Daily Archives: ஜூலை10, 2009

மாறிய வீடுகளும் மாறாத மணைவியும்…

பேரூந்தில் இருந்து இறங்கியதும் ஓட்டமும் நடையுமாக ஓடினேன். தங்கியிருந்த வீடு மிக அருகில் என்றாலும் அவர்களை வரச்சொன்ன நேரம் இரண்டு மணி நேரம் கடந்துருந்தது. பதட்டமாய் ஓடினேன். காக்க வைப்பது பிடிக்காது, அலுவலகமாக இருந்தாலும் சொந்த விஷயமாக இருந்தாலும். தொடக்கத்தில் இருந்தே கடைபிடித்து வரும் பழக்கம். வந்தவர்களுக்கு வழி சரியாகத் தெரிந்து இருக்குமோ இல்லையோ? பல வித குழப்பம். தூரத்தில் இருந்து பார்த்த போது ஓருவர் மட்டும் மூடி இருந்த கதவுக்கு அருகே நின்று கொண்டுருந்தார். மற்றொருவர்?

வீட்டுக்கு அருகில் சென்றதும், என் கதவை நோக்கி நடந்ததைப்பார்த்து அருகில் இருந்த நிறுவன இருட்டுப்பகுதியில் இருந்த பெரியவர் ஒருவரும் என்னை நோக்கி நகர்ந்து வந்தார். இளமையான தோற்றத்தில் இருந்தவர் சிரித்துக்கொண்டே அறிமுகப்படுத்திக்கொள்ள பெரியவர் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொன்னார்.

இருவரையும் அழைத்துக்கொண்டு விட்டிற்குள் நுழைந்தேன். நுழைந்ததும் எப்போது போல் மின் விளக்குகளை போட்டவன், டேப்ரிக்கார்டர் இணைத்துருந்த பட்டனைப்போட காலையில் விட்ட இடத்தில் இருந்து உன்னிகிருஷணன் ” அபிஷேகத்தில் ” உருகி பாடிக்கொண்டுருந்தார். பாடல் ஒலிக்க ஆரம்பித்தவுடன் இருவரும் சிரித்து விட்டனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

” பக்கத்து விட்டுக்காரர் உங்களைப் பற்றி சொன்னது சரியாகத்தான் இருக்கிறது ” என்றனர். என்னடா இது வம்பாப்போச்சு? ஏற்கனவே அந்த நபருக்கும் நமக்கும் சுத்தமாக ஆகாது. வாசலை ஓட்டி ஐந்து அடியில் உள்ள அவர் வாசலில் நின்று கொண்டுருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. அந்த அளவிற்கு “சுமூக” உறவு. என்ன வத்தி வைத்துருப்பான்?

பிறகென்ன? முதன் முதலில் மாப்பிள்ளையை நேரிடையாக பார்க்க வந்தவர்கள் எதிரியையா சந்திக்க வேண்டும்? எல்லாம் போச்சு? என்று குழம்பிக்கொண்டே குளியல் அறைக்குள் சென்று எல்லாம் முடித்து விட்டு வௌியே வந்த போது அமைதியாய் இருந்தார்கள். அவசரமாய் வாங்கிக்கொண்டு வந்துருந்த பாலை வைத்து டீ போட்டு கொடுத்து விட்டு அவர்கள் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டுருந்தேன். பேசி முடித்த போது இரவு பத்து மணி. அந்த நேரத்தில் அவர்கள் பயணிக்க பேரூந்து இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. என்னிடம் பைக் ஏதும் இல்லை. அலுவலகம் எல்லாம் பேரூந்து வழியாகத்தான். வயிற்றுக்கும் கொள்கைக்கும் போராட்டம் நடந்து கொண்டுருந்த காலம்.

கடந்த இரண்டு மாதங்களாக எனக்குத் தெரியாமலே போராடிக்கொண்டுதான் இருந்துருக்கிறார்கள். குடும்பத்துக்கும் எனக்கும் முழுமையான தொடர்பு துண்டிக்கப்படடுருந்த காலங்கள். சகோதரிகள் என்னுடைய வயதையும் அதற்குண்டான குறைக்காத பிடிவாதம் குறித்து அவவ்போது கடிதம் மூலம் அரற்றிக்கொண்டுருந்தார்கள். மச்சான் தொடர்பு மூலம் இவர்கள் உள்ளே வந்து, விடாது துரத்தி துரத்தி குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்து விட்டு கஷடப்பட்டு எனது முகவரி கிடைத்து வந்துள்ளார்கள்.

