கற்றுக்கொடுப்பதை ஏற்றுக்கொள்ளா விட்டால்?

அந்த நிறுவனத்தின் வரவேற்பு அறையே மிகப் பிரமாண்டதாய் இருந்தது. ஒரு மூலையில் தலையில் உறெட் போனுடன் நுனி நாக்கில் ஆங்கிலமும் அவவ்போது தமிழும் பேசிக்கொண்டு, இடைவிடாத தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல்லிக்கொண்டு, வந்து அமரும் நபர்களின் பெயர் மற்றும் விபரங்களை உள்ளே தெரிவித்துக் கொண்டுருந்த பெண்ணுக்கு வயது இருபதுக்குள் தான் இருக்கும். சற்று திகிலாகத் தான் தெரிந்தது. அன்று தான் நேரிடையாக மிக அருகில் இருந்து ஒரு பெண்ணின் லாவகத்திறமையை, மொழித்திறமையை கண்ட நாள்.

பள்ளிக்கல்வி, கல்லூரி என கற்றதும் பெற்றதும் ஏதும் இல்லாமல் தக்கையாய் மிதந்து வந்து இங்கு வந்து சேர்ந்துள்ளேன். என்ன கேட்பார்கள்? எதைப் பற்றி கேட்பார்கள்? நேரிடைத் தேர்வு மூலம் தான் தேர்ந்து எடுப்பார்களாமே? கேட்பது ஆங்கிலத்திலா அல்லது தமிழிலா? நல்ல வேளை சொன்னபடி சட்டையை உள்ளே விட்டு மேலே பெல்ட் கட்டி ஒரு தோற்றத்தை உருவாக்க முடிந்துருந்ததை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

குறிப்பிட்ட நேரம் வந்ததும் என்னை அழைப்பதாகச் சொல்லி, எம்.டி (சின்னவர்) ரூம்க்கு அனுப்பினார். கையிலேயே எழுதிய பயோ டேட்டா. எப்படி எழுதுவது என்று தெரியாமல் பள்ளியில் லீவ் லெட்டர் போல். வெட்கமாய் இருந்தது. எழுதத்தெரிந்தால் தானே? எழுதும் சூழ்நிலையும் அமையவே இல்லை. கற்றுக்கொண்டதும் இல்லை. கையில் உள்ள வௌ்ளை பேப்பருடன் உள்ளே நுழைந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி.

அறையின் நடுநாயமாக அமர்ந்துருந்தவர்க்கு பதினெட்டு வயது கூட இருக்காது. திரைப்பட நடிகர் போல் இருந்தார். அறையின் ஆடம்பரம் இன்னும் பயமுறுத்தியது.

மூன்றே கேள்வி தான் கேட்டார். “லெஷமணன் சாரை எத்தனை நாளாகத் தெரியும்? இந்தத்துறையில் எத்தனை வருடங்கள் அனுபவம்? என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?” அத்துடன் முடித்து விட்டு ” நாளைக்கே வந்து சேர்ந்து விடுங்கள் ” என்றார்,

குளிரூட்டப்பட்ட அறையாக இருந்த போதிலும் குப்பென்று வியர்த்தது. என்னாலே என்னை நம்பமுடியவில்லை. அதிர்ஷடம் என்பது நமக்குக்கூட உள்ளதா?

கேட்ட கேள்விகளுக்கு பதில் என்று என்ன சொன்னேன்? என்று என் காதுக்கே கேட்காத அளவிற்கு பேசிவிட்டு வௌியே வந்தேன். என்னுடைய மற்றொரு அதிர்ஷடம் நான் நுழைந்த நேரத்தில் வௌிநாட்டில் வந்த இறக்குமதியாளர் அப்போது தான் உள்ளே நுழைந்து இருந்தார் போலும். அந்த அவசரத்தில் அவர் அதிகம் பேசமுடியாத சூழ்நிலை. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வௌியே வந்து விட்டேன்.

யாரிந்த லெஷமணன் சார்?

