குழந்தையாகி போனவர்கள்………..?

நண்பருக்காக காத்துக் கொண்டுருக்கின்றேன். முன்பே சொல்லியிருந்தார். ” வந்து குதியாட்டம் போடாதீர்கள். வருவதற்கு அரை மணி நேரம் ஆகும் “. அது போதும். தௌிவாக விளக்கி விட்டால் ஏன் புத்தி தடம் புரளப்போகின்றது? தொழிலுக்கு அப்பாற்பட்ட அப்பா வயதுக்கு ஒத்த நண்பர். குரு. ஆலோசகர். எல்லாவற்றையும் மீறி எங்கள் குடும்ப நலம் விரும்பி. என்னைப் போலவே பிடிவாதம் அதிகம். அதனால் தான் என்னவோ கற்று வைத்துள்ள ” சாஸ்திர ” அறிவை காசாக்கத் தெரியாமல் ஆராய்ச்சி நோக்கில் அலசிக்கொண்டுருப்பவர்.

மனம் படபடப்பு அதிகமாகும் போது அனைவரும் மருத்துவரிடம் செல்லும் போது நான் மட்டும் பத்து கிலோ மீட்டர் தாண்டி எல்லையில் உள்ள அவர் அலுவலகம் தேடிச் செல்வதுண்டு. அன்பான கண்டிப்பான மிரட்டல்கள் துடிப்பை குறைக்க வைத்து புத்தியை புடம் போட்டு அனுப்பி வைத்து விடுவார். மனைவியின் தொலைபேசி அழைப்புகள் கடைசியில் அவருடைய எண்களுக்குத்தான் செல்லும்.

மிக பிடித்த நபர்களுக்காக காத்துருப்பதும் சுகம் தான். மற்றொரு காரணம் எல்லைப்பகுதி. புகை அதிகம் இருக்காது. போக்குவரத்து கூட சற்று குறைவாகத்தான் இருக்கும். நல்ல மர நிழலில் போட்டு வைத்துள்ள நாற்காலி சமூகத்தை உற்று நோக்க வசதியாயிருக்கும்.

கடைசி மரத்தின் அருகே பத்து பேர்கள் நின்று ஒரு கூட்டமாய். ஈர்ப்பு செல்லவில்லை.

இங்கு எதற்குத்தான் கூடவில்லை?

நொய்யல் ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் பகல் நேர போக்குவரத்து நெரிசலில் கூட, யாரோ ஒருவர் நடைமேடையில் நின்று கீழே ஏதோ ஒன்றை வேடிக்கை பார்த்துக்கொண்டுருப்பார். பின்னால் வந்தவர் நிற்க, தொடர்ந்து வந்தவருமாய் தொடர்ச்சியாய் கடைசியில் அது போக்குவரத்து காவலருக்கு பிபி யை எகிற வைத்துவிடும்.

“ஏன்டா ஒருத்தருக்கு வந்தால் எல்லாருக்கும் ………… வரிசையா வருது ” பசங்க ” படம் தான் ஞாபகத்திற்கு வரும்.

எதார்த்தமாய் பார்த்த பார்வை சற்று ஈர்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. காரணம் ஒருவர் ” தொப் ” பென்று கீழே விழுந்து கிடக்க, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை தாங்கி பிடித்துக்கொண்டுருந்தார்.

ஆகா அடுத்த பதிவு கருப்பொருள் கிடைத்து விட்டது?

சவரம் செய்யப்படாத முகம். தலைமுடியும் தாடியும் “சமாதானத்தை” நினைவு படுத்தியது. கன்னத்திலும் மார்பிலும் எலும்பு மட்டுமே மிச்சமிருந்தது. கண்கள் தனுஷகோடியில் இறக்கிவிடப்பட்டவர்கள் தூரத்தில் பார்க்கும் ஏக்கப்பார்வையாய். போட்டுருந்த ஆடை என்ற பெயரில் ஒரு அலங்கோலம். துவைக்க வேண்டுமானால் தொலைக்காட்சியில் காட்டப்படும் ” ஒரே ஒரு சொட்டு ” போதாது. மொத்தத்தில் ஜீவன் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பதாய் இருந்தது.

