நிர்வாணம் மட்டுமே இங்கு அழகானது?

அக்கா வீட்டுக்குள் உள்ளே நுழைந்ததுமே கேட்டார் . ” என்னடா திருப்பூர்ல ஏதாவது பூகம்பம்பா? அதிசயமா வந்துருக்கே? “.

சிரித்துக்கொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும்? திருமணமாகி பசங்க பத்தாவது படித்துக்கொண்டுருக்கும் அவர்கள் வாழ்க்கையில் அதிகபட்சம் நேரிடையான சந்திப்பே இரண்டு மூன்று முறை தான்.

திருப்பூர் வாழ்க்கையை எப்படிச் சொன்னாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது?

இங்கு தான் தொழிற்சாலைக்குள் நடந்துகொண்டுருக்கும் ஓப்பந்தத்திற்கு கப்பல் பிரசவம் முடியாமல், கட்டிய மனைவி பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டுருந்தாலும் மருத்துவரிடம் சொல்லி தேதியை தள்ளி தான் வைக்கச்சொல்ல முடியுமே தவிர ஒப்பந்தத்திற்கான அனுப்பக்கூடிய தேதியை தள்ளி வைக்க முடியாது . அதையும் மீறி எடுத்தோம் என்றால் அடுத்த நிறுவனத்தில் சேருவதற்கான வாய்ப்பை அடுத்த இரு வாரங்கள் தினமலரில் ஞாயிற்றுக்கிழமைகளில் தேடிக்கொண்டுருக்க வேண்டும்.

நீண்ட நாளாகவே ரமணர் அழைத்துக்கொண்டுருந்தார்.

” என்னப்பா பெரிய ஆளாயிட்ட, இந்தப்பக்கம் கொஞ்சம் வந்துட்டு போகலமில்ல “.

சரியான வாய்ப்பு கிடைத்ததும் அவரையும் பார்த்து விட்டு அருகே இருந்த அக்காவின் ஊருக்கு.

வேலூர் நெடுஞ்சாலையில் போளூரில் இறங்கி உள்ளே போனால் இருபது மைலில் ஆதமங்கம் புதூர்.

திருமணமான புதிதில் உள்ளே நுழைந்தது. நிறைய மாறியிருந்தது. பாஷை கொஞ்சம் பக்குவமாயிருந்தது. கன்னடமா, சென்னைத்தமிழா என்று குழம்பி பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வி நம்மை மேலும் முழிக்க வைத்து விடும். உள்ளே சென்று கொண்டுருக்கும் சிறு ரக பேரூந்துக்குள் அத்தனை மனிதர்களும் புளிமூட்டையாய் அமைதியாய் அவஸ்த்தையோடு பயணித்தனர்.

ஆச்சரியமாய் அப்பா வைத்திருந்த நம்பிக்கையை பொய் ஆக்காமல் அக்கா வாங்கிய முதுகலை பட்டத்துடன் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே வாங்கி வைத்திருந்த வால் பட்டங்கள் அதிர்ஷடத்தை வீட்டுக்கே வரவழைத்து பணிபுரிந்து கொண்டுருக்கும் ஆசிரியர் பணியை கொடுத்தது.

முரசொலி முதல் பக்கம் கட்டம் கட்டுவது போல் குடும்பத்தினர் எப்போதாவது தான் என்னை கட்டம் கட்டுவார்கள். ஆனால் எப்போதுமே குடும்பத்தினர் கட்டக்கூடிய கட்டமே வாழ்க்கையாகி வாழ்ந்து கொண்டுருக்கும் அக்கா மேல் எப்போதுமே எனக்கு தனியான மரியாதை.

காரணம் அவர்கள் வாழ்க்கையே எப்போதுமே ஏசு நாதரின் கட்டளைகள் போல் தான்.

அந்தக்கட்டளைகள் உறவு என்றோ மாணவர்கள் என்று பாரபட்சமே பார்ப்பதில்லை.

கட்டளை என்றால் கட்டுசெட்டான கட்டளைகள் தான். சுய ஓழுக்கத்திலும் சரி. போதிப்பதிலும் சரி.

அம்மா கேட்ட பத்து ரூபாய் கொடுத்தாலும் அந்த நாற்பது பக்க நோட்டில் எழுதி கையெழுத்து வாங்கும் போது அடுத்த முறை யாரால் தைரியமாய் கேட்க மனம் வரும்?

கேட்டால் செலவழித்த விதம் குறித்த விதம் குறித்து விளக்க வேண்டும்.

