கள்ளக்குடியேறிகள்

சுமந்து வந்த படபடப்பை விட நண்பனின் கேள்வி தான் அதிக பயமாய் இருந்தது?

“ஒரே நாளில் எப்படி உன்னால் உள்ளே வர முடிந்தது?”

எனக்கும் கூட அதிசயமாகத்தான் இருந்தது. மலேசியாவில் இரண்டு மாதங்களாக இருக்கும் போது கூட எண்ணம் வரவில்லை. நண்பர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தல்கள் அதிகமாக அதிகமாக அருகில் உள்ள சிங்கப்பூருக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது.

திருப்பூரில் தொடங்கிய தொழில்கள் அனைத்துமே ஒரு முடிவுக்கு வந்தது போலிருந்தது. மேற்கொண்டு கடன் வாங்கவோ, வாங்கிய கடனை அடைக்கவோ மனதில் உறுதியில்லை. எல்லாப்பாதைகளுமே இருட்டை நோக்கியே முடிவாய் அமைந்து விட இனி என்ன செய்வது என்று குழம்பித்தவித்த கால்கள் ஊரில் போய் நின்றது.

அடைக்கலம் கொடுக்க எவருமில்லை. என்னிடம் பெற்றவர்கள் வாங்கியவர்கள் அனைவருமே ஆதங்கப்பட்டு அமைதியாய் ஓதுங்கிவிட அன்றாடம் அமைதியை தந்த அந்த புகைவண்டி நடை மேடைகளுக்குத்தான் அதிக நன்றியைச் சொல்ல வேண்டும்.

எத்தனை நாட்களுக்குத்தான் உள்ளே உழன்று கொண்டுருப்பது. விடாது துரத்திக்கொண்டுருந்தது கைபேசி அழைப்புகள். உறவுகள் பார்க்கும் அத்தனை பார்வையிலும் பயமே பதிலாய் வந்தது.

சாலைகளில் நடந்தாலே சங்கடங்களே கேள்வியாய் வந்து கேலியாய் உறுத்தியது.

“எப்போது திருப்பூருக்கு செல்வதாய் உத்தேசம்? ”

தேசம் முழுக்க ஒலிக்கும் ஒரே கேள்வி? பாஷையும் இடங்களும் மட்டும் தான் மாறியிருக்கும். உள்ளேயிருந்தால் உருப்படாமல் போய்விடுவானோ என்ற ஆதங்கத்தில் அவரவர்க்கு தெரிந்த வட்டார வழக்கில் கேட்கும் இந்த கேள்விகளால் தான் இன்று தனி மனித வளர்ச்சி இத்தனை பிரமாண்டமாய் வளர முடிந்துள்ளது.

பள்ளி முதல் கல்லூரி வரையிலான அத்தனை நண்பர்களும் மொத்தமாய் குத்தகை எடுத்து அமர்ந்துருக்கும் தட்டெழுத்து பயிலக சாலை ஓர பால மேடை என்னை மட்டும் சுமந்து கொண்டு பரிதாபமாய் பார்த்தது. கடந்து போய்க்கொண்டுருந்தவர்களின் அத்தனை பார்வைகளும் என்னை ஒன்றும் பெரிதாக சஞ்சலபடுத்தவில்லை.

எதிரே பார்த்த நண்பர் தான் எனக்கு வௌிநாட்டு ஆசையை விதைத்துவிட்டு சென்றார். நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டுருந்த எனக்கு அவர் கொடுத்த தக்கை துடுப்பாக மாறும் என்று கனவிலும் நினைக்க வில்லை.

காரணம் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த கடவுச்சீட்டு என்பதே ஒரு கடமைக்காக என்று உள்ளே உறங்கிக்கொண்டுருந்தது. தவிர கடலைத்தாண்டி நாம் செல்வோம் என்று கனவிலும் நிணைக்காத காலம் அது.

வீட்டில் யாரிடமும் பேச முடியாது. கேட்க கூட முடியாது.

அம்மாச்சி வீடு விற்ற பணத்தை மொத்தமாக தூக்கிக்கொண்டு விடிவதற்குள் கிளம்பியவன் அடுத்த நாள் காலையில் புதிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஒரு வருட அனுமதி சீட்டில் உள்ளே நுழைந்த போது என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்.