யாருக்குத் தெரியும்? முந்தைய நிறுவனத்தின் காசாளர் நண்பர் சொன்ன ஐடியா. லெஷமணன் என்பவர் ஏதோ ஒரு திருப்பூர் வங்கிக் கிளையில் மேலாளாராக பணிபுரிந்து கொண்டுருப்பவர். அவருக்குத் தூரத்து உறவு முறை இந்த நண்பர். இந்த நிறுவனத்திற்கு ஒரு முறை அவருடன் வந்து இருந்த காரணத்தால் அவருக்கு கிடைத்த மரியாதையை மனதில் வைத்துக்கொண்டு தான் என்னிடம் சொன்னார். அவர் பெயரைச் சொன்னால் நிச்சயம் அங்கு வேலை கிடைக்கும் என்று. ஆனால் அவர் இப்போது திருப்பூரில் இருக்கிறாரா? இல்லையா என்பது அவருக்கும் தெரியாது. காரணம் அவர் சேர்த்து விட்ட நிறுவனங்களில் எல்லாம் நண்பர் ஓரிரு மாதங்கள் கூட தாக்கு பிடித்தது இல்லை. அவரை பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு தான் கடைசியாக இங்கு வந்து சேர, என்னுடைய கெட்ட நேரத்தின் தொடக்கத்தில் அவர் நல்ல நேரம் அமைந்துருந்ததால் எளிதில் செட்டாகி விட முடிந்தது. என்னை வௌியேற்றி விட மேலும் சாதகமாகி விட்டது.

பிறகு தான் தெரிந்து அந்த புண்ணியவான் லெஷமணன் வாரி இறைத்த வங்கிக் கடன் தயவால் நிறுவனம் வெகுவிரைவில் வளர முடிந்துருக்கிறது. வயதான போதும் உழைப்பால் இளமையாக செயல்பட்டுருந்த அப்பாவும், டீன்ஏஜ் மகனும் பரந்து விரிந்த தோட்டத்தில், ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேவையான அத்தனை பிரிவுகளையும் உள்ளே வைத்து, பணிபுரியும் என்னைப்போன்ற நபர்களுக்கு ஜெயில் போன்ற ரூம்களை வைத்து மிக நல்ல முறையில் முழுமையான நேரிடையான ஏற்றுமதி தொழிலில் சக்கைபோடு போட்டுக்கொண்டுருந்தார்கள். நிறுவனத்திற்கு வைத்திருந்த பெயர் நட்சத்திரம் போல் ஜொலித்துக்கொண்டுருந்தார்கள். முன்னூற்றி அறுபத்தி ஐந்து நாளும் வேலை.

ஓய்வு என்பதே ஓய்வுக்குத் தெரியாது.

முந்தைய நிறுவனம் போல் இருபது மடங்கு அதிகம். கூட்டம் அதிகம். பிரச்சனைகள் அதை விட. நிறுவனத்திற்கு பின்புறம் மாதச் சாப்பாடு மூன்று வேளையும். முந்தைய சூழ்நிலையை விட முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலை. அங்கு கற்றவை அனைத்தும் ப்ரிகேஜி போல். ஒவ்வொரு துறையிலும் உள்ளே நுழைந்து வௌியே வந்த போது தொழில் பார்வை சற்று விசாலாமாய் ஆனது. இங்கும் எனக்குத் தெரிந்த ஒரே உழைப்பை வஞ்சகம் இல்லாமல் வழங்க பெயர் தெரியும் அளவிற்கு பிரபலமாக முடிந்தது. மூன்று முழு இரவையும் தூங்காமல் பணி செய்து வௌியேறிய சிறுநீர் கூட இரத்தம் வரும் அளவிற்கு வாட்டி வதக்கி எடுத்தார்கள். வௌியே செல்ல முடியாது. அரண்மனை வாசல் போல் உள்ள கேட்டில் உள்ளவர்களிடம் செல்லும் காரணங்கள் மேலே இருந்து உத்தரவு வருவதற்குள் வௌியே செல்லும் ஆசையே இற்று விடும். ஆனால் நான் முயற்சித்ததே இல்லை. செல்ல வேண்டிய இடமும் இல்லை. நமக்குத்தான் பார்க்க வேண்டிய நபரும் இல்லை.

