்விடும்.

படிப்பது மட்டும் தான் தலையாய கடமை. சகோதரிகள் கண்ணாய் இருப்பார்கள். படிப்பதிலும், படிக்காதவர்கள் பற்றி பட்டியல் தயாரிப்பதற்கும். இரவு உள்ளே வந்தவர் வருகை பதிவேடு முடிக்க ட்ரம்ஸ் சிவமணி கச்சேரி நடக்கும். தெரியாமல் இருக்கட்டும் என்று ராஜதந்திரமாக இருட்டு குதிருக்குள் மூலையில் சென்று குந்திவிட காலால் துலாவி அதற்கு மேல் கையில் வைத்துள்ள குச்சியால் இனம் கண்டு பதுங்கு குளிக்குள் கண்டெடுத்த சதாம் போல் இழுத்தடிக்காமல் தீர்ப்பு உடனே வாசிக்கப்படும்.

எந்த அழுகையும் வௌியே கேட்காது. எதற்கும் ஆதரவு கரம் கிடைக்காது. அடுத்தவர் அடுத்த முறை மாட்டும் போது எப்படி முன்னால் வந்து சப்போர்ட் என்ற பெயரில் சாத்து வாங்க முடியும்? படிப்பு முக்கியம் என்றால் அதைவிட முக்கியம் அன்றாட வாழ்வில் வழங்கப்படும் கடமைகள்.

விடுமுறை என்றால் வீட்டு வேலை என்று அர்த்தம். கடைக்குச்செல்ல வேண்டும் ஒட்டடை கம்புகளுடன். கிடைக்காத சைக்கிளை சபித்துக்கொண்டே ஆறு கிலோ மீட்டர் நடந்தே வயலில் சென்று நாற்று நட்டவர்களின் கணக்கு வாங்கி வரவேண்டும். வட்டி தரவேண்டியவர்களுக்கு முதல் நாளே தகவல் சொல்லி விட்டு வரவேண்டும். வாங்க மட்டும் அனுமதி கிடைக்காது. ஓன்று தொலைத்து விடுவோம் அல்லது அமுக்கி விடுவோம். காரணங்கள் எதுவுமே புரிந்தது இல்லை. காரணங்கள் கேட்க முடிந்தால் தானே?

அம்மா அடுக்களைக்குள் அல்லாடிக்கொண்டுருக்க அடுத்துப் பிறந்த குழந்தையின் அழுகைகள் எப்போது பக்குவமாய் தூக்க முடிந்த சகோதரிகளின் கையணைப்பின் மூலம் தான் முடிவுக்கு கொண்டு வரப்படும். ஆனால் அவர்களின் சின்னச்சின்ன ஆசைகள் கூட பேராசையாய் ஆக்கி புறக்கணிக்கப்பட்ட சோகங்களுடன் புத்தகப்பையை சுமந்து கொண்டு வருவர்.

ஓவ்வொரு வாரமும் சந்தைகக்கு வருகின்ற கிளிப்,டேப்,பவுடர் டப்பா போன்ற சமாச்சாரங்கள் மாட்டி கையில் தூக்கி வருகின்ற அந்த வயதான பெரியவர் தான் அவர்களின் ஆதர்ஷண கதாநாயகன். வாசல்படிக்கு வௌியே செல்ல அனுமதி கிடைக்காத சோகத்தில் வௌியே கடந்து போகும் அவரின் வித்யாச சப்தம் கேட்டு கதவு கம்பிகளில் முகம் புதைத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கண்களை மட்டுமே காட்சிப்பொருளாக்கி கவர்ந்தவைகள் கிடைக்காத போதும் பார்த்த சந்தோஷத்தில் அந்தக் கதவுக் கம்பிகளில் தான் அவர்களின் கண்ணீர் துளிகள் சேர்த்து வைக்கப்படும்.

பள்ளிவிட்டு திரும்பியதும் பக்குவமாய் கலந்து வைக்கப்பட்டுருக்கும் காபி. அரை லிட்டர் பாலில் மூன்று லிட்டர் தண்ணீர். சற்று தூக்கலான கருப்பட்டி. சுவையா? அது எப்படி என்றே தெரியாத போது அதைப்பற்றி என்ன கவலை? வௌியே சென்று எல்லாவற்றையும் குடித்தவர்களுக்குத்தானே வித்யாசம் தெரியும். உலகத்தில் தேவர்கள் குடிக்கும் சோம பாணம் இது தான் என்று சொல்லப்பட்ட கதை வழியே கண்டு ருசித்த பாணம் எப்படி வாந்தியை வரவழைக்கும். இன்னும் கொஞ்சம் ஊற்றுமா என்று கேட்கும் தம்பி தான் அன்றைய வில்லன். காரணம் கலங்கி நிற்கும் கடைசி காபியை எல்லோரும் சென்றவுடன் எடுத்துக்குடிக்கலாம் என்று நிணைத்துக்கொண்டுருப்பவனுக்கு அவன் எதிர்பார்ப்பு எரிச்சலை உருவாக்கியதில் ஆச்சரியம் இல்லை.