கொடுத்து அனுப்பிய நண்பர்களின் முகவரி சரிபார்த்து பினாங்கில் போய் சேர்ந்த போது சோர்ந்து விட்டேன். காரணம் வரவேற்பு அப்படி?

அவரவர் கற்பனையில் என்னை நிறுத்திப் பார்த்து வைத்துருந்தவர்கள் அவர்கள் கேட்காமலேயே என் கதையைக்கூற கருத்து ஏதும் கூறாமல் காக்க வைப்பதிலேயே குறியாய் இருந்தனர். காரணங்கள் ஏதும் புரியவில்லை. ஆனால் எல்லா இடங்களையும் சுற்றி வரமட்டும் ஏராளமாய் உதவினர்.

நாட்கள் நகர நகர நம்பிக்கை இழந்து விண்ணப்பத்தை வேறு விதமாக அளித்தேன்.

பலன் கிடைத்தது. ஆமாம். சிங்கப்பூர் சென்றால் உங்கள் வாழ்க்கை ஏற்றம் அடையும்?

காட்டிய வழியில் உள்ளே வர, நண்பன் வாசலில் நிற்க வைத்து பயத்துடன் கேட்டுக்கொண்டுருக்கிறான்?

சுக்கூர். ஒன்பதாம் வகுப்பில் மூன்றாம் ஆண்டாக படித்துக்கொண்டுருந்தவன் பழக்கமானவன். அனைத்தையும் பகிர்ந்து கொண்ட பக்கத்து அறை வகுப்புத்தோழன் இன்று பயமாய் வரவேற்கின்றான்.

பல ஊர்கள் சுற்றி, ஏதும் ஒத்துவராமல் ஏறிய விமான பயணம் அவனை எங்கங்கோ சுற்றி அலைக்கழித்து மலேசியா அருகில் உள்ள தீவில் நுழைய வைக்க எல்லாவற்றையும் கற்று பிரஜையாகிப்போனவன்.

அவன் உருவாக்கி வைத்துருந்த அந்த நாட்டு கடவுச்சீட்டு கடவுள் போல் அவன் வாழ்க்கையை வசதிப்படுத்த உதவியது. இன்று வரையிலும் சிறப்பு அழைப்பாளன் போல் சிங்கப்பூருக்குள் சர்வசாதரணமாய் வந்து போய்க்கொண்டுருப்பவன்.

ஒவ்வொரு முறையும் உள்ளே வௌியே என்று வந்து போய்க்கொண்டுந்தவன் வாங்கித்தின்ற பரோட்டா என்ற புரோட்டா அவன் வாழ்க்கையை மாற்றிப்போட்டது.

தொடர்பில் இருந்த சிங்கப்பூர் தமிழர் உதவ ஒரே மாதத்தில் தொடங்கிய கடை தான் வூட்லண்ஸ் பரோட்டா ஸ்டால். தொடங்க உதவியருக்கு ஒரே ஒரு தேவை தான். அத்தனை மாலைப்பொழுதும் கண்கள் மயங்க வேண்டும். வேறு ஏதும் தேவையில்லை. அதுவே இவனுக்கு போதுமானதாய் இருக்க வாழ்க்கை ஏற்றம் கண்டு ஒரே வருடத்தில் ஊரில் வாங்கிப்போட்ட இடத்தின் மதிப்பு இரண்டு கோடி.

நண்பர்கள் அனைவருமே நல்லவர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நலமாய் தூரத்தில் இருக்கும் வரையிலும். துயரத்தை தீர்க்க உதவுவாய் என்று உள்ளே நுழையும் போது தான் அத்தனை துயரங்களும் வந்து நம்மை தொடர்புக்கு வௌியே இருக்கும் தொலைபேசியாய் மாற்றிவிடுகின்றது.

அவனிடம் ஏற்கனவே பின்னால் படித்து வந்த துரையரசன் வேலை பார்த்துக்கொண்டுருக்க வேறு வழியே இல்லாமல் உதவியாளராக உட்கார வைக்க, உழைப்பை மட்டும் வாங்கிக்கொண்டு ஏதும் செல்லாமல் காலம் கடந்து கொண்டே இருந்தது.

