Daily Archives: ஒக்ரோபர்7, 2009

100.வீரம் விளைஞ்ச மண்ணு


புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (44)
வீரம் விளைஞ்ச மண்ணு

மகாத்மா காந்தி வாழ்க்கை.- கொள்கை.- இறப்பு.- சில உண்மைகள் (1)
காந்திஜியின் கொலைக்கான திட்டங்கள் பம்பாயிலிருந்து 190 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் பூனா நகரில் இறுதி வடிவம் பெற்றது. பூனா நகரம் இந்து மத கொள்கையாளர்களின் கோட்டையாக விளங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பூனாவின் உட்பகுதியில் உள்ள மலைபிரதேசங்களிலிருந்து, இந்து சாம்ராஜ்யம் அமைக்கப் பாடுபட்டவரும், சக்கரவர்த்தி ஓளரங்கசீப்புக்கு எதிராக கொரில்லாப் போர்கள் நடத்தி அவரைக் கலங்க அடித்தவருமான சத்ரபதி சிவாஜி தோன்றிய மண் அது.

அவரது வாரிசுகளாகக் கருதப்பட்ட பேஷ்வாக்கள் 1817 ஆம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டார்கள். பாலகங்காதர திலகரும் இங்கிருந்து வந்தவர்தான். பிராமணர்களிலேயே மிக உயர்ந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சித்பவான் பிராமணர்கள் பழைய பேஷ்வாக்களைத் தொடர்ந்து ஒரு கட்டுக் கோப்பான அகண்ட இந்த சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார்கள். அவர்கள் தலைமையில் ஏற்பட்டதுதான் ஹிந்து மகாசபை. ஆரம்பத்திலிருந்து இன்று வரை, தலைவராக இருந்த பாளாசாஹிப் தியோரஸ் முதல் இன்று இருக்கும் தலைவர் வரை அத்தனை பேர்களும் சித்பவான் பிராமணர்களே. ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ்ட்ரிய சுயம் சேவக சங்கம் என்பது இதன் செயலாற்றும் பிரிவு. ஆர்.எஸ்.எஸ் இன் அதி ரகசிய உட்பிரிவுக்கு “இந்து ராஷ்டிர தளம்” என்று பெயர்.

அகண்ட இந்து சாம்ராஜ்யக் கனவு கண்டு கொண்டுருந்தவர்களுக்கு அப்போது ஒரு புதிய தலைவர் தோன்றினார். மகாராஷ்டிராவின் சர்ச்சில் என்று புகழப்பெற்ற இந்த தலைவரின் பேச்சுகள் வேதவாக்காக் கருதப்பட்டது. அவரது ஒவ்வொரு அறிக்கைகளும் கால் புள்ளி, அரைப்புள்ளி என்பது கூட விட்டுப்போகாமல் மிக கவனமாக, பக்தியோடு படிக்கப்பட்டு அவரது தொண்டர்களால் மனப்பாடம் செய்யப்பட்டது.

விநாயக தாமோதர வீர் சாவர்க்கர் என்பது அவரது முழுப் பெயர்.
சத்ரபதி சிவாஜியின் நேரடிடையான வாரிசுகள் என்று கருதப்பட்ட இவர் அன்றைய காலகட்டத்தில் மகாராஷ்ட்ரா, பூனா நகரில் மிக அதிகமான செல்வாக்குடன் திகழ்ந்தார். இன்னும் வௌிப்படையாக சொல்லப்போனால் இந்த இடங்களில் மகாத்மா காந்தி, நேரு அவர்களெல்லாம் மூன்றாம் நான்காம் இடங்கள் தான். இவருடைய செல்வாக்கு, சொல்வாக்கு அத்தனை பிரபல்யம். கேள்வியே இல்லை. கேள்விக்கு அப்பாற்பட்ட தெய்வத்துக்கு சமமானவராக கருதப்பட்டவர்.

