அப்பாவாய் இருந்து பார்?

அப்பாவாய் இருந்து பார்?

அப்பாவாகி இருந்து பார்? அப்போது உன் அப்பாவின் உண்மையான நிறைகுறைகள் உனக்கு புரியவாய்ப்பு இருக்கிறது என்று என் நண்பனின் அறிவுரை அவன் சொல்லும் போது அதன் வீர்யம் புரியவில்லை.

சிறுவயதிலேயே மிகுந்த பட்டவன். படிப்பு என்பதை தவமாய் பார்த்தவன், பார்க்க வைத்த சூழ்நிலையில் அவன் குடும்பமும் இருந்தது. என்னைப் போன்ற புலம்பல் இல்லாமல் சுய முயற்சியில் தனித்தேர்வு எழுதி மத்திய அரசாங்கத்தில் நல்லதொரு பதவியில் அமர்ந்தவன். சந்திக்கும் போதெல்லாம் சுய பச்சாதாபத்தை அவனிடம் இறக்கி வைக்கும்போது அவன் சொல்லும் பதில் தான் மேலே உள்ளவை.

இன்று சிதைந்து போன கூட்டுக்குடிதன வாழ்க்கையில் பத்தொன்பது வருட வாழ்க்கையில் வாழ்ந்து வௌியே வந்து வௌி உலகை பார்த்த போது, உலகத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் புதிய பிறவி கண்ட குழந்தை போல் மலங்க மலங்க விழிக்கத்தான் முடிந்தது. கல்லூரி படிப்பு, தட்டெழுத்து, சுருக்கெழுத்து, இன்னும் பல,கற்று வைத்து இருந்த வித்தைகள் ஏதும் கைதூக்கி விடவில்லை.

முக்கியமாக வாழ்கைக்குத் தேவையான மனிதர்களை புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், தந்திரத்திற்கும், சமயோசிதத்திற்க்கும் சம்மந்தம் இல்லாமல் சுத்த அம்மாஞ்சி போல் மனதில் பட்டத்தை அப்படியே வௌியே சொல்லும் வார்த்தைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும், கிழே இழுத்து விட்டுக்கொண்டேயிருந்தது. மாற்றவும் முடியவில்லை. மாற்றிக்கொள்ளும் சூழ்நிலையில் வாழவும் அதிர்ஷடம் நெருங்கி வரவே இல்லை. அப்போது தொடங்கியது அப்பாவின் மேலே உள்ளே வெறுப்பு?

நான் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள சித்தப்பாக்கள் குடும்பம், அக்காக்கள், அண்ணன்கள் என அனைவருமே அறிவிக்கப்படாத மிசா, எமர்ஜென்சி,தடா,தேசிய பாதுகாப்பபுச் சட்டம் இன்னும் பிற போன்றவைகள் போன்று வாழ்க்கையை வாழ்ந்து அவரவர்களும் சமயம் சந்தர்ப்பங்கள் அமைந்து வௌியே வந்து தான் சுதந்தரமாய் சுவாசிக்க முடிந்தது.

அப்பா?

இந்த சொல்லின் அர்த்தம், மகத்துவம் போன்றவற்றை வெட்கப்படாமல் சொல்லவேண்டுமென்றால் முழுமையாக உணரத் தொடங்கியது இருபத்தி ரெண்டு வயதில் வேலைக்காக சென்னை வந்து நண்பணின் வீட்டில் தங்கி இருந்தபோது. முழுமையாக உணர்ந்தது குழந்தைகள் பிறந்து, குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபோதுதான்.

சென்னையில் வேலை வாங்கி தருவதாக நண்பன் அழைத்து வந்து, அவர்கள் வீட்டில் இரண்டு மாதங்கள் தங்க வைத்துருந்த போது அப்பா என்றால் இப்படியுமா? என்று வியந்து போய் அவர்கள் அரும்பாக்கம் வீட்டின் மொட்டை மாடியில் பலமணி நேரம் உட்கார்ந்து யோசித்து பார்த்து யாருக்கும் தெரியாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டதுண்டு.

