இதற்குத் தானே ஆசைபட்டாய் முத்தையா?

கனவு காண்பதோடு வாழ்க்கை காட்சியாகவும் மாற்றுங்கள்

கனவு காண்பதோடு வாழ்க்கை காட்சியாகவும் மாற்றுங்கள்

வரவேற்பு அறையில் அதுவும் அந்த காலை வேலையில் பம்பரமாய் சுழன்று கொண்டுருக்கும் போது எதிரே நின்று கொண்டுருந்த பெண் கேட்ட கேள்வியே அதிர்ச்சியாய் இருந்தது.

“என்னைத் தெரிகிறதா?”

பத்தென்பது வயது இருக்கும். மலுங்கச் சிரைத்த மொட்டைத்தலையுடன் வந்து நின்று கொண்டு அத்தனை ஆண்கள் மத்தியில் தனியாக சப்தமாக கேட்ட கேள்வி என்னை அதிகம் சங்கடப்பட வைத்தது. நின்று கொண்டுருந்த அணைவருமே என்னையும் அவளையும் பார்த்துக்கொண்டுருந்தனர். போட்டுக்கொண்டுருந்த வருகை பதிவேடுகளை அருகில் இருந்தவரிடம் ஒப்படைத்து விட்டு வௌியே வந்து தனியாக அழைத்துச் சென்றேன்.

பேசும் போதே குரல் வைத்து புரிந்து விட்டது. மாமன் மகள்.

கோலத்தை பார்த்த அதிர்ச்சியுடன் தன்னந்தனியாக சென்னைக்கு பயணித்து வந்த தைரியம் பயத்தையும் தந்துருந்தது.

மதுரையில் தன்னுடைய தெருவை விட்டு எங்குமே வௌியுலகம் பார்க்காத பெண், திடீர் என்று சென்னைக்கு அதுவும் கோடம்பாக்கம் ஒட்டுசந்தில் உணவகத்துடன் கூடிய தங்குமிடத்தில் வந்து நின்ற போதே வியர்த்து விட்டது.

திருப்பூரை விட்டு வைராக்கியமாய் நடிகராக விட வேண்டும் என்று வந்து இன்றுடன் ஒரு வருடம் ஓடி விட்டது.

ஏறிய அலுவலகமும் பேசிய வசனமும் பேசா படமாகிவிட, கடைசியில் சேர்த்துக்கொண்ட இயக்குநர் இப்போது தான் மெல்ல மெல்ல போராடி முதல் பட தயாரிப்பாளர் கிடைத்த சந்தோஷத்தில் நேற்று தான் அனைவருக்கும் விருந்தளித்தார்.

ஒரு வருடமாக அவரின் சுய தேவைக்கு, பணம் கொடுக்காத சலவைக்காரராகவும், எடுபிடியாகவும் கழித்துக்கொண்டுருக்கும் இந்த லட்சணத்தில் என்னைத்தேடி , அம்சமாய் இருந்த அம்சவள்ளி மொட்டைத்தலையுடன் வந்து நின்றால் எதைப்பற்றி யோசிக்க முடியும்?

வௌிப்புற படப்பிடிப்பு தொடங்குவதற்கு பத்து நாளைக்கு முன்பே செய்ய வேண்டிய அனைத்து வேலை பட்டியலையும் தந்து விடுவார். மொத்த துணியையும் பெட்டிக்குள் திணிக்க வேண்டுமே?

மறுக்க முடியாது. சொன்னால் வேடிக்கை பார்ப்பதும் கெட்டு விடும்.

வேடிக்கை பார்க்க அனுமதிப்பதே பெரிய இயக்குநர் கீழ் பணிபுரிந்த சுகம்.

பேசிக்கொண்டே கழியும் ராத்திரிகள் அனைத்தும் கடைசியில் புகைமண்டலத்தைத்தான் உருவாக்கும். எந்த கருவும் உருவாகாது. உருவாக்கம் கிடைப்பதற்குள் பல தலைகள் மாறியிருக்கும்.

மாறி மாறி வந்த உள்ளே வந்து கொண்டுருந்த தலைகளில் என்னுடைய தலையை மட்டும் கடைசி வரையில் உள்ளே நுழைக்க இயக்குநர் அனுமதிக்கவே இல்லை.

ஆசையில் வந்தவர்கள் அடுத்த நிமிடமே காணாமல் போக கண்ட காட்சிகளை அனைத்தும் கலங்க வைத்துக்கொண்டுருந்தது.

இழப்புகளைப் பற்றி அதிகம் யோசிக்காமல் ஆசை மட்டுமே இழுத்து வந்து தெருக்களில் அல்லாட வைத்தது.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அத்திபூத்தாற் போல் ஒரு இயக்குநரோ, நடிகரோ வெற்றியாளனாக ஆகி விட மொத்த ஊடக வௌிச்சமும் அவரை மொய்க்கும். கடந்து வந்த அத்தனை பாடுகளும் பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க உதவும். படிக்கும் பாமர இளைஞன் அடுத்த பேரூந்தில் பயணத்தை தொடங்குகிறான்.