துரையரசன் வந்த அனுமதி முடிந்தும் வௌியேறாமல் பதுங்கி வாழ்ந்து கொண்டுருந்தவன் தான். கடைக்கு வௌியே உள்ளுர் வாசி பெயருக்கென்று சுடும் கல்லுக்கு முன்னால் நின்று கொண்டுருப்பார். உள்ளே இருட்டுக்குள் வாழ்க்கைகான வசதிகளை தேடிவந்த அத்தனை கூட்டமும் ஆயாசம் ஏதும் இல்லாமல் இரவு பகலாய் வேர்வை சிந்திக்கொண்டுருக்கும்.

என்னுடைய தற்காலிக அனுமதி அவனை சற்று ஆயாசப்படுத்தி என்னை வௌியேற்றிவிட வேண்டும் என்று அவசரப்படுத்தியது. அவனுடைய அவசரங்கள் எனக்கு பல அச்சத்தையும் கொடுத்தது. வாழ்க்கை இதே போல் இருட்டாகியே போய்விடுமோ என்று அவஸ்த்தை பட வைத்தது.

மூன்று வருடத்தில் துறையரசன் கற்று வைத்துருந்த அத்தனை திறமைகளும் சிங்கப்பூர் வௌ்ளியாய் மாற மாற அவனுடைய அத்தனை ஒழுக்கமும் தினந்தோறும் ஒழுகிக்கொண்டுருந்தது.

அது குறித்து எனக்கு ஒன்றும் அக்கறையில்லை. புத்தனாகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் புழுத்துப்போன் அந்த வாழ்க்கை வாழ எண்ணமும் வரவில்லை. வாய்ப்பும் அமையவில்லை.

மாதங்கள் செல்ல செல்ல கவலை மேகங்கள் சூழ்ந்தது. கண்ணீர் விட்ட போதெல்லாம் அவர்களால் கலாய்க்க முடிந்ததே தவிர கரம் தர தயாராய் இல்லை. வௌியே விட்டால் ஜெயித்து விடுவான் என்ற அவர்களின் அச்சமே பின்னாளில் தான் தெரிந்தது.

வௌியே சொல்ல முடியாது. ஐம்பது கிலோ மீட்டர் தான் என்றாலும் அரசாங்க சட்டங்கள் அத்தனை பயமாய் இருந்தது. வாழ வந்த இடத்தில் வாழ்க்கைக்காக போராடிக்கொண்டுருந்த போது தேக்கா என்று தமிழர்கள் கூடுமிடத்தில் அமைந்துருக்கும் காளியாய் பார்த்த நண்பர் காட்டிய வழிதான் பாதை மாற உறுதுணையாய் இருந்தது.

எங்கு போய் கேட்டாலும் அனுமதி சீட்டு பார்த்து தான் பேசவே தொடங்குவார்கள். சில இடங்களில் இனம் வாரியான வேறுபாடுகள் வௌியே காட்டத போதும் தெரிந்தது.

மொத்த சீனர்களின் கடையும் தொழிலும் ஓரே சூத்திரமாய் இருந்தது. நேரமும், உழைப்பும் ஒரே கோட்டில் வைத்துக்கொண்டு உன்னதமாய் வாழ்ந்தார்கள்.

மலாய் கடைகளின் உள்ளே போய் பேசவே பயமாய் இருக்கும். மேற்கொண்டு பாஷை நம்மை பரிதவிக்க வைத்தது.

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் வசதிகளை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்வாதாரத்தை இடம் போட்டு தனக்குண்டானதை தகுதி பார்த்து தரமாய் வைத்துக்கொண்டார்கள்.

ஆனால் தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே இடைவிடாது பயணித்துக்கொண்டுருந்த சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களின் வாழ்க்கை தான் அத்தனை ஏற்றமாய் இருந்தது.

மாயவரத்தில் இருந்து முப்பது வருடங்களுக்கு போய் வாழ்க்கையை தொடங்கிய அந்த இப்றாகீம் பாய்க்கு என்னை பார்த்ததுமே பிடித்து விட்டது.