சகோதரிகள் இல்லாமல் மூன்று சகோதரர்கள் அம்மா அப்பா என்று எந்த நேரமும் திருவல்லிக்கேணி மேன்ஷன் வாழ்க்கை போல் அத்தனை அட்டகாசம். அவர்களின் (தண்ணீ பார்ட்டீ) அத்துமீறல் அளவுக்கு போகும் போது, நண்பனின் அம்மா அழுது கொண்டு கதவைச் சார்த்தும் வரையில் அடங்க மாட்டாாகள். நண்பணின் அப்பா ஐம்பது வயதிலும் அற்புதமாக (உள்ளே இறங்கியதும்) பாட ஆரம்பித்து விடுவார். மூன்று பேர்களும் கிடைத்த பாத்திரத்தை வைத்து ஒரு இசை ராஜங்கத்தை அபஸ்வரமாக இருந்தாலும் தூள் பரத்துவார்கள். வீட்டுக்காரர்கள் தொலைவில் இருந்ததால் அவர்களை கேட்பார் யாரும் இல்லை.

இது ஒவ்வொரு ஞாயிறும் வழக்கமாக நடைபெறும். இது போக தினமும் அனைவரும் வேலைக்கு கிளம்பவேண்டிய நேரத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் தான் மொத்தமாக குளியலறையை, கழிப்பறையை குத்தகை எடுத்தது போல் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கும். ஒவ்வொன்றும் வேடிக்கையாய் இருக்கும். தந்தை மகன் என்ற உறவே இல்லாமல் கல்லூரி விடுதி போல் பார்ப்பதற்கு பொறாமையை வரவழைக்கும்.

நண்பன் எப்போதும் போல் மறக்கமால், பைக் ஸ்டார்ட் செய்யும்போது சொல்லுவான்? கவலைப்படாதடா, வந்து ஒரு வாரம் தானே ஆகிறது, அடுத்த மாதத்தில் வேலையில் சேர்ந்து விடலாம். எங்கயாவது போய் சுற்றிவிட்டு வாடா? எப்ப பார்த்தாலும் புத்தகம் படித்துக்கொண்டே இருக்காதே?

பத்தொன்பது வருட வாழ்க்கையில் வீட்டில் வாய் திறக்கும் இரண்டே தருணங்கள் ஒன்று பாடங்கள் படிக்கும் போது, மற்றொன்று சாப்பிடும் போது. உறுப்பினர்கள் அதிகம் என்பதால் என்ன சண்டை எப்போது எதனால் வருகின்றது என்பதை தடுக்க அப்பா இட்ட சட்டம். இயல்பாகவே

சின்னச்சின்ன பறிமாறல்கள் இருந்தாலும் உள்ளே உள்ள எட்டப்ப சகோதரிகள், கடையை மூடிவிட்டு அப்பா வந்ததும் மறக்காமல் சொல்லிவிட்டுத்தான் படுக்கவே செல்வார்கள்.

வாங்கிய குட்டுகளும், வரும் கண்ணீர்க்கும் அங்கு ஆறுதல் தேட முடியாது. காரணம் இரவு பத்து மணி என்பது வீட்டில் இரண்டாவது ஜாமம்.

அம்மா என்பவள் வரிசையாக குழந்தை பெற்றுக்கொடுக்கும் இயந்திரம். அனைத்து வீட்டு வேலைகளையும் மறுக்காமல் அலுக்காமல் செய்து முடிக்க வேண்டிய வேலைக்காரி, சின்னம்மாக்களின் அவவ்போது தந்திரங்களை புரிந்து கொள்ளத் தெரியாமல் நடு இரவில் திடும் திடும் என்று உதை வாங்கிக்கொண்டு அப்போது பிறந்து இருக்கும் தம்பியோ தங்கையையோ அழவிடாமல் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உணர்வுகள் என்பதை என்னவென்றே அறியாத ஜீவன்.

அப்பா தூங்க வந்த பிறகு குண்டூசி சத்தம் கூட கேட்கக்கூடாது. அவர் குறட்டை மட்டும் எக்கோ இல்லாமல் ஒலிக்கும். எத்தனை மணிக்கு அம்மா தூங்குவார்கள் என்று தெரியாது. ஆனால் மாட்டுத்தொழுவத்தில் பால் கறந்து கொண்டுருக்கும் போது காலை ஐந்து மணிக்குள் இருக்கும்.