தேவியர்கள் தினமும் சாப்பிட உட்காருவதே ஐ.நா. சபை கூடுவது போலத்தான். கூடுவது அரிது. கூடினால் வீட்டோ அதிகாரம் பெற்ற துணையாள் இருக்கும் போது நான் என்ன செய்து விட முடியும்? அம்மா இன்றைக்கு ரெட் கலர் சட்னி என்று ஒருத்தி, மற்றொருத்தி அம்மா க்ரீன் கலர், கடைசி ஓயிட் கலர். தினமும் இங்கு சாப்பிட உட்காரும் போதும் ஒரே ரணகளமாய் இருக்கும். அவர்களைப்பொறுத்தவரையில் மிளகாய், புதினா, தேங்காய் எல்லாமே அவர்களுக்கு பிடித்த கலர் வழியே தான். உடைகளும், உபயோகிக்கும் பள்ளி சமாச்சாரங்களும் எல்லாமே அவர்களின் தேர்வு தான்.

கிளம்ப வைக்க வேண்டும் என்பதற்காக அன்று காலை முதல் அநியாயத்திற்கு நல்லவளாய் இருப்பாள் மனைவி. கார் ஓடத் தொடங்கி சற்று நேரத்தில் ஒவ்வொருத்தியாய் அவர்களின் கொஞ்சல் மொழியும் கெஞ்சல் மொழியும் காதுக்குள் வந்து விழும். கடைக்குச் சென்று விட்டு வௌியே வரும் போது கொண்டு போன பர்ஸ் சுத்தமாக கழுவி சுத்தம் செய்து துடைக்கப்பட்டுருக்கும். என்ன செய்வது விட்டுக்குள் உள்ளே வந்ததும் சந்தோஷ மனைவி போட்டுத்தரும் அந்த பில்டர் காபி மட்டும் தான் எனக்கு கிடைத்ததாய் இருக்கும்.

பலாப்பழக்கடை ரவி கையில் வைத்துள்ள சின்னக்கத்தியை காட்டியே எறும்பு தின்றது போக ஓட்டைப்பையில் மீதம் இருக்கும் கருப்பட்டியை மிரட்டி வாங்கி விடுவான். என் ஜாதிக்காரன் என்ன செய்வான் தெரியுமில்ல? என்ற பன்னீர் செல்வம் எழுதாத வீட்டுப்பாடத்தை என்னை வைத்து எழுதி வாங்கி விடுவான். இலங்கை அகதியாய் உள்ளே வந்த நண்பன் பேசும் அத்தனை அரசியல் திரைப்படச்சமாச்சாரங்கள் முடிவுக்கு வரும் போது என் பையில் இருக்கும் பத்துப்பைசா அவன் கைகளில் இருக்கும்.

ஆனால் இத்தனையும் மீறி நேர் அடுத்த மேஜையில் அமர்ந்துருக்கும் அன்புக்கரசி பார்க்கும் பார்வையில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். புரிந்தால் தானே? புரிந்த போது என்னுடைய இரண்டாவது ரேங்க் அவளிடம் சென்றுருந்தது.

என்னை விட மோசம் கோவிந்தனும் அனந்தனும். அவர்கள் பூனூலை பாதுகாத்துக்கொள்வதே அன்றாட தலையாய கடமை. உள்ளே என்ன தான் ஒளித்து வைத்துருந்தாலும் சட்டையில் முதல் பட்டன் இல்லாத போது எவனோ ஒருவன் கைக்கு அது விளையாட்டுப்பொருளாகவேத் தெரியும். என்னைத் தவிர அவர்கள் யாருடனும் அதிகம் பேசுவதே இல்லை. உள்ளே பாடங்கள் நடக்காத போதும் அவர்கள் பார்வை முழுவதும் வேறொரு வீட்டுப்பாடத்தில் கவனமாய் இருக்கும். எங்கு தொடங்கினாலும் கடைசியில் பாடத்தில் தான் வந்து தான் முடியும். எனக்குத் தான் இரட்டை வேடம். இவர்களையும் தொடர்பில் வைத்துக்கொண்டு அவர்களின் ஆட்டத்திலும் அவ்வப்போது கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.

