காந்திஜிக்கு மகாத்மா பட்டம் சரிதானா?

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 5

நீங்கள் உணவகத்தில் கொடுக்கும் பணம் முதல் வழக்காடு மன்ற நீதியரசர் தலை மேல் வரையிலும் மகாத்மா காந்தி அவர்கள் இன்று வரையிலும் நீக்கமற நிறைந்துள்ளார். பற்பசை விளம்பரதாரர்கள் வெறுக்கும் பொக்கை வாய்ச் சிரிப்புடன். ஆனால் அவர் படத்தில் சிரிக்கும் சிரிப்பில் ஆயிரம் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

சர்வசாதாரணமாக “இதையெல்லாம் காந்தி கணக்கில் வைத்துக்கொள்?” என்று எத்தனை தான் நையாண்டி பேசினாலும் அவர் ஒன்றும் கோபித்துக் கொள்ளப் போவது இல்லை.

அதுதான் அவருடைய பலம். அதுவே தான் அவருடைய பலவீனமும்.

பொசுக்கொன்று பொடிசுகள் கூட கோபத்தில் கத்தி தீர்க்கும் இந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டுருக்கும் நாம் அவர் வாழ்நாள் முழுக்க எவரிடமும் அத்தனை கோப வார்த்தைகளை உதிர்த்ததாக எனக்குத் தெரிந்த வரையில் எந்த சரித்திர பக்கமும் உரத்துக் கூறவில்லை.

எப்படி ஒரு தனி மனிதன் வாழ வேண்டும்? எப்படி ஆட்சி நடக்க வேண்டும்? எப்படி ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்த வேண்டும்?

அத்தனைக்கும் மொத்த உதாரணமாய் வாழ்ந்த மகான். மனிதர் அல்ல. புனிதர். இந்த பூமிப் பந்து பெற்ற பொக்கிஷ புதையல்.

உழைக்காமல் கிடைக்கும் எந்த பொருளுமே பெற்றவர்கள் எவருமே அத்தனை பாதுகாப்பாய் பயன்படுத்த மாட்டார்கள். கடைசியில் பரசிதேசியாய் மாறி வாழ்க்கையை முதலில் இருந்து தொடங்குவார்கள்.

அவருடைய அத்தனை உழைப்பும் அதிசமாய் அருவருப்பாய் போனதில் ஆச்சரியம் இல்லை.

ஒரு தனிமனிதனின் வாழ்க்கைத்தரம் உயரும் வரையில் ஆடம்பர உடை தேவையில்லை என்று கோவணம் போல் வாழ்ந்து காட்டிய அந்த வாழ்க்கை இன்று வரையிலும் கோணல் புத்திகாரர்களுக்கு விமர்சனமாய் தான் தெரியும்.

புலால் உணவு நீக்குதல் சத்தியத்தின் காரணமாக இருந்தாலும் அந்த சத்து எத்தனை சகதிகளை கொண்டு வந்து சேர்க்கும் என்று தெரிந்த காரணத்தால் தான் கடைசி வரையிலும் கண்ணியமாய் வாழ்ந்தார்.

ஆட்சியாளர்கள் ஆளத் தொடங்கும் முன்பு ஒரு நாள் கிராமத்தில் இருந்து வாழ்ந்து விட்டு பிறகு ஆளுங்கள் என்ற போது அனைவரும் நகைத்தனர். ஆனால் இன்று உ.பி. யை தினம் தினம் பருகும் காபி போல் வேண்டும் என்று நினைத்த திரு. ராகுல் காந்தி ஏன் இத்தனை முறை அத்தனை கிராமத்துக்குள் படையெடுத்துக்கொண்டுருக்கிறார்?

இந்நாள் பீகார் முதல்வர் ஏன் கடைக்கோடி பீகாரி கிராம வீட்டில் உள்ள கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து கொண்டு அமைச்சரவை கூட்டம் நடத்துகிறார்.