ஆடை உற்பத்தி பிரிவு மற்றும் அலுவலகம் சார்ந்த அலுவலர்கள் என்று இரண்டு விதமான உலகங்கள் இருந்தது. இது போக உழைக்கும் பணியாளர்கள். சாப்பிட போகும் போது தான் அனைவரையும் பார்க்க முடியும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுடன் பழக எளிதாக இருந்தது. அப்படித்தான் திருச்சியில் இருந்து வந்த மற்றொரு நண்பர் அறிமுகமாகி மிக நெருங்கி படுக்கையறை முதல் பேஸ்ட் வரை பறிமாறி நிர்வாகத்தில் உள்ள அனைத்து நிறைகுறைகளையும் மனதில் இருத்திக்கொள்ள முடிந்தது.

அலுவலகத்தை விட உற்பத்தி பிரிவில் அதிக பிரிவினைகள். முரட்டு சுவாவமும், அடிதடியும், கைகலப்பும் அவ்வப்போது நடக்கும். தூர நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. இது போக துறை வாரியான வேறுபாடுகள். துணி அறவு செய்து வருபவர்கள் சாயம் ஏற்றும் பிரிவில் இருப்பவர்களை பிடிக்காது. சாயம் ஏற்றும் போது வரும் அனைத்து குறைகளும் நூலால் தான் வருகின்றது என்பது அவர்கள் வாதம். குறைந்த கிலோ அளவெல்லாம் அவர்களால் தான் என்று நாள் தோறும் பிரச்சனைகள்.

சாயமேற்றிய துணிகள் உற்பத்தி பிரிவின் தொடக்கமான கட்டிங் பகுதிக்குச் செல்லும் போது இந்தச் சிக்கல் மேலும் விரிவிடையும். வெட்டிய பிறகு வந்த அனைத்து பிரச்சனைகளும் துணியை டெலிவரி செய்யும் பகுதிக்கு கடத்தப்பட்டு விடும். எந்த தவறுமே முடிவுக்கு வராமல், ஒருவருக்கொருவர் ஈகோ பார்த்துக்கொண்டு கடைசியில் மொத்த உற்பத்தியும் ஏற்றுமதிக்கு தயாராய் இருக்கும் போது தான் பிரச்சனை விஸ்பரூபம் எடுத்து நிற்கும்.

போட்டு முடிக்க வேண்டி பெட்டிகள் ஐநூறு என்றால் கடைசியில் 24 பெட்டிக்கு தேவையான ஆடைகள் இருக்காது. இருந்தாலும் அழுக்கு, எண்ணெய் பிசுப்பு, முக்கியமான இடத்தில் பிரிந்த தையல் நூல் என்று ஏகத்துக்கும் அடிதடியாய் இருக்கும். பெட்டி வந்து நிற்கும் வாகனத்தில் ஏற்றும் வரையிலும், அன்று இரவு எல்லோருக்கும் சிவராத்திரி.

இந்தப் பிரச்சனைகள் போக உள்ளே மத்திய அரசு மாநில அரசு நிர்வாகம் போல் மகன் ஒருபக்கம் அப்பா ஒரு பக்கம் வித்யாசமான நிர்வாக முறைகள். அப்பா முழுக்க முழுக்க பழைய காலத்து ஆள். உழைப்பு. அவருக்கு உழைப்பவர்கள் மட்டும் சரியான நபர்கள் மற்ற அனைவருமே தண்டச்சம்பளம். அவர் அலுவலக பகுதிக்கு நுழைந்தாலே அனைவரும் காத தொலைவுக்கு ஓடுவார்கள். கணிணி முன்னால் அமர்ந்து கொண்டு முக்யமாக வேலை செய்துகொண்டுருப்பவர்களை “எத்தனை நாளைக்கு இந்தப்பெட்டியின் முன்னால் அமர்ந்துகொண்டு தண்டச்சம்பளம் வாங்கிக்கொண்டுருக்கப் போகிறாய்” என்று கேட்கும் போது என்ன பதில் சொல்ல முடியும். அவர் வந்து உருவாக்கி விட்டுச் செல்லும் அலை அடித்து முடிய மகன் வந்து அனைவருக்கும் சமாதானம் சொல்லி விட்டுச் செல்வார்.