அம்மா மிகத் தௌிவாக விளக்கியிருந்தார்கள். ” திருப்பூரில் இருக்கின்றான். என்ன செய்கின்றான்? என்ன வேலை செய்கிறான்? எந்த இடத்தில் இருப்பான் என்று எங்களுக்குத் தெரியாது? உங்களுக்கு வேண்டுமானால் போய் பார்த்துக்கொள்ளுங்கள்?” என்ன ஒரு அறிமுகம்? குழம்பும் நிலைக்குப்போய் பயத்தின் உச்சிக்கே சென்றுயிருக்கிறார்கள்.

கிடைத்த இரண்டு நிறுவன தொலைபேசி எண்களை வைத்து அங்கு பணிபுரிந்த கண்களுக்கு தெரியாத அந்த நண்பர் கொடுத்த விபரங்களை வைத்து கண்டு பிடித்தே வந்துவிட்டார்கள். மச்சான் சொல்லியிருந்ததை வைத்து பயத்துடன் காத்துருந்தேன். எந்த நிறுவனத்தில் நுழைந்து என்ன விசாரிப்பார்களோா? வெறும் புஸ்வானமா? இல்லை மண்ணை ஊடுருவிச்சென்று புகைபரப்பி மயக்கத்தை நரம்பு மண்டலத்தையும் தாக்கும் கோத்தபய ராஜபக்ஷே விஷக்குண்டுகளா?

அவர்கள் சிரித்ததும் மேலும் அதிகமானது.

“நீங்கள் ஏற்கனவே பணிபுரிந்த பக்கத்தில் உள்ள தோட்டத்ததில் இருந்த நிறுவனத்திற்கு சென்றோம். சரியான விபரங்கள் கிடைக்கவில்லை. மேலும் மேலும் கிடைத்த தொலைபேசி எண்களும் சோர்வைத்தான் தந்ததால் இங்கு அருகில் இருக்கும் உங்கள் பக்கத்து வீட்டு நிறுவன நிர்வாகி தான் எங்கள் விபரம் கேட்டு உள்ளே அழைத்துச்சென்று ஆசுவாசப்படுத்தினார் “. இதயம் துடித்து துடித்து நிற்பது அவர்களுக்குப் புரியாமல் தொடர்ந்தனர். அவர் இங்கு தான் என் வாசலின் அடுத்த வாசலில் இருக்கிறார். என்ன வேலை செய்கிறார்? எந்த நிறுவனம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த ஒரு வருடத்தில் யாரும் அவரை தேடி வந்து பார்த்ததே இல்லை. உள்ளே வந்த போது சில மாதங்கள் வந்ததோடு சரி. ஆனால் அவர் உள்ளே இருந்தால் எப்போதும் ஏதாவது ஒரு பக்திப்பாட்டு ஓடிக்கொண்டுருக்கும். அந்தப்பாடலை வைத்து தான் அவர் உள்ளே இருக்கிறார் என்பதை புரிந்துகொள்வேன். நீங்கள் தான் பேசிப் பார்த்து விட்டு புரிந்து கொள்ள வேண்டும் “.

அலைந்து திரிந்து அவமானப்பட்டு அல்லல்பட்டு வந்தவன் எங்கு போகமுடியும்? குடித்த பானங்கள் ஏற்கனவே வயிற்றை பஞ்சர் ஆக்கியிருந்தது. நிர்கதியாய் இருந்தவன் நீயே கதி? என்று சரணாகதி அடைந்து ஆன்மிகத்தின் அத்தனை கதவுகளையும் திறந்துகொண்டு, தங்கியிருந்த விடுதியின் அணைத்து தோழர்களின் ஆட்டங்களையும் ரசிக்க மனமில்லாமல், வீட்டு பாட்டி இடம் ” நான் மிக நல்லவன். மிக மிக நல்லவன் ” என்று பத்து நாட்கள் படியேறி வீட்டின் பெயர் போல் நம்பிக்கையாய் வாழ்க்கையை தொடங்கியிருந்தேன்.

கீழே ஆறு வீடு. மேலே ஆறு வீடு. அணைத்து வீட்டிலும் குடும்பமும் குடித்தனமாய். வெறும் தரையில் படுத்திருந்த என்னை வினோதமாக பார்த்தார்கள். வித்யாசமாய் ஏதாவது உள்ளே நடக்கும் என்று விடிய விடிய பார்த்துக்கொண்டுருந்தார்கள்.

நல்ல நேரம் தொடங்கும் போது பாம்பு மீது ஏறிப்போனாலும் நம்மை விட்டு பின்னால் வருபரைக் கடிக்கும். அதே, நேரம் மாறும் போது கயிறு தானே என்று நினைத்ததும் விஷ சர்ப்பமாக தனது வீர்யத்தைக்காட்டும். மாமனராக வரப்போகின்றவரும் அவரின் மூத்த மாப்பிள்ளையும். மாப்பிள்ளை திருப்பூருக்கு அருகில் உள்ள மிகப்பெரிய தமிழ்நாட்டு நிறுவனத்தில் சமூகம் எதிர்பார்க்கும் அணைத்து தகுதிகளுடனும் கூண்டுக் குருவியாய் வாழ்ந்து கொண்டுருப்பவர். முதல் திருப்பூர் பயணம் என்பதால் துணையாய் இணையாய் வந்துருந்தார்கள்.