எல்லாவற்றையும் கேட்டு கேட்டு வாங்கிப் பார்த்து பதிலை மட்டுமே தந்தவர்களை அறிமுகபடுத்திய வாழ்க்கை இந்த பாய் எதுவுமே கேட்காமல் உள்ளே போகச்சொன்ன போது வாழ்க்கை எதையோ உணர்த்துவதாய் தெரிந்தது?

மேலும் அவர் பேசும் நிலையிலும் இல்லை. ரம்ஜான் பண்டிகைக்கு இன்னமும் நாலு நாட்களே இருந்தது.

அவர்களின் உணவகத்தில் பணத்தை எண்ணி கட்டுவதற்குக்கென்று இரண்டு நிரந்தர நபர்கள் இரவிலும் பகலிலும் வந்து நிற்பதைக்கண்டு அத்தனை ஆச்சரியமாய் இருந்தது.

அந்த நான்கு நாட்களும் பறிமாறும் வேலை. பாஷை தெரியாவிட்டாலும் ஆங்கில அறிவு அசத்தலாய் மாற்ற அத்தனை கூட்டமும் என் பக்கம் வந்து அமர என்னுடைய பகுதி மட்டும் எப்போதும் கலகலப்பாய் இருந்தது.

அவரின் கவனம் என் மேல் திரும்ப உள்ளே வரவழைத்து வேலையை உறுதி படுத்த உதவியாய் இருந்தது.

சில சோதனைகள் நம்முடைய வாழ்க்கையின் நமக்குள் வைத்துள்ள திறமையை பறைசாற்ற உதவியாய் இருக்கும். பலசமயம் அது பலருக்கு பரிதாபமாய் தெரிந்தாலும் உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் அதன் உன்னதம் புரியும்.

உள்ளே வந்து சேரும் மொத்த பாத்திரங்களை கழுவ துடைக்க இரவு பகல் என்று இரண்டு நேரத்திலும் இரண்டு நபர்கள் வந்து போவார்கள். அனுமதி பெற்று பணிபுரிந்து கொண்டுருப்பவர்கள் நிர்வாக அனுமதி இல்லாமல் அவஸ்த்தைகளுடன் வந்து போராடிக்கொண்டுருப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் திருவிழாக்கூட்டம் தான். காரணம் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் சொன்னது போல் கட்டிய வீட்டுத்தொகுப்பில் சமையல் அறையே உருவாக்காமல் கட்டியிருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் உணவக சாப்பாட்டை அத்தனை விதமாய் ருசித்தார்கள்.

ஒவ்வொரு நாளும் வருபவர்களுக்குப்பின்னால் அத்தனை கிராமத்து சோகம் ஒளிந்துருக்கும். கிடைக்கும் ஒரே ஞாயிறு ஓய்வில் அவர்கள் வாங்கி வைத்துருக்கும் பத்து வௌ்ளி தொலைபேசி அட்டை போதுமானதாய் இருக்காது. பேசிய உரையாடல் முடிவு பெறாமலே முடிவுக்கு வந்துருக்கும்.

கேவலும், உணர்ச்சிப் பெருக்குடனும் மறுநாள் வேலை செய்யும் இடத்தில் தங்கும் இடமாக மாறியுள்ள கண்டெய்ணர்களுக்குள் கனவு கண்டு காலத்தை கடத்திக்கொண்டுருப்பார்கள்.

வருபவர்கள் என் பார்வையில் மட்டும் பரிதாப ஜீவன்கள். ஆனால் அங்கு இருந்த அனைவருக்கும் தாப ஜீவன்கள். வடிவேல் வசனம் போல் ” வந்துன்ன்ன்ய்ய்ய்யாயாயா……” என்று அவர்கள் சம்மந்தம் இல்லாமல் தீடீர் என்று கத்த அவர்களோ குடியுரிமை அதிகாரிகள் வந்து விட்டதாக நினைத்துக்கொண்டு பறந்து பக்கச்சுவர்களை தாண்டி குதிக்கும் போது உடைந்த கால்கள் அதிகம்.