அவருடைய ஒவ்வொரு கனவும் தீர்க்கமானது. தீராத ஆச்சரியத்தை தரக்கூடியது.

கடைக்கோடியில் இருப்பவன் தான் ஆட்சியாளர்களை தெருக்கோடிக்கு தள்ளக்கூடிய அத்தனை தகுதிகளையும் பெற்று இருப்பவன் என்று அன்றே உணர்ந்த அவர் மகா ஆத்மா தானே?

வேறு யாருமே இல்லையா?

இவர் மட்டும் தான் சிறப்பா? இல்லை என்று யார் சொன்னார்.

மும்பை குண்டு வெடிப்பு நடந்த போது முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் முக்கல் முனங்கல் கூட இல்லாமல் இருந்தாரே அவர் எங்கே? ரத்தக்காடாய், இந்துவும் முஸ்லீம் பிரிந்து அடித்துக்கொண்டு போட்ட சண்டையின் காரணமாக பிரியாமலே கலந்து ஓடிய மொத்த ரத்தமும் கால்வாய் முழுக்க ஓடியது. கலக நெருப்பின் கோர புகை அணையாமல் விலகாமல் இருந்த ஷ்ரீராம்பூர், நவகாளி போன்ற கலவரப் பகுதிகளுக்குள் உள்ளே உள்ள கிராமங்களில் காலில் செருப்பு கூட இன்றி 400 கிலோ மீட்டர்கள் தூரம் நடந்து சென்றாரே? நாலைந்து உதவியாளர்களுடன் மட்டும் எந்தவித பாதுகாப்பும் இன்றி?

கலவர பூமி என்றால் கூட கண் கொள்ளா ஓப்பனையுடன் வரும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு அவர் ஒரு அப்பாவி தான்.

அத்தனைக்கும் காரணம் அவர் தானே? கேள்விகள் வரலாம்.

என்னுடைய பார்வையில் ஒரு அரசியல் தலைவருக்கு தேவையான சாமர்த்தியம், தந்திரம், உள் ஒன்று வைத்து புறம் போன்று பேசுதல், பேசும் வார்த்தைகளும் சொல்லும் விஷயங்களும் விபரிதமான அர்த்தம் பொதிந்து பேசத் தெரியாமை, தலைவன் என்றால் மக்களிடம் இருந்து தள்ளி நின்று வேடிக்கை காட்ட வேண்டும் என்று தெரியாதவர், வீணான வார்த்தை ஜால கோர்வைகளை மணிக் கணக்கில் அற்புதமாக பேசத் தெரியாதவர், அறிக்கை மூலமாகவே தன்னை வௌிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்று விளம்பரம் தேடத் தெரியாதவர்.

நடிக்கத் தெரியாத, கண்ணீர் வராத போதும் கலக்கத்துடன் பேசத் தெரியாத ஒரு மக்கு தாத்தா.

அதில் துளி கூட சந்தேகம் இல்லை.

காரணம் எதையுமே அவர் எதிர்பார்க்கவில்லை. எல்லாவற்றையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. சேர்ந்து இருப்பவர்களின் தவறுகளை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்ற எதார்த்தம் இல்லாத ஒரு ஏமாளி தாத்தா.

நாடு நன்றாக இருக்க வேண்டும். நல்லவர்கள் ஆட்சி புரிய வேண்டும். மதம் மாச்சரியம் இல்லாத உலகை படைக்க வேண்டும். வீண் ஆடம்பரங்களை அறவே தவிர்க்க வேண்டும். என்று வேண்டும் வேண்டும் என்று சொல்லியே இரு மதத்தினற்கும் வேண்டாத தலைவனாக போய்விட்டார். அதிலும் பிழைக்க வந்த கூட்டத்திற்கு பிடிக்காத தலைவனாக ஆகி விட்டார்.