அப்பா என்பவர் பெரியவர். அப்படித்தான் அழைக்க வேண்டும் என்ற கட்டளை. அவர் முன்னால் செல்லவே அனைவருக்கும் பயம். புள்ளிவிபர புலி. நிர்வாகத்தில் உள்ள அனைத்து விபரங்களும் மனக்கணக்கில் வைத்துருப்பார். தப்பவே முடியாது. தவறான தகவல் சொல்லவே முடியாது. ஆங்கிலம் பேச வராது என்றாலும் வரக்கூடிய இறக்குமதியாளர் பேசக்கூடியதுக்கு அவருக்குண்டான ஆங்கிலத்தில் புரியவைத்து விடுவார். மகன் மீதியை முடித்துவிடுவார். உயர்கல்வி படித்து வந்து மகன் உருவாக்கும் அனைத்து நவீன உத்திகளுக்குண்டான நிர்வாக முறையும் அவரைப் பொறுத்தவரையில் பணத்தை வீணாக்குகிறானே? ஆனால் பையனை எதுவுமே கேட்க மாட்டார். ஓரே பையன். அவரின் மொத்த உயிர்.

மகனும் எத்தனை நவீன உத்திகளை உள்ளே கொண்டு வந்தாலும் கடைசியாக அப்பாவிடம் கேட்காமல் எதையும் செய்ய நினைப்பது இல்லை. அலுவலகம் உள்ளே வந்ததும் இருவரும் பேசிக்கொள்வதும் இல்லை. மிக்க அவஸ்மான தருணங்கள் தவிர.

மொத்த தொழிற்கூடமும் குறைந்தது இருபது ஏக்கராவது இருக்கும். துணி அறவு எந்திரங்கள் ஒரு புறம், அதைத் தொடர்ந்து உற்பத்தி பிரிவு தொடர்பான அனைத்து விஷயங்களும் தொடர்ச்சியான கட்டிடங்கள். மொத்த முன்பகுதியும் அலுவலகம் சார்ந்த விஷயங்கள். தோட்டத்தின் கடைசியான எல்லைப்பகுதியில் சாயமேற்றுதல் தொடர்பான அணைத்தும் அது சார்ந்த கட்டிடங்கள். இடையே வயலும் அதில் மாடுகளுக்குத் தேவையான தட்டையும் தொடர்ச்சியான தென்னை மரக்கூட்டங்கள். சுற்றி வர உயரமான நான்கு புறமும் எல்லைச் சுவர். வௌியே இருந்து கத்தினாலும் எவர் காதுக்கு கேட்காது.

சிறைதான். சந்தேகமே இல்லை.

மகனுக்கு என்னை பிடித்த அளவுக்கு அப்பாவுக்கு என்னை ஏனோ தொடக்கம் முதல் பிடிக்காமல் போய் விட்டது. இந்தப்பிரச்சனை ஒவ்வொரு நிறுவனத்திலும் தொடர்ந்து கொண்டே இருந்தது தான் ஆச்சரியம். காரணம் அவரின் எதிர்பார்ப்புகளை எந்த நிலையிலும் என்னால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இதைப்பற்றி கேட்பார் என்று அது சார்ந்த அணைத்து விஷயங்களையும் துண்டு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு செல்லும் போது சம்பந்தம் இல்லாத வேறு ஒன்றைக் கேட்க உளறல் தான் பதிலாக இருக்கும்.

நாளாக நாளாக உதறல் அதிகமாகி சாதாரண விஷயங்கள் கூட அசாதராணமாகி பேசமுடியாமல் தொண்டை அடைத்து அவர் கத்தும் கத்தலில் கூனிக்குறுகி அனைவரின் பார்வையும் தவிர்த்து வேறு எங்கேயாவது நகர்ந்து விடுவதுண்டு.

மொத்த உற்பத்தி பிரிவையும் தனித்தனியாக ஒவ்வொரு செக்ஷனையும் பிரித்து வைத்துருந்தார்கள். ஒவ்வொரு செக்ஷனும் கிட்டத்தட்ட வௌியே உள்ள தனித்தனியாக ஒவ்வொரு தொழிற்சாலைக்குச் சமம். பத்துக்கு மேற்பட்ட செக்ஷன்கள்.

