” இரவில் உதிக்கும் சூரியன் “

உங்களின் ஒரு ஆடைக்கு எத்தனை ஆயிரம் மக்களின் அர்பணிப்பு?

உங்களின் ஒரு ஆடைக்கு எத்தனை ஆயிரம் மக்களின் அர்பணிப்பு?

எனக்கும் அவர்களின் உரையாடலுக்கும் எந்தவித தொடர்பு இல்லை.

என்னுடைய கண்ணாடி அறை வழியே கவனித்துக்கொண்டுருந்த போது, பேசிக்கொண்டுருந்த அந்த பெண்களின் கண்களில் இருந்து வழிந்து கொண்டுருந்த கண்ணீர் தான் என்னை என் அறையை விட்டு வௌியே வரவழைத்தது.

என்னுடைய அறையின் பார்வையில் மொத்த உற்பத்திக்கான எந்திர அணிவகுப்பு வரிசை அமைந்து இருந்தது. தொடக்கத்தில் போட்டுருந்த இருக்கையில் உற்பத்திக்கான துனை மேலாளர். என்னுடைய பார்வையில் எப்போதும் இருப்பவர். அவருடைய இருக்கைக்கு அருகே இடதும் வலதும் நின்று கொண்டுருந்த இரண்டு பெண்களும் என்னைப் பார்த்ததும் பதட்டமாய் பக்கமாய் விலகிப் போய் நின்றனர்.

நான் அருகில் போய் நின்றதும் கண்களை துடைத்துக்கொண்டு வேறு பக்கமாய் முகத்தை நின்று கொண்டு எங்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டுருந்தார்கள்.

என்னைக் கண்டதும் இருக்கையில் இருந்து படபடப்பாய் எழுந்தவரை அமரச் சொல்லிவிட்டு எதிர்புறம் அமர்ந்தேன்.

தொழிற்சாலையில் உற்பத்தி பிரிவு மொத்தமும் முடிவுக்கு வந்த நேரம். இரவு ஒன்பது மணி, அனைத்து மின் விளக்கும் உயிர் இழந்து இருளுக்குள் மூழ்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் காலையில் உள்ளே நுழையும் போதே துண்டுச் சீட்டு துருப்பாய் உள்ளே வந்து தாக்கும். துறை சார்ந்த கண்கொத்தி பாம்புகள் சீறி படமெடுத்து ஆடும். சலிக்காமல் வந்து கேட்கும் அனைவருக்கும் பதில் சொல்லி மாய்ந்து போகும்.

இல்லாவிட்டால் பல சமயம் அந்தப் பிரச்சனை நிறுவன நிர்வாகி அறைக்கு கொண்டு நிற்க வைத்து விடும்.

இடம் திரும்பினாலும் குற்றம். வலம் திரும்பினாலும் குற்றம்?

இன்று இரவு வேலை முடிந்து இரவு பணிக்கு 15 பெண்கள் மட்டும் என்று சற்று நேரத்திற்கு முன் மேஜைக்கு துண்டுச்சீட்டு வந்ததை கவனித்து காசாளர் அறைக்கு தெரிவிக்க அடிப்படைச் செலவுக்கான பணம் கூட இந்நேரம் கைகளுக்கு போய் சேர்ந்து இருக்கும்.

இரவு உணவை முடித்து விட்டு மறுபடியும் வேலையை துவங்கினால் முடிக்கும் போது நடு இரவு ஒரு மணி ஆகிவிடும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஆட்கள் சுற்று போல் தொடர்ந்து வந்து கொண்டுருப்பார்கள். இரவு எத்தனை மணி நேரம் வேலை செய்தாலும் மறுநாள் எப்போதும் போல் அதே காலை எட்டு மணிக்கு உள்ளே வந்து வேலையை தொடர்ந்து கொண்டுருப்பார்கள். இரவுப் பணி வைத்து எந்த சலுகையோ விடுமுறையோ எடுத்து விட முடியாது.

ஆனால் இந்த இரண்டு பெண்கள் மட்டும் ஏன் இங்கு இவர் முன்னால் நின்று கொண்டுருக்கிறார்கள்?