எப்பொழுதாவது இதே போல் காணக்கிடைக்கும். காரணம் ஓய்வு என்பதே இல்லாத வாழ்க்கையில் இதே போன்ற அவல விஷயங்கள் கண்களுக்குத் தென்படுவதே இல்லை. அவசரத்தில் கடந்து சென்று விடுவதுண்டு. சில சமயம் அந்த அதிகாலைப் பொழுதுகளில் பழைய பேரூந்து நிலையத்தில் வருகின்ற உறவினருக்காக காத்து இருக்கும் போது தான் நாம் வாழும் வாழ்க்கை எத்தனை சிறந்ததாய் இறைவன் தந்துள்ளான்? என்று நினைவில் வந்து போகும்.

எத்தனையோ காரணங்கள்? கடைசியில் பஞ்சை பராரியாய் பேரூந்து நிலையத்தில் வந்து முடிந்து போயிருக்கும். வழி தெரியாமல் படுத்து இருக்கும் கூட்டம். கால் வைத்து நிற்க முடியாமல் நிரம்பி வழியும். முடை நாற்றமும், தலை விரி கோலமாய் புத்தி பேதலித்து தூங்காமல் பிதற்றிக்கொண்டே இருந்தவர்கள் அனைவரும் எனக்கு ஆண்டவன் அளித்த கொடைகள்.

இலவசமாய் உயிருள்ள கற்பனை கலக்காமல் திரைப்படத்தைக் காட்டி ” நீ உன்னை, வாழும் வாழ்க்கையை உணர்ந்து கொள்ள இதைப் பார்த்தாவது திருந்தி கொள் ” என்பதாக தோன்றும்.

இன்று அவசரமில்லாத பொழுதில் அருகே நின்று பார்க்க வேண்டிய நிலைமை.

அவரால் நிற்க முடியவில்லை. உட்கார வைத்தாலும் ஏதோ ஒன்றில் சாய்ந்து கொள்ள வேண்டிய நிலைமை. அருகே இருந்து கேட்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலாக உதட்டசைவு தான் பதிலாக கிடைத்து. கேட்டவர்க்கு புரியவில்லை. அவரின் ஆர்வம் எரிச்சலையும் சந்தோஷத்தை தந்தாலும் எனக்கு புரிந்து விட்டது. அருகே இருந்த கடையில் தேநீர், சில ரொட்டிகளும் வாங்கி அவர் கையில் நான் கொடுத்தது தான் தாமதம் அவன் தின்ற வேகம் திகைப்பை ஏற்படுத்தியது. புரையேறுதல் கூட புண்ணியம் போல் தெரிந்தது.

தாத்தா இறந்த போது வயது 84.

ஆறே முக்கால் அடியில் ஆகிருதியாய் இருந்தார். அருகே இருந்த கிராமத்தில் இருந்து பிடிவாதமாய் கிளம்பி வந்தவர் வாழ்க்கையை சாப்பிட்டே கழிக்க வேண்டியவர் போல் வாழ்ந்தார். அன்றாட கடமைகள் அதை விட்டால் சாப்பாடு. வேறு எந்தப் கெட்ட பழக்கமும் இல்லை. இரண்டே கட்டம் தான். பனிரெண்டு கட்டங்கள் எல்லாம் அவர் ஜாதகத்தில் இல்லை போலும்.

அவர் சாப்பாடு பிரியராக இருந்தவர் அவர் மூன்று மகன்களும் சாப்பாடு வெறியராக மாற்றி இருந்தார். சாப்பாடு. அசைவ சாப்பாடு. அதுவும் அம்மியில் மட்டுமே அறைத்த ருசியான சாப்பாடு. போதும். வேறு ஒன்றும் தேவையில்லை. வௌி வாழ்க்கை, என்ன மாறுதல்கள்? அடுத்து நாம் என்ன செய்ய வேண்டியது? அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. அந்த வெட்டி நேரத்தில் கெட்டியான கடல் நண்டு வந்துருக்கான்னு பார்த்துட்டு வந்துடுவார்.

அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவர் கையை பிடித்து தேவியருடன் சேர்ந்து விளையாடும் போது மறக்காமல் கேட்பேன். ” என்னம்மா உள்ளங்கையில் ரேகையே இல்லை ” தயங்காமல் பதில் வரும். ” மொத்த கூட்டத்திற்கும் ஆக்கிப்போட்டு அறைத்துப்போட்டே அத்தனையும் அழிஞ்சு போச்சுடா “. சிரித்துக்கொள்வோம்.

நான் இன்னமும் யாரையும் சந்திக்க வில்லை. என்பத்தி நாலு வயதில் மூன்று ஈடு இட்லி (24) தின்ற மனிதனை. கூடவே கால் கிலோ அளவிற்கு மிளகாய் சாந்து. மிளகாய் சட்னி அல்ல. வரமிளகாயை வறுத்து அப்படியே அம்மியில் வைத்து பூண்டு சேர்த்து அப்படியே குழைத்து எடுத்து விடவேண்டும். வருடக் கணக்கில் உள்ளே சேமித்து வைக்கப்பட்ட அந்த மிளகாய் கையில் அள்ளும் போதே காரம் கண்களை கட்டும். அதன் மேல் அபிஷேகமாய் ஊற்றப்பட்டு செக்கு நல்லெண்ணை. குழப்பி அடித்துக்கொண்டுருப்பவர் ஏதாவது குறை என்றால் பெரிய கூப்பாடே போடுவார்.

கூட்டுக்குடித்தனம். மற்ற வேலையாட்கள் என்று ஒரு பெரிய கூட்டம். அடுப்பு அணையா விளக்காய் எறிந்து கொண்டே இருக்கும். சாகும் அன்றைக்கு வரைக்கும் குளிர்ந்த நீரில் தான் அணைத்தும். தினமும் ஒரு சலவைக்காரர் கொண்டு வரும் தும்பைப்பூ. நெற்றியில் பட்டையை இட்டுக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தால் பட்டையை கௌப்பிவிட்டு தான் எழுந்து செல்வார்.

அருகில் உட்கார்ந்து இருந்தால் குட்டில் இருந்து தப்ப முடியாது. ” என்னடா நான் ரெண்டு ஈடு முடிச்சுட்டேன். இன்னமும் நாலாவது இட்லியில் இருக்குற? “. பாதி நாட்கள் பயந்து போய் பதுங்கி இருக்கிறேன். உப்புக்கண்டம் வறுத்து அருகில் வைத்துக்கொண்டால் எண்ணிக்கை ஈடு இணையற்றதாகி விடும்.

வளர்ந்து வந்த பிறகு அதிகம் யோசித்துள்ளேன். பிறந்த குலத்திற்கு சம்மந்தமில்லாத பழக்க வழக்கத்திற்கு என்ன காரணம் என்று?

சுற்றியுள்ள 64 கிராமத்திலும் ஆதிக்க இனமாய் இருந்த மூன்று குலமாய் பிரிந்து . அரசியலில் தோழியாய் இருந்து கொண்டு மறைமுக அரசாட்சியாய் ஆண்டு கொண்டுருப்பவர்கள் அதிக பழக்க வழக்கத்தால் எல்லாமே மாறிப்போயிருந்தது. சின்ன விருந்து என்றாலும் அழைப்பு கொடுக்கும் போதே ” என்ன அப்புச்சி, கவுச்சி தானே? ” என்று உறுதிபடுத்திக்கொண்டு தான் உள்ளே வருவார்கள்.

வீட்டில் வௌ்ளிக்கிழமை செவ்வாய் கிழமை மட்டும் அம்மி ஓய்வெடுக்கும். அன்று சாத்தையா விலாஸ், கண்ணகி உணவகத்தில் ஒரு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டுருக்கும்.

என்னைத் தவிர தாத்தாவிற்கு யாரையும் பிடிக்காது. கையில் இருந்த அரசாட்சி போய் விட்ட கோபம். தன்னை விட கோபக்காரனாக இருந்த அப்பா மேல் அத்தனை எரிச்சல். ஆனால் இருவரும் ஓரே நேர்கோட்டில் அவ்வவ்போது திருப்தி பட்டுக்கொள்வார்கள். உள்ளே ஆசையாய் வளர்ந்து கொண்டுருக்கின்ற ஆடும் கோழியும் அடுப்படிக்கு வரும் போது.