உற்பத்தி பிரிவின் பிரிக்கப்பட்ட ஒரு செக்ஷனுக்கு மொத்த பொறுப்பும் என்னிடம் அளிக்கப்பட்டுருந்தது. உள்ளே வரக்கூடிய கட்டிங் பீஸ்கள் முதல், தினசரி தயார் ஆகும் கணக்கு, பெட்டியான பிறகு வௌியே செல்லும் போது மீதமான ஆடைகள் குறித்த விபரங்கள். படிக்கும் போது எளிதாகத்தான் இருக்கும். ஆனால் மொத்த அரசியல் தாண்டி உள்ளே உள்ள பிரச்சனைகள், அது போக காண்ட்ராக்டர் பெயரில் உள்ள நவீன ராட்சஷன்களை சமாளித்து, அவர்களுக்கு நிர்வாகம் வழங்காத எதிர்பார்ப்புகள் குறித்து அவர்களின் எதிர்வினைகளை கருத்தில் கொண்டு, சமாதானப்படுத்தி, மொத்த எந்திரங்கள் குறித்து அவவ்போது தெரிவிக்க வேண்டிய வராந்திர கடமைகள், செக்ஷனுக்குள் தொழிலாளர் பிரச்சனைகள் என்று கண்ணுக்குத் தெரிந்த தெரியாத ஆயிரத்தெட்டு பிரச்சனைகளை தாண்டி தாண்டிச் செல்ல வேண்டும்.

கடைசியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு ஒரு மணி நேரம் வரையிலான வேலை. ஒவ்வொரு வார சனிக்கிழமையும் முழு இரவும் வேலை. எப்படி இருக்கும் மனிதனுக்கு.

எல்லா ஞாயிற்று கிழமையுமே தூக்க மயக்கத்தில் தான் கழிந்ததாக இருக்கும். சில ஞாயிறுக்கிழமைகளில் கூட வேலை இருக்கும். குளிக்காதவர்களும் உண்டு. குளிக்க நேரமில்லாதவர்களும் உண்டு. தண்ணீ மயக்கத்திலே வாழ்ந்தவர்களும் தடுமாறி வேறு வழியே இல்லாமல் வந்து என்னைப்போல் மாட்டிக்கொண்டவர்களும் உண்டு. பொங்கலோ தீபாவளியோ நிச்சயமில்லாதவை. சில நாட்கள் பண்டிகைக்கு முன் இரவு வரையிலும் வேலை இருக்கும். அப்புறம் எப்படி முன்னூறு மைல்கள் பேரூந்தில் பயணம் செய்து ஊருக்குச் செல்வது. எத்தனையோ பண்டிகைகள் பேரூந்தின் வாசல்படி பயணத்தில் மூலம் நின்று கொண்டும் பாதி மயக்கத்தில் உட்கார்ந்து கொண்டும் கூட்டத்தில் போராடி வந்து சேர்வது உண்டு.

குடும்பத்தை பொறுத்தவரையில் பையன் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறான். என்ன வேலை? என்ன பதவி? எந்த இடத்தில்? எவருக்கும் தெரியாது.

மொத்தத்தில் ஊரில் இருக்கக்கூடாது. இரண்டு நாட்களுக்கு மேல் தலை ஊரில் தென்பட்டாலே பார்க்கிறவர்கள் கேட்கும் முதல் கேள்வியே ” என்னடா ஊருல குடித்த தண்ணியெல்லாம் போதுண்டா? போய் பொழைக்கிற வழியப்பாரு?”

வேறு வாய்ப்பே இல்லை. பிடிக்கிறதோ பிடிக்க வில்லை என்னை இருத்திக்கொள்ளத்தான் வேண்டும்.

ஏற்கனவே அறிமுகமாகியிருந்த திருச்சி நண்பன் மூலம் வேறொரு வட்டம் உருவானது. தென்மாவட்டத்தில் இருந்து பல ஊர் தண்ணீர் குடித்து இங்கு அலுவலகத்தில் ஏற்றுமதிக்குண்டான அனைத்து அலுவலக நடைமுறைகள், அரசாங்க விதிமுறைகள், வங்கியில் ஓப்படைக்க வேண்டிய பேப்பர்களை தயாரிப்பது அவர் பணி. குறுகிய காலத்தில் மகன் நிர்வாகத்தின் உள் வட்டத்தில் மிக எளிதில் நுழைந்த நபர். எனக்கு அறிமுகமான சில தினத்திலேயே என்னுடைய வெகுளித்தனமான பேச்சு அவருக்கு மிகவும் பிடித்துவிட்டுருந்தது.