அவர்களைப் பொறுத்தவரையில் பணம் செலவழிப்பதில் தொடங்குவது தான் பண்பாடு, கலாச்சாரத்தின் கணக்கும் தொடங்குவதாக அர்த்தம்.

செலவழித்த பணம் சொல்லிவிடும்? மாறியது மனமா? இல்லை குணமா?

வாங்க மட்டுமே தெரிந்தவர்கள் மறுமுறை அவரிடம் எப்படி செல்லமுடியும்?

அந்தக் கட்டளைகள் பள்ளியில் காட்டிய வேகங்கள் தான் பல முனை தாக்குதல்களை அவர்களுக்கு உருவாக்கியது. படிக்கவே விரும்பாதவர்கள் கேட்ட சொர்க்கலோகம் மறுத்து பல முறை பரலோகம் காட்டிய வழிப்பாதைகள் மூலம் சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்களின் கைத்தடிகளை வீட்டுக்கு சில சமயம் வரவழைத்து விட்டுருந்தது.

ஒவ்வொரு முறையும் மாவட்ட கல்வி அதிகாரியின் தயவாலும், மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து இலவசமாக படித்துக்கொண்டுருக்கும் குழந்தைகளின் பெற்றோர்களாலும் அவரின் உயிரும், ஆசிரியை பணியும் தப்பி பிழைத்துக்கொண்டுந்தது.

நல்ல விஷயங்கள் நடக்க விடக்கூடாது என்று நாலு பேர்கள் இருந்தால் அதை நடத்திவிட வேண்டும் என்று ஒருவராவது இருப்பதால் தானே இந்த உலகம் இன்னமும் இயங்கிக்கொண்டுருக்கிறது?

அக்கா பள்ளிக்கு கிளம்பிக்கொண்டுருந்தார்.

நான் கேட்ட கேள்விக்கு மட்டும் சம்மதம் தராமல்?

மறுபடியும் கெஞ்சலாய் தொடர்ந்தேன்.

” நான் ஒன்றும் யாருடனும் பேச மாட்டேன். சும்மா அங்கு என்ன நடக்கின்றது என்று மட்டும் தான் பார்ப்பேன் ”

ஒத்துக்கொள்வதாயில்லை.

” எனக்கு வரப்போகின்ற பென்ஷன் பணம் வைத்து தான் நந்தினிக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு நினச்சுக்கிட்டுருக்கேன். இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு நீ வேற எதையாவது கிளப்பிட்ட மேலும் பிரச்சனையாயிடும். நீ பேசாம இங்கே இரு? ”

குழந்தைகளின் தொடர் வற்புறுத்தல் அசைத்துவிட அவரோடு நடந்து சென்று கொண்டுருந்தேன்.

இரண்டு சந்துக்கள் தாண்டுவதற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட காலை வணக்கங்கள்.

பள்ளிக்கு வராத குழந்தைகள் கூட ஹை டீச்சரு…….. என்ற வார்த்தைகள் எனக்கும் சந்தோஷமாயிருந்தது.

அரசினர் உயர்நிலைப்பள்ளி. மரக்கூட்டங்களுக்கு மத்தியில்.

ஊர் மொத்தமுமே பத்து கிலோ மீட்டருக்குள் தான். ஆனால் சந்துக்கு ஒன்றாய் மீட்டர் வட்டி நிறுவனம் பரவி விரவி இருந்தது. கல் பாறையே பூமியாய் இருந்ததால் வேறு வழியே இல்லாமல் படித்தவர்களின் கடைசி புகலிடமாய் ஊர்க்காவல் படை தொடங்கி ஜம்மு காஷமீர் வரைக்கும் சேவை செய்ய அனுப்ப வைத்து இருந்தது. வீட்டுக்கு ஒருவராவது வீரனாக இருந்தார்கள்.

எல்லா மாணவர்களும் எதார்த்தமாய் இருந்தார்கள். ஏராளமான பயத்துடனும் இருந்தார்கள். தபால் காரர் வருவதையே தவமாய் பார்த்தவர்களுக்கு அகன்ற சேவையும் மின் அஞ்சலும் விளங்கிக் கொள்ள முடியாத விடுகதையாய் இருந்தது. பணம் இருந்தது. பயமுறுத்தப்பட்ட பழக்கவழக்கங்கள் இருந்தது. வாழ்க்கைக்கான தீர்மானங்கள் ஏதும் இல்லாததால் எல்லாவற்றிலும் ஒரு வெறுப்பு இருந்தது.