லட்சத்தில் ஒருவனாய் லட்சியத்தில் ஜெயித்த அவனுக்கு பின்னால் அலைந்து கொண்டுருக்கும் அத்தனை லட்ச பேர்களும் எளிதில் . மறக்க வைக்கப்படுகின்றன. மறக்க வைக்கப்பட்டதாலே அனைவரும் அடுத்த பேருந்தில் சென்னையை நோக்கி பயணத்தை தொடங்குகின்றனர்.

லட்சியத்தை விட முடியாமலும், தொலைத்த வாழ்க்கையை மீட்க முடியாமலும் அவனே ஒரு கால கட்டத்தில் தொலைந்தும் போகின்றான்.

இங்கு எதுவுமே மிகைப்படுத்துதல் தான் . இன்பம் என்றாலும் சரி. துயரம் என்றாலும் சரி?

கற்றுத்தராத கற்றுக்கொள்ள முடியாத எதார்த்தம் கடைசியில் நம் வாழ்க்கையை ஏக்க வாழ்க்கையாக மாற்றி விடுகின்றது.

ஆசை வெட்கமறியாது. பல சமயம் பயமும் அறியாது?

சொத்துச் சண்டையில் அத்தனை சொந்தமும் பிரிந்து விட வைராக்கியமாய் திருப்பூர் வந்த போது ஆண்டவனே அருகில் வந்த மாதிரி கைகொடுத்து தன்னுடைய சாயப்பட்டறையில் வேலை போட்டுக்கொடுத்தார்.

போட்டுக் கொடுத்த முதலாளிக்கு பொள்ளாச்சி தோட்டம் ஒன்றே போதும். விழும் தேங்காய்களை எண்ணிப்பார்க்கவே ஒரு பெரும் கூட்டம். என்ன செய்வது? எத்தனை தான் விவசாய வருமானம் என்றாலும் போட்டுக்கொண்டுருக்கும் கதர்ச்சட்டை கௌவரம் தான் என்றாலும் சாயப்பட்டறை முதலாளி என்றால் தான் இரவு தூக்கமே வரும்.

திருப்பூரில் பல பேருக்கு அவர்களுடைய வைராக்கியம் தான் வாழவைத்துக்கொண்டுருக்கிறது. ஊரில் இழந்த இழப்புகள் எல்லாம் வெறியாக்கி கடைசியில் வெற்றியாகவும் மாற்றி விடுகின்றது.

உள்ளே நுழைந்த சமயம் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. நவீன எந்திரங்கள் உள்ளே வராத காலம்.

எல்லாவற்றிலும் அதிக மனித உழைப்பு. மொத்தமாய் உள்ளே வந்த அத்தனை துணிகளும் தண்ணீரில் நனைத்து நனைத்து எந்திரத்தில் ஏற்ற ஏழு ஜென்மத்திலும் செய்த பாவங்கள் மனதில் வந்து போகும். எந்தப் பகுதி வலிக்கின்றது என்பதை உணர முடியாமல் தூங்கிய இரவுகள் அடுத்த பகல் பொழுது வேலைக்கு நம்மை ஆய்த்தப்படுத்தி விடும்.

சாயம் கலந்து ஊற்றி கொண்டு வருவது கொடுமை என்றால், கலந்து வந்த சாயத்தை கணக்காய் எந்திரத்தில் ஊற்ற வௌிவரும் நாற்றம் அடுத்த கொடுமை.

மூச்சை பொத்திக்கொள்ள முடியாது. விழும் சிக்கல்களை எடுக்க யோசிக்கும் போதே நம் வாழ்க்கை சிக்கல்கள் அனைத்தும் மனதில் வந்து மோதும்.

கல்வியை தர முடியாத தந்தை, காண்பதற்குள் மறைந்த தாய் , கட்டிய மனைவியை கண்டதும் மனம் மாறிய அண்ணன் அத்தனை பேர்களும் அன்றாட சாபக்கணக்கில் சேர்த்து சேர்த்து மனம் சோர்ந்து போனாலும் ஒரு நாள் விரும்பிய விடியல் வரத்தான் செய்தது.

எழுதி வைத்துருந்த பதிவேடுகளில் உள்ள எழுத்தைப் பார்த்து எழுத்தராக பதிவு உயர்வு பெற சற்று வாழ்க்கை ஏற்றம் கண்டது.

அலுவலக வேலை அனைத்தையும் கற்று தந்தது.

