குழந்தைகளின் பள்ளி மல்லி(கை)ச்செடியா இல்லை கள்ளிச்செடியா?

இரண்டு கைகளையும் விரித்து வைத்துக்கொண்டு முன்னால் நின்று கொண்டுருக்கும் பெண்மணியை மீறி எப்படி வாகனத்தை நகர்த்த முடியும்?

வேறு வழியே இல்லாமல் சிரித்துக்கொண்டே இறங்கினோம்.

சுதந்திர தின பள்ளிக் கொண்டாட்டத்தில் குழந்தைகளுடன் கலந்து கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டுருந்தேன். வீட்டுக்கு அருகில் உள்ள சந்தில் நின்றுகொண்டுருந்த பெண்மணி என் வாகன நிறத்தைப் பார்த்து அடையாளம் கண்டு கச்சிதமாக பக்குவமாக முன்னால் நின்று கைகளை விரித்துக் கொண்டு முன்னால் நின்று கொண்டுருக்கிறார்.

ஒவ்வொரு வருடமும் குழந்தைகளின் பள்ளி சுதந்திர தின விழா மிகுந்த ஆச்சரியமாய் இருக்கும். திரும்பி வரும் போது அதிக குதுகலமாய் உள்ளே புரண்டு அடித்து வரும் தேவியர்கள் ஆச்சரியம் என்றால் அவர்களின் அவஸ்த்தைகளை தாங்க முடியாமல் இல்லத்தரசி நௌிந்து கொண்டு உட்கார இடம் கிடைக்காமல் தவிப்பது பார்த்து எனக்கு அத்தனை சந்தோஷம்.

முப்பது மாணவர்களும் இருபது மாணவியரும் ஐந்து குழுவாக பிரிந்து தலைமையாய் இருக்கும் மாணவ மாணவியர் கையில் வண்ண வண்ண கொடிகள் பிடித்து இசைக்கும் இசைக்கு தகுந்தாற் போல் வீறு நடை போட்டு வரும் அழகுடன் தொடங்கும்.

தேர்ந்தெடுத்த மாணவர்களின் கையில் உள்ள பேண்டு வாத்தியம் போன்ற வாத்தியக்கருவிகளில் இருந்து வரும் இசைக்கோர்வை செங்கோட்டை விழாவிற்கு எந்த விதத்திலும் குறைந்ததாய் இருக்காது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் சுதந்திர தின பெருமைகளை சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்கு பின் என்று நான்கு மாணவர்கள் ஒலிபெருக்கி மூலமாக கம்பீரமாக உரையாற்றறுவது அடுத்த பெருமை.

கச்சடா கலை நிகழ்ச்சி என்ற பெயரில் நௌிய வைக்காமல் மொத்தத்திற்கும் சுத்தமான இசைக்கும் பாட்டுக்கு தகுந்தாற் போல் கையில் வைத்துள்ள வண்ண வண்ண பதாகைகளைக்கொண்டு பரவசமாய் புது வகை நடனம் ஆடி மகிழ்விப்பது அத்தனை கண் கொள்ளா காட்சியாய் இருக்கும்.

சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் வரவேற்புரை ஆற்றுபவர்கள் நம்முடைய வாழ்க்கை ஆற்றாமையை அதிகப்படுத்தாமல் அமைதிபடுத்த உதவுவார்கள்.

ஆங்கில வழிக்கல்வி என்றாலும் ஹிந்தியை துணையாக வைத்துக்கொண்டாலும் தாயை தவிக்கவிடுவது இல்லை. தமிழில் பேசினால் அபதாரம் என்ற புதிய கலாச்சாரம் என்பதெல்லாம் இல்லை.

ஆர்ப்பாட்டம் விரும்பாத தாளாளரின் தனிப்பட்ட குணாதிசியங்கள் போல பல விதைகள் விருட்சமாய் வளர உதவுவதாகவும் இருப்பதால் விடாமல் கலந்து கொள்வதுண்டு.

தொடங்கும் இசையும், முடிக்கும் இசையும் நம்மை முழுமையாக வாழ்க்கையை, பெற்ற சுதந்திரத்தை உணர வைக்கும். உன்னத நிர்வாகத்தை நடத்தி வரும் தாளாளர் பெற்றுள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தான் அத்தனையும் வரவு.

இளமையாய் உள்ளவர்களும் இள ரத்தம் படைத்த தாளாளர் போன்றவர்களெல்லாம் இந்த பூமிப்பந்தின் புண்ணிய பூக்கள்.

இனி வரும் இந்தியாவுக்கு தேவையான வளர்ச்சிக்கு இளரத்தம் என்பது தான் தேவை என்பதற்கு இந்தியாவின் வளர்ச்சியை விரைவு படுத்தியதற்கும் மூடி இருந்த கதவுகளை உடைத்து திறந்தமைக்கும் காலஞ்சென்ற திரு. ராஜிவ் காந்தியை விட வேறு உதாரணம் வேண்டுமோ?

