கண்ணிய தேசம். கண்ணீரில் வாழ்ந்த தேசம்.

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 15

நகம் கடித்துக் கொண்டு இருக்கிறார் நேரு. கவலையுடன் ராஜேந்திர பிரசாத். கனத்த உடம்பை தூக்கிக் கொண்டு வந்த பட்டேல் கூட ஆஜர். மவுண்ட் பேட்டன் பிரபு எதிர்பார்த்து காத்து இருந்தார்.

ஆமாம்.

இந்தியாவை பிளக்க வேண்டும் என்று வெற்றி பெற்ற ஜின்னாவுக்காக காத்து இருந்தார்கள். முடிவுக்கு வந்தவர்கள் முகூர்த்த தேதி குறிக்க வரும் ஐயருக்காக காத்துருப்பதைப் போல அமைதியாய் அமர்ந்து இருந்தார்கள். ஆனால் அத்தனை முகத்திலும் அவசர பய ரேகைகள்.

வந்து கொண்டுருக்கும் செய்திகள் அப்படி.

உலை கொதிக்காமலேயே உள்ளே கொந்தளித்துக் கொண்டுருந்தார்கள் மக்கள். புத்தாண்டு பிறகும் இரவு நேரம் போல அத்தனை மக்களின் முகத்திலும் விடியும் பொழுதில் யார் உயிருடன் இருப்பார்கள் என்ற அச்சம்.

அத்தனைக்கும் காரணம், நாட்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருந்தவர்கள். தேடித் தேடி பார்த்துக் கொண்டுருந்தார்கள். தேவையான நபர்களை. அவஸ்யமான இடங்களை.

தலைவர்களும் தறுதலைகளும் புத்தியையும் திட்டங்களையும் தீட்டிக்கொண்டு இருக்கட்டும். அதற்குள் கடைசியாக ஆசை தீர அன்னை இந்தியாவை பார்த்து விட்டு வந்து விடலாமே?

இந்தியா சுதந்திரம் பெற்ற போது பாகிஸ்தானை சேர்க்காமல் 27 கோடியே 50 லட்சம் இந்துக்கள். இவர்களில் தீண்டும் விரல்களுக்கு கூட அருகதை இல்லை என்று ஒதுக்கி வைத்த நல்லவர்களின் தொகை 7 கோடி பேர்கள். 3 கோடியே 50 லட்சம் முஸ்லீம்கள். 70 லட்சம் கிறிஸ்துவர்கள். 60 லட்சம் சீக்கியர்கள், 1 லட்சம் பார்சியர்கள்.

இன்று அகில உலகத்தை ரசனையுடன் வழிநடத்திக்கொண்டுருக்கும் இந்திய யூதர்களின் கணக்கு 24 ஆயிரம்.

இந்த கணக்கு குறியீடுகளில் கண்ணீர் விடவைக்கும் ஆதங்கமான விஷயங்கள் என்ன தெரியுமா?

அன்றைய ஸ்விட்சர்லாந்தின் மொத்த ஜனத்தொகை என்னவோ அத்தனை குஷ்டரோகிகளும், பெல்ஜியத்தில் உள்ள மக்கள் தொகை அளவு பூசாரிகளும், ஹாலந்தின் மொத்த ஜனத்தொகை அளவு அத்தனை பிச்சைகாரர்களும், 1கோடியே 10 லட்சம் சாமியார்களும், சாது சந்நியாசிகளும், 2 கோடி பூர்வ குடிகளும் இருந்தனர்.

அரசாங்க கணக்கை நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் அது வௌ்ளைக் கணக்கு.

இது போக தனியாக 1 கோடி மக்களுக்கும் மேல் நாடோடிகளாகவே வாழ்ந்தனர். இதில் கூட பல வகைகள் உண்டு.

குறவர்கள், குறி சொல்லி பிழைப்பவர், ஜாலவித்தை காட்டுபவர்கள், மந்திரவாதிகள், என்று தொடங்கி பிராணிகளை வைத்து மற்றவர்களின் வாழ்க்கை ரகஸ்யங்களை சொல்லி தங்களின் மொத்த வாழ்க்கையின் ரகஸ்யங்களையும் புரியாமலே மாண்ட கூட்டம் மிக அதிகம்.

வீடு இல்லை. விடுகதையான வாழ்க்கைக்கும் விமோசனம் தெரியவில்லை.

