Daily Archives: செப்ரெம்பர்16, 2009

மலைக்க வைத்த சொத்துக்கள் முகம் சுழிக்க வைத்த வாழ்க்கைகள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 22

இன்று வரையிலும் தன்னிடம் என்ன சக்தி தனக்குள் இருக்கிறது என்பதை உணராமலே வாழ்க்கை நடத்திக் கொண்டுருக்கும் அதிக மக்களைப் பெற்றது தான் நம்முடைய இந்திய நாடு. தனக்கும் தெரியாது. அதை புரிய வைக்கவும் ஆள் கிடைக்காது. புரிய வைக்கின்றேன் என்று வந்தவர்கள் அத்தனை பேர்களுமே புதிர்களைத்தான் உருவாக்கி சென்று இருக்கிறார்கள்.

வீரத்தை மட்டுமே வாழ்க்கை முழுவதுமே வைத்து வாழ்ந்து காட்டியவர்கள் அத்தனை பேருமே விவேகத்தை அதிகம் பெற்ற ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்தது கூட ஆச்சரியமாய் தெரியவில்லை. காரணம் அவர்களே தட்டுத் தடுமாறி வாழ்ந்த கால கட்டத்தில் கூட இங்குள்ள மன்னர்களின் வீரத்தையும், வைத்திருந்த வீரர்களின் கூட்டத்தையும் தான் நம்பி வாழ்ந்தார்கள்.

அப்போது கூட எவரும் முழுமையாய உணரவில்லை. முக்கியமாக உணர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உருவாகவில்லை.

பிரிட்டிஷார் நடத்திய (1917) பாலஸ்தீன போரில் உன்னதமான வீரர்கள் என்று பெயர் பெற்று இருந்த துருக்கிய படையை வெற்றி பெற்றதன் காரணமே நம்முடைய மன்னர்கள்.

ஜோத்பூர் மன்னரும் அவருடைய படைகளும் ஹைபா என்ற நகரத்தை வென்று கொடுத்தன. நடந்த இரண்டு உலகப் போரிலும் பிகானீர் மன்னரின் ஓட்டகப்படை (சீனா, பாலஸ்தீனம், எகிப்து,பிரான்ஸ்) பங்கெடுத்து வெற்றிக்கனியை பெற்றுத்தந்தது.

இத்தாலியில் போரிட்டு (1943) ஜெய்பூர் மகாராஜா வெற்றியை ஆங்கிலேயர்களின் காலடியில் சமர்ப்பித்தார். இதனால் இவர்களுக்கு என்ன லாபம்?

மொத்த உழைப்பும் இவர்களுடையது. நயா பைசா செலவழிக்கவில்லை ஆங்கிலேயர்கள்?

பணத்தை விட புகழுக்கு அதிகமாய் மயங்கி இருந்தார்கள். அத்தனையும் தெரிந்த விவேகமான அறிவாளிகள் வழங்கிய பட்டங்களின் தர வரிசை பட்டியல் இது.

ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் இந்தியா, ஆர்டர் ஆப் தி இண்டின் எப்ரர். மார்பில் குத்திக்கொண்டு வலம் வந்தவர்களை குத்த வைத்துக்கொண்டு குனிய குனிய சவாரி செய்தார்கள்.

இதற்கு மேலும் ஒன்று இருக்கிறது. மன்னராக வாழ்ந்து கொண்டுருப்பவர்களை சேவகர்களாக மாற்றிய பெருமை.

ஆமாம் ஏழாம் எட்வர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவில் பயணிக்கும் குதிரை வண்டியின் இருபுறமும் இந்த மன்னர்கள் ஆரோகணித்து (பெருமை) வழிநடத்திச் செல்லும் அவலம். அத்தனை பெருமை வாய்ந்ததாக கருதப்பட்ட உயர்ந்த லட்சியம் ஒவ்வொரு மன்னருக்கும் இருந்தது.

பங்கெடுத்து பாக்யம் பெற்ற மன்னர்கள், குவாலியர், கூச்பீஹார், பாட்டியாலா.

முட்டாளாக இருந்தால் கூட மன்னர்களை பொறுத்துக்கொள்ளலாம். மூடனாக இருப்பவன் எப்படி மன்னராக வாழ முடிந்தது. ஒரு வேளை அவர்களின் 12 கட்டங்கள் கச்சிதமாக இருந்துருக்கும் போல.

