மனங்கள் இணைந்த நிகழ்ச்சியும் மனைவியிடம் தோற்ற நெகிழ்ச்சியும்

“காலையில 4.20 க்கு எழுப்பிடுறீயா?

கணிணியில் அடித்துக்கொண்டே மனைவியிடம் கேட்ட போது அத்தனை வேகமாக பதில் வந்தது.

“அதான் உங்க உள் மனம் டக்கென்று எழ வைத்து விடும் என்று பெருமை பட்டு கொள்வீர்களே? அப்புறம் எதுக்கு நான்? ”

முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு என்னை திண்டாட வைத்து உள்ளே படுக்கையறையில் புகுந்து விட்டாள்.

வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கி கொள்வது எனக்கு புதிது அல்ல. ஆனால் எல்லாவிதங்களிலும் ஞாபகம் வைத்துக்கொள்வதற்காக 02.09.2009 காலை 5 முதல் 6 என்று மின் அஞ்சல் வந்த நாள் முதல் கூகுள் வரைக்கும் பொதிந்து வைத்துருந்த நான், 1ந் தேதி இரவு 11 மணிக்குத் தான் அந்த பயம் மெதுவாய் எட்டிப்பார்த்து என்னை ஏளனம் செய்தது.

ஒரு வேளை 12 மணிக்கு படுப்பவன் சரியான நேரத்தில் எழ மறந்து தாலி கட்டும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போய் விட்டால்?

காரணம் திருமணம் என்பதே திருப்பூரில் புதிரான புதிதான கலாச்சாரம். வாழ்த்த வேண்டும் என்று ஊர் முழுக்க அழைப்பிதழ் அடித்துக் கொடுத்தாலும் வந்தவர்கள் அனைவருமே முதல் நாள் மாலைப் பொழுதில் தலையை காட்டிவிட்டு வயிற்றை நிரம்ப்பி விட்டு செல்லும் போது எந்த வாழ்த்துக்களை வாழ்பவர்களுக்கு தந்து விட முடியும்?

ஏழு மாதங்களுக்கு முன் பல்லடம் சாலையில் கலிமா திருமண மண்டபத்தில் முஸ்லீம் தோழர் திருமணத்திற்கு போனவன். ஓவன் ஆடைகளுக்குத் தேவையானவற்றை தரமாய் தந்து கொண்டு திருப்பதி கோயிலுக்கும் வருடம் வருடம் சென்று கொண்டுருக்கும் வித்யாச நண்பர்.

வாழ்க்கையில் மனைவி பார்க்காத பழகியிருக்காத அசைவ உணவு வகைகளை, இன்று பார்வையில் மட்டுமே நான் பார்த்துக்கொண்டுருக்கும் அந்த அசைவ உணவுகளை மூன்று தேவியர்களும் மூச்சு முட்ட தின்று முழுமையடைந்த முக்கிய திருமணம் அது.

மூன்று வருடங்களில் இது இரண்டாவது திருமணம்.

ஊரில் இருந்து யாரும் அழைக்க மாட்டார்கள். காரணம் கூட்டுக் குடித்தனத்தில் மொத்த பாக்யத்தையும் சகோதர்கள் பெற்று என்னை பரிதவிப்பில் இருந்து இன்று வரையில் காத்துக்கொண்டுருக்கிறார்கள்.

மனைவி வகை சொந்தங்கள் கூட பத்திரிக்கை என்று எடுத்துக்கொண்டு திருப்பூருக்குள் உள்ளே வந்து விட மாட்டார்கள். காரணம் கத்தும் கத்தலில் அவர்களின் கைபேசி ஒலிப்பான் சக்தி இழந்து விடும்.

என்னிடம் பேசுவதற்கு முன்னால் மனைவி சொல்லி விடுவாள். அஞ்சல் வழியே அனுப்பி விடுங்கள். அனைவரும் வந்து விடுவோம். ஒரு பத்திரிக்கைக்காக 300 கிலோ மீட்டர் அலைந்து நீங்கள் இங்கு வருவது அவருக்கு பிடிக்காது.

வாழ்த்த வேண்டும் என்று மனதார நினைப்பவர்களுக்கு பத்திரிக்கைகளை நேரில் வந்து கொடுத்தால் என்ன? அஞ்சல் வழியே அனுப்பினால் என்ன?