மாமனார் இரண்டு முறை ஊருக்கு வந்துருந்த போதே என்னைப்பார்க்காமலே தகுதியான மதிப்பெண் பட்டியலில் சேர்த்து இருந்தார். குடும்ப சூழ்நிலை, வீட்டின் விஸ்தாரம், மொத்த ஊரிலும் குடும்பத்துக்கு இருந்த பெயர், அப்பாவுக்குப் பிறகும் விட்டுக்கொடுக்காத கூட்டுக்குடித்தன வாழ்க்கை முறை, அம்மாவின் அப்பாவிப்பேச்சு எல்லாமே அவரை ஒரு முடிவுக்கு வரச்செய்துருந்தது. ஆனால் என்னைப் பற்றிய மதிப்பீடுகள் தான்?

அவரின் கருத்து மிக எளிது. நல்ல குடும்பம், பரம்பரியமான பழக்கவழக்கங்கள், பழைமையை விடாமல் நடைமுறை ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாத குடும்பத்தில் இருந்து போனவன் நிச்சயம் தப்பாய் இருக்க மாட்டான். ஆனால் இதற்கு மேல் நம்முடைய பெண் இந்த கூட்டுக்குடித்தனத்தில் வாழத் தேவையில்லை. நாம் நிலக்கரி தோண்டி மின்சாரத்தை கொடுத்து நிர்வாகத்திற்கு கிடைத்த அபரிமிதமான லாபத்தொகை தந்த சுகம் அணைத்தும் வாழ்வில் கிடைத்ததை அனுபவித்த கடைக்குட்டியை கூட்டுக்குடித்தன குட்டிச்சுவரிலா தள்ள முடியும்? நல்ல படியாக முடிந்தால் நிச்சயம் வாழ்க்கை திருப்பூரில் தான் இருக்கும். நல்லது கெட்டது எல்லாமே அவர்களுக்குள்ளே முடிந்து விடும். இதை விட வேறு என்ன வேண்டும்?

ஆனால் குடும்பமே எதிரியாய் கங்கணம் கட்டி கட்டியம் கூறும்போது குழப்பம் வராமால் என்ன செய்ய முடியும்? மனந்தரளாத விக்ரமாதித்னாய் மாப்பிள்ளை துணை கொண்டு இங்கு வந்து விட்டார்.

பேசிமுடித்து விட்டு செல்லும் போது வரட்டுமா மாப்பிள்ளை? என்றதும் எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை?

சவால் வாழ்க்கை அன்று சதிராடிக்கொண்டுருந்தது. அவசரப்பட்டு எடுத்த முடிவின் அலங்கோலத்தை முழுமையாக அனுபவித்துக்கொண்டுருந்தேன். காயங்கள் அதிகமாகி தப்பவே முடியாமல், இனிமேல் இங்கு இருக்க வேண்டாம் என்று வீட்டில் சொல்லாமல் எடுத்துக்கொண்டு சென்ற பணத்தை வைத்து மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பாலித்தீவு, என்று இரண்டு வருடங்கள் முறையாய், முறையற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட்டு உள்ளே வந்த போது சீண்ட ஆள் இல்லை. எதிர்பார்த்துருந்த பெரிய சூட்கேஸ்களும், கத்தைகளும் இல்லாமல் அதே மஞ்சள் பையுடன் உள்ளே வர அம்மா கேட்டார் ” ஏண்டா உனக்கு மட்டும் சாவே வரமாட்டுது?

மூத்த அண்ணி வீட்டில் இருந்த போது, அவர்கள் அமைதியாய் சொன்ன அறிவுரை சற்று அமைதிப்படுத்தியது. ஏற்கனவே இங்கு தங்கியிருந்த பணிபுரிவருக்காக மட்டும் கட்டியிருந்த அறையில் நுழைத்துக்கொண்டு அடுத்த வாய்ப்புக்காக அலைமோதிய போது அந்த நிறுவனத்தின் விளம்பரம் பார்த்து நடந்தே சென்று அடைந்தே போது அந்த நிறுவனத்தில் கூடியிருந்த கூட்டம் பயத்தை உருவாக்கியது.

எந்த நிறுவனத்திற்குள் சென்றாலும் காத்து இருக்கும் தருணங்களில் நான் செய்யும் முதல் வேலை, அந்த இடத்தில் வேலை செய்து கொண்டுருக்கும் காவலாளி, கூட்டுபவர், மற்ற சுத்த சுகாதரா வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டுருக்கும் சராசரி மதிப்பில் கீழே இருப்பவர்களுடன் சிநேகம் பிடித்து பேசுவிடுவதுண்டு.

