மாறிய ஊரில் அதே பழைய பள்ளிக்கூடம்…

நீண்ட வருடங்களுக்குப்பிறகு சித்தப்பாவிடம் இருந்து அழைப்பு. கைபேசியில் சொந்த ஊரின் வித்யாசமான எண்களை பார்க்கும் போதே பலவித யோசனைகள் உள்ளே ஓடியது. ஊரில் இருந்து அழைப்பு வருகின்றது என்றால் திருப்பூர் டென்ஷனை விட மிக அதிகமாக இருக்கும். தூக்கு என்றால் சில நிமிட வேதனை. ஆனால் கல்லால் அடித்து கொல்வதென்றால்?

இரண்டு தலைமுறையும் இதே ஊர் ஓரே தொழில். நான் மட்டுமே முதன் முதலில் ஊரை விட்டு பயணித்தாலும் ஒன்பது மணி நேரம் கடந்து வரக்கூடிய இங்கு இருக்கக்கூடிய சாதக பாதக அம்சங்களை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஐம்பது ரூபாயை உடைத்தால் செலவழிந்து விடும் என்று அதையே யோசனையுடன் பார்க்கும் குடும்பத்தினர்க்கு என்னுடைய தொழில் உள்ள டாலர், யூரோ,பவுண்டு எல்லாம் வெறும் கேலிப்பொருள்.

நம்பித்தான் ஆகவேண்டும். கூட்டை உடைத்துக்கொள்ளாத போது குஞ்சு எப்படி வௌி உலகைப்பார்க்க முடியும்? முயன்று முயன்று பார்த்துவிட்டு அவர்களை விட்டு ஒதுங்கி நின்று “நீங்கள் என்னை தொந்தரவு செய்யாதீர்கள், எதிர்பார்க்காதீர்கள். நானும் அப்படியே ” என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வாழ்ந்த போது சிதைந்து போன கூட்டுக் குடும்பத்தில், கசந்த நினைவுகளும் பிரித்த சொத்துக்களுமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் சித்தப்பாவுக்கும் எனக்கும் உண்டான “நம்பிக்கைகள்” இன்று வரையிலும் ஒரே நேர்கோடு தான். துளியும் மாறவில்லை.

குடும்பத்தினர் எச்சரிக்கையும், கேலியையும் தாண்டி பரஸ்பரம் வைத்திருந்த மரியாதை என்பது வெறும் நினைவில் இருப்பதாக மட்டுமே இருந்தது. தொடக்கம் முதலே என்னை புரிந்தவர். என்னை வளர்த்து விட வேண்டும் பல தடைகளைத்தாண்டி கல்லூரி வாசல் வரை கொண்டு வந்து விட்டவர். ” நிதானமாக செயல்பட்டால் இவன் நிச்சயம் ஜெயிப்பான் ” என்று ஊரெல்லாம் பறைசாற்றியவர்.

அப்பாவுடைய பிடிவாதம் அவர் மறைவிற்குப் பிறகும் மற்ற வழிதோன்றலால் முன்னிறுத்தி சென்று கொண்டுருந்தது. தலைமை வகித்த அம்மாவை அந்த விஷயத்தில் மட்டும் என்னால் ஆதரிக்க முடியவில்லை. ” எல்லோரும் ஒரு நாள் இறந்து போய்விடுவோம் என்பதான இந்த வாழ்க்கையின் ஏன் இத்தனை துவேஷம்”.

புரிந்து கொள்ளாமல் புழுதி வாரி தூற்றினார்கள். அவர்களின் அனைத்து நியாயங்களும் எனக்கு அநியாயமாகத்தான் தெரிந்தது.

சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை அடை காத்தவர்கள் அதற்குண்டான பத்திரங்களை பாதுகாக்கவே இல்லை. குடும்பமே தேடிய போது குதிருக்கு பின்னால் செல்லரித்து செல்லாகாசாய் “நீங்களும் ஒரு நாள் இப்படித்தான் ” என்று சொல்லாமல் சொல்லியது.