மனம் வேண்டும். அதுவும் மாசு மறுவில்லா மகிழ்ச்சியுடன் “இவர்கள் மகிழ்ச்சியில் வாழ்ந்து எதார்த்த வாழ்க்கையை புரிந்து கொண்டு ஏற்றம் பெற்று வாழ வேண்டும் “.

என்னுடைய எண்ணத்தை உணர்ந்தாரோ இல்லை எதார்த்தமான அனைவருக்கும் பொதுவான அஞ்சல் என்ற நாகரிக முறையில் அனுப்பினாரோ? திரு. சுவாமிநாதன் மின் அஞ்சல் அத்தனை முக்கியமாய் மனதில் நின்றது.

ஆள் இல்லா சாலையில் பயணிப்பது திருப்பூரில் அத்தனை சுகம். அதுவும் அந்த காலை வேலையில் புகை இல்லா காற்றை அனுபவித்துக்கொண்டே மண்டபத்தில் உள்ளே நுழைந்த வாகனம் உணர்த்திய நேரம் காலை 5.05. ஆனால் பொக்கிஷம் பட திரை அரங்கம் போல் யாருமில்லாத காரணத்தால் பயம் வந்தது.

பரிதவிப்பு உடன் நுழைவாயிலில் உள்ள சுவரொட்டியை பார்த்தாலும் மனம் ஆறுதல் அடைய வில்லை. வாழ்வில் முதன் முதலாய் எந்தக் குழப்பமும் இல்லாமல் சரியான இடத்துக்கு அலைச்சல் இல்லாமல் வந்த திருப்தி கூட அத்தனை பெரிதாய் தெரியவில்லை.

குறிப்பிட்ட நேரத்தில் ஆள் அரவற்ற மண்டபத்தில் பொதுவாய் கிடந்த நாற்காலியில் அமர்ந்த போது அருகே இருந்த வயதான பெண்மணியிடன் மெதுவாய் கேட்டேன்.

சரிதான்.

அவருக்கு என் முகம் பிடித்ததா? இல்லை பேசிய இரண்டு நிமிடங்கள் கவர்ந்ததா? எனக்குத் தெரியவில்லை. முக்கால் மணி நேரம் பேசிய பேச்சில் சாமியின் அத்தனை கதைகளையும் அளவெடுத்த தைத்த சட்டையாய் என்னிடம் தந்து விட்டார்.

வியப்பாய் இருந்தது.

குழந்தைகளுக்கும் வாலிபம் தாண்டிய பெண்களுக்கும் எப்போதும் எங்கும் என்னைப் பிடிக்கும்.

காரணம் வாலிபம் போய் வாழ்க்கைத் தந்த அனுபவங்களை வாய்ப்பாடாக ஒப்புவிக்கும் அத்தனையையும் பொறுமையாக கேட்கும் மனம் படைத்தவன் என்ற காரணமாக இருக்கலாம். இழந்த வாலிபத்தை நினைத்து இடிக்கும் உரல் போல் உரத்து சிரித்து பேசும் பேச்சுக்கள் குழந்தைகளுக்கு பிடித்து இருக்கலாம்.

பெரிய ஆச்ரியம்.

அமைதியாய் அமர்ந்து இருந்தவன் ஒரு மணி நேரம் கழித்து சுவாமி தரிசனம் தந்தார். அலங்காரத்தில் அம்சமாய் இருந்தவர் அன்று வேலன் உணவகத்தில் எடுத்த பதிவர் புகைப்பட்டத்தில் அத்தனை வேர்வைகளை எங்கிருந்து பெற்று இருப்பார்?

எனக்கு அருகே அமர்ந்தவரிடன் கைபேசி கேட்டு பரிதவிப்புடன் இன்னிசை மக்கள் இசைக்காத காரணத்தை கேட்டவர் என்னை கவனிக்க வில்லை. காரணம் நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வில்லை.

மூத்தவர் என்ற முறையில் முழுக்க பொறுப்பும் அவருடையது. கணக்கற்ற உழைப்பு கெஞ்சிய கண்கள் கேட்ட தூக்கத்தை பார்த்தவன் தூரமாய் போய் அமர்ந்து இசைத்த இன்னிசையே கேட்டேன்.

செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு போட்டுக்கொள் என்ற ஐயன் சொன்ன வாசகம் நினைவுக்கு வந்த போது பந்திக்கு முந்தினேன்.

பொங்கலை செங்கலாக பார்த்தவன் அங்கு மூன்று முறை சாப்பிட்டும் நாகரிகம் கருதி நாக்கு நான் சொன்ன பேச்சை கேட்கவில்லை. காரணம் அவரின் வெங்காயம் அத்தனை பெரிதாக சாம்பாரில் மிதந்து என்னை கேலி செய்து கொண்டுருந்தது.