முதல் பார்வையே சிறப்பான பார்வையாக இருக்க வேண்டும் என்ற பழமொழி கொண்டு வாழும் ஆங்கிலேயர்கள் உடுத்தும் உடை அலங்காரத்தை நீங்கள் அனைவரும் அறிந்தது தானே?

எப்போதும் அணியும் புகழ்மிக்க உடையுடன் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் மாளிகைக்குப் பல முறை சென்ற காந்திஜி ஒருமுறை வைஸ்ராயிடம் பின்வருமாறு கூறினார்.

அனைவரும் எளிமையாக வாழப்பழக வேண்டும். வைஸ்ராய் தமது பிரும்மாண்டமான மாளிகையை விட்டு ஒரு சாதாரண பங்களாவில் வசிக்க வேண்டும். எதிர்கால சுதந்திர இந்தியாவின் மந்திரிகள் கதர் அணிய வேண்டும். ஒரு சாதாரண பங்களாவில் வேலைக்காரர்கள் இன்றி வாழ வேண்டும். கார் வைத்துக்கொள்ளக் கூடாது. ஜாதி மதம் போன்ற கறைகள் ஓட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தினசரி ஒரு மணி நேரமாவது அவர்கள் ஏதாவது ஒரு உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும். ஏராளமான உபகரணங்களையும் விலை உயர்வான ஆடம்பரமான சோபா மெத்கைள் போன்றவற்றையும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

இந்தியா ஏழை நாடு. அதன் அமைச்சர்கள் ஆடம்பர வாழ்வை நாடக் கூடாது. தனிப்பட்ட உரிமைகளையோ வசதிகளையோ கேட்கக்கூடாது. மேம்பட்ட வசதிகளையும் உரிமைகளையும் ஒழிப்பதற்கான ஒரே வழி அவற்றை நாமே நாடாமல் இருப்பது தான். எந்த மந்திரியும் மெய்காவலர்களை வைத்துக் கொள்ளக்கூடாது.

இப்போது சொல்லுங்கள்?

சென்னையில் எம்.எல்.ஏ க்கு இடம் வேண்டும் என்று முன்னிலை படுத்திய அந்த ஞானம் பெற்றவர்கள் இதைப்படித்துப்பார்த்தால் ?

வங்கி அதிகாரியை கை நீட்டி அடித்த அந்த மக்கள் சபை உறுப்பினர் என்ன நினைப்பார்?

பயபக்தியுடன் பறக்கும் ஹெலிகாப்டரைப் பார்த்தே கன்னத்தில் போட்டுக்கொள்ளவர்கள் படித்தால் என்ன நினைப்பார்கள்?

பிறகு ஏன் இங்கு இன்றுவரையிலும் பல பேருக்கு நேதாஜி சுபாஷ சந்திர போஸை பிடித்த அளவிற்கு மகாத்மாவை மனத்தில் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது?

காரணங்கள்?

5 responses to “காந்திஜிக்கு மகாத்மா பட்டம் சரிதானா?

  1. பிங்குபாக்: புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் | இசையினி

  2. காந்தியை நீங்கள் மிகவும் உன்னதமான இடத்தில் வைத்து பார்ப்பதாலே நீங்கள் காந்தியை மகான் என்கிறீர்கள். காந்திக்கு கருப்பு பக்கங்களும் உண்டு தோழரே!

    இந்திய விடுதலைப்போராட்டத்தில் மதசார்பற்று போராடி இருக்க வேண்டிய காந்தியார் ராமராட்சியம் அமைப்பேன் என்றார். மனுதர்மத்தினை தூக்கி பிடித்தார். இதனை முகமதியர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?

    இந்தியாவில் தலைவிறித்தாடியா வர்ணபேதங்களை நீக்காமல் மனுதர்மம் உத்தமமானது என்றார். தாழ்த்தப்பட்டோரை ‘ஹரிஜனர்’ என்றார். எந்த ஹரி தலித் மக்களை பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்றாரே அதே ஹரியின் பிள்ளைகள் என்றார்.