காலம் சில நாடங்களை நடத்தும். முடிவில் சில பாடங்கள் கிடைக்கும். கற்றுக்கொண்டவர்கள் கவனமாக முன்னேறி அடுத்து படியில் ஏறிவிடுவர். கற்றுக்கொள்ளாதவர்கள் என்னைப்போலவே புலம்பிக்கொண்டே தான் இருப்பார்கள்.

ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு பாடத்தை எனக்கு வழங்கிக்கொண்டே தான் இருந்தது. ஆனால் வகுப்பில் கடைசி பெஞ்ச் மாணவன் போல் நடத்தும் போது கவனிக்காமல் பரிச்சையில் தோல்வி அடையும் பரிதாப மாணவனாகவேத்தான் இருந்துள்ளேன்.

புதிய நண்பர் பேச்சு முழுமையும் ஒரு வித காந்த சக்தியாக நம்மை இழுக்கும். ஓரு தீவிரவாத குழுவின் தலைவன் செய்யும் மூளைச் சலவைக்கு ஒத்ததாக இருக்கும். விடுதலைப்புலிகள் முதல் ஐ.நா சபை வரையிலும் விரிந்து இருக்கும் அவர் உரையாடல். எல்லாமே நம்பும்படி இருக்கும். மறுபேச்சு பேச முடியாதபடி.

அவர் அறிமுகம் கிடைத்த சில மாதங்களில் அவர் உருவாக்கிய தந்திர வலை மூலம் மகன் (சின்னவர்) உருவாக்கிய புதிய பதவி மொத்த நிர்வாகத்திற்கும் உண்டான தொடர்பாளர். அது கிட்டத்தட்ட கல்லூரித்தலைவன் போல். நாம் தான் மொத்த நிர்வாகத்தின் சார்பாளர். நிர்வாகத்திற்கும் அலுவலகத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த அனைத்து நல்லது கொட்டதுக்கும்.

பதவி என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். திறமை என்பது முக்கியமில்லை. எதை எங்கு எப்படி பேச வேண்டும்? எதைக்குறைத்து எதைக்கூட்டி எப்படி சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். முதுகுக்குப் பின்னால் உள்ள துரோகங்களை கூர்மையாக கவனிக்க தூங்கும் போது கூட விழிப்பாய் இருக்க நண்பர்கள் கற்றுத்தந்த எந்த விஷயங்களையும் என்னால் முழுமையாக செயல்படுத்தத் தெரியவில்லை.

ஆனால் என்னுடைய நோக்கம் என்பது வேறு மாதிரியாக இருந்தது. மொத்தத்தில் அனைவருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும். நிர்வாகம் நம்மை விரும்ப வேண்டும்.

மீசைக்கும் ஆசை. குடிக்கும் கூழும் ஓட்டக்கூடாது.

ஆனால் எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால் இங்கு ஏன் இத்தனை பிரச்சனைகள்? சிலருடன் மட்டும் பிரச்சனை உடன் வாழ்ந்த எனக்கு மொத்த துறையில் உள்ள அனைவருக்கும் ஒரே நாளில் வேண்டாதவனாக ஆகி விட்டேன். என்னைக் கண்டாலே ஒதுங்க ஆரம்பித்தாாகள். வந்து ஆறுமாதத்திற்குள் கிடைத்த முக்கியத்துவம் அவர்கள் அனைவருக்கும் ஏற்புடையதாய் இல்லை.

ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு சட்டதிட்டம். வேலை நேரம். வித்யாசமான கொள்கைகள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்து வந்து பணிபுரிந்து கொண்டுருந்த ஒவ்வொரு மனிதர்கள். வெவ்வேறு கலாச்சாரம், வளர்ப்பு பின்னணி. பாதியில் விட்டு வந்த படிப்பு. படிக்க ஆசையிருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை.

எந்த நிர்வாகத்திலும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு என்பதை உருவாக்காமல் வேலை முடிக்க வேண்டும் என்பதிலேயே மிக மிகக் கவனமாக இருந்ததால் எல்லோரிடத்திலும் ஒரு விதமான அடக்கி வைக்கப்பட்டுருந்த ரௌத்திரம் இருந்தது. வௌிப்படுத்த முடியாமல். வௌிப்படுத்திய போதெல்லாம் நிர்வாகம் வழிக்கு கொண்டு வந்த பல விதமான உபத்திர தண்டனைகள்.