அன்றைய இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் 86 சதவிகிதம் படிப்பறிவு அற்றவர்கள். ஒரு நாளைக்கு பிறந்த குழந்தைகளின் கணக்கு 38000. ஐந்து வயதிற்குள் அத்தனை அம்மை, விஷக்கடி, காலரா,காசநோய் என்று வகைதொகையில்லாமல் வாறிச் சுருட்டி அவர்கள் புண்ணியப்படுத்தியது.

பெரிய நகரங்களில் ஆறில் ஒரு பங்கு மக்கள் எந்த வித வாஸ்து பிரச்னையும் இல்லாமல் சாலை நடைபாதைகளில் வாழ்ந்தனர். அங்கேயே மூச்சு. அங்கே மூச்சா. அங்கேயே உயிரும் போச்சு.

அன்றைய பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு 30 பவுண்ட் சம்பளம். அவர்கள் வைத்துக்கொண்ட சுதேசி இந்திய வீரர்களுக்கு (அதிகபட்சம் 3 நபர்கள்) 2/3 பவுண்ட். பெரிய அடிதடியே நடக்கும். காரணம் வலிமையுள்ளவன் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவான். ஓதுக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் அன்று வௌ்ளையர்கள் தேர்ந்தெடுத்த அத்தனை இளைஞர் கூட்டம் பின்னாளில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ராணுவ சேவையில் பணியாற்றினர்.

நகரம், கிராமம் அத்தனை இடங்களிலும் வட்டி கலாச்சாரம் வகை தொகையில்லாமல் பரவி, தன்னுடன் மட்டுமே வாழ்ந்த குட்டிகளையும் கூட அடகில் வைக்க வேண்டிய அவலமான வாழ்க்கை பெற்றவர்கள் அதிகம்.

நீங்கள் நினைப்பது புரிகிறது?

என்னப்பா கருவாச்சி காவியம் மாதிரி அழுவாச்சி காவியமாக இருக்கிறதே என்று.

உண்மை தான்.

மொத்தமாக உள்வாங்கும் போது அத்தனையும் ஆச்சரியமாக இருக்கிறது. கண்களுக்குத் தெரியாத கடவுள் மேல் இருந்த அக்கறை அருகில் இருந்த மனிதர்கள் மேல் இல்லை. தாக்க வந்தவர்களை ஜெயிக்காத போது கூட தவறாக தெரியவில்லை. அடுத்த தற்காப்பில் கூட கவனம் இல்லை.

ஞானிகள், ரிஷிகள்,வேதாந்திகள், விற்பனர்கள், அறிஞர்கள்,வேதங்கள், ஆளுமை நிறைந்த மன்னர்கள், அறிவான மந்திரிகள், வீரமான தளபதிகள் அத்தனையும் சூழ்ந்து வாழ்ந்த கூட்டங்கள்.

அத்தனை பேரும் வந்தார்கள் வாழ்ந்தார்கள் அத்தனை வசதிகளுடனும்.

மக்கள் அத்தனை பேருமே வாழ்ந்தார்கள். வாழ்க்கை எப்போது முடியுமென்று.

வசதிகள் அதிகம் இல்லை. அதனால் எந்த குறையும் எங்கும் இல்லை. ஆசைகள் அதிகம் இல்லை. அதனால் அவஸ்த்தைப்படுத்திய நோய்களும் இல்லை. கட்டுப்பாடுகள் ஒன்று தான் ஒவ்வொரு கிராமத்தையும் இணைத்தது. மொத்த கிராம மக்களுக்கும் மன்னர் யார், மாட்சிமை தாங்கிய மகாராணியார் யார் என்று புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. அதற்கான அவஸ்யமும் இல்லை.

முன்பு மன்னர் விசுவாசம். இப்போது வௌ்ளை விசுவாம்.

மொத்த வாழ்க்கையுமே விசுவாசத்துடன் வாழ்ந்தார்கள். அதிக விசுவாசம் கொண்ட அவர்கள் இறைபக்தி கூட மொத்த வாழ்க்கையையும் சிறப்படைய வைக்கவில்லை.

உழைத்தவன் உழைத்துக்கொண்டே தான் இருந்தான். காரணம் கல்வியறிவு பரவலாக்கப்படாமல் பாதுகாப்பாய் முன் எடுத்துச் செல்லப்பட்டது. வர்ண பேதங்களினால் மூலைக்கொன்றாய் முடங்கித்தான் வாழ்ந்தார்கள். இன பேதங்களால் இனம் புரியா பயத்துடன் தான் வாழ்ந்தார்கள்.