இவர் மட்டும் காங்கிரஸில் இணைந்து இருந்தால் மகாத்மா காந்தி, நேதாஜிக்கு இணையாக மதிக்கப்பட்டு இருக்கக்கூடும். வீரமும், விவேகமும் ஒருங்கே பெற்ற தேசபக்தர். ஒரே ஒரு குறை. பல்வேறு கலாச்சார சீரழிவுகளை தந்து கொண்டுருக்கும் முஸ்லீம்கள் வாழக்கூடிய பூமி இந்த பூமி அல்ல என்பதில் அத்தனை உறுதியாக இறுதிவரையில் இருந்தவர். ஆனால் அவர்கள் எங்கே போகமுடியும்? என்று அவரை கேட்டவரும் இல்லை. அதற்கான பதிலும் எவரிடமும் இல்லை.

காந்தி, நேரு, படேல்,ஜின்னா இவர்களைப் போலவே இவரும் லண்டனில் சட்டம் படித்து அத்தனை மேலிட பிரிட்டிஷ் மக்களிடம் பழகியவர் தான். ஆனால் இங்கிலாந்தில் இருந்த படித்த எந்த சட்டமும் இவருக்கு உடன்பாடில்லை. அவருக்கென்று தனி சட்டங்கள், நியதிகள், கொள்கைகள், கோட்பாடுகள். அவை அத்தனையும் இந்தியாவுக்கு, இந்து மக்களுக்கு, குறிப்பாக இந்து சாம்ராஜ்யத்துக்குப் பொருந்தும் சட்டங்கள்.
சாவர்க்கர் தீவிரமான தேசபக்தர் என்பதில் எந்த தலைவருக்கும் சந்தேகம் இல்லை. பல தேசிய தலைவர்களுக்கு அவர் மேல் மரியாதையை விட பயம் தான் அதிகமாக இருந்தது. கடைசி வரையிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும், முஸ்லீம்களை ஒரே மாதிரியாகத் தான் கருதினார், வெறுத்தார்.

கண் முன்னே அக்கிரமம் என்றால் அடுத்த நொடியே அதன் முடிவு தெரிந்து விட வேண்டும். லண்டனில் படித்துக்கொண்டுருந்த போது டெல்லியில் வரம்பு மீறி பல அக்கிரமங்களுக்கு துணை போய்க்கொண்டுருந்த வௌ்ளை அதிகாரியை அங்கிருந்தபடியே தூக்கியவர். அவர் மூலம் தண்டிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் பலர். ஆனால் அத்தனை பேர்களும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற வரிசையில் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டவர்கள்.

காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திர போஸ், ஜின்னா சாகிப் இவர்களின் இந்திய அரசியல் பிரவேசித்திற்கு முன் (1910) பிரிட்டிஷ் அதிகாரியை படுகொலை செய்யப்படுவதற்கு சதி திட்டம் தீட்டியவர் என்று அவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். அவரை ஏற்றிக்கொண்டு வந்த பிரிட்டிஷ் கப்பலில் இருந்து ஒரு கண்காணிப்பு துவாரம் வழியாக தப்பி வந்த அவரை பிரான்ஸ் அரசு கைது செய்து பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான சிறையில் வைக்கப்பட்டார்.

முதலாம் உலக யுத்தத்தின் முடிவில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் அவருக்கு விடுதலை கிடைத்தது.
காந்தியையும், காங்கிரஸையும் வெறுத்த சாவர்க்கர் குமரி முதல் இமயம் வரையிலும் அப்பாற்பட்டும் இந்து அகண்ட சாம்ராஜ்யம் அமைய வேண்டும் என்பதில் அத்தனை உறுதியாய் இருந்தார். இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ். மற்ற உட்பிரிவுகள் அத்தனையிலும் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாக விளங்கினார்.

வீர் சாவகர்க்கர் மேடை பிரசங்கம் என்பதும் அறிக்கைகள் என்பதும் கேட்பவர்களை மூளைச் சலவை செய்வதற்கு சமமாக இருக்கும். நெருப்பை உமிழ்வது போன்ற பேச்சில் வீரம் இல்லாதவனுக்கும் வீரம் அந்த நிமிடமே வந்து விடும். அத்தனை தூரம் கவர்ந்து இழுக்கும்.
காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக கோட்சேயும், உதவியாய் இருந்த விஷ்ணு கார்க்கரே போன்ற இந்து அபிமானிகள் அத்தனை பேர்களுமே சித்பவான் பிராமணர்களே?

முகத்தில் தோன்றினோம். முகவரியை மாற்ற முனைந்தோம். முக்கலும் முனங்கலும் வந்தால் என்ன? முடிவு இல்லாமலா போய்விடும்?