நாற்பது வயது தொடங்கும் போது மனைவி கணவனை கண்களுக்கு ஓப்பாய் பாதுகாக்க வேண்டுமாமே? கவனங்கள் சிதைந்து திசை திரும்பி மீண்டும் ஒரு புது உறவு உருவாகி விடுமாமே? உண்மையா? அறுபது தொட்டாலே ஆரோக்கிய கவலையை விட அவர்களின் அன்றாட அபத்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள வேண்டுமாமே? சரி இதுவே என்பதை தொடும் போது என்ன நடக்கும்?

ஜனத்தொகை அதிகமாக அதிகமாக அப்பா எடுத்த (உருப்படியான) எதிர்ப்பையும் மீறி வாங்கி புது வீடு சென்றதும், நான் தான் தாத்தாவிற்கு முழு நேர சேவகன். பள்ளி முடித்ததும் அவருக்கு தினந்தோறும் தேவையான தின்பண்டங்களுடன் ஐயர் உணவகத்தில் வாங்கப்பட்ட பொட்டலங்களுடன் வாழ்ந்த பழைய வீட்டுக்கு பயணிப்பேன். அவர் அருகே உட்கார்ந்தால் குழந்தையாய் மாறி விடுவார்.

இன்று ” சுகர் ” என்று தன்னை அடக்கிக்கொண்டவர்கள் எல்லாம் அவர் குதப்பும் ஜாங்கரியையும் லாடு வகைகளையும் பார்த்து உண்மையிலேயே இவர் லாடு லபக்கு தான் என்று ஒத்துக்கொள்வார்கள்.

“ஓரு ஸ்பூன் போதும் பக்தி பாட்டில் இருந்து மாற்ற ” என்பதைப்போல் அவருக்கு பிடித்த மருமகள் பேச்சை எடுத்தாலே அப்படியே மாறி விடுவார். அத்தனை செந்தமிழ் நாவில் வந்து நர்த்தனமாடும். மருமகள் என்பவர்கள் மகன்களை மாற்றி விட்டவர்கள் மற்றும் கெடுத்துக்கொண்டுருப்பவர்கள். அப்படி ஏதும் இல்லாத போதும் கூட. அதிலும் அம்மா என்றால் இன்னும் கொஞ்சம் சுருதி கூடும். அந்நியத்தில் இருந்து வந்தவர் என்பதால் சாகும் வரைக்கும் அம்மா அவருக்கு சோனியா காந்தி போலத் தான். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

எனக்கு இதில் எல்லாம் எந்த அக்கறையும் இல்லை. அம்மாவோ சின்னம்மாக்களோ எனக்குத் தேவை இல்லை. அவர் மிச்சமாய் எச்சமாய் கடைசியில் தரும் தூள் சமாச்சாரங்கள் தான் எண்ணத்தில் இருக்கும்.

இருபதாவது இட்லி சாப்பிட்டுக்கொண்டுருக்கும் போது அவருடைய ஆஸ்தான மருத்துவர் உள்ளே வருவார். அவர் மட்டும் தான் ஊசி இல்லாமல் ஆங்கில மருந்து இல்லாமல் அவர் விரும்பும் லேகியம் கொடுக்கும் அற்புத கலையை கற்றவர். பெட்டியை திறக்கும் போது கேட்பார் ” என்னய்யா இப்ப எப்படி சாப்பிட முடியுதா? முழுங்கும் இட்லியை நிறுத்தாமல் பதில் அளிப்பார் ” என்னப்பா பண்றது, இப்பவெல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியலை?”.

அப்புத்தா கொடுத்து வைத்தவர். சுமங்கலியாய் பாதி வாழ்க்கையிலேயே போயிருந்தார். தாத்தா கொடுக்கும் ஒவ்வொரு அடியும் இடியாய் தான் இருக்கும். தின்ற சாப்பாட்டு வலிமையா இல்லை கொண்ட கொள்கை தந்ததா?

தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாமல் குழந்தையாய் மாறி பிரமை பிடித்து கடைசியில் கொள்கை பிடிப்போடு உச்சக்கட்ட உஷணத்தில் குளித்து வைராக்கியமாய் பெயரைப்போல் ராஜாமணியாய் போய்ச் சேர்ந்தவர்.