கூட்டத்தில் முந்திக்கொண்டு கிடைத்த வங்காள விரிகுடா காபியை குடித்துவிட்டு ஆறுமணிக்கு படிக்க உட்கார்ந்தால் எட்டரை மணி வரைக்கும் பள்ளிக்கூடம் வாய்ப்பாட்டு ஒப்புவித்தல் போல் அங்கு ஒரு அட்டனென்ஸ் நடக்கும். ஒப்பித்தால் மட்டும் அக்கா குளியல்க்கு அழைப்பார். வரிசை முடிந்து கிடைக்கும் பழைய சோறும், பழைய குழம்பும் (முக்கியமாக நேற்று வைத்த அசைவத்தின் மிச்சமாக இருக்கும்) சாப்பிட்டு பையைத் தூக்கினால் அடுத்த சந்தில் இருக்கும் பள்ளியின் முதல் மணி அடிக்கும்.

வீட்டில் இருந்து ஒன்றாக அணைவரும் கிளம்பும் போதே ஏதோ பள்ளிக்கூடம் விட்டு வரும் கூட்டம் போலத் தான் தெரியும் புதிதாகப்பார்ப்பவர்களுக்கு.

(ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் படத்தில் வரும் வீட்டு காட்சிகளை நினைவில் கொள்க),

பணிரெண்டாம் வகுப்பு வரையில் இது தான். பள்ளிக்கூடம் விட்டால் வீடு. ஒரே நேர்கோடு. வௌி வாழ்க்கை எப்படி இருக்கும்? பக்கத்தில் உள்ள டூரிங் டாக்கிஸ்ல் மாலை முதல் காட்சிக்கு தொடக்கமாக ஒலிக்கும் சீர்காழி பாட்டு மட்டும் தான் தெரியும். உள்ளே என்ன படம் என்பதெல்லாம் தெருவில் பார்க்கும் நோட்டீஸ் வைத்து தான் புரிந்து கொள்ள முடியும். பணிரெண்டு வருடங்கள் படித்து வந்த பள்ளியில் பார்த்த ஒரே படம் காந்தி மட்டும் தான். அதுவும் அம்மாவிடம் அழுது வாங்கி ஆசிரியர் இடம் கொடுத்த 75 பைசா.

அரிசிக்கடையில் சேர்த்து விட்டால் போதும் என்ற அப்பாவின் அறிவுரையை முதல் முதலாக எதிர்த்து கடைசி சித்தப்பா போராடி கல்லூரியில் சேர்த்து விட்ட போது தான் மூக்கின் இரண்டு தூவாரங்களிலும் மூச்சு வந்ததைப்போல் உண்ர்ந்தேன். அதிலும் ஒரு கொடுமை. வீட்டுக்கு பக்கத்தில் வந்து நிற்கும் பேரூந்தில் ஏறினால் மறுபடியும் அதே இடத்தில் வந்து நிற்கும்.

நண்பர்கள் கட் அடித்து விட்டு புதிய படத்திற்கு செல்லும் போதெல்லாம் ஏக்கமாய் மட்டும் தான் பார்க்க முடியும். அதற்கும் ஒரு காரணம் உண்டு. ஓரு முறை தியேட்டரில் இருந்து என்னை எவனோ ஒரு எட்டப்பன் கர்மசிரத்தையாய் வத்தி வைத்து விட வாங்கிய குட்டு மொத்தத்திற்கும் ஞாபகமாய் இருந்தது. அப்படியும் மூன்று வருடத்தில் பார்த்தது மூன்று படங்கள்.

துணைப்பாடத்தில் வித்யாசமாய் இருக்கட்டுமே என்று சமஸ்கிருதம் எடுக்க நாலாவது செமஸ்டர் எழுதிய பேப்பர் திசைமாறி போய்விட (மொத்த கல்லூரிக்கும் 10 பேர்கள் தான்) அரியர்ஸ் மாதிரி மறுபடியும் எழுதிவிடு என்று ப்ரொபஸர் சொன்ன ஆலோசனையின் பேரில் ஆறாவது செமஸ்டரில் எழுதும் சூழ்நிலை. என்னுடைய கெட்ட நேரம் அந்தப்பேப்பர் எவர் கையில் சிக்கியதோ கடைசி வரைக்கும் மார்க் சீட்டில் வித்யாசமாய் ஆப்சென்ட் என்று வந்த போது வாழ்வின் முதல் மாறுதல் தொடங்கியது,