எவர் சொன்னாலும் நம்பி விடுவதும், ஏற்றத்தை நம்பி நம்பி தம்முடைய வாழ்க்கை முழுவதிலும் எந்த மாற்றத்தையுமே காணாமல் மடிந்தவர்கள் அதிகம்.

வௌ்ளை ஆட்சி என்பது இந்திய சமூக மக்களின் வளர்ச்சிக்கா?

அப்புறம் இப்படி இத்தனை முன்னேற்றங்கள். போட்ட இருப்புப்பாதைகளும், வந்த விளக்கொளியும் அவர்களின் வாழ்க்கைக்கு வசதியைத் தந்து வௌிச்சம் ஏற்ற உதவியது. மொத்தக் கூட்டத்திற்கும் ஒன்று இரண்டு மிஞ்சிப்போன சுண்டல் கிடைத்த திருப்தி. காரணம் அதைக் கூட குறிப்பிட்ட மக்கள் அனுபவிக்க கூடாது என்று கங்கணம் கட்டி வாழ்ந்தவர்கள் கூட்டமும் இருந்தது.

கடைசி வரையில் அவர்கள் நம்பிக்கொண்டுருந்த இறைவன் வந்தானோ இல்லையோ இறை தூதர்கள் என்ற பெயரில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஓராயிரம் நபர்கள் உள்ளே வந்தார்கள்.

மதம் மட்டும் தானே மாற்றம். மனிதர்கள் தானே அவர்களும்.

வந்தார்கள் வென்றார்கள்.

தொடர்ந்தார்கள். தொல்லையினால் வீழ்ந்தார்கள், மாண்டார்கள்.

மொத்த கூட்டத்திற்கும் புரிதல் என்பது மிகக் குறைவு. செய்திகள் வரும் போது இறக்கை வால் முளைத்து வந்த போது மூலம் திரிக்கப்பட்டு அவர்களின் வம்ச மூலக்கூற்றையே அசைத்துப் பார்த்தது. அறியாமையே அத்தனை மக்களின் விருப்ப பாடமாக இருந்தது. அதனால் தான் என்னவோ வெறுத்துப் போக வேண்டிய அளவிற்கு அத்தனை மக்களின் அடி மட்ட மக்களின் வாழ்க்கையுமே இருந்தது.

ஆனாலும் வந்தார் புனிதர்.

அவரை மகாத்மா என்று கொண்டாடியது. மறுகிக் கொண்டுருந்த மக்களுக்கு மகானாகத் தெரிந்தார். உருகினார்கள். அவரின் வார்த்தைகளும் அத்தனையையும் சத்திய சோதனையாய் பார்த்தார்கள். அவர் முன் எடுத்த அத்தனை போராட்டங்களையும் முயற்சி செய்தால் ஏகாதிபத்தியத்தில் இருந்த மக்கள் வௌியே வந்து விடலாம் என்று முழுமையாக நம்பினார்கள்.

வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் பிரபு கூட காந்தியை கண்டு விட்டால் விரும்பிய கடவுள் சந்நிதியில் நிற்கும் பக்தன் போல் அத்தனை பரவசமாய் தான் வரவேற்பார்.

ஆனாலும் மற்ற இன மக்களுக்கோ சந்தேக பார்வையில் சங்கடங்களை உருவாக்கும் மனிதராகத் தெரிந்தார்?

நேருவுக்கே அந்த சந்தேகம் வந்தது என்றால் காந்தி எந்த தலைமை ஆசிரியரிடம் போய் சான்றிதழ் வாங்கி சமர்பிக்க முடியும்?

Advertisements

2 responses to “கண்ணிய தேசம். கண்ணீரில் வாழ்ந்த தேசம்.

  1. பயங்கரமான ஒரு சமயம் தான் அது… எது செய்தாலும் குற்றம் … பாவம் அந்த தலைவர்கள் …எவ்வளவு மன உளைச்சல் இருந்துருக்கும் … நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு சுதந்தர காற்றும் அவர்கள் உழைப்பினால்

    • சுதந்திர போராட்டத்தில் பங்கு எடுத்தவர்களும், பாதுகாப்பாய் நின்று பார்த்துக்கொண்டுருந்தவர்களும், இன்று பென்ஷன் கிடைக்க அலைந்து கொண்டுருப்பவர்களும் என்று அத்தனை பேர்களும் தங்களுடைய காலடித் தடங்களை நிணைவுகளை சரியான முறையில் இந்த சமூகத்திற்கு தரவில்லை என்ற ஆதங்கம் எனக்குள் அதிகம் உண்டு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s