இதற்கிடையே எனக்கு அளிக்கப்பட்ட கூடுதல் பொறுப்பில் அந்தந்த துறை சார்ந்த தினசரி நடவடிக்கை குறித்த புள்ளி விபரப்பட்டியல். தினமும் தயாரித்து பத்து மணிக்குக்குள் அளிக்கப்படவேண்டும். கொடுமையின் உச்சக்கட்டம்.

பயத்தை மட்டும் மூலதனமாக்கி வளர்த்த வளர்ப்பில் வந்த எனக்கு, வௌி உலகத்தை மனிதர்களின் மனம் சார்ந்த விஷங்கள் புரிபாடாத எனக்கு அவர்களை அனுகும் விதம் நரக வேதனையாக இருந்தது. கட்டுப்படாத சிங்கத்தை அதன் கூண்டுக்குள் சென்று கட்டுப்படுத்தி பழக்க வேண்டும்.

இதற்கிடையே என்னை சோதிக்க அப்பா என்ற பெயரில் இருந்த பெரியவர் வைக்கும் தேர்வு. எல்லா நிலையிலும் தோல்வி மட்டுமே. என்னிடம் ஒன்று சொல்லி விட்டு அவரிடம் ஒன்று சொல்லி என்னை மாட்டி விடும் தந்திரங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொண்ட போது எப்படியாவது வௌியேறி விட்டால் போதும் என்ற அயர்ச்சியே மனதில் மேலோங்கியது.

எவரைப்பார்த்தாலும் துரோகத்தின் வடிவமாகத் தெரிந்தார்கள். அலுவலக நண்பர்கள் வட்டாரத்திலும் சொல்ல முடியாத டார்ச்சர். அவர்களும் நாள் குறித்து வைத்துருந்தார்கள் வௌியேறிவிட. இடையில் வௌியேறினால் சம்பளம் கைக்கு வராது. எந்த தொழிளாலர் சட்டமும் அந்தத் தோட்டத்திற்குள் நுழைய முடியாது.

தீபாவளி வந்தது. நிர்வாகம் அந்த ஒரு வராமும் அனைவர் மேலேயும் கரிசனத்தை ஆறாக பாய விட்டு குளிப்பாட்டுவர்கள். எந்தத் தவறும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஓரே காரணம் ஊருக்குச் சென்றவர்கள் திரும்பி வரவேண்டும்.

தீபாவளி முடிந்து அந்த நிறுவனம் அதன் போக்கிலேயே போய்க்கொண்டுருந்து. அலுவல நண்பர்கள் இருவரும் நானும் இல்லாமல்.

Advertisements

10 responses to “கற்றுக்கொடுப்பதை ஏற்றுக்கொள்ளா விட்டால்?

 1. பின்னி பிடல் எடுக்கறீங்க …. சந்தேகமே வேண்டாம் …நீங்க நல்லா எழுதுகிறவர் தான் …

 2. அழகான நடை. கோர்வையான சம்பவ விவரித்தல். மேலும் எழுதுங்கள்.

 3. என்னங்க பனியன் தொழிலில் இவ்வளோ இருக்கா?

  அடப்பாவமே ரொம்பக் கஷ்டப்பட்டுட்டீங்க போல(-:

  இப்போ என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?

  வேற வேலை கிடைச்சுருச்சா?

  • நன்றி துளசி. பெயரைப் போலவே உங்கள் தளமும் அருமை தான். நக்கலும் நையாண்டியும் நகைச்சுவை கோர்த்து எப்படி ஐயா உங்களால் முடிகின்றது? என் எழுத்துக்கள் உங்களைப்போன்றவர்களால் கிரியா ஊக்கியாக இருந்தது இன்று ஒரே நாளில் எத்தனையோ பேர்களின் முகம் தெரியாமலேயே வாழ்த்துக்களை மின் அஞ்சலில் தொடர்ச்சியாக வந்து இனைத்துக்கொண்டுருக்கிறது. வாழ்வின் தொடக்கத்தில் உள்ள நிகழ்வுகள். பதினாறு வருடங்களுக்கு முன்னால். இப்போதைய நிலைமை http://www.texlords.in .வாழ்த்துக்கு மிக்க நன்றி, ஜோதிஜி

 4. மிக மிக அருமையான பதிவு ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s