அவர்களுக்குத்தான் அங்குள்ள அத்தனை அந்தரங்கங்களும் அத்துப்படியாய் இருக்கும். நட்சத்திர ஓட்டலின் ஆரம்பர வரவேற்பறையும், முன்னால் காட்சிப்பொருள் போல் நிறுத்தி வைக்கப்பட்டுருக்கும் பல விதமான உயர் ரக வாகனங்களுக்கும் பின்னால் உள்ள சூத்திரம் புரியும்.

ஏதோ ஒரு இறக்குமதியாளரின் திருப்திக்காக நடை முறை சாத்தியங்களை மீறி வாரி இறைத்துருப்பார்கள். வந்த இறக்குமதியாளர் அது நொட்டை இது நொட்டை என்றதும் ஒரு கால கட்டத்திற்கு மேல் போராட முடியாமல் பொள்ளாச்சி மகாலிங்க ஆட்களும், வங்கி ஆட்களும் நிறுவனத்தை குத்தகை எடுத்து திண்டுக்கல் சமாச்சாரத்தை கொண்டு வந்துருப்பார்கள்.

எதைப்பார்த்தும் நம்ப முடியாது. அடுத்த நாள் எதை நோக்கி நகர்த்தும் என்பது புரிபடாத மூலக்கூறாகவே, புத்தகத்தை மூட நினைக்கும் மாணவனாக நகர்த்திக்கொண்டே செல்லும். இன்று வந்த பத்து லட்சம் நாளை பத்து கோடிக்குள் சிக்க வைத்து விடும். உழைப்பு, தரம், நிர்வாகத்திறமை ஆனால் எல்லாவற்றுக்கும் மேல் ஜாதக கட்டங்கள் அல்லது அதிர்ஷடம்.

பெரும்பாலும் கீழ்மட்ட ஆட்கள் தஞ்சாவூர் சுற்றி அல்லது மதுரையைச் சுற்றி நூறு கிலோமீட்டர்க்குள் தான் அடங்கி இருப்பார். ஒவ்வொருவர் பின்னாலும் ஒவ்வொரு கதை. பேசிமுடிந்ததும் புரிந்தது. மூழ்கியே விட்ட கப்பல். தரைதட்டிய கப்பலை முதலில் நிறுத்த வேண்டும். பிறகு வௌ்ளோட்டம் அதன் பிறகு தான் பயணத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குச் சென்றால் அங்கு ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குண்னு ஆடுச்சாம்.

வேறு வழியே இல்லை. ஒரே ஒரு மாதம் சம்பளம் கிடைத்தாலும் போதும். மூன்று மாதங்களுக்கு சாப்பாடு பிரச்சனை இல்லை. நிறுவனத்தில் கிடைக்கும் வண்டியைக்கொண்டு மற்ற இடங்களுக்குச் செல்லவும், பழைய பழக்க உறவுகளை புதுபித்துக்கொள்ளவும். முடிந்தால் வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.

ஆடித்தான் பார்த்து விடுவோம். கிடைத்தால் ரம்மி. இல்லாவிட்டால் மறந்து போன அனுபவத்தை புதுப்பிக்க உள்ளே கேட்கும் கேள்விகள். ஆனால் எந்த பயமும் இல்லை. படபடப்பும் இல்லை..

காரணம் அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் டை கட்டி, சிலர் கோட் போட்டுக்கொண்டு, பூத்த வியர்வையை ஒத்திக்கொண்டு வரிசையாக போடப்பட்டுருந்த அணிவகுத்துருந்த நாற்காலிகளில். இருக்கைகள் இல்லாததால் அடுக்கி வைக்கப்பட்டுருந்த பெட்டிகள் மேல் ஒரு ஓரமாக சாய்ந்து கொண்டுருந்தேன். நிறுவனம் முழுக்க எங்கு பார்த்தாலும் பெட்டிகளாகத் தான் இருந்தது. காரணம் புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் எங்குமே இருக்காது. அதற்குள் அது பயணிக்க வேண்டிய பாதை கப்பலா அல்லது விமானமா? என்று முடிவு செய்யப்பட்டுருக்கும்.

ஆனால் இங்கு? நமக்கென்ன ஒரு மாத சம்பளம் தானே?

இறைவன் முடிவு செய்திருந்த முடிவின்படி என்னுடைய சுய விபர தாள் சொல்லி வைத்தாய் போல் கடைசியாய் இருந்து தொலைக்க எல்லோரும் சென்றபிறகு கடைசி ஆளாய் உள்ளே நுழைந்தேன். நீள் வாக்கில் அமைந்திருந்த அந்த பெரிய மர மேஜை முன்னால், நன்கு குளீரூட்டப்பட்ட அறையின் மூன்று கணவானகள். தௌிவாகவே சுயவிபரம் தயாரித்து இருந்தேன். இத்தனை அனுபவங்களும், நேற்றுவரை தொடர்ந்து கொண்டுருக்கும் போலிப்பெயர் நிறுவனத்தின் எனக்குண்டான பங்களிப்பும் என.

