” தெருவில் நிற்கும் தெய்வங்கள் “

” வேலையிருந்தா போட்டுக்கொடுங்கண்ணே?”

உள்ளே நுழைந்தவனைக் கண்டு சட்டென்று திடுக்கிட்டு பார்த்துக்கொண்டுருந்த வேலையை நிறுத்தி விட்டேன். எந்த அனுமதியும் பெறாமல், கண்ணாடி கதவை எப்படி திறக்க வேண்டும் என்று கூட தெரியாமல் உடைப்பது போல். புயல் போல் வந்து நின்று கொண்டுருப்பவனை என்ன செய்வது?

வயது அதிகபட்சம் பதினான்க்குள் தான் இருக்கும். செம்பட்டை தலையும், அழுக்கான சட்டையில் மேல் பட்டனை ஊக்கு வைத்து இழுத்து, அந்த சட்டை சத்தியத்திற்கு கட்டுப்பட்டது போல் உடம்பில் ஒட்டிக் கொண்டுருந்தது.

அப்போது தான் நேரிடையான தொடர்புக்கு ஒரே நேரத்தில் வந்து தொலைத்த நார்வே, லண்டன் மக்கள் மாற்றி மாற்றி பழி எடுத்துக்கொண்டுருந்தார்கள். குளிரூட்டப்பட்ட அறையினால் பசி தெரியவில்லை.

இந்த நேரத்தில் பையன். அதிகபட்சம் ஆறாவது படிக்க வேண்டிய வயது. வேலை கேட்டு?

உள்ளே இருந்த அனைத்து நபர்களையும் தாண்டி எப்படியோ என்னுடைய அறைக்கு வந்து விட்டான்.

முகத்தை வைத்து ஊகித்துக்கொண்டு அருகில் அழைத்தேன். டப்பாவில் அடைத்து வைத்திருந்த மோரைக் கொடுத்து குடிக்கச் சொல்லி உள்ளே ஓரமாய் நிற்கச் சொல்லிவிட்டு என்னுடைய வேலையின் தீவிரம் முடிந்த போதும் அந்த முக்கால் மணி நேரமும் அசையாத சிலையாக நின்று கொண்டுருந்தான்.

வியப்பாய் இருந்தது. வறுமையும், வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் அந்த சிறிய வயதில் அத்தனை வைராக்கியத்தை வளர்த்துவிட்டுருந்தது.

அரைமணி நேரம் பொறுமையாக கேட்டதும், முடிக்கும் போது அழத் தொடங்கி விட்டான்.

“வேலையோட வீட்டுக்கு போகலைன்னா அப்பா வீட்டுக்குள்ள விடமாட்டாருண்ணே”.

என்ன செய்வது?

திருப்பூருக்குள் தொடக்கத்தில் உள்ளே நுழைந்த காலத்தில் பணி புரிந்து கொண்டுருந்த நிறுவனத்தில் நண்டும் சிண்டுமாய் உள்ளே ஒரு பெரிய கூட்டமே திரியும். இடுப்பு அளவுக்குக்கூட இல்லாதவர்கள் சிங்கமாய் நடு இரவு வரை பணிபுரிந்து விட்டு மறுநாள் அதே காலை எட்டு மணிக்கு.

வியந்து போன நாட்கள். இருபது வயதில் வௌி உலகம் பார்த்தவனுக்கு எல்லாமே புதிதாய் இருந்தது. வயதுக்கு மீறிய பேச்சு, வேலை. வேலையினால் கிடைத்த வாரச்சம்பளம். எண்ணிக்கை பார்த்து சரியாக சொல்லத் தெரியாத அந்த தாள்கள் எல்லா பழக்கத்தையும் பழகச் சொல்லியிருந்தது.

திருப்பூரில் பெட்டிக்கடை வியாபாரத்தையும், பேக்கரி என்ற போர்வையில் உள் அலங்கார தாஜ்மகால் அலங்கார தேநீர் கடைகளையும் பார்த்தபோது பயம் தான் வந்தது. ஊரில் அதிக நேரம் டீக்கடையில் நிற்பதை பார்த்தாலே வீட்டுக்கு தகவல் பறந்து விடும்.

ஆனால் திருப்பூர்?

நடு இரவு இரண்டுக்கும் நான்கு மணி நேரத்துக்கும் இடைப்பட்ட 22 மணி நேரமும் உறங்கா நகரம்.

ஊரில் தங்கும் நாளில் ஒரு மணிக்கு முன்னால் படுத்து பழக்கமில்லா உடம்பு ஒன்பது மணிக்கே ஊர் அடங்கி விட சுடுகாடு போல் ஆள் ஆரவமற்ற சாலைகளில் நடக்கவே பயந்து கொண்டு வந்து பாய்க்குள் சுருண்டு கொள்வதுண்டு.