ஆய்த்த ஆடை உற்பத்தி பிரிவில் பொறுப்பாய் இருப்பவர்கள் அனைவருமே போன ஜென்மத்தில் செய்திருந்த போக்க முடியா பாவத்தினால் தான் இந்த ஜென்மத்தில் அவர்களுக்கு இந்த பதவி அமைந்துருக்கும் போல?

அதுவும் மொத்த நிர்வாகத்தில் மூன்றில் இரண்டு மடங்கு தொழிலாளர்கள் இவர்களின் தொடர்பு எல்லைக்குள் இருப்பார்கள்.

வந்து இறங்கும் வண்ண வண்ண துணி வகைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் நறுக்கி அடுக்கி வைப்பர்கள் தொடங்கி. கடைசியில் பெட்டியில் போட்டு கடைசி பெட்டியை கனகச்சிதமாய் வாகனத்தில் ஏற்றுபவர்கள் வரைக்கும்.

அனைவரையும் கண் கொத்தி பாம்பாய் கண்காணிக்க வேண்டும்.

தவறுகள் மட்டுமே அதிகம் நடக்கும் அவஸ்த்தை தொழிலாக இருப்பதால் கண்காணிப்பில் கோளாறு என்றால் நிச்சயம் பரலோகம் தான்.

மூன்று வருடங்கள் மொத்தமாய் வாழ்க்கையை தொலைத்து பரலோகம் போக விரும்பாமல் சொர்க்கலோகம் தேடி வேறு பாதையை தேர்ந்தெடுத்தவன் பதிவு தான் இது.

வந்த மின் அஞ்சலில் கிடக்கும் ஒப்பந்தம் உயிர் பெறாமலே இருக்கும். மொத்த நிர்வாகமும் உறங்கிக்கொண்டுருக்கும். நிறுவன நிர்வாகியோ வங்கி மேலாளாரின் கருணை பார்வைக்காக தினந்தோறும் வங்கி படியேறிக்கொண்டுருப்பார்.

வேண்டிய நூலை கடனாக தந்து கொண்டுருக்கும் இடைத்தரகர்கள் ஓடி ஓளிந்து கொண்டுருப்பார்கள். பழைய கடன்கள் பல இடங்களில் இடங்களாக மாறியிருப்பதால் புதிதாக சேரும் கடன் தொகை பல லட்சங்களை தாண்டியிருக்கும். எல்லைக் கோட்டை தாண்டும் பட்சத்தில் இடைத்தரகர் போய்ச் சேருமிடம் காசியாகத்தான் இருக்கும்.

நிர்வாகி நிதானமாய் இருப்பார். நிச்சயமாய் சிரித்துக்கொண்டு இருக்கமாட்டார்.

ஜால வித்தைகள் அரங்கேறி இருக்கும். வண்ண வண்ண துண்டுகள் மொத்தமாய் ஒரு நாளில் வந்து இறங்கும். உள்ளே வந்து இறங்கியதுமே மொத்த நிர்வாகத்திற்கும் புதிதாய் உயிர் வந்துருக்கும். கட்டளைகள் மட்டுமே காட்சியாய் மாறும்.

அறுபது நாட்கள் உறங்கிக்கிடந்த ஒப்பந்தத்திற்கு மீதி உள்ள முப்பது நாட்களில் முப்பது ஆயிரம் ஆடைகளுக்கும் உயிர் கொடுக்க வேண்டும்.

எந்தத் தவறும் எவர் மீதும் சொல்லி விடமுடியாது. நிர்வாகியின் நிதானம் பல பேர்களின் வாழ்க்கையின் தூக்கத்தை தொலைத்து “விடிநைட்” என்ற திருப்பூரின் வினோத வார்த்தைக்குள் விடியா இரவாக தூங்கா இரவாக கழித்து விடும்.

சோதிக்கப்படப்போகும் சான்றிதழ் குறித்து அச்சத்துடனே அனைவரின் பயணமும் இருக்கும். அன்றாட வாழ்க்கை முழுவதும் அவஸ்த்தையையே பரிசாகத்தரும்.

இதற்கு முன்னால் நடந்து கொண்டுருக்கும் ஒப்பந்த பிரசவத்தை பார்ப்பதா? இல்லை உள்ளே வந்த கருவை உருவாக்குவதா?