படித்து முடித்து நிமிர்ந்தவர்கள் வீசிய கேள்விகள் அணைத்தும் ஏதோ மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆள் எடுப்பதாக நினைத்துக்கொண்டு, கேட்ட அனைத்தும் அபத்தமாகவே தெரிந்தது. நடைமுறைக்கும் அவர்கள் கேள்விக்கும் பெரிய வித்யாசம். ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது “இவர்கள் இந்தத் தொழில் தெரிந்தவர்கள் அல்ல. ஏதோ ஒரு வகையில் நிர்வாகத்தின் கைத்தடிகள்”. புரிந்தால் என்ன?

நான் இருக்கும் சூழ்நிலை அவர்களுடன் விவாதம் பண்ணவா முடியும்? பத்து நிமிடம் ஆங்கிலத்திலே தொடர்ந்தவர்களிடம் மென்மையாகக் கேட்டேன். “நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? “. அப்போது தான் அவர்களும் சகஜ நிலைமைக்கு வந்துருந்தார்கள். இயற்கை உபாதைகள் வேறு. ஓரே இடத்தில் குளிருக்குள்ளே இருந்த அவஸ்த்தை.

” நல்ல இறக்குமதியாளர் கண்டுணர்ந்து, உருவாக்கி, துணை கொண்டு அலுவலம் மற்றும் உற்பத்தியை தன்னுடைய சொந்த திறமையால் “இருக்கும்” சூழ்நிலையை சமாளித்து முன்னோக்கி நகர்த்த வேண்டும். உங்களால் முடியுமா?.

விதியின் விளையாட்டில் அவர்களுடைய முடிவு என்னுடைய மறு ஜென்மம் என்று எழுதிவைத்துருக்கும் போல. அடுத்து ஒரு மணி நேர நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொழில் ரீதியான அனைத்து தகுதிகளும் தேவைப்படும் அளவிற்கு இருப்பதை உணர்ந்து உத்தேசமாக நான் கேட்ட அதிகப்படியான சம்பளத்தை மறுப்பே இல்லாமல் ஏற்றுக்கொள்ள வானத்தில் இருந்து பூமாரி பொழிந்த அனைத்து தேவாதி தேவர்கள் தூவிய பூமழையில் நனைந்து கொண்டே புனர்ஜென்மத்தின் இரண்டாம் பகுதியில் தொடங்கிய முதல் இரண்டு நாட்களுக்குள் அனைத்து பிரச்சனைகளும் புரிந்து விட்டது.

முதல் போட்டவரால் கவனிக்க முடியாத அளவிற்கு மற்ற தொழிலின் நிர்ப்பந்தம். மனைவியின் தம்பியை கவனிக்கச் சொன்னவர் அவரோ பணிபுரிவர்கள் அனைவரையுமே மனைவியாகக், சுருதி சுத்தமாய் அது தொடர்பான தினசரி நடவடிக்கைகள் அமைந்துவிட கப்பல் தரை தட்டாமல் ஜேம்ஸ்பாண்ட் கப்பல் போல் சீறிக்கிழித்துக்கொண்டா போகும்?

நுழைந்த ஒரு வாரமும் ஆள் இல்லாத காட்டுக்குள் புதைகுழிக்குள் சிக்கியவனின் கதை. கத்த முடியாது, கதறக்கூட முடியாது. சத்தம் கேட்டு மற்ற மிருகங்களும் சுற்றி வரவழைத்து விடும். இரவு ஒரு மணிக்கு உள்ளே நுழைந்து மறுபடியும் எட்டு மணிக்குள் உள்ளே நுழைய உண்ணாவிரத்தை மட்டுமே அறிமுகப்படுத்தி வைத்துருந்த வயிற்றுக்கு தெரியும் சட்டைப்பையின் “தகுதி”.

களைப்பும் உழைப்பும் கொடுத்த ஆயாசத்தை விட பதவிக்குண்டான தகுதிகளை தன்னகத்தே கொண்டு வர உள்ளே இருந்த மாபியா கும்பலை சமாளிக்க வேறு வழியே இல்லாமல் தான் அன்றைக்குத் தொடர்ந்த கற்றுணர்ந்த “அரசியல்” விளையாட்டுகள் வாழ்க்கையை ஒவ்வொரு படியாக அழைத்துச்சென்றது,

பொறுப்புகள் மொத்தமாக கைக்கு வந்த போது அத்தனை சாக்கடைக்கழிவுகளையும் சுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை. சுத்தம் செய்யும் போதெல்லாம் வந்த பல பக்கங்களில் இருந்து முகம் தெரியாத சத்தங்கள் தூங்கும் நடு இரவு கூட தொலைபேசி வழியாக வந்து அவஸ்த்தைபடுத்தும். ஊமை கண்ட கனவு போல் எனக்குள்ளே அத்தனையும்.