தொலைபேசியாய் கைபேசியாய் அவ்வப்போது சகோதரிகள் தரும் தகவலை கேட்டுக்கொள்வதோடு சரி. தலையிட்டால் தலை தப்பாது.

உண்மையான அக்கறையும் அன்பும் என்பது எந்த நிலையிலாவது ஒருவரை மற்றொருவருடன் இணைத்துக்கொண்டே தான் இருக்கிறது. அதற்கு உறவு, உறவற்றது என்ற பாகுபாடு இருப்பது இல்லை.

சித்தப்பாவின் மேல் எனக்குண்டான மரியாதையை மெருகூட்ட இறைவன் மேலும் ஒரு சோதனை வைத்துருப்பான் போலும்.

பிரித்த சொத்துக்கள் மாற்றி எழுதும் போது என்னைத் தவிர அனைத்து சகோதரர்களும் கையொழுத்து போட்டு புதிதாக மாற்றிக் கொடுத்து விட, எழுதிய பத்திர எழுத்தர் கையெழுத்து போடாத என்னை பவர் ஏஜெண்ட் என்பதாக அர்த்தம் எடுத்துக்கொண்டு மொத்த சொத்துக்கும் அதிபதி என்பதாக வார்த்தை கோளாறில் என்னை எழுபது லட்சத்திற்கு அதிபதியாக்கி விட்டார்.

அதிக புத்திசாலிகளாக கருதிக்கொண்டு சித்தப்பாவின் வழிதோன்றல்கள் போட்ட ஆட்டமெல்லாம் கேட்ட வங்கிக்கடன் வராத போதும், அதற்கான காரணங்கள் புரிந்தபோதும் பந்து என் கோட்டுக்குள் வந்து விழுந்தது.

புரிந்து விட்டது. ஆனால் ஊருக்குப்போனால் ஒரு மணி நேரத்தில் முடிகின்ற வேலை இல்லை. காரணம் சித்தப்பாவின் வழித்தோன்றல்கள். கற்ற கல்விக்கும் எதிரே நடக்கும் சமூக வாழ்க்கைக்கும் சம்மந்தமில்லாமல் படங்களில் அலறிக்கொண்டு பில்டப் கொடுக்கும் வில்லன்கள் போல் ஒரு தனியான வாழ்க்கை. எந்த உபதேசமும் எடுபடாது. மொத்தத்தில் அங்கு சித்தப்பா ஒரு செத்தப்பா.

என்னுடைய மன உளைச்சலை இறக்கி வைத்தாற்போல் ஆயிற்று. பழைய பள்ளிக்கூடத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலையும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று மூன்று நாட்கள் பிடுங்கி எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போதே அம்மாவின் உபசரிப்பு அத்தனை சிலாக்கியமாக இல்லை. காரணம் ஊரில் எந்த விஷயத்திலும் கலந்து கொள்வது இல்லை. தேர்த்திருவிழா, பால்குடம், குடும்பம் நடத்தும் மண்டகப்படி, சந்தனக்காப்பு என்று கலந்துகொள்ளாத நான் சித்தப்பா என்றதும் வந்து நின்றது அம்மாவுக்கு அத்தனை எரிச்சல். எதிர்பார்த்தது தான். அண்ணிகள் மட்டும் சிரித்துக்கொண்டார்கள்.

நாளை போய் எல்லாவற்றையும் முடித்துவிடலாம் என்று சித்தப்பா சொன்னதும் குளித்து முடித்துவிட்டு அசைவ உணவை புறந்தள்ளி விட்டு வௌியே கிளம்பினேன்.

எல்லாமே மாறி இருந்தது. சென்ற பாதையெல்லாம் ஒரு சுவற்றால் தடுக்கப்பட்டுருந்தது. சுற்றிச்சுற்றி வந்தாலும் ஏதோ ஒரு புதிய ஊருக்குள் வந்தவன் போல். தவிர்க்கவே முடியாமல் . திருமண நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் இரவில் நுழைந்து மறுநாள் இரவில் வௌியேறி விடுவதுண்டு. உள்ளே என்ன மாறுதல்கள் இருக்கிறது என்பதே தெரியாது. ஏராளமான மாற்றங்கள். தலை சுற்றியது.