போவதற்கு முதல் நாள் பிறந்த ஒரு மாத குழந்தையான என்னை ரயில் காட்டுகிறேன் என்று தூக்கிக்கொண்டு தண்டவாளத்தில் நடுவில் உட்கார்ந்து கொண்டு ரயிலுக்காக காத்து இருந்தவர், அன்று வர வேண்டிய இராமேஸ்வர புகை வண்டி வராமல் இருந்ததால் இன்று உங்கள் முன்னால் உங்களை படுத்திக்கொண்டுருக்கின்றேன்.

தாத்தாவின் சட்டப்புத்தகத்தின் உள்ள ஒரே படம் ஸ்டாலின். தொடர்ந்து வந்த அப்பாவின் புத்தகத்தில் இடம் பிடித்தது உறிட்லர். இவர்கள் கற்றுக்கொடுத்த பாடங்கள் இன்று ஒரு கூடை மஞ்சள், வௌ்ளை பூக்களை போட்ட புத்தக அட்டையை தேவியருக்கு பரிசாக அளித்துள்ளேன்.

வருட வருடம் மண்டகப்படி முடிந்து உற்சவர் ஊர்வலமாய் வந்து நான் இடுகையில் தந்துள்ள படத்தில் உள்ள கூடாரத்தில் பல்லாக்கில் வந்து நின்று அருள் பாலிப்பார். வீட்டுக்கு முன்னால் இருக்கும் அந்த கூடாரத்தில் உள்ள தெய்வத்தை நோக்கி கை கூப்பினார். “டேய் அடுத்த வருஷம் உனக்கிட்ட வந்துரனும் ஆமாம் “. சொன்னவர் சொன்னபடி உற்சவர் வந்த தருணத்தில் நின்றவர் சாய்ந்தார், சாய்ந்தவர் சென்றார். வியப்பில் உச்சம் சென்ற நாட்கள். இரண்டு வருடமும் அவர் அருகில் இருந்தவன் என்ற முறையில்.

தேவியர்களின் பிறந்த நாட்களில் அவர்களின் அத்தனை கோரிக்கையும் நிறைவேற்றப்படும். ஆனால் என்னுடைய இரண்டு கோரிக்கைகள் முன்னிறுத்தப்படும். ஓன்று மெழுகு வர்த்தி ஏற்றி அணைக்கக்கூடாது. அத்துடன் கூடிய ஆங்கில பாடலுக்கு பதிலாக இலங்கை வானொலியில் தொடக்க காலத்தில் ஒலிபரப்புவார்களே ” பிறந்த நாள்….. இன்று பிறந்த நாள்….. யாவரும் பிள்ளைகள் போல் தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்…… ” பாடிக்கொண்டே கைபேசியில் பதிவாகும்.

கோவிலுக்கு செல்வதற்கு முன் ஊனமுற்றவர்களும் வயதான ஆதரவற்றோர்களும் தங்கி இருக்கும் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள். இரண்டு பேர் கொண்டாடினாலும் ஒருவர் கொண்டாடினாலும் அன்று மூவருக்கும் புதிய உடை புதிய அலங்காரம் தான்.

ஓரே வருடத்தில் இரண்டு முறை பிறந்த நாள் கொண்டாடுவது உலகிலேயே தேவியர்கள் மட்டும். அதனால் என்ன? என்னுடைய உண்மையான பிறந்த நாளே ” ஜாதகம் என்பது உண்மையா? என்று ஆராய்ச்சி தொடங்கிய 23 வயதில் தான் பல்லி பாம்புகளுடன் இருந்த சான்றிதழ் பார்த்து கண்டு கொண்டேன். அவர்களாவது அனுபவிக்கட்டுமே?

இரண்டு மூன்று வருடங்கள் ஒழுங்காகச் சென்ற ஆசிரம நோக்கங்கள் சென்ற வருடம் சென்ற போது நடந்த நிகழ்ச்சி மானுட அவலத்தைக் கண்டு எதிர்க்க முடியாமல் வந்து விட்டோம்.