காந்தி கணக்கு

காந்தி கணக்கு

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (43)

இந்தியாவின் மொத்த ஆத்மா என்றும், மகாத்மா, புனிதர் என்றும் வாழ்ந்த முடித்த காந்தி அவர்களை வெறுத்த வௌ்ளையர்கள் கூட விரும்பினார்கள். தான் விரும்பியபடிதான் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி வாழ்ந்தாரா?

“முரண்பாடுகளின் மொத்த உருவம் காந்தி ” என்று இன்றைய சமகாலத்தில் வாழ்ந்து கொண்டுருக்கும் இளையர்களின் சிந்தனை உண்மைதானா?

“நான் 120 வயது வரை வாழ ஆசைப்படுகிறேன். அப்போது தான் இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும் செய்ய முடியும் ” என்ற காந்தி ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்? காலத்தை ஜெயித்து வாழ்ந்தவர் ஏன் அகால மரணமடைந்தார்?

எளிமையைத்தவிர எதையும் அனுபவிக்காதவர் காந்தி. சாதாரண கீழ்நிலையில் உள்ள அரசியல்வாதிகள் போல எந்த சந்தோஷங்களையும் கூட அனுபவிக்காத மகாத்மாவை ஏன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்? அவ்வாறு சிந்தனை படைத்தவர்களுக்கு, எந்த கொள்கைகள் அவர்களை உந்து தள்ளியது?

சொல் ஒன்று செயல் ஒன்று என்று இன்று வரையிலும் வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை புதிய பழைய அரசியல் தலைவர்கள் மத்தியில் தான் சொல்லியபடியே, விரும்பியபடியே கடைசி மூச்சு வரைக்கும் வாழ்ந்த காந்தியின் மீது இத்தனை வெறுப்பும், துவேஷமும் ஏன் ஒரு குறிப்பிட்ட சாரர்களிடம் மட்டும் உருவாகியது?

வதை என்பது பாவம் என்ற கொள்கையாக வைத்து புலால் உண்பதை உண்ணாமல் வாழ்ந்த காந்தி, தன்னுடைய மனைவிக்கு கடைசி காலத்தில் கூட ஊசி குத்துதல் என்பது கூட தன்னுடைய கொள்கைக்கு முரணானது என்று தேவையான சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்களை திருப்பி அனுப்பி விட்டார். கஸ்தூரிபா காந்தி இறப்புக்கு காந்தியும் ஒரு காரணம். அத்தனை தூரம் தன்னுடைய கொள்கைகளில் உறுதியாக வாழ்ந்தவரை வதம் மூலமாகவே சுட்டுக்கொல்லப்பட வேண்டிய அவஸ்யம் என்ன?

கல்கத்தாவில் நடந்த அத்தனை கலவரத்துக்கும் முக்கிய காரணம் அன்றைய வங்காள அரசியல்வாதி சுஹ்ரவர்த்தி. ஆனால் ஆகஸ்ட் 14 மற்றும் 15 அன்று கல்கத்தாவில் நடக்கவிருந்த அத்தனை கோர கலவரங்களை நிறுத்தும் பொருட்டு குறிப்பாக தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு காந்தியிடம் தஞ்சம் புகுந்தவர். கலவர பூமியை பிரார்த்தனை பூமியாக மாற்றிய பெருமையின் இறுதியில் அந்த கொடுங்கோலன் மொத்த கூட்டத்திற்கும் மத்தியில் எழுந்து “நம் அனைவரையும் காப்பாற்றிய தெய்வம் இந்த மகாத்மா. நான் ஒரு தடவை “ஜெய் ஹிந்த்” என்று உரக்க கூறுகிறேன். நீங்கள் அணைவரும் அதே முறையில் உரக்கக் கூறுங்கள் என்றார். அதே போல் மொத்த ( ஒரு லட்சத்திற்கும் மேல்) கூட்டமும் ஜெய் ஹிந்த் என்று கூறினார்கள். கொடுங்கோலனைக்கூட மனம் மாற்றிய காந்தியடிகளால் கொள்கையாளர்களை ஏன் மாற்ற முடியவில்லை?