திரும்பவும் வந்து அண்ணன் மகனை கூட்டிக்கொண்டு செல்லும் போது தான் தெரிந்து எனக்குத் சொல்லிக்கொடுத்த தாவரவியல் ஆசிரியர் தவிர அணைவரும் ஓய்வு பெற்று சென்று விட்டது. அப்போது தான் என் வயது குறித்த அச்ச உணர்வு தோன்றியது.

பள்ளிக்கு செல்வதற்குள் பல பள்ளங்களை தாண்டும் சூழ்நிலை. எங்கு திரும்பினாலும் அரிசி ஆலைகளில் இருந்து வௌி வரும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர். குளமாக தேங்கி, சாக்கடையாக உருமாறி, கொசுவும் பன்றியும் மொத்தக்குத்தகைக்கு எடுத்துருந்தது. வியப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. பள்ளிக்கு அருகே சென்றதும் அந்த வியப்பும் இன்னும் சற்று அதிகமானது. பள்ளியில் இருந்து கண்களுக்கு எட்டிய தொலைவு வரையில் தெரிந்த பொட்டல் காடு மறைந்து பள்ளியின் வாசல் வரையிலும் கட்டிங்கள். அருகில் இருந்த புளியந்தோப்பில் வேறொரு அரிசி ஆலை. அதில் இருந்து வந்து கொண்டுருக்கும் சாக்கடை கழிவுகள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை தொட்டு தொடர்ந்துகொண்டுருந்தது.

விளையாட்டு மைதானத்தை தொடர்ந்த பல நூறு ஏக்கர் விரிந்து இருக்கும் முந்திரிக்காடு முடிவெட்டத்தெரியாதவன் கையில் சிக்கிய தலைபோல் அங்கங்கு சுரண்டப்பட்டு இருந்தது.

அழுகை என்பது அவசரத்தில் வருவதல்ல. ஆற்றாமையால் தான் வருகின்றது என்பதை அன்று தான் உணர்ந்தேன். அண்ண்ன் மகன் அவன் பாட்டுக்கு புள்ளி வைக்காமலே அவன் வீர தீரங்களை நான் கேட்கிறேனா இல்லையா என்பதைக் கூட கவனிக்காமல் பேசிக்கொண்டே போனான்.

ஆவல் இன்னமும் அதிகமானது. என்ன தான் மற்ற மாறுதல்கள்? என்று சுற்றிய போது முழுமையாக புரிந்தது.

இன்று திருப்பூர், கரூர், ஈரோடு சாயப்பட்டறை கழிவு நீருக்கு உண்டான விழிப்பு உணர்வும், தீர்வு வராமலே டெல்லி வரையிலும் இழுத்துக்கொண்டுருக்கும் அத்தனை விஷயங்களும் பத்து வருடத்துக்கு முன்னால் தொடங்கி இருந்தால்? எத்தனை மனிதர்களின் ஜுவாதாரங்கள் காக்கப்பட்டுருக்கும். கடல் வரைக்கும் கொண்டு சென்று கலக்கும் திட்டம் பல அமைச்சர்கள் தாண்டி சில நாட்களுக்கு முன்னால் வந்து சென்ற சமீப அமைச்சர் கை வரைக்கும் வந்துள்ளது.

தொழில் செய்வர்களுக்கு லாபம் முக்கியம். அதை கவனிக்க நியமிக்கப்பட்ட அதிகார வர்க்கத்திற்கு அவர்களின் மாத வசூல் அதைவிட முக்கியம். பாதிப்பு என்பது கண்னுக்குத் தெரியாத புழு, பூச்சிகள் முதல் கண்களுக்குத் தெரிந்த வயல் சார்ந்த சமூக வாழ்க்கை வாழும் சராசரி மனிதனுக்குத் தான்.

அதிகார வர்க்கத்தில் அவவ்போது வந்து சென்ற சில நல்ல மனிதர்களின் பிடிவாதத்தால் இன்றாவது இந்த பிரச்சனை தேசிய பிரச்சனை அளவுக்கு வந்துள்ளது.