பாகிஸ்தான் இந்தியா எல்லை பிரச்சனை போல எல்லோரிடத்திலும் ஒரு ஏற்ற இறக்கத்தை உருவாக்கியிருக்கும்.

நிறுவன நிர்வாகியின் கடிகார முட்கள் 24 மணி நேரம் என்பதை மாற்றி 12 மணி நேரமாக மாற்றியிருக்கும். அவர் உள்ளே இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அச்சத்துடனே அனைவரும் கழித்து தொலைய வேண்டும்.

வரவேண்டிய தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வராமல் காலை வாரி விடுதல் ஒரு பக்கம் என்றால், ஆடைக்குத் தேவையான அனைத்து சமாச்சாரங்கள் அணிவகுப்பு இல்லாமல் அனைத்து எந்திரங்களும் காற்று வாங்கிக்கொண்டுருக்கும்.

ஆனால் எந்த கணக்கும் அங்கு செல்லுபடியாகது?

கடைசி கழுவேற்றல் பொறுப்பாளர்கள், மேலாளர்கள் மட்டுமே. காரணங்கள் தேவையில்லை. காரியம் முடிந்தால் தொடரும் பணி. இல்லையேல் அடுத்த நிறுவனத்திற்கு தினமலர் விளம்பரமே துணிவே துணை.

மூன்று வருடங்கள் வாழ்ந்து பல தடவை அந்த பரலோகத்தைப் பார்த்து பார்த்து பக்குவமடையமுடியாமல் சொர்க்க லோகம் தேடிய எனக்கு வேறு துறை சுவீகரித்து காட்டிய புதிய பாதை எனக்காக இந்த புதிய வாழ்க்கையை அளித்தது.

ஆய்த்த ஆடைகள் என்பது இரும்பல்ல. இறக்குமதியாளர் விரும்பும் உருவத்தை கேட்ட நேரத்தில் வார்ப்பாய் எடுத்து விட எந்த விஞ்ஞானமும் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை. போராடி போராடித்தான் மொத்தமும் ஒரு உருவமாய் உருமாறும்.

உருவம் உருவாக உருவாக பயணிக்கும் பாதையில் பாதி வழியிலே தொலைந்து போய்விடும் அபாயமும் உண்டு. காரணம் எல்லோருடைய வீட்டிலும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு ஆடை. நிர்வாகியைப் பொறுத்தவரையில் அத்தனையும் பணம். பொறுப்பாளர்களைப் பொறுத்த வரையில் அவர்களின் வேலையை தொடரச் செய்யும் தொடர் ஓட்டத்திற்கான தொடர் கட்டை தான் அந்த சட்டை.

உருவம் உருக்குலைந்து போனாலும் எதையும் ஒதுக்கிவிடமுடியாது. மிச்சமானது கூட பல சமயம் நாம் மானத்தை காப்பாற்றும் ஆடையாய் ஆகி விடும்.

பணம். அத்தனையும் பணம்.

கடைசி பத்து பெட்டிக்கு வராத அந்த பத்து ஆடைகளுக்காக மொத்த நிர்வாகமும் சந்து பொந்தெல்லாம் தேடி அலையும் வினோத தொழில் இது?

பசிக்கும் சிங்கத்திற்கு பரிதாபம் தெரியாது.

செய்ய வேண்டிய கடமைகள் மட்டும் தான் கண்களுக்குத் தெரியுமே தவிர வந்து நின்று கொண்டுருப்பவர்களின் அவசரத் தேவைகள் ஒரு பொருட்டாகவே தெரியாது.

பொருட்டாகத் தெரிந்தால் மறு நாள் காலை அவருடைய பதவி புரட்டி போட்டு விடும் அபாயம் உண்டு?

ஒப்பந்தத்தில் இவர்களின் முறை.

முதல் பெண் வர வேண்டிய குடிநீர் காலம் மாறி வந்து விட்டதால் இன்றைய இரவு தெருவில் குழாய் அருகே காத்துருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த வாரம் முழுக்க உப்புத் தண்ணீரே குடிநீராக மாறிவிடும் அபாயம். அடுத்தப் பெண் அவரின் குழந்தையின் அனத்தலை குறைக்க மருத்துவரிடம் கூட்டிப்போக வேண்டிய கட்டாயம். பகலில் போக நேர்ந்தால் அன்றைய ஒரு நாள் ஊதியம் இழக்க நேரிடும்.