ஒன்று முடிந்தால் அடுத்து ஒன்று காத்துருக்கும். இவையெல்லாம் போக உள்ளே அடுக்கி வைத்துருந்து மூன்று கோடிக்காண எடுக்கப்படாத, வேண்டாம் என்று புறக்கணிக்கப்பட்ட பெட்டிகள். உள்ளுர் சந்தையின் மதிப்பில் ஐம்பது லட்சத்துக்கு கூட அலை மோத வேண்டிய சூழ்நிலை.

பாருங்கள்? ஓருவரின் தவறு, சுற்றி இருந்த சில்லறை ஜால்ராக்களுக்கு மட்டும் சாதகமாக இருந்தது. அதுவும் தொடர்ந்து கொண்டுருந்தது. அதுவே முடிவுக்கு வந்த போது அந்த நிறுவனத்தைச் சார்ந்து இருந்த முன்னூறு பணியாளர்களுக்கும் பிரச்சனை. சிலருக்கு வீடு அருகில் இருந்து இருக்கும். சிலர் பல வருடங்களாக பணிபுரிந்து கொண்டுருந்ததால் மாற்றத்தை வேறு இடம் மாறவேண்டும் என்பதை பற்றிச் சிந்திக்காமல் இதுவே போதும் என்ற மனோ நிலைக்கு வந்துருப்பார்கள்.

உனது நண்பரைக் காட்டு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்ற பழமொழிக்கும் உனது தொழிலாளிகளைக் காட்டு உன் நிறுவன மேலாண்மையை திறமையை நான் விவரிக்கின்றேன் என்பதற்கும் அதிக வித்யாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இங்கு அத்தனையும் தலைகீழ். நல்ல தொழிலாளிகள் இருப்பார்கள். ஆனால் அவர்களை மேய்க்கும் மேய்ப்பன் சுத்த சுரண்டலாகத்தான் இருப்பான். கண்டும் காணாமல் வேலை நடந்தால் போதும் என்று இருக்கும் நிர்வாகம் ஒரு நாள் விழித்துக்கொள்ளும் வங்கியில் இருந்து ஓலை வந்த போது.

இப்படித்தான் ஒரு வரையறை, இது தான் இதனுடைய பாலபாடம். இந்தப் பாதையில் தான் பயணித்து வந்தார்கள் என்று யாரையும் உதாரண புருஷர்களாக காட்டவே முடியவில்லை. எத்தனையோ பாதைகள். எத்தனையோ முறைகள். ஓழுக்கமே இல்லாதவன் நிர்வாகம் ஓழுங்காக நடக்கும். காரணம் அத்தனை ஓழுகும் இடங்களும் அவனுக்குத் தெரியும்.

பருவங்கள் தோறும் பக்திமார்க்கத்திற்காக பஜனை நடத்தி இறையருளை மக்களுக்கு வழங்குவதாக சொல்லி வாழ்க்கையை வாழ்வதற்காக வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் நிர்வாகத்தில் இருக்கும் பணியாளர்களின் சம்பளத் தொகை அந்தரத்தில் தீர்க்கப்படாமல் தொங்கிக்கொண்டுருக்கும்.

வரும் போது குடுக்க மனம் வராது. இழந்த போது அழுகக்கூட கண்ணில் தண்ணீர் இருக்காது. வற்றிய மனதும் முற்றிய கத்திரிக்காயுக்குமுண்டான கடைசி வாழ்க்கை?

சொன்னேன் அல்லவா தேவாதி தேவர்கள் தூவிய பூமலையை? தனது வௌிநாட்டு காரில் கூட குடும்பத்தை தவிர அடுத்தவர் ஏறுவதற்கு அனுமதிக்க மறுப்பவர் என்னை அவர் வீட்டு கடைசி அறை வரை அனுமதித்தார். முதலீடு போட்டவர் குறித்த மனதில் இருந்த அச்சங்கள் அகண்று அவர் தோளில் கைபோட்டு ஊரைப்பற்றி சிலாகித்துப்பேசும் தான், உண்மை நிலவரம் அனைத்தையும், நிர்வாகம் கடந்து வந்த பாதை, நடக்க வேண்டிய பாதையில் உள்ள தடங்கல்கள், எடுத்தால் கிடைக்கும் லாபம் என்று பட்டியலிட்டு பறைசாற்ற பல ஆண்டுகளுக்குப்பிறகு முழித்துக்கொண்டார்.