ஆனால் இங்கு, நூற்றுக்கு மேற்பட்ட அரிசி ஆலைகளும், எந்த முன்னேற்பாடும் இல்லாத கழிவு நீரும், சேர்த்து வைக்க முறைப்படுத்தாத திட்டமும், கண்டும் காணாமல் “ஆதரித்து ” வரும் அதிகார வர்க்கமும் கொடுத்த பரிசு பள்ளியைச்சுற்றி குளம் போல் ஆற்று ஊற்று போல் கழிவு நீர்.

சற்று நேரத்தில் மயக்கத்தையும், தலைவலியையும் கொடுத்த நாற்றத்தை சகித்துகொண்டு படையாய் வந்து கடிக்கும் கொசுக்களைத் தாண்டி பள்ளியின் உள்ளே சென்று அறை அறையாக பார்த்தபோது புரிந்தது உள்ளே எந்த மாற்றமும் இல்லை. எல்லாமே வௌியே. மாற்றப்படாத(ா) அதே மர பெஞ்சு, கழன்று போயிருந்த மின்விசிறி. பரவாயில்லை உள்புறம் சற்று சுகாதாரமாய் இருந்தது. பத்து நிமிடத்தில் படை எடுத்து வரும் கொசுவை தாங்க முடியாத எனக்கு காலை முதல் மாலை வரை ஒரே அறையில் எப்படி இத்தனை மாணவர்கள் தாங்கிக்கொண்டு பாடத்தில் கவனம் செலுத்த முடியும்?

பிரிக்கப்படாமல் ஒரே இராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோதே அதன் அத்தனை அபத்தங்களும் வளர்ந்து இங்கு வந்து வாழ்ந்த போது தான் புரிந்தது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு கடைக்கோடி பகுதிக்கு செல்ல வேண்டுமானால் தனியாக ஒரு நாள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகார வர்க்கத்தால் என்ன சாதித்து இருக்க முடியும்? ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகரும் கோப்புக்கே பல நாட்கள் வேண்டும். நேரிடையாக இடத்தை பார்க்க வேண்டுமென்றால் எத்தனை நாட்கள் வேண்டும்? புண்ணியவான் தயவில் மூன்று மாவட்டமாக பிரித்து சிவகங்கையாக பிரித்த போதும் இன்று வரையிலும் சொல்லகூடிய வரையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

எனக்கு நினைவில் இருந்த வரையில் ஆறு சட்ட மன்ற தொகுதிக்கு என்று அமர்ந்தவர்கள் அவர்கள் வளர்ச்சியில் கவனமாகத்தான் இருந்தார்களே தவிர மற்றபடி தொகுதி வளர்ச்சிக்கு செய்வதாக சொல்லுவது அவர்கள் அளிக்கும் புள்ளிவிபர பட்டியலில் மட்டும் தான் தெரியும். இதில் மெத்த படித்த பெண்மணி முதல் படிப்பறிவே இல்லாத மற்ற அனைவரும் அடக்கம். அவரவர்க்கு அவர்களின் கட்சி தான் ஆட்சி, வளர்ச்சி, ஆதாரம்.

ஆனால் இதைவிடக்கொடுமை நாடாளுமன்ற உறுப்பினர்?

மிக்க படித்தவர், பண்பாளர், நல்ல புத்திசாலி, நாகரிகமான கனவாண், தனிமனித ஓழுக்கத்தை (சர்ச்சைகள் வந்துபோயிருந்தாலும்) மிக அற்புதமாக பேணுபவர், ஆங்கிலம் என்றால் ஆங்கிலமாக, தமிழ் என்றால் அனைவரும் வியந்து போற்றும் தமிழாக பேசக்கூடியவர், முறையற்ற வரையில் சொத்து சேர்க்காதவர், வந்து போகும் போதும் கூட (மொத்த இந்தியாவே கையில் இருந்தபோதிலும்) அண்ணே வர்றார் அண்ணே வர்றார் என்று துதிபாடிகள் இல்லாமல் ஒரே ஒரு வண்டி பின்தொடர வீணாண ஆர்ப்பாட்டங்கள் வெறுத்து அமைதியை விரும்பும் அறிவாளி? இத்தனைக்கும் மேலாக இலக்கிய ஆர்வம் மிகுந்தவர்.