அப்பாவை பொறுத்தவரையில் நான் தேர்வு பெறவில்லை. அடுக்கிய காரணங்கள் அணைத்துக்கும் அடி தான் பரிசாய் கிடைத்தது. அந்த ஆறு மாதங்கள் ரண வேதனையாய் ஊரில் அடித்த அத்தனை வெயிலும் என் தலைக்குத் தான் என்பது போது பைத்தியம் பிடித்தது போல் உபயோகிக்கபடாமல் கிடந்த பழைய மருத்துவமனை ரூம்கள், ரயில்வே தண்டவாளங்கள்,படித்த பள்ளிக்கூடம் முடிந்ததும் தஞ்சம் புகுந்த விளையாட்டு மைதானங்கள் கடைசியாக மொத்த நண்பர்களுடன் ரோட்டு ஓரமாய் உள்ள குட்டிச்சுவரும் அருகில் உள்ள கருங்கல் பாலமும்,

பெரிய அண்ணன் வாங்கி வைத்து இருந்து சட்டப்படிப்புக்கான விண்ணப்ப படிவம் வெறும் காகிதமாய் போய் விட, அவர் போட்ட கடிதம் மேலும் மேலும் சிக்கலை உருவாக்கிக்கொண்டே இருந்தது அந்த பேப்பருக்கான பரிட்ச்சை எழுதும் வரையில்.

இடையில் ஐந்தாவது வரை ஒன்றாய் படித்த நண்பன் சென்னை தோல் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டுருந்தவன் பந்தாவாய் அப்பாவிடம் சொல்லிவிட்டு சென்று விட ஒரு சுபயோக சுப தினத்தில் சென்னை பயணம்.

அங்கு தான் வாழ்க்கை சிரிப்பாய் சிரிக்க வைத்தது. அவ்வவ்போது சிந்திக்கவும் வைத்தது. அப்போது அறிமுகமான டிவிஎஸ் சாம்ப் நிர்வாகத்தில் கொடுக்கும் அளவிற்கு உழைப்பை காட்ட முடிந்தது. ஆனால் நிர்வாகத்தில் உள்ள சூட்சமங்களை, அங்குள்ள தந்திரங்களை, முன் ஒன்று பின் ஒன்று பேசுபவர்களை கையாளத்தெரியாமல், லூஸ் டாக்கிங், அறைகுறை, கிராமத்தான் (இருந்த இரண்டு வருடங்களும் காரைக்குடி பாஷையைத்தவிர வேறு உருப்படியாக பேசமுடியாத சோகம் ஒருபக்கம்) என்று எனக்குண்டான தகுதியை என்னால் ஒரு இன்ஞ் அளவிற்குக் கூட உயர்த்திக்கொள்ள முடியவில்லை. நண்பன் சேர்த்த பிறகு ஒதுங்கி விட உருப்படியான நண்பர்கள் தேடித் தேடி தேய்ந்தது தான் மிச்சம்.

நிறுவனம் வளர வளர என்னால் முழுமையாக மாறமுடியவில்லை, அவர்கள் எதிர்பார்ப்பும் என்னுடைய அனுகுமுறையும் இரு தண்டவாளம் போல் போய்க்கொண்டே இருந்தது. உள்ளே நடக்கும் அரசியல் சித்து விளையாட்டுக்கள் கைகூடி வரவில்லை. முயன்ற போதெல்லாம் சுவற்றில் அடித்த பந்து போல் என்னைத் தாக்க மேலும் சிக்கலாக்கியது. வலை பின்னலில் சிக்கியதும், வௌியேறத் தெரியாமலும் பத்தொன்பது வருட பழக்க வழக்கங்கள் உருவாக்கிய தாக்கங்களை அத்தனை சீக்கிரமாய் விட்டு வௌியே வரமுடியவில்லை.

