உன்னைப்போல ஒருவன்

உன்னைப்போல ஒருவன் -அவர்

எனக்குள் ஒருவன்.

மதம் பிடித்து அலை?

அழிந்து போன உன்

உறவுகள்

உணர்த்தவில்லையா.

வன்மமே பாதையானால்

வருங்காலம்?

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (31)

கலவரம்,கண்ணீர்,கதறல்

காந்தி என்பவர் தவறான கொள்கை உடையவர். அவர் போற்றத்தகுந்த மனிதர் அல்ல. அவருடைய பங்களிப்புகளை விடவும் பெருமைபடக்கூடிய பல நல்ல மனிதர்களின் பங்களிப்புகளை இந்திய வரலாற்றுப் பக்கங்கள் இருண்ட பக்கமாக மாற்றிவிட்டது என்பது போன்ற பலருடைய ஆதங்கங்கள் எனக்கு வந்த போதிலும் இந்த நிகழ்ச்சியை உங்கள் பார்வைக்கு படைக்கின்றேன்.

எனக்குள் இருக்கும் வித்யாசமான சிந்தனைகள் போல உங்களுக்கும் உருவாகலாம்?

ஆகஸ்ட் 13 1947. சுதந்திரம் பிரகடனம் செய்வதற்கு இன்னும் 48 மணி நேரங்கள் தான் இருக்கிறது. இந்தியா முழுக்க கலவரங்கள். கண்ணீர்க் காட்சிகள், கதற முடியாமல் அல்லது அதற்கு வழியில்லாமல் இடம் பெயர்ந்து கொண்டுருந்தார்கள். யாரையும் திருத்த முடியாமல் இடம் பெயர்ந்து கொண்டே இருந்தார்கள்.

ஆகஸ்டு 15 1947 தேதிக்கு பின் பஞ்சாப் பிரிவினை எல்லைக்கோடு காரணமாக மேலும் மோசமான நிலைமையை எட்டக்கூடும் என்று மவுண்ட் பேட்டன் பிரபு படைகளை தயாராய் வைத்திருந்தார்.

வைஸ்ராய் என்ற பொறுப்புக்கு தகுந்த வரையில் தன்னாலான அத்தனை நிகழ்வுகளையும் உள்வாங்கி உடனடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டுருந்த போதிலும் மனம் என்னவோ உண்மைக்கும் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சம்மந்தம் இல்லாமல் போய்க்கொண்டுருப்பதாக அவரின் உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

அன்றைய கல்கத்தா ஒரு வித்யாசமான நகரம். நெரிசல் அதிகமான மக்களும், தெருக்களும் நிரம்பியிருந்தது. அழுக்குப்பிடித்த கூட்டம் அதிகமாக இருந்ததைப் போலவே கலைஅம்சம் நிரம்பிய மாட மாளிகைகளும் அதிகம் நிரம்பியதாக இருந்தது. கலவரம் கல்கத்தாவில் தொடங்கினால் எத்தனை டிவிசன் படைபலம் இருந்தாலும் அதை நிறுத்தவே முடியாது. காரணம் உள்ளே இருந்த அத்தனை சமூக சிக்கல்கள். மலச்சிக்கலை விட கொடுமையாய், கோரமான வித்யாசங்களுடன் வாழ்ந்த கூட்டம் அதிகமாய் இருந்தது.

ஒரு வேளை தொடங்கி விட்டால் மொத்தமாய் அழிந்து அவர்களாகவே நிறுத்தினால் ஒழிய வேறு வழியே இல்லை. யோசித்த மவுண்ட் பேட்டன் பிரபு யோசனைக்கு வந்த ஒரே நபர்?

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி.

ஆமாம். மொத்தமாய் செல்வம், செல்வாக்கு, அதிகாரம், ஆட்சி, ஆளுமை இன்னும் பல பெற்று தன்னிகரற்று விளங்கிய அன்றைய வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் பிரபு ஏன் மகாத்மா காந்தியை தேர்ந்தெடுத்தார்?

மொத்த இராணுவத்தை விட “ஒரு மனித” இராணுவம் போதும் என்று நினைத்தார்.