எல்லாம் சரி? என்ன செய்தார்? என்ன சாதித்தார்?

தொடங்கியது எல்லாமல் தொடர்ந்ததா? உதாரண புருஷனாக தன் வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டவரால், உள்ளுர் மக்களின் ஏக்கம் ஏன் புரியவில்லை? இந்தியாவின் திட்டங்களை கரைத்துக்குடித்து உலக அரங்கில் பல பாராட்டுக்களை பெற்றவரால் ஏன் தொகுதியின் திட்ட வரைவோலையை தயாரித்து முன்னிறுத்த முடியவில்லை. காரணம் ஆயிரம் இருக்கலாம். இது மாநில அரசாங்கம் சார்ந்தது. இது மத்திய அரசின் கொள்கைக்கு முரண்பட்டது.

என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். விடை தான் என்ன?

என்று தான் இந்தியா டூடே வின் கருத்துக்கணிப்பில் தன்னிரைறவு மாவட்டமாக வரும்?

இங்கு தொடக்கத்தில் நிர்வாகத்தில் உள்ளே நுழையும் போது எல்லாவற்றையும் பேசிமுடித்து சொந்த வாழ்க்கை குறித்து சொந்த ஊர் குறித்து கேட்பார்கள். ஊரைச்சொன்னால் ” ஓ…. பாண்டிச்சேரி பக்கம் இருக்குதே அந்த காரைக்கால் தான் தானே?” . சிரித்துக்கொண்டே இல்லை இல்லை பிள்ளையார்பட்டி பக்கத்தில் இருக்கிறதே? என்று புரிய வைப்பதுண்டு. திருப்பூர் தொழில் அதிபர்களுக்கு, மக்களுக்கு பிள்ளையார்பட்டி கோவில் என்பது தனது பிள்ளை போல் பாசம் கொண்ட கடவுள். கடைசியாக முடிப்பாாகள் ” உங்க ஊர் அசைவ உணவென்றால் சப்பிக்கொண்டு சாப்பிடலாம் “.

அடக்கொடுமையே? மறைமுகமாக திண்ணி பண்டாரமாகத்தான் என் ஊரின் பெருமையை பறை சாற்ற வேண்டுமா? வள்ளல் அழகப்பர் மட்டும் இல்லையென்றால் என்னைப்போன்ற லட்சக்கணக்கான பேர்கள் ஏதோ ஒரு வயலில் அல்லது மளிகைக்கடையில் பொட்டலம் கட்டிக்கொண்டு இருந்து இருப்போம்? வீடு கட்டியதும் முகப்பில் மாட்ட வேண்டிய படங்களில் இவரும் ஒன்று.

கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது. தனிப்பட்ட செல்வாக்கையும் வளர்த்துக்கொள்ள வில்லை. கடைசியாக சமீபத்தில் கிடைத்த “அவமானங்கள்” எந்த மாறுதலையும் ஏற்படுத்த வில்லை. ஜனாதிபதி பதவி வரைக்கும் செல்லக்கூடிய அனைத்து தகுதியும், திறமையும், வாய்ப்பும் உள்ள நல்ல மனிதன் அவர் காலத்திற்குள்ளாவது பிரயாச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும்.