அக்கா அறிமுகப்படுத்தியதால் பத்தாம் வகுப்பு ஆசிரியர் அட்டகாசமாக சிரித்துக்கொண்டு அவர் வகுப்பு அறைக்கு அழைத்துச் சென்றார்.

இயற்கை காற்று மட்டுமே அறைக்குள் வந்து கொண்டுருந்தது. மொத்த ஐம்பது மாணவர்களும் சிங்கத்தை பார்ப்பது போல் பயத்துடன் முன்னால் பார்த்துக்கொண்டுருந்தனர்.

கடைசி இருக்கையில் அமைதியாய் தனியாய் அமர்ந்துருந்தேன்.

பத்தே நிமிடத்தில் மொத்த அறையும் ஆர்ப்பாட்டத்தில் மிதக்க தொடங்கியது. அலை அலையாய் சிரிப்பலைகள். அவர் நடத்தியது பாடமா? கட்டளையா? கருத்துறையா? வியப்பாய் கவனித்துக்கொண்டுருந்தேன்.

மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல் கூர்மையாய் கவனித்து, குலுங்கி குலுங்கி சிரித்து, கேள்விகள் வந்து போது முண்டிக்கொண்டு எழுந்து அவரவர் தனக்கான அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொண்டனர்.

பாடம் முடித்து வௌியே வந்தவர் ஆசிரியர் அறைக்குச் செல்லாமல் அருகில் உள்ளே இருந்த தேநீர் கடைக்கு அழைத்துச் சென்றார்.

என்ன புரிந்து கொண்டீர்கள்?

அவர் கேள்விக்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்?

என்னிடம் எதுவும் கேட்காமலே தொடர்ந்தார்.

” உங்களைப் போலவே எனக்கும் ஏராளமான வருத்தங்கள் உண்டு. மனப்பாடம் செய்வது மட்டுமே மாணவர்களின் கடமை என்பதை உடைத்து வௌிக்கொண்டு வரவே எனக்கு பல ஆண்டுகள் பிடித்தது. உள்ளே வரும் மாணவன் எத்தனை நாள் தான் சகிப்புத்தன்மையுடன் இருக்க முடியும்?

அவனுடைய அன்றாட கடமைகள் தாண்டி வீட்டுக்கு சென்று புத்தகங்கள் எடுக்க வைப்பதே பெரிய விஷயம். மாட்டை கழுவ வேண்டும். வராத ஆட்டை தேட வேண்டும். வட்டியை கட்டி விட்டு சில சமயம் புட்டியுடன் வரும் தகப்பனை சமாளிக்க வேண்டும்.

அத்தனையும் முடிந்து அமர்ந்தால் எடுத்த பாடங்கள் படங்களாக மனதில் ஓட வேண்டும்.

புத்தகத்தை தொட்டாலே வயிற்றில் புளி கரைப்பது போல் இருந்தால் அவனிடம் மறுநாள் நான் என்ன எதிர்பார்த்து விட முடியும்? அதனால் இந்த தேன் மருந்து “.

அவர் அருகே வந்த மற்ற ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டுருந்தார்.

என்னுள் ஏதேதோ ஓடிக்கொண்டுருந்தது.

மெக்காலே புண்ணியவான் மிகத் தௌிவாக உருவாக்கிய வித்தையால் இன்று தங்கீலிஷாய் தமிழ் தத்தளித்துக்கொண்டுருக்கிறது.

அவனுடைய கனவு தான் எத்தனை நிதர்சனமானது?

உடம்பு இந்தியன். உள்ளம் ஆங்கிலேயன்.

இன்று வரையில் கணக்கச்சிதமாய் பொருந்தி போய்க் கொண்டுருக்கிறோம்.

தந்திரத்திற்கு பின் எத்தனை எத்தனை மாறுதல்கள்? வெண்மை, பசுமை, தொழிற் புரட்சிகள். ஆனால் அத்தனையும் விட காட் ஓப்பந்தம் தந்த கல்வி புரட்சி தான் இன்று காடாய் கிடந்த கட்டாந்தரையும் கல்வி கோயிலாய் அத்துவானக்காட்டுக்குள் அசத்தலாய் காட்சி தருகின்றது.

நண்பருடன் கோவையில் உள்ள அந்த தனியார் கல்லூரியின் வாசலில் நின்று கொண்டுருந்தேன். அவசரமாய் ஒரு பெரியவர் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டுருந்தார்.