இவர் சொன்னால் அத்தனை பேர்களும் கேட்பார்கள். அசம்பாவிதங்கள் மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்லாது என்று மனதார நம்பினார்.

ஆனால் காந்தியோ எதிலும் ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் விலகியிருந்தார். கொந்தளித்துக் கொண்டுருந்த நவகாளி பகுதியில் இருக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டுருந்தார்.

அவர் ஏற்கனவே சொல்லிய வண்ணமே ஒவ்வொன்றும் நடந்து கொண்டுருந்தது. கல்கத்தாவை வந்து காப்பாற்றுங்கள் என்று கதறாத குறையாத கேட்ட மவுண்ட் பேட்டன் பிரபுவை விட அன்றைய தினம் கதறிக்கொண்டு வந்து காப்பாற்றுங்கள் என்று கேட்ட மற்றொரு ஆத்மா ஷகீத் சஹ்ரவர்த்தி.

ஆமாம் கடந்த காலத்தில் ஜின்னாவின் நேரிடைய நடவடிக்கை என்ற பெயரில் கல்கத்தா நகரத்தை நரகமாக மாற்றிய பெருமை மிக்க அன்றைய அரசியல்வாதி.

விஷயத்திற்கு போவதற்கு முன் அன்றைய ஆங்கிலேயர்களின் இரண்டாவது தலைநகரமான கல்கத்தாவைப்பற்றி சற்று உள்ளே சென்று பார்த்து விடலாம். காரணம் அப்போது தான் ஏன் மவுண்ட் பேட்டன் பிரபு கலவரம் தொடங்கினால் நிறுத்தவே முடியாது என்று யோசித்த யோசனை உங்களுக்கு புரிபடும்.

ஒரு வேளை படித்து முடித்ததும் இன்றைய கல்கத்தாவின் வளர்ச்சியும் உங்களுக்கு வந்து போகும்.

62 ஆண்டுகளில் நாம் சாதித்துள்ளது என்ன என்று புரியும்?

மிதமிஞ்சிய செல்வத்தில் திளைத்தவர்களும், அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழி என்று வாழ்ந்தவர்கள் மிக மிக அதிகம். லட்சக்கணக்கான மக்களுக்கு கோணிப்பை என்பதே வாழ்விடம், மறைவிடம். சௌரங்கி போன்ற இடங்களில் பல மைல் துரம் உள்ள சேரிப் பகுதிகளுக்குள் நடந்து போக வேண்டுமென்றால் மூக்கை பொத்திக்கொண்டு தான் கடந்து போக முடியும். அன்றைய தினம் நான்கு லட்சம் பிச்சைகாரர்களும், நாற்பது ஆயிரம் குஷ்டரோகிகளும் வாழ்ந்த நகரம்.

எட்டுக்கு பத்து குடிசையில் பத்து பேர்கள் வாழ்ந்தனர். அத்தனை சமூக விரோதிகளும் ஒன்றாக கலந்து வாழ்ந்தனர். திறந்து வழியும் ஓடிக்கொண்டுருந்த அத்தனை சாக்கடையின் மேல் வாழ்ந்த கூட்டத்திற்கும் அங்கு வாழ்ந்த கொசு, மூட்டைப் பூச்சிகளுக்கும் எந்த வித்யாசம் இல்லை. சுதந்திரம் அடைந்த நேரத்தில் முப்பது லட்சம் மக்கள் அரை வயிற்று சோற்றுக்கு வழியில்லாமல் வாழ்ந்தனர்.

ஆனால், அற்பத்தனமும், வஞ்சமும், குரோதமும், மத, இன, ஜாதி வேற்றுமைகளும் நிறையவே இருந்தன.

உருப்படியான வேலையோ, உபயோகமான காரியங்களோ செய்யத் தெரியாத லட்சக்கணக்கான மக்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்திருந்தது.

அதாவது அழிப்பது, உடைப்பது, கொளுத்துவது, தீயிடுவது போன்ற அழிக்கும் விஷயங்கள்.

வன்முறை காரணமாக வெடித்துச் சிதற்த் தயாராயிருந்த இந்த நகரத்தில் அமைதி ஏற்படுத்தும் எண்ணத்துடன் காந்திஜி வந்து தங்கினார்.