தொடர்ந்து வரும் அடுத்த ஆண்டு கூட்டத்திற்கென்று, தொடங்க வேண்டிய முன்னேற்பாடுகளை முந்தைய ஆண்டிலேயே கட்டிடமாய், கலை அரங்கமாய் மாற்றிக்கொண்டு வரும் அவருடைய இளமை போலவே பள்ளியும் என்றுமே இளமையாய் இருப்பதால் கூட்டமும் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது.

எனக்குத் தெரிந்த வரையில் சிறப்பு நன்கொடை ஏதும் வாங்காமலே தேவையான வசதிகள் கொடுத்து வசூலிக்கும் நியாயமான கட்டணங்களை போன்று திருப்பூரில் வேறு ஏதும் பள்ளிகள் இங்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆங்கிலம் பேச வேண்டும். அதுவும் சேர்ந்த அடுத்த நாளே பேச வேண்டும் என்ற பேசா மடந்தை மாக்களால் இங்கு மட்டுமல்ல ஊரெங்கும் அதிக அலங்கோலமாய் கல்விக்கூடம் அனைத்தும் கொள்ளைக்கூடராமாய் மாறிக்கொண்டு வருகின்றது.

திருப்பூரில் அடுத்த பள்ளிகளுக்குள் எட்டிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

கட்டணக் கொள்கைகள் என்ற பெயரில் துண்டுச்சீட்டை எதிர்த்த வீட்டு பெண்மணி கொண்டு வந்து காட்டியது ஆச்சரியம் என்றால் அவர்கள் குழந்தைகள் படிக்கும் கிங் ஆன பள்ளியின் கட்டளைகளை அனைத்தும் காலஞ்சென்ற இந்திரா காந்தி அம்மையாரின் நாட்டு நலத்துக்காக தயாரிக்கப்பட்ட அம்ச திட்டங்களை விட அம்சமாய் இருக்கிறது.

ஆனால் அத்தனையும் அவர்களின் தனிப்பட்ட தன்னலத்துடன் தயாரிக்கப்பட்டதாய் இருந்தது.

அத்தனை அம்ச திட்டங்களும் அக்கிரம கொள்ளையாய் இருப்பதைப் பார்த்து இல்லத்தரசி விக்கித்து விட்டாள். எனக்கு ஒன்றுமே ஆச்சரியம் இல்லை. ஒவ்வொருவரின் கொள்கைகளையும் உள்வாங்கிக் கொண்டுருப்பதால்?

நுழையும் போதே உறுதிக்கட்டணம்

சேர்ந்த பிறகு இறுதிக்கட்டணம்.

வாந்தி வந்தாலும் கட்டாய சிற்றுண்டி கட்டணம்.

பயணம் செய்யாவிட்டாலும் பேரூந்து கட்டணம்.

தேவையில்லை என்றாலும் சிறப்பு வகுப்பு கட்டணம்.

புகைச்சலை கிளப்பும் புத்தக எழுதுபொருள் கட்டணம்.

ஆடைகளுக்கு ஒரு கட்டணம்.

தைப்பவர்களுக்கு கூட அவர்களின் முடிவான கட்டணம்.

கொண்டாடும் ஆண்டவன் நிகழ்ச்சிக்கு கட்டணம்.

பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு நன்கொடை கட்டணம்.

எதிர்பார்த்துக்கொண்டுருக்கும் (?) மத்திய அரசு பாடத்திட்டத்திற்கு தனியான கட்டணம்.

இத்தனையும் போக கட்டாய வருட வருட கட்டிட வளர்ச்சிக்கட்டணம்.

இன்னமும் பெற்றோர்களின் “கருமாதி கட்டணம்” மட்டும் தான் சேர்க்க வில்லை?

கட்டிக் கட்டி உயிரற்ற செங்கல் கட்டியாக மாறிப்போனவர் வந்து என்னிடம் வந்து புலம்பிய போது அவரிடம் சொல்லமுடியவில்லை.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்

தனி மனித வளர்ச்சிகளில் கொண்டுள்ள வசதிகளை வைத்து ஆசைகளுக்கும், ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அதிக மரியாதை தரும் திருப்பூரில், ஏற்றுமதியாளர்களின் தற்போதைய அவதாரம் கல்வித் தந்தையாவது.

உழைத்து உழைத்து உடம்பு ஓடாகிப் போனாலும் எவரும் ஓட்டையாண்டியானது இல்லை.

அவரவர் உழைப்பை, நேரத்தைப் பொறுத்து அவரவர் இடத்தை இன்று வரையிலும் தக்க வைத்துக்கொண்டு தான் இருந்து வருகிறார்கள்.

தொடக்கத்தில், உபரியாய் சேர்ந்ததும், ஒதுக்கியதை சேர்த்ததுமாய், அத்தனையையும் வெற்று இடங்களில் கொண்டு போய்த்தள்ள அத்தனை இடுகாடு போன்ற இடங்களும் சராசரி மக்களின் ஆசைகளுக்கு சூடு காடாகிவிட்டது.