என்னால் என்ன செய்து விடமுடியும்? ஆனால் அதே இடத்தில் நான் போய் நிற்க வேண்டும் என்ற விதியின் விளையாட்டு தொடங்கிய போது எனக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

மறுக்க முடியாது? இரண்டு நாட்களாக வராத நபர்களால் அத்தனையும் கெட்டு சீரழிந்ததை உடனடியாக மாற்ற வேண்டும். உதவியாய் பொறுப்பில் இருந்தவர் இந்த சமயம் பார்த்து என்னை உள்ளே தள்ளிவிட தத்தளிக்காமல் உள்ளே போய் தடம் பார்த்தேன்.

மயக்கம் வராத குறைதான். அத்தனையும் கழிவாய் கசடாய் நாற்றமடித்துப்போய் இருந்தது. மறுதலிக்க முடியாது. தங்க இடம். உண்ண உணவு. வேலை முடியும் போது அன்றே சம்பளம்.

பார்த்த அத்தனை வேலைகளும் தேடி வந்த அத்தனை வேலைகளும் சிலாக்கியமாக இல்லை.

காரணம் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வேறு என்ன வேண்டும்? உழைக்க வேண்டும்.

உழைத்தேன். ஒவ்வொன்றாக தகுதி கொண்டு மொத்தமாய் மாற்ற மூன்று நாட்கள் போதுமானதாய் இருந்தது. தேவையில்லாதவற்றை, தேங்கி கிடந்தவைகள் புதிய இடமாய் மாற்றி, கடைசியில் வரும் பாத்திரங்களுக்கென்று ஒரு இடமும், அவசர பாத்திரங்களுக்கென்று ஒரு இடமும் பிரித்த போது பாதி இடங்கள் வெறுமையாய் இருந்தது.

குமுறிக்கொண்டுருந்த சாக்கடையை பிரித்து மேய்ந்த போது புரிந்தது. அடைத்த அடைப்புகள் அத்தனைக்கும் விடுதலை. அதனதன் பாதையில் அம்சமாய் கலக்க, மொத்தத்தில் எந்த கலக்கலான வாடையும் அங்கு இல்லை.

அதற்கு மேலும் அத்தனை சந்தோஷம். காரணம் அப்போது என் கையில் இருந்தது ஒரு லட்ச ரூபாய்க்கு சமமான சிங்கப்பூர் வௌ்ளிகள்.

படிப்படியாக திருப்பூரில் பெற்ற வாழ்க்கை வாட்டத்தை விரும்பக்கூடிய நாட்டமாக மாற்றிக்கொண்டு வந்தது.

நடுஇரவில் வேலை பார்த்துக்கொண்டுருந்த போது பின்னால் வெகு நேரமாக என்னைப் பார்த்துக்கொண்டுருந்த உணவக நிர்வாகியை நான் கவனிக்க வில்லை. எத்தனை நிமிடங்கள் அங்கு நின்று கொண்டுருந்தார் என்பதும் தெரியவில்லை. வெகுநேரமாக பொறுத்துப் பார்த்தவர் என்னைத் தொட்டு சுயநினைவுக்கு கொண்டு வந்தார்.

ஒரு கையில் சிகரெட் புகைந்து கொண்டுந்தது. மறுகையால் என்னை அணைத்துக்கொண்டு அழுதுவிட்டார். என்னுடைய பெயர் அதுவரையிலும் அவருக்குத் தெரியாது?

என்ன காரணமோ திடீர் என்று “சுந்தர் என்னுடன் வா? ” சொல்லிவிட்டு அவர் அறைக்குச் சென்றுவிட்டார்.

பெயர் வித்யாசமாய் இருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டு அவரை தொடர்ந்தேன்.

” நான் சிங்கப்பூர் வந்து இன்றோடு முப்பது வருடங்கள் ஆகி விட்டது. நீ இப்போது படும் கஷடங்கள் போல் எத்தனையோ கஷடங்கள் பட்டுத்தான் இத்தனை அளவுக்கு வளர்ந்துள்ளேன். ஆனால் முதல் முறையாக சாப்பாடுக்கடையின் பின்புறம் கூட இத்தனை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும் என்பதை இன்று தான் முதன் முதலாக உன் மூலம் பார்த்துள்ளேன்.