கிடைத்த சம்பளம் அத்தனை சிலாக்கியமாக இல்லை. நிறுவனத்தில் உள்ளவர்களின் கமிஷன்அடிக்கும் பார்ட்டிகளின் அறிவுரையை புறந்தள்ளியதால் வெறிகொண்டு அலைந்தார்கள் தீர்த்துக்கட்ட. நிறுவனத்திற்கு நியாய தர்மங்கள் ஏதும் தேவையில்லை. அவர்களுக்கு சந்தர்ப்பங்களும் செய்யும் சாதனைகளும் தான் முக்கியம் என்பது புரிந்த எல்லாமே கடந்து விட்டுருந்தது,

எத்தனை நாட்களுக்குத் தான் இவர்கள் விரிக்கும் வலையில் இருந்து தப்பித்துக்கொண்டே நரக வேதனையை அனுபவிப்பது என்று யாரிடமும் சொல்லாமல் ஊருக்கு பயணித்த பேரூந்து செங்கல்பட்டுக்கு மத்தியில் நடுஇரவில் மாட்டிக்கொண்டது. முன்புறமும் பின்புறமும் கண்களுக்கு எட்டிய வரையில் ஆம்னி பஸ்களின் அணிவகுப்பு. ஒன்றும் புரியவில்லை. நேரம் கடந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு வாயில் இருந்தும் ஒவ்வொரு விஷயங்கள். ஆனால் என்னவென்று புரியாமல், மேற்கொண்டு பயணிப்பது வாய்ப்பில்லை என்று தெரிவித்ததால் நடுஇரவு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்து இருந்து பயணித்து வந்த ரயில் சென்னையில் மீண்டும் வந்து இறங்கிய அந்த அதிகாலைப் பொழுதில் கண்ணில் தென்பட்ட தினமலர் சொன்ன தலைப்புச்செய்தி மனித வெடிகுண்டால் ராஜிவ் காந்தி மரணம்.

அக்கா வீட்டில் இரண்டு நாள் இருந்து விட்டு சொந்த ஊருக்கு வந்த சேர்ந்த போது சற்று வேறுபட்ட சிந்தனைகளுடன். ஊர் சற்று புதிதாய் தெரிந்தது. நண்பர்கள் வித்யாசமாய் பார்த்தார்கள். அப்பாக்கு சற்று வருத்தம். இடையே அவர் சென்னை வந்து பார்த்த போது என்னிடம் புழங்கிய பணமும் அவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு என்னுடைய வண்டியில் பத்திரமாய் கொண்டு சேர்த்தது, அவர் அதிகம் விரும்பும் அசைவ உணவை தேர்ந்தெடுத்து அழைத்துச் சென்ற தேனாம்பேட்டை உணவகம் என்று ஏகத்தும் என் மேல் ஒரு வித அபிப்ராயத்தை உருவாக்கி இருக்கும் போலும்.

அம்மா வந்ததும் சொல்லி வருத்தப்பட்டார்கள். முதல் மாதம் இலக்கில்லாமல், திட்டு வாங்காமல், கடைவேலைகள் எதிலும் கலந்து கொள்ளாமல் மதிய தூக்கம், அவவ்ப்போது முதல் ஆட்ட திரைப்படம் என்று தைரியமாக போய்க்கொண்டுருந்தது முடிவுக்கு வந்தது ஒரு நாள் இரவு வீட்டுக்குள் நுழைய முயற்சிக்க உள்பக்கமாக பூட்டிய கதவு வரவேற்றது, சத்தம் போட்டு கூப்பிட முடியாது. அழுத்தமாக தட்ட முடியாது, தங்கை மட்டும் ஜன்னல் வழியே அண்ணே உள்ளே வராதே, அப்பா உன்மேல் உள்ள கோபத்தில் அம்மாவுக்கு சரியான அடி என்றதும் விஷயத்தின் வீர்யம் புரிந்தது.

மறுநாளே ஏற்கனவே சொல்லி விட்டு சென்றிருந்த செட்டியார் திருப்பூர் நூல்கடைக்கு திருப்பூர் பயணம். கோபத்தில் யாரிடம் சொல்லவில்லை. நிதி உதவி நண்பர்கள்.

மதிய வெயில், வேஷடி சட்டையுடன் நெற்றியில் குங்குமத்துடன் ஒரு மஞ்சள் பையுடன் செட்டியார் அலுவலகத்தில் நுழைந்த என்னை அங்கிருந்த அணைவரின் பார்வையிலும் ஒரு வித்யாசம் தெரிந்தது ஏன் என்று அப்போது எனக்குப் புரியவில்லை. அதிலும் அந்தக்கட்டிட முதலாளி (நயினா) நாலைந்து நாட்கள் கழித்துக் கேட்டார் ஏனுங்கோ இதுக்கு முன்னாடி எங்கேயாவது வேலைக்கு போய் இருக்கிங்களா? ஏன் என்று கேட்டேன். பதில் சொல்லாமல் ஒரு நமுட்டுச் சிரிப்பு. செட்டியார் சிரித்துக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்று விட்டார்.