இவர்களின் ஆசையால் இட(ம்) தரகர் கூட்டமெல்லம் முன் அனுமதி பெற்று வரவும் என்று அட்டை மாட்டாத குறையாக அலம்பலில் வாழ்க்கை வாழ்ந்தனர்.

மொத்தமாய் விழுந்த குறீயீடுகள் இவர்களின் சேர்த்து வைத்த மொத்தத்தையும் இழக்க வைத்தது.

மனம் தளராத விக்ரமாதித்தனாய் ஆரல்வாய்மொழி, குற்றாலம் வரைக்கும் அத்தனை நீளமாய் இவர்களின் கரங்கள் நீண்டது. பொட்டல் காடுகள் அனைத்தும் வீசிய காற்றை மட்டும் நம்பி மின்சார காற்றாலையாக உருமாறியது.

தயாரிக்காத மின் உற்பத்தி விசிறிகளும், மாற்றப்பட்ட அரசு கொள்கை முடிவுகளும் அவர்களின் வங்கி தராதரத்தை தகிங்கிணத்தோம் போடச் செய்ய இப்போது கல்வித்தந்தையாக அவதாரம்.

குறுக்கே நின்ற பெண்மணி கணவர் தொழில் மூலமாக பழக்கத்தில் உள்ளவர். பெண்மணியோ கணவரின் உபரியை உச்தேசமாக வைத்து எங்களது குடியிருப்புக்கு அருகில் கல்விக்கூடத்தை தொடங்கியிருப்பவர்.

ஏற்கனவே திருப்பூரின் மறு மூலையில் நடத்திக்கொண்டுருப்பவர்.

அவரது கல்விக்கூடத்தில் பணிபுரிந்து கொண்டுருக்கும் எங்கள் வீட்டுக்கு மேலே இருந்த பெண்மணி ஒரு நாள் பேச்சு வாக்கில் என்னைப்பற்றி சொல்லிவிட கணவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

அழைப்பு வந்த அடுத்த நாள் அந்த பெண்மணி வீட்டுக்கே வர அவஸ்த்தை தொடங்கியது. வசதியான நபர்கள் வாழும் இடத்தை நம்பி தான் பெறும் மூதலீடு செய்துள்ளோம். நீங்கள் உங்களுக்கு தெரிந்த அத்தனை குழந்தைகளையும் அறிமுகம் செய்தால் நன்றாய் இருக்கும்.

மறுக்க முடியாது.

பார்க்கின்றேன், முயற்சிக்கிறேன் என்று ஒரு மாதமாக இழுக்கத்தான் முடிந்தது. இன்று வகையாக மாட்டிக்கொண்டாகி விட்டது. விதியின் கோடுகளை உணர்ந்து கொண்டு அவருடன் உள்ளே அந்த சந்துக்குள் உள்ளே நுழைந்தோம்.

வீட்டில் இருந்து மூன்றாம் சந்தாக இருந்தாலும் அருகில் இருந்த இரும்பு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகமாக சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. கழிவுகளை சேமித்து வைத்துக்கொண்டுருந்த ஏற்றுமதி நிறுவன நிர்வாகி அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு கொடுத்த இடம்.

நான்கு சுவர்களை தடுத்து நடுவில் சுற்றிக்கொண்டுருந்த மின்விசிறிக்கு மேலே கூரையால் வேயப்பட்டுருந்தது.

அதிகபட்சம் நூறு பேர்கள் அமரலாம். ஐந்து வகுப்பாக பிரிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் ஐம்பது பேர்கள் அமரக்கூடிய வகையில்.

வாழைப்பழ புகைமுட்டி போடக்கூடிய இடமாக இருந்ததைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டே அருகில் மொத்தத்திற்குமாய் இருந்த ஓரே ஆயாம்மாவைப் பார்த்தேன்.

அவரிடம் இல்லாத பற்களைப் போல் நிற்க முடியாத கால்கள் எதையோ எனக்கு உணர்த்தியது.

பக்கத்து ஏற்றுமதி நிறுவனத்தின் மொத்த கழிவு நீர் தேக்கமாய் இறக்கத்தில் அமைந்த கட்டிட உறுதி பார்த்து பயந்து கொண்டே வௌியே வந்து மாட்டியிருந்த பள்ளிப்பெயர் பலகையைப் பார்த்தேன்.

ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளி.
(கேம்ப்ரிட்ஜ் பள்ளி நிர்வாகத்தின் குழுமம்)
மத்திய அரசு அனுமதி பெற்ற பாடத்திட்டத்தின்படி.

சுதந்திர எண்ணங்களை நமக்களித்த சுதந்திர தாயை இந்த சுதந்திர தினத்தில் தேடிக்கொண்டுருக்கின்றேன். படம் கிடைத்ததும் போடுகின்றேன்.

பின்னூட்டமொன்றை இடுக