பொதுவா உணவகம் என்றாலே கழுவாத கிளாஸ்ம், மங்குகளும் தான் அவரவர் இஷடத்துக்கு வேலை செய்யும் காலத்தில் வீட்ல பொம்பளைங்க மாதிரி இத்தனை சுத்தமா செய்யனும்ன்னு நினைக்கிறியே? உண்மையைச் சொல்? நீ யார்? ”

அவருடைய அதட்டலான பாராட்டுரைகள் என்னை பயம் கொள்ள வைத்தது. அசையாமல் அரைமணி நேரத்தில் ஒப்புவித்த என் முன் கதை சுருக்கத்தை கேட்டதும் விட்டாரே ஒரு அறை.

சர்வ நாடியும் ஒடுங்கிவிட்டது.

போகும் போது அவர் சொன்ன வார்த்தைகள் ” இனிமே இந்த ஊரில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமா போகலாம் வரலாம். உனக்கு என்ன பிரச்சனை என்றாலும் இந்த கைபேசி எண்களுக்கு அழை ” புயலாய் மறைந்து விட்டார்.

வாழ்க்கை வசந்தத்தை வரவேற்றது.

பொதுவாக இது போன்ற உணவகத்தில் மலேசியா தமிழ் மக்கள் தான் அதிகமாக உழைப்பார்கள். அதுவும் குறிப்பிட்ட இனமே மேலோங்கி நிற்கும். அது சமூக அக்கறையாகவும் இருக்கலாம். பாதுகாப்பாகவும் கூட இருக்கலாம்.

பத்து முதல் முப்பது நாட்கள் அனுமதி பெற்று உள்ளே வருவார்கள். அந்த நாள் முடிவதற்குள் ஒரு நாள் முன்னதாக போய் விட்டு மறுபடியும் அனுமதியுடன் உள்ளே வருவார்கள்.

குடியுரிமை அதிகாரிகளுக்குத் தெரியும் என்றாலும் இந்த விசயத்தில் அத்தனை கண் கொத்தி பாம்பாக கண்டு கொள்வதில்லை. பிரச்சனை வராத வரைக்கும். மேலும் பெற்ற தாய்க்கு மகள் மகன் ஆற்றும் கடமையாகவும் இருக்கக்கூடும்?

அதனால் தான் என்னவோ இயற்கையான செயற்கையான ஒரு கடவுச்சீட்டு அவர்களை கடவுள் போல் காத்து வரும். ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் சந்தோஷமாய் வாழ்க்கையை அனுபவித்து வருவார்கள்.

எத்தனை சிறப்பாய் இருந்தாலும், உழைப்பில் சற்று பின்தங்கித்தான் இருப்பார்கள். ஒரே கூட்டத்திற்குள் அத்தனை பிரிவுகளும் எகத்தாளமும் எட்டி நின்று ஏகடியம் பேசிக்கொண்டு திரிவார்கள்.

கடைக்குள் உள்ள தேநீர் விடுதிக்கு காலையில் ஒருவருடம் இரவில் ஒருவரும் வந்து போய்க்கொண்டுருந்தார்கள். பணிபுரியும் இருவருமே கொலை செய்து கொள்ள முடியாத எதிரிகளாய் தான் என் பார்வையில் தெரிந்தார்கள். ஏன் என்று சொல்ல முடியாத அத்தனை குரோதமும் பணிவிட்டு செல்லும் போது அத்தனை மங்குகளிலும் கிளாஸ்களிலும் தெரியும்.

அதுவும் இரவில் வருவர் அருகில் எவருமே செல்லமாட்டார்கள். அவரின் சவடால் வார்த்தைகள் அத்தனை சிலாக்கியமாக மறைந்து இருந்து பழிப்பு காட்டுவார்கள். ஆனால் ஒவ்வொரு நாளுமே பணிக்கு அரை மணி நேரம் தாமதமாகத்தான் வருவார்.

கவனித்துகொண்டுருந்த எனக்கு அவர்தான் கலங்கரை விளக்கமாய் தெரிந்தார். மெதுவாக கிளாஸ் கழுவி நட்பு பிடிக்க என்னை மட்டும் உள்ளே அனுமதிக்க மெல்ல மெல்ல உள்வாங்க ஒரு மாதம் போதுமானதாய் இருந்தது.