முன்னோடி வரிசையில் முதன் முதலாய் என்னை சேர்த்து தூர உறவாய் நின்றவரை அருகில் போய் நின்று நான் தான்? என்ற போது அவர் முகத்தில் அத்தனை உணர்வுகளும் படம் பிடித்து வைத்துக்கொண்டதை எட்டு மணி வரைக்கும் (ஓணம் பண்டிகை) தூக்கம் கலையாமல் இருந்த தேவியர்களுக்கு வந்து சொன்னேன்.

அவரோ நிகழ்காலம் சுவைத்துக் கொண்டுருக்கிறார். அவரையும் சுவைத்து விட்டு போங்களேன் என்ற போது மறுக்க முடியாமல் உள்ளே வந்து அமர்ந்தவன் நிகழ்காலம் என்னை நெருங்கிய போது நெகிழ்ச்சி என்னை நெட்டித்தள்ளியது. பழகியவர், பார்த்தவர், ஒன்றாக பணிபுரிந்தவர், ஒழுக்கத்தை உண்மையாக கடைபிடித்தவர்.

ஆச்சரியத்தில் என்னுடைய அத்தனை உணர்ச்சிகளுக்கும் விடுதலை கொடுத்து விட்டு அரவனைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.

உரையாடல் முடிந்து கைபேசி எண்களை கேட்ட போது காலம் எனக்கு வழங்கிய பட்டியல் இட்டு நிபந்தனை ஜாமீன் கிடைத்தவுடன் நிச்சயம் தருவேன் என்றேன்.

மறுத்துப் பேசியவர் எனக்கு நானே வழங்கிக் கொண்ட வாழ்க்கை சூத்திரத்தை சுருக்கமாச் சொல்ல அவரோ சுகமானது தான் ஆனாலும் என்று இழுத்தார்.

நான் அதிகம் எதிர்பார்த்து சென்ற , அதிகாலை என்ற போதிலும் நிச்சயம் வெயில் சுகம் கிடைக்கும் என்று நினைத்து சென்றவனுக்கு உன்னுடைய நிகழ்காலம் முடிவுக்கு வந்து நிச்சயமான நல்ல காலம் தொடங்கும் போது அந்த வெயில் உன்னுடைய பசுமையை இன்னமும் அதிகமாக வளர்க்க உதவும் என்று உணர்த்தியது.

ஏமாற்றத்தை என்னில் வைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். கிளம்பும் போது கேட்ட தேநீர் சுத்தமான பீட்டர் இங்லாண்டு ஆடையுடன் காட்சி அளித்தது.

காரணம் ஒன்றுமில்லை. நான் எழுவதற்கு முன்னால் எழுந்த இல்லத்தரசி தேநீர் போட்டு விட்டு போர்வைக்குள் முடங்கிக்கொண்டு நான் என்ன செய்கிறேன் என்று பார்த்தவள் நான் கவனிக்காத தேநீர் போல் என்னுடைய கண்டிப்பான வாழ்க்கை முறைகளையும் இனிமேலாவது சற்று கவனித்து எல்லோரையும் போல் இயல்பாய் வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்று உணர்த்துவதாய் தெரிந்தது?

கொடுத்து வந்த அந்த புத்தகத்தை (அதிகம் செல்லத்துடன் வளர்க்கப்பட்ட சற்று முன்கோபம் இருக்கும் என்று நினைக்கின்றேன்) அந்த முருகப்பெருமான் பார்த்தாரோ இல்லையோ?

கடைசி பக்கத்தில் எழுதிய வாசகங்கள் என்றாவது ஒரு நாள் அவருக்கும் புரியவைக்கும்.

வாழும் போது
அட்டைப்படம்
பிடிக்கும்.

வாரிசுகள்
வளரும் போது
அத்தனையும் புரியும்?

Advertisements

3 responses to “மனங்கள் இணைந்த நிகழ்ச்சியும் மனைவியிடம் தோற்ற நெகிழ்ச்சியும்

  1. வெயில் முதல் நாள் இரவே வந்து விட்டு போய் விட்டது 🙂

  2. Pingback: மனங்கள் இணைந்த நிகழ்ச்சியும் மனைவியிடம் தோற்ற நெகிழ்ச்சியும் | Seidhivalaiyam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s