லண்டன் மன்னர் மாளிகையில் கூட, நடந்த கூட்டத்தில் தன்னுடைய எளிமையான ஆடையின் மூலமாக இந்திய மக்களின் உண்மையான வாழ்க்கை தரத்தை மறைமுகமாக உலகத்துக்கே எடுத்துரைத்தவர் காந்தி, ஆனால் ஆட்சிக்கு வந்த புதியவர்களை தாம் விரும்பியபடி மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை தரமுடியாதவர்களை அவர்களின் மனத்தை மாற்ற முடியாத காரணம் என்ன?

மொத்த காங்கிரஸ் தலைவர்களும் தனக்கு எதிரான கூட்டணியில் ஒன்று சேரும் அளவிற்கு தன்னுடைய கொள்கையை மறுபரிசீலினை செய்தவரா காந்தி?

அன்றைய சாதரண பாமர மக்களின் உணவில் உள்ள உப்பு என்பதை பார்க்கக்கூடிய பார்வையில் இளக்காரமாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் இந்த சாதாரண உப்பை ஆயுதமாகக்கி “உப்பு சத்தியாக்கிரகம் ” தொடங்கிய காந்தியைக் கண்டு வௌ்ளையர்கள் கிடுகிடுத்து விட்டனர். சாதாரண விஷயங்களைக்கூட பிரமிக்கத் தக்கதாக மாற்றிய காந்தி தன்னுடைய வாழ்க்கை முழுவதும் அசாதரணமாக கொள்கைகளை மட்டுமே கொண்டு வாழ்ந்தது ஏன்?

மகிழ்ச்சி என்பதன் உண்மையான நிகழ்ச்சிகளை கடைசிவரையிலும் வாழாத கடைக்கோடி பாமர மக்களின் சந்தோஷத்திற்கான அத்தனை தன்னாலன முன்னேற்பாடுகளையும் கடைசிவரை செய்தவர், வாழ்ந்து காட்டியவர் மகாத்மா காந்தி? ஆனால் அவர் கடைசி காலத்தில் மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்தாரா?

மொத்த ராணுவமும் காக்க முடியாத கணக்கற்ற மனித உயிர்களை, கல்கத்தாவில் வெடித்துச் சிதற வேண்டிய கலவரங்களை தன்னுடைய “ஒரு மனித ராணுவம்” மூலம் சாதித்து காட்டியவர் காந்தி. ஆனால் தன்னுடைய உயிர் ஒரு துப்பாக்கி குண்டால் தான் பறிக்கப்படும் என்பதை உணர்ந்து இருப்பாரா?

ஒவ்வொரு தன்னுடைய பிரார்த்தனை கூட்டத்தின் வாயிலாகவும், கீதை, குரான், பைபிள் என்று மூன்று மத மூலத்தில் இருந்தும் தலா ஒவ்வொரு குறிப்புகளை உரை தொடங்குவதற்கு முன் வாசித்துக் காட்டி கூட்டத்தை நடத்துபவர் காந்தி. ஆனால் மூன்று மத மக்களும் அவரை உண்மையிலேயே விரும்பினார்களா?

ஹிம்சையான தலைவர்கள் ஒரு பக்கம் என்ற போதிலும், தன்னுடைய அஹிம்சை தான் கடைசி வரைக்கும் சரியாக இருக்கும் இந்தியாவிற்கு என்று வாழ்ந்து காட்டியவர் காந்தி. ஆனால் தன்னுடைய இறுதி மூச்சு ஹிம்சையின் மூலம் தான் என்பதை உணர்ந்தவரா?

சுதந்திரம் அடைந்ததும் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய (ஒப்பந்தப்படி) மொத்த தொகையையும் கொடுக்கா விட்டால் நான் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பேன் (1948 ஜனவரி 13) என்றார். வாங்கப்பட்ட பணம் (54 கோடி) மொத்தமும் ஆயுத கொள்முதலுக்கு தான் பயன்படுத்தினார்கள். உணர்ந்தாரா? என்ன உள்வாங்கி வாழ்ந்தார்?

” இந்தியா பாகிஸ்தான் பிரிவினை என்பது என்னுடைய பிணத்தின் மீது நடக்கட்டும் ” என்றார் காந்தி. ஆனால் அவர் கடைசி வரைக்கும் ஜின்னா அவர்களை எந்த அளவிற்கு புரிந்து கொண்டார்? என்ன முன்னேற்பாடுகளைச் செய்தார்?

