Daily Archives: ஓகஸ்ட்26, 2009

பய வரிசை பத்து

1. முந்தைய தலைமுறைகளை விட மேம்பட்ட முன்னேற்றத்தை எல்லா துறைகளிலும் இன்றைய இளையர் கூட்டம் பாலின பாரபட்சம் இல்லாமல் வெற்றியடைந்து இருக்கிறார்கள். பாராட்டக்கூடியது என்றாலும் சமீப ஊடக செய்திகளிலும் உருவாகும் அனைத்து பிரச்சனைகளான குற்றங்களிலும் மிக அதிகமாக பதின்ம வயதினரும், மாணவ சமுதாயமும் ஈடுபடுவதாக காட்டும் படங்களில் கூட பயமில்லாமல் பல் இளித்துக்கொண்டுருப்பது ஏன்?

2. மேம்பட்ட சுதந்திரம் வேண்டும், மேலான 33 சதவிகிதமும் வேண்டும் என்று மார் தட்டும் பெண்கள் கூட்டத்தில் அதிகமான காலாவதியான கன்னியர் கூட்டம், மாண்புகளை புறக்கணிக்கும் உடைகளும், மனதிற்குள்ளே மறுக வைக்கும் கலாச்சார சீரழிவு ஊடக தொடர்களை இத்தனை ஆர்வமாக ஆதரிப்பது ஏன்?

3. மண் பயனுற வேண்டும், கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாகி கரை சேர்ப்பேன், உண்மை நேர்மை துணிவு, உண்மையின் உரைகல், உலகத் தமிழர்களுக்கான ஒரே ஊடகம், முந்தித் தந்து முன்னேறிக் கொண்டுருப்பது, அத்தனை வயதுக்கு மொத்தமான ஒரே இதழ் போன்ற அத்தனை செய்தி சாதனங்களும் உண்மையான அக்கறையுடன் சிறப்பாய் முன்னெடுத்து செல்ல முயன்று முடங்கி கிடக்கும் எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற ஏராளமான சமூக அக்கறை உள்ளவர்களை ஆதரிக்காமல் இருப்பது ஏன்?

4. அத்தனை ஆயிரம் கோடிகள் அங்கு ஸ்விஸ் வங்கியில் முடக்கப்பட்டு இந்திய பொருளாதராம் மொத்தமும் மூச்சு முட்டிக்கொண்டுருப்பது நன்றாக தெரிந்த போதிலும் மீட்பதற்கான பேச்சு வார்த்தையே வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்குவோம் என்று எதார்த்தமாக சொல்கிறாரே இது யாருக்கு உணர்த்தும் அறிகுறி? மொத்த ஊடகமும் அமைதி காப்பது ஏன்?

5. மதம் தாண்டி மனிதம் மட்டுமே பார்க்கக்கூடிய நல்ல பல லட்ச மனிதர்களை பெற்றுள்ளது எல்லா மதங்களுமே என்றாலும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் போது அத்தனை மனிதர்களும் அதை முன்னெடுத்து செல்பவர்களை அடக்காமல் இருப்பது ஏன்? சார்ந்தவர்களை பார்க்காமல் மொத்தத்தையுமே சார்பாக பார்ப்பது ஏன்?

6. கணக்கற்ற சொத்துக்கள் சேர்த்து இருந்த போதிலும் அமைதியாய் வாழ சகிப்புத்தன்மையை அதிகம் பெற்ற இந்தியனான இருப்பது கூட தவறு இல்லை. இருபது வருடங்கள் இருந்த போதிலும் தேர்தல் வந்ததும் மட்டும் கட்சி மாறியவர்களைக் கூட கணக்கில் கொள்ளாமல் அவர்கள் நமக்கு நல்லது தான் செய்வார்கள் என்று அதீத நம்பிக்கை கொள்வது ஏன்?

7. ஓழுக்கம் உயிரினும் ஓம்மப்படும் என்பது போய் ஓழுக்கமாய் வாழ்ந்து ஓட்டையாண்டி ஆகி விடாதே என்ற அளவிற்கு ஓழுங்கீனம் மட்டும் சேர்த்து தரும் சொத்துக்கள் வைத்து அளிக்கும் சமூக அங்கிகாரம் ஏன்?

8. பட்டங்கள் வாங்கினால் தம்மை பல்லாக்கில் வைத்து தாங்குவான் என்று பலவற்றையும் இழந்து தகுதிக்கு மீறிய இடத்தில், புண்ணிய ஆத்மாக்களுக்கு மொத்த சொத்தில் ஒரு பங்கை நன்கொடை கட்டணமாக செலுத்த முன்வருவது ஏன்?

9. விண்னை முட்டும் விலைவாசி உயர்வு, விளங்கிக் கொள்ள முடியாத குறீயீடு சமாச்சாரங்கள் என்ற போதிலும் விருந்தோம்பல் முக்கியம் என்று கடன் வாங்கி கணக்கற்ற ஆடம்பரத்தில் கண்களை உறுத்தும் காட்சியாய் நடத்தும் ஆரம்பர திருமணங்கள் ஏன்?

10. முன்னேறி விட்டோம் என்ற வாக்குறுதிகளும், முன்னேறிக் கொண்டுருக்கிறோம் என்ற செய்திகளும் படித்துக் கொண்டுருக்கும் நான் பருப்பு வகைகள் இல்லாத பக்குவமான உன் சமையல் திறமை ருசிக்க ஆசை என்றால் இல்லத்தரசி இனிமையான முகத்தை மாற்றி விடுகிறாளே ஏன்?