அழைத்து வந்த அவர் மகளோ அவசரப்படுத்திக்கொண்டுருந்தார்.

புரியாமல் கேட்டேன்.

“என்ன பெரியவரே ஏதாவது பிரச்சனையா? ”
“ஆமாமப்பா”
“சொல்லுங்கள் நான் உதவ முடியுமா என்று பார்க்கின்றேன்?”
“சிறுநீர் கழிக்க வேண்டும் ” சிரித்து விட்டேன்.
“அதற்கென்ன? இவ்வளவு பெரிய கல்லூரியில் கழிப்பறை இல்லாமலா இருக்கும்? ”

அதெல்லாம் இருக்கும் தம்பி? போய் வந்த பிறகு அதற்கு தனியா காசு கேட்டுட்டா. அதான் பயமாயிருக்கு ”

எதார்த்தம் உறைய வைத்தது.

மொத்தமாய் அறுபத்தி நாலு சதவிகிதம் தனியார் கல்லூரிகள். இதில் மெஜாரிட்டி, மைனாரிட்டி என்று தனித்தனியாய் கல்விச்சேவை செய்தாலும் கல்லா கட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்ததாகவே தெரியவில்லை.

பள்ளி இறுதி படித்து முடிக்கும் மொத்தத்தில் எட்டு சதவிகிதம் மட்டுமே மேற்படிப்புக்கு செல்கின்றனர். பொறியல் முடிப்பவர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே ஆளுமையாய் வௌியே வந்து வாழ்க்கையை வசதியாக்கி கொள்ள முடிகின்றது. கலைப்படிப்பு அணைத்தும் திருமண அழைப்பிதழ்க்கு மட்டுமே உதவ முடிகின்றது.

எல்லாமே இலவசமாய் தந்து விடுகின்றோம் என்பவர்களின் கண்களுக்கு இன்னமும் ஆட்டு மந்தையாய் அடைத்து ஓழுகிய கூரைக்குள் அமர்ந்து படிக்கும் மாணவனின் நிலையை மட்டும் உயர்த்த மனம் வர மாட்டேன் என்கிறது.

எத்தனை கும்பகோண விபத்துக்கள் இங்கு வந்த போதிலும் சாக்கடை அருகே வேயப்பட்ட கூரையின் மேல் தொங்கும் ஆக்ஸ்போர்ட் நர்சரி வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

வேலூர் விஐடி நிறுவனர் திரு. விஸ்வநாதன் சொல்வதைப்போல் ” முதலில் அவர்களை நிறுத்தச் சொல். நாங்களும் நிறுத்துகிறோம் ” என்பதாகத்தான் ஒருவருக்கொருவர் கைகாட்டி கைகாட்டி கடைசியில் தெரியாத கைகாட்டியை எதிர்பார்த்து தூர தேசத்தில் வௌியே சொல்ல முடியாத அடி வாங்கி, அடிமையாய், கூலியாய் உணர்வு இழந்து , உறவு மறந்து வாழ்க்கை போய்க்கொண்டுருக்கிறது.

அத்துவான காட்டில் ஆடம்பர ஐந்து நட்சத்திர விடுதிகள் போல் காட்சியளிக்கும் கல்லூரியைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியமாய் இருக்கும்.

உள்ளே பாடங்கள் சொல்லித்தருவார்களா? இல்லை கறந்ததற்கு ” காட்சிகளை ” காட்டுவார்களா? என்று நினைத்துக்கொள்வதுண்டு.

நேற்று சென்ற நண்பர் வீட்டில் என்னைக் கண்டதும் நண்பரின் மகன் பாய்ந்து என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டான்.

நண்பர் மட்டும் அடித்துக்கொண்டுருந்த அடியை நிறுத்தாமல் விரட்டிக்கொண்டுருந்தார்.

அவரை சமாளித்து அமர வைத்து அவர் காட்டிய புத்தகத்தை எடுத்தேன்.

பையன் புத்தகத்தின் முன்பகுதியில் எழுதி வைத்துருந்ததை பார்த்த போது மயக்கமே வந்து விட்டது.

அட்டையில் எல்லா புத்தகங்களிலும் இடம் பெறும் அதே வாசகம்.

தீண்டாமை பாவச் செயல்,
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்,

பையனோ புத்திசாலித்தனமாய் தீண்டாமை என்ற வார்த்தைகளை மட்டும் இங்க் மையால் அழித்துவிட்டு அந்தந்த இடத்தின் மேல் காலாண்டு, அறையாண்டு, முழு ஆண்டு தேர்வு என்று எழுதியிருந்தான்.

http://tirupurjothigee.blog.co.in

Advertisements

12 responses to “நிர்வாணம் மட்டுமே இங்கு அழகானது?