கூட்டிய கூட்டத்தில் வந்த மக்கள், கண் எதிரே கற்பழித்து, கொள்ளையடிக்கப்பட்ட, அத்தனையும் இழந்த மக்கள் மன்றாடிக் கேட்ட போதும் கூட ” இது ஆன்மிக பூமி. அமைதி ஒன்றே ஆயுதம் ” என்று அறிவுரை கூறினாரே. அவருடைய பார்வையில் தனி மனித இழப்புகள் என்பது எந்த விதமான உணர்ச்சிகளை உருவாக்கியது?

சம காலத்தில் தன் முன்னால் தன்னுடைய ஆளுமைத்திறன் என்ற ஓரே வார்த்தையின் மூலமாக தன்னாலான அத்தனை பங்களிப்புகளை இதய சுத்தியோடு செய்த மவுண்ட் பேட்டன் பிரபு அவர்களின் நிதர்சன கொள்கைகளை எவ்வாறு பார்த்தார் காந்தி? எந்த அளவுக்கு அவற்றை உள்வாங்கினார்?

தவறு செய்பவர்கள் அத்தனை பேரும் திருந்தக்கூடியவர்கள் இது காந்தியின் கொள்கை. ஆனால் திருந்தாமல் நாட்டை திண்டாட வைத்துக்கொண்டவர்களை காந்தி எவ்வாறு பார்த்தார்?

உலக நாடுகள் காந்தியின் கொலையை “இரண்டாம் சிலுவையேற்றம்” என்று வர்ணித்தது? காந்தி மட்டும் மறு கன்னத்தில் வாங்கிக்கொண்டால் பரவாயில்லை? மொத்த மக்களும் அப்படி வாழ வேண்டும் என்று எப்படி எதிர்பார்த்தார்? அன்றைய சூழ்நிலையில் வாழ்ந்த மக்களின் உண்மையான வாழ்வாதாரத்தை புரிந்து கொண்டவர் தானா காந்தி?

1947ல் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்ஸே தொடக்கத்தில் 1937ல் காந்தியின் தீவிரமான பக்தன் அல்லது வெறியன். ஆமாம் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறைசென்றவன். ஏன் மாறினான்? எது மாற்றியது?

உலக சரித்திரத்திலேயே இவ்வளவு கேவலமான முறையில் ஒரு போலீஸ் துறை செயல்பட்டது இல்லை. ஆமாம் காந்தியின் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் பின் என்று இயங்காமல் அந்த துறையின் மொத்த கட்டுப்பாடு அன்று யார் கையில் இருந்தது? ஏன்?

காந்தியின் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எட்டுப்பேர். இதில் வீர் சாவர்க்கர் ஒருவர்? இறுதியில் இவருக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று விடுதலையானவர்? யார் இவர்?

நண்பர்களே மொத்த இந்திய சுதந்திரத்தின் மறைக்கப்பட்ட தெரியாத விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு வந்த அத்தனை வாசிப்பாளர்களுக்கும் என்னுடைய வந்தனம். இந்த நிமிடம் வரைக்கும் மதம் சார்ந்தோ, இனம் சார்ந்தோ என்னுடைய விருப்பங்களை பதிவு செய்யவில்லை. இன்று வரையிலும் வாழ்ந்து கொண்டுருக்கும் நாம் அனைவருமே பொதுவாக வழக்கத்தில் உரையாடிக்கொண்டுருப்பது “காந்தி கணக்கில் ” வைத்துக்கொள் என்று அனைவருமே ஒரு புதிய கணக்கு தொடங்கி அவருக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டுருக்கிறோம்.

காந்தியைப் பற்றியோ, அல்லது அவரது சத்திய சோதனைகளைப் பற்றியோ பின்வரப்போகும் அத்தியாயங்களில் சொல்லப்போவது இல்லை. ஒரே காரணம். அவர் எப்போதும் போல மகாத்மாவாகவே இருந்து விட்டுப் போகட்டும். நாம் சராசரி மனிதராகவே வாழ்ந்து விடலாம்.