விழித்த விழியில் இருந்து வந்த உஷ்ணம் தாங்காத பெண்டாளன் தனது அனைத்து சண்டாளத்தனத்தையும் விட்டு விட்டு வௌியேறி அக்காவுக்கு பிடித்த தம்பியாய் மாறி வாங்கிக்கொள்ளும் அன்றாடச் செலவில் அவர் “பாதையை” வகுத்துக்கொண்டார்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பருவமும் சரியாய் இருக்கும், வாய்ப்பும் சரியாய் இருக்கும். இல்லாவிட்டால் மாவைத்தூக்கி சூரைக்காற்றில் வைத்துக்கொண்டு கூவிக்கொண்டுருப்பேன். உப்பை நனைந்து கொண்டே விற்றுக்கொண்டுருப்பேன்.

நான்கே மாதங்கள் தான்.

இடைத்தரகர் செய்துருந்த அத்தனை கோல்மால்களைக் களைந்து தங்கியிருந்த பெட்டிகளை இறக்குமதியாளர் விரும்பிய தள்ளுபடியுடன் அனுப்பிவிட்டு தரகர் தன்னுடைய கருணையில்லாத கருணைத்தொகைக்கு காக்க வைத்தாகி விட்டது.

அதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பட்டுவாடா செய்யப்பட்டாகிவிட்டது. ஒளித்துவைக்கப்பட்டுருந்த மற்றொரு இறக்குமதியாளரின் ஒப்பந்த்தை அவருக்கு நம்பிக்கையூட்டி தவணை வாங்கி அனுப்பிய நாளில் உள்ளுரில் இருந்த ஜெர்மன் நாட்டு நேரிடையான அலுவலகத்தின் வாசலை என்னுடைய தொடர்ச்சியான தட்டுதல்களால் அகல திறந்தாகி விட்டது. கழிவுகள் அணைத்தும் கழிக்கப்ட்டு, புதிய நிர்வாகத்தில் புகுந்த புதிய மனிதர்களால் ஜெர்மன் இறக்குமதியாளர் விஷேச அழையாத அழைப்பாளியாய் வந்து பார்க்கும் அளவிற்கு.

மாதங்கள் அணைத்தும் பக்குவமாய் நகர்ந்து சென்றால் பரமனுக்கு என்ன வேலை? மெல்ல சிரித்துக்கொண்டான்? மகனே நீ ஒரு பதிவு தொடங்க வேண்டும். பல பேர்களை படுத்த வேண்டும் என்று நினைத்து இருப்பான் போலும்?

பணியாளர்கள் முன்னூறு, ஆறு நூறாகி பணம் ஆறாகி விட, சமயம் பார்த்துக்கொண்டுருந்த கிச்சன் கேபினட் நிர்வாகத்திற்கு வர புரியாத பெண்மணியுடன் புழுக்கமான உறவு. புழு கூட மிதித்தால் முடிந்தவரை போராடிவிட்டு தான் சாகும். அனைத்து வரவு செலவுகளும் தணிக்கை செய்யப்பட்டு அந்தக்கூட்டத்தை திருப்தி செய்து நம்பிக்கை பெற்றுருந்தாலும், வௌியேயிருந்தபடியே பள்ளம் தோண்டும் பன்றிகளின் பேச்சை நம்பி ஆயிரம் கேள்விகள்.

அணிஅணியாய் திரண்டுவர, ஆசைப்பட்டு சென்றும் வைகோ நடைபயணத்தை ஓரு ஒரமாக நின்று ரசித்துப்பார்த்தது போல் ஓதுங்கி, உலகமெல்லாம் விளம்பரத்தால் உச்சிமுகர்ந்து கொண்டுருக்கும் ஜவுளிக்கடலின் ஏற்றுமதி பிரிவு நிறுவனத்தில் நுழைய எடுத்த பதவிக்கும், கொடுத்த பதவிக்கும் சம்மந்தமில்லாததை பொறுத்துக்கொண்டவனால் அளிக்கப்பட்ட சம்பளம் அதைவிட அநியாயமாக இருந்தது,

மாப்பிள்ளை என்று அழைத்து சென்று போனவரிடம் இதையெல்லாம் சொல்லமுடியுமா? வாங்கப்பட்டதுக்கும் சொல்லப்பட்டதுக்குமான இடைவௌி சம்பளம் அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகஸ்மானதாகவே வைக்கப்படவேண்டியாகிவிட்டது.

நண்பரிடம் போய் பேசியபோது, கட்டங்களைப்பார்த்து தௌிவாகச்சொன்னார். ” நீங்கள் விரும்பும் படி காசி இமயமலையெல்லாம் போக முடியாது? அடுத்த ஆறு மாதத்தில் மருத்துவமணைக்குத்தான் போகும்படி இருக்கும். மனைவி வயிற்றில் வளரும் சிசுவை உறுதி்செய்யும் பொருட்டு “.