தவிர்க்கவே முடிவதில்லை?

இந்த இரவு வேலை என்பது பல நமது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை விடியாத இரவாக மாற்றி விடும் வல்லமை படைத்தது. மொத்த வேலைமுடிந்து வீட்டுக்கு செல்ல பொது சேவை கை கொடுக்காது. மொத்த ஊரும் உறங்கிக்கொண்டுருக்கும் பொதுப் பேரூந்து எங்கிருந்து வரும்?

இதற்காக ஏற்பாடு செய்துள்ள தனிப்பட்ட வாகனங்கள் போக சிலர் மீதமாய் இருப்பார்கள். அவர்களை அவசரம் கருதி இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது தனிப்பட்ட வாழ்க்கையும் சில சமயம் தத்தளிப்பில் முடிந்து விடும்.

தொடக்க காலத்தில் என்னையும் ஒருத்தி கேட்டாள்?

” இப்படி மரக்கட்டையா இருப்பேன்னு தெரிஞ்சுருந்தா இந்நேரம் உருண்டு கொண்டேயாவது நான் என் வீட்டுக்குச் சென்று இருப்பேன். ” முதுகில் அடித்த அடியை வாங்கிக்கொண்டவன் தான் அடுத்தமுறை இரவு வேலை என்றாலே என் வாகனம் பஞ்சராகி விடும்?

இரும்பு மனம் கொண்டவரை சற்று பேசி ஆசுவாசபடுத்தினேன். ஒப்பந்தம் உறுதி படுத்தப்படும் போதே ஐந்து தேதிகள் ஓழித்து வைத்து விடப்படும்.

நிர்வாகிக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த ரகஸ்மாய் இருக்கும். கோப்புகள் தயார் செய்து உற்பத்தி பிரிவில் கொடுக்கப்படும் போதே ஐந்து நாட்களுக்கு முந்தைய தினத்தில் முடிக்க வேண்டுமென கணக்கு காட்டப்படும்.

இந்த சமயத்தில் அதை தெரியப்படுத்தி விட முடியாது. அடுத்த முறை தாமதத்திற்கு நாமே வழி எடுத்து கொடுத்ததாகி விடும்?

வேறொரு வினோத என்னை தொற்றி பற்றியது?

அந்த பெண்களின் வயது?

நம்பி விடமுடியாது. தேவையிருக்காது. ஒவ்வொன்றாக ஒன்றன் பின் ஒன்றாக பொருத்தப்பட்டு உருவமாக்கி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னாலே உலா வந்துவிடும்.

இருவரின் சமூக சிக்கலை விட இந்த தொழிலின் சட்ட சிக்கலை பொறுத்து வாழ்ந்தே ஆக வேண்டிய அவர்களின் வாழ்க்கை என்னை பரிதாபம்
கொள்ள வைத்தது.

உறுதியை வரவழைத்துக்கொண்டு என்னுடைய அறைக்கு அவரை   அழைத்துச்சென்றேன்.

:-) http://tirupurjothigee.blog.co.in/about/contact/ 8-)

Advertisements

4 responses to “” இரவில் உதிக்கும் சூரியன் “

 1. நன்றி சுந்தர், முத்து.

 2. Dear Jothiji

  antha irandu penkal azhutha karanathai sollave illai. melum naanum tirupur vaasi enbathanal unkalin pathivu en sontha vazhkaiyai
  pirathipalippathu pol ullathu super

  by
  T.S.MUTHU

 3. enna kodumai sir ithu ippadiya marakattai mathiri iruppeenga

  T.S.MUTHU

 4. ஒரு பனியன் பின்னால் இத்தனை கதையா ..இன்று தான் செந்தில் தன பதிவில் சொன்னார், ஒரு கப் காப்பிக்கு பின் 15000 லிட்டர் தண்ணீர் இருக்குன்னு, அது போல உங்கள் தொழிலில் நிறைய உழைப்பும் /வியர்வையும் / கதைகளும் இருக்கு… எழுதுங்கள் ..பின் தொடர்கிறேன் …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s