திரு. சிவா அவர்கள் கூறியிருந்த மன்னரின் சொத்துக்கள் மலைக்க வைக்கின்றது என்ற வார்த்தைகளுக்காக இங்கு உலாபி மன்னராக வாழ்ந்த நிஜாம் மன்னரின் வசதிகளை சற்று விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு முறையும் வௌ்ளையர் கவர்னர் சர்ச்சுக்கு போய்விட்டு வந்து பார்க்கும் போது மன்னரின் உத்தரவுப்படி ஒரு தட்டில் ஒரு தேநீர், ஒரு சிகரெட், ஒரு பிஸ்கெட் வைத்துக்கொண்டு பணியாள் தயாராக காத்துருப்பார். அதற்கு மேல் ஒன்று கூட அனுமதியில்லை. வந்த கவர்னர் அதிசயமாக வேறொரு நண்பரை அழைத்து வர பணியாளை பார்வையிலேயே விரட்டி விட்டார்.

இன்றைய சுதந்திர தின கொண்டாட்டம் போல அன்று முக்கிய விஷேச தினத்தன்று ஒவ்வொரு முக்கிய பிரபல்யமும் மன்னரை காண்பதற்காக வரிசையில் நின்று கையில் உள்ள தங்க நாணயத்தை மன்னர் கையில் கொடுத்து அவர் முத்தமளித்து திருப்பி தருவதை வாங்கிக் கொண்டு ஆசி கிடைத்த சந்தோஷத்தில் செல்வர். ஆனால் நம்முடைய நிஜாம் மன்னரோ வாங்கினால் அவ்வளவு தான் திருப்பி கொடுப்பதில்லை. வருபவர்களும் புரிந்து கொண்டு போய் விடுவார்கள்.

வரிசையில் வந்த ஒருவரின் தங்க நாணயம் உருண்டு போய்விட அது போய் சேர்ந்த இடம் மன்னர் வாசம் செய்யும் இருண்டு கிடந்த அறை. வருடக் கணக்கில் தூய்மைப்படுத்தாமல் சகலவிதமான துர்நாற்றத்துடன்.

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?

சிலந்தி கூடு கட்டி அத்தனை பூச்சிகளும் அற்புதமாக வாழ்ந்து கொண்டுருக்கும் அந்த அறைக்குள், மேஜையில் பேப்பரால் சுற்றப்பட்டு நீண்ட வருடங்களாக உபயோகிக்காமல் இருந்த “ஜாகோப்” என்று வைரத்தின் மதிப்பு (ஒரு எலும்பிச்சை பழ சைஸ் 280 காரட்) பல லட்சம் டாலர்கள்.

பழைய பேப்பர்கள் மத்தியில் கோடிக்கணக்கான ரூபாய், பவுண்டுகள், டாலர்கள் வெறும் பேப்பராக சிதறிக்கிடந்தன. தண்ணீர் ஊற்றாமல் (ஆளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்?) வளர்ந்து மண்டியிருக்கும் அத்தனை தோட்டச் செடிகளின் மரங்களின் ஊடே ஏராளமான டிரக்குகள் முழுமையும் தங்கக் கட்டிகள். அவற்றின் கணம் தாளாமல் சக்கரங்கள் பூமியில் புதையுண்டு இருந்தன. நிஜாமின் நிலவறையில் கணக்கே தெரியாத ரத்தினக்குவியல்கள், மாணிக்கம், வைடூரியங்கள். இவைகள் உலகத்தில் எவரிடமும் இருந்தது இல்லை.

மூட்டை மூட்டையாக யாருக்கும் பயன் இல்லாமல் அங்கங்கே கிடந்தது. மன்னரைத்தவிர வேறு யாருக்கும் அந்தப் பகுதியில் அனுமதியில்லை. நாட்டின் மத்தியப் பகுதியில் இருந்ததால் ராணுவமும், போர் விமானங்களும் இருந்தது.

துறைமுகம் இல்லாத குறை அவருக்கு?

நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் போட்டுருந்த அழுக்கான 30 வருட குல்லாவை மாற்ற மனம் இல்லாதது கூட பெரிதாய் தெரியவில்லை. அதை துவைத்துப் போட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது தான் அத்தனை ஆச்சரியமாய் அழுக்காய் தெரிகின்றது?

மனிதர்களின் அதிர்ஷ்டம் என்பதை இன்று வரையிலும் பல இடங்களில் பல வாய்ப்புகளில் நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். இவருடைய அதிர்ஷ்டத்தைப்பாருங்கள். இவர் ஆண்ட சமஸ்தானத்தில் வாழ்ந்த மக்களில் பத்து பேரில் எட்டு இந்துக்கள். இரண்டு பேர்கள் தான் முஸ்லீம்கள்.