கொண்ட சபதம் மட்டும் கனலாய் எறிந்து கொண்டே இருந்தது. வீடு இல்லாமல் தன்னை விரட்டி அடித்த சொந்தங்கள் காலில் விழ வைக்க வேண்டும் என்றால் நமக்கென்று இங்கு சொந்தமான வீடு வேண்டும்.

அந்த எண்ணமே வந்த அத்தனை பணத்தையும் மாதச் சீட்டில் முடங்க முடங்க சேர்த்த சேமிப்பே வாழ்க்கையின் சுவையை அதிகமாக்கியது.

கடித வார்த்தைகள் காதலை வளர்த்தாலும் மாமா மகள் சொந்த வாழ்க்கையை சுகப்படுத்துவாள் என்ற எண்ணமே வரவில்லை. முரட்டு மாமனும் முட்டாள் தாயும் வளர்த்தவள் எங்கே நம்மை மறுபடியும் முட்டுச் சந்துக்குள் கொண்டு போய் விட்டு விடுவாளோ என்று பதுங்கத்தான் முடிந்தது.

ஆனால் பாவி மகள் மட்டும் காதலை காதலாக பார்க்க கணக்கற்ற கடிதம் வந்து கொண்டேயிருந்தது. காதலை விட லட்சியம் பெரிதாக தெரிய, வாழ்க்கையில் சேமித்த பணம் கொடுத்த தைரியம் ஒரு நாள் முதலாளியின் நண்பராக உள்ளே வந்த நடிகர் பிரபு தோளில் கை போட்டு எடுத்த புகைப்படம், நாமும் நடித்தால் என்ன தூண்டி விட்டு போக வாழ்க்கை துண்டாகி இன்று திண்டாடிக்கொண்டுருக்கிறேன்.

முதலாளியிடம் போராடி பெற்ற கடிதம் பிரபுவைப்பொறுத்தவரையில் பத்தாயிரத்தில் ஒன்று. முதலில் ஏதாவது தெரிந்து பிறகு என்னிடம் வா? என்று தள்ளிவிட்ட பாதாள சாக்கடை தான் இந்த இயக்குநர்.

அவருக்கோ சலவையகத்தில் வேலை பார்த்த அனுபவத்தில் என்னை சலவையாளனாகவே ஆக்கி விட சமயம் பார்த்து காத்துருந்த வேலையில் இவள் இங்கு?

” என்னை பொண் பார்க்க வந்தாக. மறுத்துப் பார்த்தேன். வேறு வழியே இல்லாமல் மொட்டை அடித்துக்கொண்டு அவர்கள் முன்னால் போய் நிற்க ஓடியே போய்விட்டார்கள் ” அவள் சிரித்துக்கொண்டு சொன்னவை சிந்தித்து என் வாழ்க்கையை திசைதிருப்ப திரும்பவும் திருப்பூர்.

வீட்டுக்கு வந்து கொடுத்து விட்டுச்சென்ற அவரின் புதுவீடு புதுமணை புகுவிழா அழைப்பிதழே வித்யாசமாய் இருந்தது.

நம்பிக்கை இல்லம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

4 responses to “இதற்குத் தானே ஆசைபட்டாய் முத்தையா?

  1. நம்பிக்கை இல்லம் என்ற பெயரில் தொழிலையும் கட்டி விட்டுருக்கும் வீடுகளையும் தன்னுடைய வாழ்க்கையும் சேவை மனப்பான்மையாய் செய்து கொண்டுருக்கும் ஒரு நல்லவர் வாழும் திருப்பூர்.

    என்னுடைய தொடக்க காலத்தில் ஆதரவு அளித்த ஆலமரம்.

  2. அல்ல. மனைவியால் மீண்டவரின் கதை. பத்து கிலோ மீட்டருக்குள் வாழ்ந்தாலும் என்னை என் வாழ்க்கை நலத்தை அதிக அக்கறையுடன் கவனித்துக்கொண்டுருப்பவர். வேலைப்பளுவால் படித்து விட்டு பல பேருக்கு செய்தி அனுப்புவதை அன்றாட கடமையாய் செய்து கொண்டுருக்கிறார். மூன்று மாதத்திற்குள் என்னை முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டவர். அன்புக்கும் உண்டே அடைக்கும் தாழ் என்பதை நாள்தோறும் நிருபித்துக்கொண்டுருக்கும் முத்து தேவியர் இல்லத்தின் சொத்து.

  3. சொந்தக்கதையும் … சிவக்குமாரின் கதையும் மாறி மாறி வருகிறதோ ????

    //எடுத்த புகைப்படம், நாமும் நடித்தால் என்ன தூண்டி விட்டு போக வாழ்க்கை துண்டாகி இன்று திண்டாடிக்கொண்டுருக்கிறேன்.//

    இது புதுசு,

  4. உங்கள் சொந்தக் கதையோ?

    நம்பிக்கை இல்லம் – அழகான பெயர்.

பின்னூட்டமொன்றை இடுக