நீலகிரி தொகுதிக்கு தேர்ந்தெடுத்த தற்போதைய அமைச்சர் போட்டியிட்ட போது எனக்குள் ஆயிரம் ஆச்சரியம்? என்ன தைரியத்தில் இந்த தொகுதிக்குள் வந்து நிற்கிறார். இத்தனைக்கும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் அதிகமாக வாழும் பகுதி. பல வித சிந்தனைகள். நல்ல முறையில் ஜெயித்தவர் இன்று ஒவ்வொரு முறையும் தொகுதிக்கு வந்து செல்லும் போது அளிக்கும் இன்ப அதிர்ச்சிகள் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஆயிரம் குற்றச்சாட்டுகள் அணி வகுத்து தொடர்ந்த போதும் சராசரி சமான்யனுக்கு அது குறித்து என்ன அக்கறை வந்து விடப்போகின்றது? அவர்களுக்கு போட்டோ தொழிற்சாலை தொடங்குமா? வீதிக்கு வீதி குடை அமைத்து கூவிக்கூவி் அழைக்கும் தொலை பேசி அகன்ற சேவைகளை, நேரிடையாக அலுவலகத்திற்குச்சென்று கேட்கும் போது புறக்கணிக்கும் அதிகார வர்க்கம் ஒரு தொலைபேசி உரையாடல் மூலம் அவரவர் வீடு தேடி செல்ல வைக்கின்றதே? சமீப சாத்யம் இல்லாத புகை வண்டி பயணத்திட்டத்திற்கான திட்ட வரைவோலையை சமர்பித்து அதிகார வர்க்கத்தின் பார்வையை திசை திருப்ப வைக்க முடிகின்றதே?

ஆனால், அவர் வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரின் அரிசி ஆலை கழிவு நீர் பிரச்சனை தெரியாமலா இருக்கும்? சாராசரிக்கும் கீழே சமூக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு மற்ற மாவட்டங்களை விட எல்லா நிலையிலும் தொழிற்சாலைகள் அதன் அளிக்கும் வாய்ப்புகள் இல்லாமலே அத்தனை இளைஞர்களும் படிப்பை மட்டும் ஆயுதமாக சுமந்து கொண்டு அங்கு வாழ்ந்த வாழ்க்கை முறை சொல்லித்தந்த “வெகுளித்தனத்தை” வைத்துக்கொண்டு எத்தனை இடங்களில் எத்தனை அவமானங்களை சகித்துக்கொண்டு?

தனிப்பட்ட மனிதர்களின் வளர்ச்சி அபாரமாய் இருக்கும் தொகுதியில் தனி மனித அவலங்கள் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், சாத்வீகம், சகிப்புத்தன்மை, பிரச்சனையில்லா வாழ்க்கை.

குறைந்த பட்சம் கற்ற கல்வியுடன் சுகாதாரத்தையும் அவர்கள் உடம்பு எடுத்துக்கொண்டு வௌியே வர அதிகார வார்க்கம் உதவ நீங்கள் அழுத்தம் கொடுக்கலாமே?

புண்ணியம் என்பது கோவில் இருந்து எடுத்துக்கொண்டு வருவதல்ல? வாழ்க்கையை, சமூகத்தை வளப்படுத்த முடியும் என்ற தகுதியில் இருப்பவர்கள், வாழ்ந்து கொண்டுருப்பவர்கள், எதையும் அனுபவிக்க முடியாமல், கேட்க பயந்து கொண்டு வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் குறைந்த பட்சம் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை தீர்ககவாவது முயற்சித்தால் அல்லது நினைத்தால் உங்களை பல தலைமுறை கடந்து தஞ்சை இராஜராஜன் கோவில் போல் நினைவில் நிறுத்தும்.

Advertisements

2 responses to “மாறிய ஊரில் அதே பழைய பள்ளிக்கூடம்…

  1. எனக்கும் நீங்க சொன்ன அவர், தொலைக்காட்ச்சியில் தோன்றும் பொது, அவர் பேசும் பொது ..ரொம்ப பெருமிதமாக இருக்கும், எவ்வளவு தெளிவாக பேசுகிறார், அதுவும் தமிழில் , ( உடன் பிறப்பு தமிழ் எல்லாம், உடன் பிறந்தவர்கள் தான் மெச்ச வேண்டும் )…. ஆனால் என்ன செய்வது, தன் தொகுதிக்கு , ஊருக்கு ன்னு செஞ்சது ரொம்ப கம்மி போல… சில சமயம் கொஞ்சம் கர்வமும் எட்டி பாக்கும் அவரின் பேச்சில் … அதை விடுங்கள் நீங்க எழுதியது வழாக்கம் போலவே நல்லா இருந்தது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s