நடு இரவில் அவர் ஏதோ தேவையில்லா காரணத்தை காட்டி தகறாறு செய்ய நிர்வாகி யோசிக்கவே இல்லை.

“நீங்கள் வௌியேறிக்கொள்ளுங்கள்?” அவருக்கோ அசாத்தியமான தைரியம். நம்மை விட்டால் வேறு ஆள் இல்லை.

பாத்திரங்கள் கழுவிக்கொண்டுருந்த என்னை ஆள் வந்து அழைக்க நிர்வாகி முன்னால் போய் நின்றேன்.

“சுந்தர் ஒரு தே ஓ அலியா போட்டு கொண்டு வா? ” என்றார். காரணம் புரியாவிட்டாலும் அவர் எப்போதும் விரும்பி குடிக்கும் சுவையில் எனக்குத் தெரிந்த வரையில் இஞ்சி தேநீர் கொண்டு போய் கொடுக்க ஒரு வாய் குடித்தவர் “நாளை முதல் நீ தே மாஸ்டர்? தினமும் நூறு வௌ்ளி வாங்கிக்கொள்”

ஆறு மாதங்கள். எண்ணிப்பார்த்த போது ஆறறை லட்ச ரூபாய். வந்தவர், வராதவர், இரவு, பகல் எதுவுமே தெரியவில்லை.

நான்கு மாதங்களுக்கு முன் சுக்கூர் ஊரில் தொடங்கியுள்ள தேநீர் கடைக்குச் சென்று இருந்தேன். சம்பாரித்த கோடிகள் அவர் பாதையை கேடியாய் ஆக்கிவிட சிங்கப்பூர் சட்டம் தந்த பத்து வருட தண்டணை முடிந்து திருமணம் செய்ய உதவியாய் இருந்தவள் நகை கொண்டு நடத்திக்கொண்டுருக்கிறார்?

Advertisements

6 responses to “கள்ளக்குடியேறிகள்

  1. பயந்து விடாதீர்கள் துளசி. பார் புகழும் திருப்பூர் விட்டு வௌியே வர தேவியர்கள் அனுமதித்து விடுவார்களா என்ன?

  2. அவர்கள் உடன் பழகவேண்டிய துர்பாக்ய நிலை உங்களுக்கு இல்லாவிட்டாலும் பார்த்த வரையில் உணர்ந்து உள் வாங்கிய வரையில் அதைப்பற்றி உங்களால் ஒரு பதிவாக தரமுடிந்தால் சந்தோஷம் சுந்தர்?

  3. சின்ன வைரமுத்துவே ஒரே கேள்விக்குள் எத்தனை பதிவுகள்???? செத்தும் வாழ்ந்து விடலாமென்ற நம்பிக்கை சுமந்து வாழ்பவர்களுக்கு……………………………………..

  4. இது உங்களின் கதையா அல்லது கோடம்பாக்கம் முத்தையா போன்று வேறு ஒரு சிங்கை சுந்தரா? சிங்கையில் எந்த இடத்தில் இந்தக் கடை இருந்தது? லிட்டில் இண்டியா?

  5. எல்லாரும் ஓரளவுக்கு கேட்டும் /பார்த்தும் இருந்த ..கள்ள குடியேறி கதை தான், இருந்தாலும் படிக்கும் பொழுது பக் பக்கென்று இருக்கிறது… வந்தால் தான் தெரியும் வயித்து வலியும் , தலை வலியும் ங்கறா மாதிரி… பட்டவர் நீங்கள், நன்றாக பட்டை தீட்டப்பட்டு மின்னுகீறீர்கள் … அனுபவம் தான் வாழ்க்கை.

    இந்த ஊரிலும் இதே கதை தான், பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும், … வேற வேலையே கிடையாதா, என்று நினைக்கும் அளவுக்கு எல்லா ஆட்களும் இந்த ஊரில் தான் …பாவம் அவர்கள் பேசும் டெலிபோனுக்கு கணக்கு கிடையாது. ..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s