முரட்டுப் பையன்கள் வகுப்பு தலைவராக இருந்தாலும் கடைசியில் வௌ்ளைத்தாளில் பெயர் எழுத வேண்டும் என்ற போதெல்லாம் இவர்கள் தயவு தான் முதலில் நாடப்படும். இல்லை என்றால் எப்படி என் பெயர் அதில் ஏறாமல் தவிர்த்து இருக்க முடியும்?

வீட்டுக்கு முன்னால் பெரிய களம். சிமெண்ட் தரை. அரிசி ஆலையின் முன்னால் போட்டுருப்பது போல். வயலில் இருந்து வரும், காய வைக்கும் அரிசி, பருப்பு, நெல், கம்பு சோளம், எள்ளு, கடலை போன்றவைகள். காக்கைக்கு காவலாக காத்து இருக்கும் என் கைகளில் இருக்கும் புத்தகங்களில் எப்படி கவனம் செல்லுத்த முடியும்? பரந்து விரிந்த தோட்டத்தில் காய்த்து தொங்கும் பலாப்பழமும், கொய்யப்பழமும் வாடை மூக்கை துளைக்கும் போது. கனிந்து கீழே விழுமே தவிர மேலே ஏற அனுமதி இருக்காது. ஏறி கால் கை ஓடிந்து விட்டால். கட்டுப்போடக் கொடுக்கும் காசை மிச்சப்படுத்த அப்பா வைத்துருந்த சிக்கன கட்டுப்பாடு.

ஆசைகளை மட்டுமே அன்றாட வாழ்க்கையாய் வைத்து வௌியுலகம் பார்க்காத சித்தார்த்தன், வௌியுலகம் கண்ட போது., உணர்ந்த போது வௌியிட்ட “ஆசையே அழிவுக்கு காரணம்”, அப்பா எப்போதும் படிக்கும் தினமணி மட்டும் ஏதோ ஒரு சமயத்தில் உணர்த்தியிருக்கும் போல.

தேவியர்கள் முதன் முதலாய் பள்ளிக்குச் சென்றது முதல், ஒவ்வொரு வருட முதல் நாளும் புகைப்படக்கூடத்திற்கு அழைத்துச்சென்று பள்ளிச் சீருடையுடன் எடுக்கும் புகைப்படமும், அவர்களின் அன்றாட குறும்புகளும், பள்ளியில் இருந்து வௌியே வந்து உள்ளே உள்ள பூங்காவில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டுச் சமாச்சாரங்களில் உட்கார்ந்துக்கொண்டு வௌியே வர அடம்பிடித்து என் பொறுமையைச் சோதிக்கும் தருணங்களுமாய் என் கைபேசி வீடியோவாய் சேமித்து உள்ள போட்டோ பக்கெட் ஆல்ப தளத்தில் உள்ளவைகள் என் மணைவியை பொறுத்த வரையில் வினோத “புரிந்து” கொள்ள முடியாத சமாச்சாரம்.

உள்ளே நுழைந்த ஆசிரியர் வரிசையாக எல்லோரையும் பார்த்துக்கொண்டே வந்தார். “பசங்க” படத்தில் உள்ள ஆசிரியர் போல் “எல்லோரும் உங்கள் பெயர், அம்மா பெயர், அப்பா பெயர், வீட்டைப்பற்றிய விஷயங்களைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னார். என் முறை வந்ததும் என்னைப்பற்றி சொல்லி குடும்பத்தை சொன்னதும் அவர் கேட்ட கேள்வி

” வருஷத்திற்கு வருஷம் ஒவ்வொரு ஆளா வர்றீங்க? இன்னும் எத்தனை பேருடா இருக்கிங்க? .

(அது ஒரு கனாக் காலம் சொந்தக் காரர் (http://www.trichisundar.blogspot.com/) என் சொந்தமாகி விட்டவர், சுந்தரக் கனவுகளை சுமந்து மற்றவர்களை வழிநடத்தி ராமனாக வாழ்ந்து (என்று நினைக்கின்றேன்) கொண்டுருப்பவர். மணி சங்கர் ஐயர் முயற்சித்து மூக்கொடிந்து வௌியேறி, தியோரா அதைப்பற்றி பேசாமல் தன்னுடைய பதவியை காப்பாற்றிகொள்ளும் அனைத்து இந்திய மக்களின் பைப்லைன் திட்டத்தை செயல் படுத்தக்கூடிய நாட்டில் வாழ்ந்து கொண்டுருப்பவர், கொடுத்த உற்சாகத்தில்/வேண்டுகோளின் படி இது எழுதப்பட்டது.)