    காந்தி இந்தியர் என்பதை மதம் கடந்து பார்க்கவில்லை. இந்துமதத்தின் அபிமானியாகவும் மனுதர்மத்தின் காவலராகவும் இருந்தார். அம்பேத்கார் ஏன் காந்தியை எதிர்த்தார் என்று படித்து இருக்கிறீர்களா?

    நேதாஜியை காங்கிரசை விட்டு விரட்டியது யார்? பகத்-சிங் தூக்கு பத்தி காந்தியார் என்ன செய்தார் என்று படித்து இருக்கிறீர்களா? பகத்-சிங் காந்திக்கு எழுதிய மடல்களை வாசித்து பாருங்கள்.

    காந்தி சுயபரிசோதனை என்ற பெயரில் தன்னால் மனதை கட்டுபடுத்த முடிகிறதா என்று பார்க்க நிர்வாணநிலையில் பெண்களுடன் கழித்த பொழுது காந்தியார்க்கு வயது எழுபது. எழுபது வயதில் ஆண்மை எழுகிறதா என்று சோதித்தவர் மாகத்மா என்பது வேடிக்கைதான் இல்லையா?

    காந்திபத்தி பெரியார் அம்பேத்கார் பகத்சிங் போன்றவர்களின் பார்வைகளையும் வாசித்தால் இவர் மகாத்மா அல்ல “வெறும்ஆத்மா” என்று புரியும்.

    • அவசரப்பட்டு எழுதி விட்டீர்களோ என்று வருத்தமாய் இருக்கிறது. மொத்த பார்வையையும் படித்த பிறகு தான் உங்களுக்குப் புரியும்.

      குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க?

      உங்களின் நீண்ட பதில் என்பது இன்று வரையிலும் விடியலைத் தேடிக்கொண்டுருக்கும் பாவாத்மாக்களுக்கு இன்னமும் விடியல் வராத ஆதங்கத்தில் வௌிப்பாடாகத்தான் உங்களை பகிர்வை நான் எடுத்துக்கொள்கிறேன்.

      மொத்தமாய் முடிக்கும் போது சத்தமாய் சொல்வீர்கள்.

      சத்து எது? சாறு எது? என்று.

      தமிழும் அன்பும் சேர்ந்து உள்ள உங்கள் பெயரை வைத்த உங்கள் பெற்றோர்க்கு என் வணக்கம்.

  3. //புலால் உணவு நீக்குதல் சத்தியத்தின் காரணமாக இருந்தாலும் அந்த சத்து எத்தனை சகதிகளை கொண்டு வந்து சேர்க்கும் என்று தெரிந்த காரணத்தால் தான் கடைசி வரையிலும் கண்ணியமாய் வாழ்ந்தார்.//

    அதனால்தான் தெரிந்தோ தெரியாமலோ ’மகாத்மா’ என்று போற்றுவதோடு நிறுத்திக்கொள்கிறோம் :))

    • ஆச்சரியமாய் இருக்கிறது.

      காரணம் நீங்கள் சொன்ன வார்த்தைகள் உங்கள் உள் மனதில் இருந்து வந்தவைகள் என்று மட்டும் எனக்குத் தெரியும்.

      ஆனால் வார்த்தைகளை அப்படியே மாறாமல் திரு தமிழருவி மணியன் திரு. சிவகுமார் புத்தகத்தின் வௌியீட்டு விழாவில் தெரிவித்து உள்ளார்.

      பழைய சிவகுமார் குறித்த பதிவுகளை படித்துப்பாருங்கள்.

      உண்மைகள் என்பது உண்மையாக வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் வாயில் இருந்து இயல்பாய் வரும் என்பது மீண்டும் ஒரு முறை உங்கள் மூலம் உணர்ந்து உள்ளேன். நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக