Daily Archives: செப்ரெம்பர்17, 2009

பைத்திய மதன காம ராஜாக்கள்

அழிக்கப்பட்ட ரகசிய கோப்புகள் (3)

பைத்திய மதன காம ராஜாக்கள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (23)

ஆட்சியாளர்கள் புனிதர்களாக எளிமையானவர்களாக இருக்கும் போது அதன் விளைவாக நமக்குக் கிடைக்கும் அத்தனை விஷயங்களும் புனிதமாகத் தான் இருக்கும். கற்பனையில் கொண்டு வாருங்கள் முன்னால் முதல் அமைச்சர் தெய்வத்திரு. காமராஜ் அவர்களை.

தமிழ்நாட்டு பூகோளத்தைப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் வாழ்ந்து கொண்டுருக்கின்ற அத்தனை மக்களின் மனோநிலையும், எதிர்பார்ப்புகளும் எனக்குத் தெரியும் என்று தெரிந்த வரையில் தனது வாழ்க்கையை அர்பணித்த மகான்.

தெய்வம் என்பது கலிகாலத்தின் கடைசியில் தான் தோன்றும் என்று நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை போன்று இடையில் இது போன்ற மனித தெய்வங்களும் நம்மிடையே வந்து வாழும் போது தான் அத்தனை கறைகளும் நீங்கி சற்று துவைத்த சட்டை போட்ட திருப்தி வருகிறது.

சுதேசி மன்னர்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தினார்களோ இல்லையோ தன்னுடைய வளர்ப்பு பிராணிகளின் மேல் அத்தனை ஆர்வமாய் இருந்தார்கள். ஆனால் இந்த மாதிரி ஆர்வங்களைப் பார்த்துவிட்டு பயந்து விடாதீர்கள்.

ஜுனகாத் நவாபுக்கு நாய்கள் என்றால் உயிர். தனியான மாளிகை. வேலையாட்கள், நவீன இறக்குமதியான கட்டில் மெத்தைகள். ஒரு நாய் இறந்து விட்டால் உடனே சலவைக்கல் நிணைவு மண்டபம். இது பரவாயில்லை.

அவருடைய செல்லமான ரோஷணா என்ற பெண் நாய்க்கும் போபி என்ற ஆண் நாய்க்கும் திருமணம் செய்து வைத்தார். எல்லா மன்னர்களும், பிரபல்யங்களும் ஆஜர். விருந்து, நடனம் மற்ற கேளிக்ககைகள் தடபுடல். வைரஸ்ராய் மட்டும் வரவில்லை. செலவழித்த தொகை அன்றைய தினம் 60,000 டாலர்கள். அவருடைய சமஸ்தானத்தில் வாழ்ந்த 6 லட்சத்து 25 ஆயிரம் குடிமக்களில் 12 ஆயிரம் குடிமக்களுக்குத் தேவையான ஒரு வருட அடிப்படை வசதிகளை செய்யக்கூடிய தொகை அது.

கபுர்தலா சமஸ்தான மன்னர் தன்னை 14 ஆம் லூயிஸ் மறுபிறப்பு என்று கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தார். அத்துடன் இருந்து தொலைத்தால் பராவாயில்லை. இமாலயத்தின் அடிவாரத்தில் இருந்த தனது சமஸ்தானத்தை மாற்றத்துணிந்து நடந்த அனர்த்தங்கள் பல. வார்செயில்ஸ் அரண்மனை போன்ற அதே தோற்றம் அளவு போன்ற வடிவமைத்து கட்ட பிரான்ஸ் கட்டிடக்கலைஞர்கள் புதிதாக உருவாக்கி கொடுத்தனர். சீக்கியரான அவர் பிரஞ்ச் மொழியை நாட்டு மொழியாக அறிவித்து அத்தனை மந்திரி பிரதானிகளையும் அதே போல் உடை உடுத்தி அலங்கோல ராஜதர்பாரை நடத்தினார்.

சர்.புபீந்தர் சிங் என்ற பாட்டியாலாவின் 7வது மகாராஜாவின் உயரம் ஆறு அடி நான்கு அங்குலம். எடை 300 பவுண்டு. கமல் படத்தில் நடத்த பீம்பாய்க்கு அண்ணன் என்ற உருவத்தை கற்பனையில் கொண்டு வாருங்கள். அவருக்கு தினந்தோறும் இரண்டே வேலைகள் மட்டும் தான். அதை முடித்து விட்டாலே அத்தனை அயர்ச்சி வந்து விடும். கடுமையான உழைப்பாளி.

ஆமாம் என்ன வேலை என்று கேட்கிறீர்களா?

தினந்தோறும் உணவுக்கு எட்டு கிலோ இறைச்சி வேண்டும். இடையில் சிற்றுண்டி என்றால் (ஐந்து முறை) தேநீர் உடன் நெய்யில் வறுத்த மூன்று கோழிகள். உடன் ஏப்பம் விட மாட்டார். உழைக்க அந்தப்புரம் போய் விடுவார்.

மாட மாளிகை உருவத்தில் இருந்த வசந்த மாளிகை தோற்றுப் போய்விடும். அங்கிருந்த அத்தனை தூண்களும் என்பது நிர்வாண மங்கை நின்று கொண்டு ஓயிலான வடிவத்தில். எந்தப் பக்கம் திரும்பினாலும் நிர்வாண மங்கைகள் மட்டுமே. வௌியே இருந்து பார்த்தால் உள்ளே இப்படி ஒரு மண்டபம் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. காரணம் ராணுவ ஒழுங்கு வேலைகள் மாதிரி நாள்தோறும் நடந்து கொண்டுருப்பதால் அது தடை செய்யப்பட்ட பகுதி.

குளிக்கும் போது, உடை உடுத்தும் போது உள்ளே இருந்த பலவித அளவில், தோற்றத்தில், பல நாட்டில் இருந்தும் வரவழைக்கப்பட்ட மங்கைகள்.

இதுகூட பரவாயில்லை. விருப்பங்கள் மாறும் போது வௌிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சர்ஜரி நிபுணர்கள்.

மோட்டார் எத்தனை நாளைக்கு வேலை செய்யும். காயில் கெட்டு விட்டது. வைத்தியர்கள் கொடுத்த தங்க பஸ்பம், லேகிய சமாச்சாரங்கள் கூட பவர் கொடுக்காத காரணத்தால் ஏக்கத்திலே எமனிடம் போய்ச் சேர்ந்தார்.

அடுத்து காசி மகாராஜா தினமும் ஒரு பசுவின் முகத்தில் முழித்து காலை வேலைகளை தொடங்குவது வழக்கம். ஒரு முறை ராம்பூர் நவாப்பை பார்க்கச் சென்ற போது தங்க வேண்டிய சூழ்நிலை வந்து விடுமே என்று தான் தங்கியிருந்த மாடத்திற்கே தூக்கிய பசுமாடு கத்திய கத்தலில் அத்தனை பேரும் அரண்டு விட்டனர்.

ராம்பூரை ஆண்ட நவாப் தன்னைப் போன்ற மற்ற சிற்றரசர்களுடன் ஒரு பந்தயம் கட்டினார். அதிக கன்னித்தன்மையை இழக்க வைக்க வேண்டும். யாரால் முடியும்.? அவருடைய வருட முயற்சியில் பெண்ணிடமிருந்து கழட்டிய மூக்குத்திகளை சேகரித்த போது அவை பல பவுண்டுகள் இருந்தன.

ராஜஸ்தான் எல்லையில் வாழ்ந்த ஆழ்வார் சமஸ்தான மகாராஜாவோ கோமாளியுடன் குரூர புத்தி படைத்தவர். வேட்டையாடச் செல்கிறார் என்றார் காட்டுக்குள் வாழும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிரித்து சிங்கம் புலியை வரவழைக்க குழந்தைகளை குகைக்கு அருகே கொண்டு போய் காட்டி கத்தலை ரசிப்பவர்.

ஆனால் இவர் தன்னை ராமபிரானின் மறு அவதாரமாக கருதிக்கொண்டு வாழ்ந்து அத்தனை பேர்களையும் அவஸ்த்தைக்கு உள்ளாக்கினார். இவரின் சாவு எப்படி நடந்தது தெரியுமா?

வௌ்ளையர்கள் விருந்தில் கலந்து கொண்ட போது இவரின் கையில் இருந்த மோதிரத்தை பார்த்து லேடி வெலிங்டன் நல்ல மோதிரம் என்று புகழ கழட்டி அவர் கையில் கொடுத்தார். அவர் பார்த்துவிட்டு திரும்ப கொடுக்க, ராமபிரான் பணியாள் வைத்திருந்த தண்ணீரில் கழுவி மறுபடியும் போட்டுக்கொண்ட போதே கம்யூட்டர் சோதிடர் சொன்ன தண்ணீரில் கண்டம் தொடங்கியது போலிருக்கும். கலந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அத்தனை பேரும் அந்த சம்பவத்தை மனதில் குறித்துக்கொண்டார்கள்.

தான் விரும்பி விளையாடும் போலோ விளையாட்டில் எதிர்பார்த்த குதிரை தோற்றதால் அத்தனை பேர்களின் மத்தியிலும் (வௌ்ளையர்கள் இன்று வரையிலும் பிராணிகளை வதைப்பதை ரசிக்க மாட்டார்கள்?) சுட்டுத்தள்ள இவரின் சமஸ்தானம் பறிக்கப்பட்டது.

மக்கள் பாவம். ராமபிரான் ராவணன் அவதாரமாக மாறிய கொடுமையில் இருந்து தப்பித்த புண்ணியம்.