சனிக்கிழமை சம்பள நாள் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலை விட, மயக்கத்துடன் நடக்கும் மனிதர்கள் தான் அதிக பயம் தந்தார்கள். தெருவோரத்தில் மீன் பொறித்து மட்டும் விற்பவர்கள் கூட முள்ளங்கி பத்தையாக ஐநூறு ரூபாய் தாள்களை எண்ணிக்கொண்டுருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொள்வதுண்டு.

எல்லாமே வியாபாரம்.?

ஊரில் தெருவோர மரங்களில் பொறுக்கித்தின்ற நாவல் பழம் முதல் காஷமீரில் இருந்து வந்து இறங்கும் உயர்ரக ஆப்பிள் வரை அத்தனையும் எளிதாக கிடைக்கும்.

என்ன தான் கிடைக்க வில்லை? எய்ட்ஸ் வரையிலும்?

காசு. பணம்?

அது மட்டும் தான் வேண்டும். கைநிறைய வாரத்தின் இறுதியில் வாங்கிக்கொண்டு போகின்றவர்கள் அடுத்த இருபத்திநாலு மணி நேரத்தில் அழித்துவிட்டு திங்கள் காலை உள்ளே நுழையும் போதே அடுத்த வார அட்வான்ஸ்க்கு அச்சாரம் போடுவது அடுத்த ஆச்சரியம்.

அண்ணி முதல் முதலாக வந்த போது கேட்ட வார்த்தை சிரிப்பை தந்தது.

” மூலைக்கொரு சாராயக்கடை இருக்கே? குடித்து விட்டு போனால் வீட்ல யாரும் சண்டைக்கு வரமாட்டாங்களா?”

மத்திய அரசாங்கம் திருப்பூரை அந்நிய செலவாணிக்கு நம்பியிருப்பதை போல், டாஸ்மார்க் வைத்து தான் மாநில அரசாங்கம். மூடி சூடா மன்னனாக தொடர்ந்து தமிழ்நாட்டில் விற்பனையில் முதல் இடத்தை இன்று வரையிலும் தக்க வைத்து பெருமை சேர்த்துக்கொண்டுருக்கிறார்கள்?

வறுமையை விட, இன வேறுபாடுகளில் இருந்து தப்பி வருவது என்பதை விட, கடன் தொல்லையை கணக்கில் கொண்டு மொத்த குடும்பமே ஒரு நாள் உள்ளே வந்து இறங்கும். அதிகபட்சம் ஆறு பேர்கள் என்றால் அத்தனை பேர்களுக்கும் திருப்பூர் ஒரு அமுதசுரபி தான். உழைத்தால், உறங்காமல் உழைக்க தயார் என்றால், பணம் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் தான்.

வாழ்ந்து வசதியானவர்களும் உண்டு. வந்த இடத்தில் வந்த பாதையை மறந்து புதிய பாதையை தேர்ந்தெடுத்து பூமிக்குள் புதைந்து போனவர்களும் உண்டு.

குழந்தைத் தொழிலாளர்களை தொடக்கத்தில் ஒரு குடும்பம் போல் தான் அனைவருமே வளர்த்தார்கள். செலவு மிச்சம். ஓரே குடும்பம் ஓரே நிறுவனத்தில் பணிபுரிந்தால் அத்தனைக்கும் வசதி. வேலைக்கு வந்தவர்களுக்கும், வேலை வாங்குபவர்களுக்கும். .மிச்சமானதை வைத்து வௌியேறி வந்த ஊரில் அவர்கள் கட்டிய பகட்டான வீடுகள் அவர்கள் உழைப்பின் மிச்சமாய் காட்சியளிக்கும்.

ஏற்றுமதி வளர வளர, வசதிகள் பல விதத்திலும் பெருகியது.

பெற்ற வசதிகள் கொண்டு வந்த உலகமயமாக்கல் தத்துவத்தில் இறக்குமதியாளரின் சட்டங்கள் ஒவ்வொன்றாய் உள்ளே வர வாலைச் சுருட்டிக்கொள்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

வயது கணக்கெடுக்கப்பட்டது. வாழ்வாதார வசதிகள் சோதிக்கப்பட்டது. சோதித்த முடிவு சாதகம் என்றால் ஒப்பந்தம். இல்லையென்றால் சோத்துக்கு லாட்டரி?

கழிப்பறை சுத்தம் முதல் பணியாளர் வசதி வரை கண்கொத்தி பாம்பாய் கவனிக்கும் போது என்ன செய்து விட முடியும்?

இன்றைய வசதியில் நேரடி ஒலி ஒளி காட்சியாய் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மொத்த நிர்வாகத்தையும் தனக்குள் வைத்துக்கொள்ளும் இறக்குமதியாளரும் உண்டு.

இத்தனை பிரச்சனைகளுக்கிடையே இவனை உள்ளே நுழைத்தால் எனக்கு நானே சொருகிக்கொண்ட ஆப்பு என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

பொறுமையாய் அவனை வௌியே அழைத்து வந்தேன்.