ஆதரவற்றோர் என்று ஒரு கூரையின் கீழ் முதலில் தொடங்கியவர், உருவாக்கி வைத்துருந்த பழக்க வழக்கங்கள் ஒரு வட்டத்தை , நல்ல ஒளி வட்டத்தை உருவாக்கி விட்டுருந்தது. இங்கு தான் எல்லாமே பணத்தால் தானே தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு ஏற்றுமதி நிறுவனம் தொடங்க வேண்டும். சரி தொடங்கியாச்சு. நல்ல படியாக போக வேண்டும். ஆகா அற்புதமாக 100 கோடியை தாண்டியாகி விட்டது. இடையே தெரிந்து தெரியாமல் “ஆட்டம்” போட வேண்டும். அலுத்துப்போய் விட்டது. அப்புறம் என்ன? சேவை மனப்பான்மை எண்ணம் வந்து மேலோங்கும்.

எதற்கு தினமலரில் இரண்டு நாட்கள் ஆறு காலத்திற்கு புகைப்படம் போட்டு “சேவையாளர்” பட்டம் போட்டு. உண்மையானவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள், காசி வரை இன்று வரை தொடர்ந்து கொண்டுருக்கும் அன்னதான சத்திரம் போல் அமைதியாய் செய்து கொண்டுருப்பார்கள். செலுத்தும் அன்பில் ஆர்ப்பாட்டம் தெரிந்தால் அதற்குப் பெயர்?

கோவிலுக்குள் உள்ளே சென்றால் தட்டில் பத்து ரூபாய். வௌியே வந்தால் பிச்சை எடுப்பவர்க்கு ஒரு ரூபாய். குறைந்தால் உங்களுக்கு நிச்சயம் ஒரு ” குறைப்பு” காத்துருக்கும்.

ஆசிரம விடுதிக்குள் உள் வரை சென்று நலம் விசாரித்து வருபவன் அன்று உள்ளே நுழைந்த போது தடுக்கப்பட்டதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். யாரையும் உள்ளே அனுமதிப்பதே இல்லை. பொருட்களை விட பணமாய் இருந்தால் சிறப்பு. புதிய கட்டளைகளை கேட்டுக்கொண்டு புதிதாய் உருவான அலங்காரங்களை உள்வாங்கிக்கொண்டு அமைதியாய் திரும்பி விட்டோம்.

பிணவறையில் இருந்து வௌியே எடுத்துச் கொண்டு, துக்கத்தை கக்கத்தில் அடக்கிக்கொண்டு வாதாடி பெற்ற பணத்தை கொடுத்து விட்டு வரும் மனிதர்கள் வாழும் பூமி தானே இது. பத்து வளர்ந்த நிறுவனர்களின் உள் மன ஆசாபாசங்களுக்காக ஒவ்வொரு உன்னத உண்மையான சேவையும் காலப்போக்கில் வேறு பாதை நோக்கி பயணித்து விடுகின்றது.

மனிதம் இல்லை என்று மறுக்க வில்லை. மாறுபட்ட சுயநல சிந்தனையினால் பாதை தான் மாறிக்கொண்டுருக்கிறது. அதனால் என்ன? காத்துருப்போம். நாம் தான் பத்து மணி நேரம் புகை வண்டி தாமதமாக வந்தாலும் புன்கையுடன் பயணிக்க தயாராய் இருப்பவர்கள் தானே?

Advertisements

6 responses to “குழந்தையாகி போனவர்கள்………..?

 1. அழகா பொறுமையா பதிஞ்சிருக்கீங்க! பூங்கொத்து!

  • அமெரிக்க நாட்டைப்போல் அங்குள்ள இறக்குமதியாளர்களும் சவலாக இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டுருக்கும் எனக்கு இத்தனை சீக்கிரம் இருபது ஆயிரம் மைல்களை இணைத்து விடும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. நன்றி அருணா. திருப்பூர்க்கு அடிக்கடி வாங்க.