 1. ///நல்ல விஷயங்கள் நடக்க விடக்கூடாது என்று நாலு பேர்கள் இருந்தால் அதை நடத்திவிட வேண்டும் என்று ஒருவராவது இருப்பதால் தானே இந்த உலகம் இன்னமும் இயங்கிக்கொண்டுருக்கிறது? ///

  இது போன்ற முத்துகள் கட்டுரைகளெங்கும்!
  நன்றிகள்!

 2. ஐயா ரொம்ப நல்லா வந்திருக்கு, ..ஆனால் அப்பப்ப , மாலன் சொன்னதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள் , இந்த மாதிரி பள்ளிகளும், உங்கள் சகோதிரி போன்ற ஆசிரியைகளும், நல் முத்துக்களை எடுத்து நாளைய உலகத்துக்கு தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்

 3. நிர்வாணம் என்பதே நிதர்சனம் தானே முத்து?

 4. nitharsanamana unmaihal niraintha pathivu idhu
  vazhakkam pol idhuvum super.

 5. பொறியியல் பட்டதாரி என்று வெளியே சொல்லவே வெட்கமாக உள்ளது, ஊரெங்கும் முளைத்துள்ள கல்லூரிக் காளான்களைப் பார்த்து

  ம்ம்ம்ம் 😦

  • அதே காளான்கள் தான் பளிங்குதட்டில் வருவலாக வரும் போது திருப்பூரில் ஐந்து துண்டுகள் வைத்து விட்டு ஐம்பது ரூபாய் வாங்கிறார்கள். ” சூழ்நிலையில் ஜெயித்தல் ” டார்வின் சொல்லியபடி நீங்கள் வந்ததால் இன்று என்னுடன் உரையாட முடிகின்றது?

 6. பொறியியல் பட்டதாரி என்று வெளியே சொல்லவே வெட்கமாக உள்ளது, ஊரெங்கும் முளைத்துள்ள கல்லூரிக் காளான்களைப் பார்த்து

  • 1, சுதந்திரம் பெற்ற முதல் 10 ஆண்டுகளில் கொண்ட கொள்கை ” அனைவருக்கும் கல்வி”

   2 சமீப பிரகடனம் குறைந்த பட்சம் (தேதிய அறிவு சம்மேளம், டெல்லி) 2015 க்குள் சாதிக்க வேண்டும்.

   3, மொத்த கல்விக்கும் தேவைப்படும் நிதியைப் போல் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் அரசால் ஓதுக்க முடிகின்றது, (மத்திய மற்றும் மாநில இரண்டுமே?. ) நமக்குத்தான் டாஸ்மார்க்கும் அரிசியும் முக்கியமாகத் தெரியும் போது வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? கொடுத்த வண்ண தொலைக்காட்சியில் நம்முடைய கனவுகளையும் தொலைத்து விட வேண்டியது தான்,

   அதனால் என்ன ஒரு நாகா , ஒரு சுந்தர், ஒரு வெயிலான் மற்றும் ஜோதிஜி தாக்கு பிடித்து வந்து விட வில்லையா?

   4, பின்லாந்தில் 18 ஆஸ்திரேலியாவில் 20 அமெரிக்காவில் 22. இது என்ன கணக்கு தெரியுமா? இத்தனை மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். இந்தியாவில்? தமிழ்நாட்டில்? உடுமலைப்பேட்டையில்? காரைக்குடியில்??????????

   என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் “வாழ்ந்து” இருந்ததால் தான் இந்த பதிவுக்கு மட்டும் உங்கள் “பளு” வையும் மீறி உள்ளே வந்துள்ளீர்கள்???

 7. ஆனால் உங்கள் சகோதரி, அந்த பத்தாம் வகுப்பு ஆசிரியர் போன்ற சிலரால்தான் என் போன்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தறுதலைகள் ஆகாமல் தப்பித்து வாழ்க்கைப் போராட்டத்தில் தாக்குப் பிடிக்க முடிந்தது..!

  • அரசுப் பள்ளியே உங்களக்கு பாலைத் திணை தந்துள்ளது என்றால் ஒரு வேளை நீங்கள் கேந்திரியா வித்யாலயத்தில் இருந்து வந்து இருந்தால்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s