வந்த இரண்டு வருடத்தில் மொத்த குடும்பமும் வசதியில் திளைக்க பாதை மாறிய பறவைகளாய் பறக்கத் தொடங்கி விட்டனர். அம்மாவுக்கு டைலர் தொடர்பு. அக்காவுக்கு சூப்ரவைசர் தொடர்பு. அண்ணாவுக்கு கஞ்சா தொடர்பு. அப்பாவோ தூங்கும் நேரத்தை தவிர அத்தனை நேரமும் டாஸ்மார்க் தொடர்பு.

எல்லா தொடர்பும் அவரை தொடர்பு எல்லைக்கு வௌியே நிறுத்திவிட அவர் எடுத்த கடைசி ஆயுதம் பையன்.

பள்ளி சென்றவனை நிறுத்தி நிறுவன படிகளை மிதிக்க வைத்துக்கொண்டுருக்கிறார்?

அனைவரும் பணம் கொடுக்க மறுக்க பள்ளி சென்று கொண்டுருந்தவனை பாதகமாய் மிரட்டி வேலை கேட்க சொல்லிவிட்டு வௌி நுழைவாயில் காவல் காத்து கொண்டுருக்கும் அந்த மகாத்மாவை காவலாளியிடம் சொல்லி அழைத்து வரச்சொன்னேன்.

கிறக்கமாய் வந்தவன் என்னைப் பார்த்ததும் உருக்கமாய் பேசினான்.

என்ன பேசமுடியும்?

அறிவுரை என்பதே இரண்டு பக்க ஆயுதம் போல் தான். சில சமயம் கொண்டவனையே தாக்கி விடும்.

அவனை திருத்த வேண்டிய அவஸ்யமும் எனக்கில்லை. திருந்தக்கூடிய “நிலை” யிலும் அவன் இல்லை.

சற்று துணிவை வரவழைத்துக்கொண்டு சொன்னேன்.

” பையனோட மாற்றுச் சான்றிதழ் எடுத்துக்கொண்டு நாளை வா. அதில் வயதும் பேரும் சரியாக இருந்தால் நானே வேலை போட்டு கொடுக்கின்றேன் “.

அவன் கோபமாக பையனை கூட்டிக்கொண்டு சென்ற வேகமே புரிந்து விட்டது.

அவன் நாளை வாங்கப் போகும் கடனுக்கு பையனை வேறு வேலையில் சேர்க்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு?

Advertisements

8 responses to “” தெருவில் நிற்கும் தெய்வங்கள் “

 1. காரணகர்த்தாவாக இருந்து கொண்டு மாற்றத்தை வழி மொழிந்தால்? கருவுக்கு நன்றி. உருவமாக்க முயற்சிக்கின்றேன்? இந்த மாற்றமே யுவகிருஷணா அவர்களால் என் ஆதர்ஷணமானவருக்கு அறிமுக படுத்த காரணமாய் இருந்தது?

 2. என்ன ஜோதிஜி, நலமா … கவிதை,படம்னு நீங்க எங்கோயோ போய்ட்டீங்க !!!!!!. உங்களுடைய உரை நடை ஒரு கவிதை போலவும், உங்களுடைய கவிதை ஒரு புது கவிதை போலவும் இருக்கு….

  ஒரு மாற்றத்துக்காக, இதை செய்யலாம் – சாதரணமாக, வெற்று பாகெட்டுடன் வந்திறங்கி, இன்று நல்ல நிலையில் உள்ள நிறைய பேரை உங்களுக்கு அறிமுகம் இருக்கும்… எங்கிருந்து வந்தார்கள், எப்படி ( உழைப்பினால் ) மேலே போனார்கள், ..அது போல ஒரு சின்ன சின்ன முன் மாதிரிகள், தந்தால்- படிப்பதற்கும், படித்த பின்- பின்பற்றல்லாம் என்ற ஒரு சிறு பொறி தட்டலாம்…. உங்கள் எழுத்து மற்றவர்களை எச்சரிப்பது போல் ஊக்குவிக்கவும் செய்யட்டும்.

  நன்றி

 3. பரிதவித்துக்கொண்டுருக்கும் பாஞ்சாலிகள் இன்னமும் உண்டு.. அழைத்த குரல்கள் இன்னமும் அந்த பகவானுக்கு கேட்க வில்லை?

  நன்றி முத்தே.

 4. வித்யாசங்களை விபரமாய் சொல்லியிருந்தால் என்னுள் தோன்றிய

  வினாக்குறிகளுக்கு பதிலும் கிடைத்து பதிவு விழலுக்கு இறைத்த நீராக இல்லாமல் இருக்க இன்னுமும் முயற்சிகளில் முன்னேற்றம் காண முடியும்?

 5. முந்தைய பதிவுகளை விட இந்தப் பதிவு வித்தியாசப்படுகிறது.

  நன்றாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

 6. thankalin munthaya pathivukalaipol Tirupurai thukilurithu kattum dhuchathanare neevir vazhka

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s