   நட்புடன் ஜோதிஜி,

   https://texlords.wordpress.com

 2. அதென்ன எழுத்தைப்பற்றிச் சொல்லாமல் என்னைப் பற்றி? இதப் பாருங்க, இந்த வீர விளையாட்டுக்கு எல்லாம் நான் வரலை ஆமாம் சொல்லிபுட்டேன். அந்த (ஈர) வெங்காயம் என்ன செய்து கொண்டுக்கிறார். ஓரே நாளில் ஒரு மணி நேரத்தில் மனதை ரணகளமாக்கி விட்டார். ஆள் ரொம்ப ஜாலியான பேர்வழியோ? அந்த பரிசல் வந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். இந்த கரைக்கும் வந்தால் சொர்க்கத்தில் இருக்கும் என் அப்பாவை பற்றியும் விசாரிச்சு சொல்ல சொல்லாம்ன்னு தான். நன்றி ரமேஷ.

  நட்புடன் ஜோதிஜி,

  https://texlords.wordpress.com

 3. காரைக்குடிக்கும் திருப்பூருக்கும்
  திருப்பூருக்கும் காரைக்குடிக்கும்
  பயணிக்கிறது பதிவு!

 4. முதலில் வந்து விழும் மின் அஞ்சல் என்றாலே அது சுந்தர் என்ற சொல் என்று மண்டைக்குள் ஏறி விட்டது. தாத்தா பற்றி சொன்னது கொஞ்சம் தான் சுந்தர். அவர் ஒரு மல்டி பெர்சனாலிட்டி. இன்று வரை ஆச்சரியப்பட்டுக்கொண்டுருக்கிறேன்.

  காரணம் இங்கு ஓய்வு பெற்று அல்லது ஓய்வுக்கு தயாராக இருக்கும் அனைத்து நபர்களையும் பார்த்துக்கொண்டுருப்பவன் என்ற முறையில். ஆச்சரியங்கள் அளவு கடந்து போய்க்கொண்டுருக்கிறது. சாவுக்கு ஒரு மாதம் முன்பு துவைக்கின்ற கல்லுக்குள் பாம்பு புகுந்துள்ளது என்ற அலறிய கூட்டம் வந்து சொல்ல, அந்தக்கல்லை ( சுமாராக நாற்பது கிலோ இருக்கும்) அல்லாக்க தூக்கி மல்லாக்க போட்டு பாம்பு மண்டையில் நச்சென்று கையால் ஒரு குத்து.

  அவர் விடா முயற்சிக்கு ஒரு உதாரணம். முதலில் பிறந்த இரண்டு குழந்தைகளும் ஐந்து வயதுக்குள் தொடர்ந்து இறந்து விட மூன்றாவது அப்பா. அடுத்த இரண்டும் இறந்து விட இரண்டாவது சித்தப்பா. அடுத்து இரண்டும் இறந்து விட மூன்றாவது அடுத்த சித்தப்பா,

  அப்புறம் அப்புத்தா போட்ட சண்டை காரணமாக விடா முயற்சியை கைவிட்டுருப்பார் போல.

  ஏற்கனவே நீளம் அதிகம். பிழை அதிகம். எளிமை இன்னும் வேண்டும் என்பதாக வரும் விமர்சனம் என்னை ஒரு கட்டுக்குள் வைத்துள்ளது. ஓற்றுமை அதிகமாக இருப்பதால் தான் காதல் அதிகமாகி, ஊழலில் விடப்படாத ஒப்பந்த ( கடலுக்குள் போடப்படும் கண்ணாடி இழை ) கம்பி இணைப்பு இல்லாமல் இந்த புரிதல் உருவாக்கி கொடுத்துள்ள ஐயா ராசா. வேர்ட் ப்ரஸ் மகராசா, உன்னெ கும்பிட்டுக்குறோமய்யா.

  நன்றி சுந்தர்.

  நட்புடன் ஜோதிஜி

 5. //ஆனால் என்னுடைய இரண்டு கோரிக்கைகள் முன்னிறுத்தப்படும். ஓன்று மெழுகு வர்த்தி ஏற்றி அணைக்கக்கூடாது. //
  ஆஹா, என்ன ஒற்றுமை, நானும் செயல்படுத்தும் ஒரு சின்ன நம்மால் முடிந்த…. செயல். மனுஷன் ( தாத்தா ) நல்லாவே சாப்பிட்ட்ருக்கார்… அதெல்லாம் ஒரு காலம் தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s