காரணம் அவரைச் சுட்டுக்கொள்ள ஒரு இயக்கம் மட்டும் அன்றைய கால கட்டத்தில் முன்னிலை வகித்தது. இன்று மகாத்மாவாக வாழ முற்பட்டால் சந்துக்கு சந்து பத்து இயக்கங்கள் தயாராக இருக்கும். காரணம் அவர்களின் நல்வாழ்க்கை உங்களால் பாதிக்கப்பட்டு விடும்.

ஆஸ்கர் பரிசு வாங்கி வந்தவரைக்கூட அதிகார வார்க்கம் எங்களை வந்து ஏன் சந்திக்கவில்லை என்று “அன்பாக” கேட்கும் ஆள்பவர்களின் உலகம் இது? வாங்கியவர் உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று கணக்கில் கொள்வாரா? ஏன்டா வாங்கினோம் என்று கவலை கொள்வாரா? மறுபடியும் இந்த மாதிரி பரிசுகள் தேவையில்லை என்று சோர்ந்து விடுவாரா?

காரணம் இங்கு இப்போது இனி எப்போதுமே எல்லாமே அரசியல் கணக்கு தான். சாக்கடை கால்வாயை திருப்பி விடுவதில் தொடங்கி, கடலில் கலக்கும் தண்ணீரை மக்களைச் சென்றடைய வைப்பது வரை அத்தனையும் அரசியல் தான் ஆட்சி புரிகின்றது. ஆனால் ஆள்பவர்களின் மனம்?

சம கால இளைஞர்கள் ஐந்து மற்றும் பத்து மதிபெண்களுக்கு படித்த காந்தியின் கொள்கைகள், காந்தியின் வாழ்க்கைகள் கூட தவறாக தெரியவில்லை? ஆனால் காந்தி காலத்தில் வாழ்ந்து இன்று வரை ஆட்சியில், அதிகாரத்தில் வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் என்ன உள்வாங்கினார்கள்?

ஆமாம் சத்திய சோதனைகள் நமக்குத் தேவையில்லை.

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியின் இறப்புக்கு முன்னால் மற்றும் இறப்புக்கு பின்னால் உள்ள மறைக்கப்பட்ட விஷயங்களை நாம் புரிந்து கொள்வதே இந்த நீள்பதிவின் (மற்றதெல்லாம் சின்னத்தம்பின்னு நினைப்பா?) நோக்கம்.

காரணம் சுதந்திரம் வாங்கிய போது நடந்த அத்தனை “நிகழ்ச்சிகளும்” இந்த நிமிடம் வரைக்கும் இந்தியா முழுமையும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மதத்தை முன்னிலை படுத்தி படுபாதகம் செய்தவர் என்று ஆண்டு கொண்டுருப்பவரின் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு. அத்தனை மதத்திற்கு நாங்கள் பொதுவானவர்கள் என்பவர்களின் மாநிலத்தில் 24 மணி நேர மது சேவை?

எந்த மாற்றமும் இல்லை. மக்களும் மாறத் தயாராயில்லை?

அன்று கிர்பான் என்ற வாளும் சாதாரண துப்பாக்கி கத்தியும் சூறைக்காற்றை உருவாக்கியது. இன்று ஏகே47 முதல் அத்தனை நவீன விஞ்ஞான வளர்ச்சி கருவிகளும் சூறாவளியை தொடர்ந்து கொண்டுருக்கிறது.

அன்று காங்கிரஸ் தலைவர்கள் முடிந்த வரை பாடுபட்டார்கள். ஆமாம் இன்றும் காங்கிரஸ் தலைவர்கள் பாடு பட்டுக்கொண்டுருக்கிறார்கள்.?

அன்று ஒரே கதர் ஆடையை மூன்று நாளைக்கு ஒரு முறை துவைத்து உடுத்தினார்கள். துவைத்தால் மாற்றுத்துணி இல்லாத காரணத்தால்.

ஆனால் இன்று உள்ள வழித்தோன்றல்கள் அத்தனை சிரமம் படாமல் ஒரு நாளைக்கு மூன்று புதிய (கசங்காத கதராடை) ஆடைகளை உடுத்தி ” ஊடகத்தின்” வாயிலாக மக்கள் சேவை செய்து கொண்டுருக்கிறார்கள்.

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625

http://deviyar-illam.blogspot.com/