1947 ஆகஸ்ட் 13 பிற்பகல் காந்தியையும் அவரது துணைவர்களையும் தாங்கிய பழைய செவர்லெட் கார், கல்கத்தா பாலிகட்டா ரோட்டில் நுழைந்து ஹைதரி ஹவுஸ் (முஸ்லீம் பெரியவருக்குச் சொந்தமான) முன் வந்து நின்றது.

இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம்.

என்ன பிரச்சனைகள் எவரிடமிருந்து உருவாகும் என்று எண்ணினாரோ அவர்கள் வாழ்ந்த இந்த சேரிப்பகுதியில் வந்து தங்கினார். பராமரிக்கப்படாமல் இருந்த இந்த மாளிகை முழுக்க சேரிப்பகுதி மக்கள் மலஜல கழிக்க பயன்படுத்தியதால் மொத்த பகுதியும் துர்நாற்றம் நீக்கமற நிறைந்து இருந்தது.

அவருடைய ஒரே நோக்கம் கூட்டம் தன்னை தேடிவருவதை விட அவர்களைத் தேடி நாம் போய்விட்டால் பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும் என்று நினைத்தார்.

ஏற்கனவே நடந்த நேரிடைய நிகழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட அத்தனை மக்களும் காந்தியையும், அவரின் காரையும் வழிமறித்து கூச்சலிட்டனர். திரும்பி போ என்று முழக்கமிட்டனர். காரணம் அவர்கள் எதற்கோ? காத்துக்கொண்டுருந்தவர்கள்.

உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த மக்கள் கூட்டம் ஒட்டு மொத்தமாய் ” காந்தி திரும்பிப் போ. நவகாளிக்குப் போய் அங்குள்ள இந்து மைனாரிட்டியைக் காப்பாற்று. இந்துக்களைக் காப்பாற்று. முஸ்லீம்களை அல்ல. திரும்பிப் போ இந்துத் துரோகியே? ”

அவரது கார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி எறிந்தனர்.

“என்னை தாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இதோ நான் உங்களிடமே வருகிறேன் ” என்று குரல் கொடுத்து முன்னேறினார்

“வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் இருக்கும் என்னை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு இந்துக்களைப் போல முஸ்லீம்களும் முக்கியம். அவர்களும் எனக்குள் ஒருவர் தான். உங்களைப் போல் ஒருவர் தான்.

உங்களுக்கு மதம் முக்கியம். எனக்கு மனிதன் முக்கியம்.

பாகுபாடு வித்யாசம் எதுவும் இல்லை. நான் பாலிகட்டா ரோடுக்கு வருவதற்கு முன்பே மூஸ்லீம் தலைவர்களிடம் சத்திய பிரமாணம் வாங்கி வந்துள்ளேன். ஆகஸ்ட் 15 அன்று ஒரு இந்து கூட பாதிக்கப்படமாட்டார். அப்படி நேர்ந்தால் சாகும் வரையிலும் நான் உண்ணாவிரதம் இருப்பேன். நவகாளி இந்துக்களின் பாதுகாப்புக்கு தார்மீக பொறுப்பை நவகாளி முஸ்லீம்கள் ஏற்றுக் கொண்டதைப் போல, கல்கத்தாவில் உள்ள முஸ்லீம்களின் பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு ஏற்றுக்கொண்டுருக்கின்றேன்.

என்னை நீங்கள் தாக்க வேண்டுமென்றால் நானே உங்களிடம் வந்து என் உடம்பை ஒப்படைக்கின்றேன்” என்றார்.

தொடரப்போகும் தலைப்புகளின் புதிய இல்லத்தின் சுட்டி

http://deviyar-illam.blogspot.com/

எழுதிய திருப்பூர் வாழ்வியல் அனுபவங்கள்-இந்திய சுதந்திர ரகஸ்யங்கள்

அத்தனை தலைப்புகளும் இருக்கும் தேன்கூடு சுட்டி

http://thamizmanam.com/bloglist.php?id=5625

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s