அடப்போங்கப்பா? இடம் வாங்குவதற்கு முன்னால் வீட்டின் பெயர் வைக்க ஆலோசனை. நம்ப ஆச்சரியமாகத்தான் இருக்கும். நடந்தது அதேதான். எப்படி நடந்தது? எதனால் நடந்தது என்று யோசித்து முடிவதற்குள் நடந்தே முடிந்து விட்டது,

வந்தாள் மகாலஷமி?

மதியம் வருவதன் சிரமத்தின்பொருட்டு சாப்பாடு எடுத்துச்சென்று விடுவதுண்டு, வேறு என்ன வேண்டும் அவளுக்கு. ஊரில் உள்ளபடியே அதே ஓய்வு. அதே உறக்கம். காலை எட்டு மணிக்கு கிளம்பினால் இரவு திரும்ப ஓன்பதா இல்லை நடு இரவா? எனக்கே தெரியாது. இரண்டு பேருக்கு என்ன வேலை பெரிதாக இருந்து விடப்போகின்றது?

தண்ணீர் வருவது அதைப்பிடிப்பது தான் தலையாய கடமை. இரவு மூன்றா. ,கொளுத்தும் வெயிலிலா அடுக்கப்பட்ட குடங்களின் அணிவகுப்பு பயமுறுத்துவதாக இருக்கும். நம் வரிசை வருவதற்குள் குட்டித் தூக்கம் போட்டு விடலாம். புது மணைவி? நிற்காவிட்டால்? என்னத்துக்கு வம்பு?

வளரும் குழந்தைகளைக்கருதாமல் அனைவரும் சொன்ன ராசி செண்டிமெண்ட் கருதி, அங்கேயிருந்த மாடி வீட்டுக்கு நகர்த்த, நடக்க முயற்சித்து கதவைத் திறந்து வௌியே செல்ல முயற்சிப்பபவளை தடுக்க நடக்கும் முஸ்தீபுகளும், நடக்காமலே படுத்துக்கொண்டு காலை உதைத்துக்கொண்டு அழுபவள் ஒரு பக்கமாய் பகல் அலுவலக வேலையை விட இரவு வீட்டு வேலை தான் அதிகமாகத்தான்.

தண்ணீர் பஞ்சத்தில், துடைத்துக்கொண்டாலே தண்ணீர் செலவழிந்து போய்விடும் என்று பதட்டமாய் கத்திக்கொண்டு அருகே வருவளிடம் அன்று ஆசையாய் சொல்வேன் ” வீடு கட்டியதும் ஒரு நல்ல நீச்சல் குளம் கட்டி நீயும் நானும் ஒன்றாக தண்ணீர் கவலை மறந்து சந்தோஷமாக குளிக்க வேண்டும் ” என்று. முதலில் இடம் வாங்குவதைப்பாருங்கள். அப்புறம் பார்க்கலாம், நீச்சல் குளமா? இல்லை பக்கத்தில் உள்ள நொய்யல் ஆறா? ன்னு முகத்தை இழுத்துக்கொண்டு போவாள்.

பக்கத்து வீட்டு பெண்மணிகள் அணைவரிடமும் சென்று தொடக்கத்தில் பேசாமல் ஓதுங்கி ஒதுங்கி ஆமையாய் கூட்டை விட்டு வௌியே மறுத்தவளை வழுக்கட்டாயப்படுத்தியன் விணை என்னையே வந்து தாக்கியது. ஓய்வு நேரங்களில் வாசல் அருகில் வரும் வௌிச்சம் துணை கொண்டு புத்தகங்கள் வாசிக்கும் போது அவர்களின் உரையாடல் காதில் விழும். எங்கு சுற்றினாலும் கடைசியில் சொந்த இடம் சொந்த வீட்டில் வந்து முடியும். இரவில் வந்து தீர்மானம் ஏற்ற அது சபைக்குறிப்பில் ஏற்றாமல் வௌிநடப்பில் முடியும்.

கொடுக்கும் வாடகை அதிகம் என்றாலும் எவன் வங்கிக்கும் முகம் தெரியாத தெரியாமல் வந்து நிற்கும் கடன்காரர்களுக்கு பதில் சொல்வது?

அன்றைய இரவுப்பொழுது அரற்றல் இரவாக முடிந்து விடும். முதல் வீட்டில் இருந்து சற்று அதிக வாடகை சற்று அதிக வசதி குறிப்பாக தனி வீடு என்றபோதிலும் அவளுடைய சொந்த வீடு ஆசையைப்போல் என்னுடைய விருப்பங்கள் மட்டும் நிறைவேறுவதாக தெரியவில்லை.

பத்து வருடத்தில் மூன்றாவது வீடு.

இப்போது தான் நினைத்தபடி தினமும் இரண்டு முறை குளிக்க இறைவன் அருள் பாலித்துள்ளான்.