காரணம் என் தோற்றம். வேஷடி சட்டை குங்குமம், மஞ்சள் பை. தொழிலுக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த மாதிரி உடை உடுத்த வேண்டும் என்ற இயல்பான சட்டங்களைக் கூட நான் சட்டை பண்ணியதே இல்லை. சென்னையில் கூட வேண்டா வெறுப்பாகத்தான் பேண்ட் சட்டை. அது என்னமோ தெரியவில்லை பத்தாம் வகுப்பு முடிந்தது ஒரு நாள் அண்ணனின் கைலியை கட்டிக்கொண்டு திரிந்த அந்த ஒரு நாள் தவிர இன்று வரையில் மிகவும் பிடித்த உடை வேஷடி வௌ்ளை சட்டை தான், அது போக ஊர் பழக்கமான இயல்பான பட்டை விபூதி குங்குமம். ஆனால் இதுவே எல்லா இடத்திலும் இடைஞ்சலாக ஏளனமாக பார்க்கப்பட்ட வினோதமான சமூக முரண்பாடுகளை கண்டு கொண்டதே இல்லை. தனி மனித பழக்கவழக்கங்களை அவனுடைய நிலை வைத்து தான் இங்கு எழும் விமர்சனமும்.

வேலை வெகு எளிது. நூல் பைகள் வௌியே போவது பற்றி கணக்குகள், பாக்கி வசூல், வங்கி செல்லல். மற்ற நேரம் முழுக்க வாடகை நூலக புத்தகங்கள். ஆறாவது வகுப்பு முதல் இன்று வரையில் அந்த வெறித்தனமான புத்தக வாசிப்பு மட்டும் மாறவே இல்லை. விஷயங்கள் விருப்பங்கள் மட்டும் மாறி மாறி இன்று நேரம் ஒதுக்க முடியாமல். செட்டியார் என் வேலையைமட்டும் தான் பார்த்தார். என் தனிப்பட்ட எந்த விஷயங்களையும் கண்டு கொள்வதே இல்லை. என்னுடைய வேகமும் துருதுருப்பும் அவருக்கு ஆச்சரியமாய் இருந்து கொண்டே இருந்தது. ஊரில் சிபாரிசு செய்தவரிடம் மிக சிலாகித்து சொன்னது பின்னாளில் தெரிந்தது. ஆனால் மற்ற அங்குள்ள அனைவருக்கும் ஒரு ஞானக்கிறுக்கனாகவே தெரிந்தது அவர்களுக்கு பொழுது போக வில்லை என்றால் நான் தான் கருப்பட்டி பணியாராம்.

இந்த சமூகத்தை, மனிதர்களை முதன் முறையாக உற்று நோக்க ஆரம்பித்தேன். அப்பா என்னில் உருவாக்கி வைத்துருந்த பிம்பங்களை, வார்ப்புகளை உடைக்கும் பணியும் தொடங்கியது.

Advertisements

4 responses to “அப்பாவாய் இருந்து பார்?

 1. ப்ரோபைல் எழுத இத்தனை பதிவா!
  கலக்குறிங்க சார்!
  அப்பாவின் வலியும் ,பொறுப்பும் கிடக்கட்டும் தேர்வுமுறைகளின் லட்சணத்தை பார்த்தீர்களா ?
  சச்சின் கையில் கீபோர்டையும்,ரஹ்மான் கையில் செஸ் போர்டையும் கொடுக்கும்.காலக்கொடுவினை !
  தெள்ளிய நடை ,நல்ல பதிவு!

 2. Pingback: இதுவும் கடந்து போகும் « தேவியர் இல்லம். திருப்பூர்.

 3. அருமையான நடை …நிறைய அனுபவங்கள் … எதையும் மறக்காமல் , நினைவு கூர்ந்து , அழகாக எழதுகிறீர்கள் … கடந்த துன்பங்களை , கசப்புடன் பார்க்காமல், … ஒரு படிப்பினை போல எடுத்துகொண்டது அபாரம்… நிச்சயமாக கோபம் இல்லை உங்கள் வார்த்தையில் …வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s